2:22 (2017) ஜென்ம ஜென்மாக தொடரும் காதல்


டைலன் ப்ராஸ்னன் ஒரு ஏர் டிராபிக் கண்ட்ரோலர், சொல்லப்போனால் அவன் ஏரியாவில் அவன் கில்லி. அவன்கூட  கூட பணியாற்றும் சாண்டியுடன் காதல், அது புட்டுக்கொள்கிறது.  சாண்டி அவனுக்கு தரும் ஏரியல் பாலே நடன நிகழ்விற்கு செல்லும் இடத்தில் சாராவை சந்திக்கிறான்.



ஒரு சில உரையாடல்களில் இருவரும் நெருங்குகிறார்கள்.

பிறகென்ன ...காதல்தான்

இப்படி போகும் ரொமான்ஸ் கதையில் ஒரு டுவிஸ்ட்.

நாயகன் மிகச்சரியாக 2:22 மணிக்கு சில அசம்பாவிதங்களை காண்கிறான். கனவிலும், நனவிலும்.

க்ராண்ட் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒருதலை காதலன் ஒருவன் காதலியை சுட்டுக் கொல்ல, அவளது காதலன் காதல் வெறியனை சுட, காவல்துறை காதலனை சுட பல பிணங்கள் விழுகின்ற ஒரு காட்சி அவனுக்கு தோன்றிக்கொண்டே இருக்கிறது.

2:22க்கு தரையிறங்கும் விமானத்திற்கு ஓகே சொல்லிவிட்டு பார்த்தால், எதிர்புறம் இன்னொரு விமானம் மேல எழும்ப ரகளை. மயிரிழையில் பிழைக்கின்றன உயிர்கள். டைலன் சஸ்பெண்ட்.

இந்த சஸ்பெண்ட் நாட்களில் தான் சாராவிற்கும் அவனுக்கும் நட்பு மலர்ந்து காதலாக கனிகிறது. சாராவிற்கும் ஒரு முன்னாள் காதல் உண்டு என்றும் அறிகிறான்.

சாரா நடனத்தை நேசித்தாலும், நடனமாட முடியாத சூழல், டைலன் ஒரு பைலட், பறக்க விருப்பம் இல்லை.

இருவரும் ஒரு நடனத்தில் நெருக்கமடைகிறார்கள்.

மெல்ல மெல்ல டைலன் உண்மையை நோக்கி நகர்ந்து அதை சாராவுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

முப்பது வருடங்களுக்கு முன்னர் க்ராண்ட் சென்ட்ரல் ஸ்டேஷனில் இறந்து போனது அவர்கள்தான். சுட்டது சாராவின் முன்னாள் காதலன்!

ஒரு ஸ்டென்ட் சீக்வன்சுக்கு பிறகு முடிவை மாற்றி எழுதுகிறான் டைலன், சாராவுடன் காதல் வாழ்வை தொடர்கிறான்.

டேய், மஹாதீரா கதைதானே இது... இந்திலே ரப்பதே  என்று படம் வந்ததே என்றெல்லாம் ஆர்பரித்தால் நான் சொல்வது இது ஹாலிவுட்டின் நெஞ்சம் மறப்பதில்லைதான்!

படத்தின் சுவாரஸ்யங்கள்

டைலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மைக்கேல் ஹூஸ்மான், ஒரு பாடகராக, கவிஞராக துவங்கி இன்று நடிகர்.

நன்றாகவே நடித்திருக்கிறார், வெகு இயல்பாக.

சாரவாக வரும் டீரீசா பால்மர் ரொமான்ஸ் நிமிடங்களில் கடத்தும் கெமிஸ்ட்ரி ஜோரு.

ஒரு முன்ஜென்ம காதல் கதைக்குள் ஏர் டிராபிக் கன்ரோல் ரூமை கொணர்ந்து சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார்கள்.

குறிப்பாக ஏர் டிராபிக் கண்ட்ரோல் ரூமில் நடக்கும் பரபரப்பை, தவிர்க்கும் விபத்துக்களை பதைபதைக்கும் நிமிடங்களை திரையில் கொண்டுவந்ததில் படம் தனித்து நிற்கிறது. இந்த காட்சிகளை மட்டும் கட் செய்து வகுப்பில் காண்பிக்க வேண்டும். (க்ளோஸ் என்கவுன்டர் என்கிற பாடம் இருக்கிறது மக்களே)

அப்புறம் அந்த ஏரியல் பாலே, அசத்தல் போங்கோ.

அதேபோல வில்லன் ஜான் செய்திருக்கும் ஹாலோகிராம் காட்சிகளுக்காகவே இன்னொருத்தபா பார்க்கோணும்.

டைட்டிலிங் செய்கையில் காலக்சியின் நட்சத்திரங்களை நியூயார்க் நகரின் விளக்குகளுடன் பொருத்தியிருப்பது செமையான ஐடியா.

படம் ஒன்றும் ஆகா ஓகோ இல்லையென்றாலும் ஒருமுறை பார்க்கலாம்.

பி.கு

நிறைய படங்கள் குறித்து எழுத வேண்டும்

வர இருப்பவை
ஆல்வார்ஸ் கெல்லி
ஜியோஸ்டார்ம்
பேபி ட்ரைவர்


Comments

  1. திரைப்படத்தை ரசித்தேன். பிற படங்களை ரசிக்கக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக