தினமலர் முருகராஜ் அவர்களின் கட்டுரை ஒன்று

Rajamani Amma INA


நேதாஜி படை வீராங்கனை ராஜாமணியம்மாவின்
கடைசி நாள்(நேற்று)...13-01-2018



எப்பேர்ப்பட்ட வீராங்கனை அவர். மாவீரர் நேதாஜியின் ஜான்சி ராணி படையில் ஒற்றர் பிரிவில் பணியாற்றி அவரால் பாராட்டுப்பெற்றவர்.

அவரது உடலை சுமக்கவும்,தகன மேடையில் அவருக்கான மரியாதை செய்யவும் கிடைத்த தருணத்தை தாளமுடியாத சோகம் என்று சொல்வதா? அல்லது பாக்கியம் என்று எடுத்துக் கொள்வதா?

ராஜாமணி ஐஎன்எஸ்

1927- ம் ஆண்டு ரங்கூனில் பிறந்தவர் இவரது தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். சுதந்திர போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அவருக்கு பிரிட்டிஷ் அரசு பல விதங்களில் அச்சுறுத்தலைத் தந்தது. அதனால், அவர் பர்மா தப்பி சென்று, தன் வாழ்வை அங்கேயே அமைத்துக்கொண்டார்.

அங்குதான் ராஜாமணி பிறந்தார். தன் மகளை ஆண் பிள்ளையைப் போல வீரத்தையும் விவேகத்தையும் ஊட்டி வளர்த்தார்.
முன்னெடுத்தார். அவரது படையில் பெண்கள் பிரிவு மிக உக்கிரமாக பிரிட்டிஷ் அரசை எதிர்த்துக் களம் கண்டார்கள். அதற்கு ஜான்சி ராணி படை எனப் பெயரிட்டப்பட்டிருந்தது.

ராஜாமணி வளர்ந்ததும் நேதாஜியின் ஆயுத வழிப் போராட்டத்தை பற்றிய செய்திகளை ஆர்வத்துடன் கேட்டறிந்தார். அவரது கொள்கைகள் ராஜாமணியை மிகவும் ஈர்த்தது. நேதாஜி தன் ராணுவத்திற்கான நிதி திரட்டியபோது, தன் தங்க வைர நகைகளை கொடையாக கொடுத்தார்.

தவறுதலாக கொடுத்திருக்கக் கூடும் என ராஜாமணியைத் தேடி வந்து, தெரியாமல் வைர நகைகளையும் கொடுத்துவிட்டீர்கள் அதைத் திரும்ப கொடுக்கவந்தேன் என்று கூறிய போது தெரிந்தேதான் கொடுத்தேன் உங்கள் மதிப்பிற்கு முன் இந்த வைரங்கள் துாசு என்றவர்.

அடுத்த சில ஆண்டுகளில் ராஜாமணியும் அவரது தோழிகளும் நேதாஜியின் ஜான்சி ராணி படையில் சேர்ந்தனர். ராஜாமணி உளவுப் பிரிவில் சேர்க்கப்பட்டதால், நேதாஜி இவருக்கு சரஸ்வதி எனப் பெயர் மாற்றம் செய்தார். பிரிட்டிஷ் ராணுவத்திற்குள் புகுந்து, ரகசியங்களைச் சேகரிக்கும் பணியில் தன் உயிரைப் பணயம் வைத்து செய்து நேதாஜியின் பாராட்டை பலமுறை பெற்றார்.
இதற்காக, யாரும் கண்டுபிடித்து விடாமலிருக்க ஆண் வேடத்தில் செல்வார். 1942-ல் தொடங்கி நான்கு ஆண்டுகள் உளவுப் பிரிவில் வேலைப் பார்த்தார்,ஒரு முறை
எதிரிகளிடம் இருந்து தப்பித்து ஓடுகையில் குண்டடிபட்டு காயமடைந்தார். அடிப்பட்ட காலோடு மரத்தில் ஏறி, மறைந்திருந்து தப்பித்தார். அதன்பிறகு ராஜாமணியால் சரியாக நடக்க முடியாமல் போய்விட்டது.

நடக்க முடியாத வேதனையை விட, தொடர்ந்து நாட்டின் விடுதலைக்காக நேதாஜியுடன் இணைந்து பணியாற்ற முடியவில்லையே என்ற வேதனைதான் இவரிடம் இருந்தது.ராஜாமணியை நேதாஜி சென்னைக்கு பத்திரமாக அனுப்பிவைத்தார்.

நேதாஜி ஒரு தெய்வாம்சம் கொண்டவர் அவர் ஒரு மகாபுருஷர் அவருக்காக எதையும் செய்யலாம் என்று அடிக்கடி சொல்லக்கூடியவர்.

மாநில அரசு வழங்கிய வீட்டில் மத்திய அரசு வழங்கிய பென்ஷன் வருமானத்தில் நேதாஜி புகழ் பாடியபடி சென்னையில் வாழ்ந்தார்.
குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில் நேதாஜி படையில் இருந்த போது அணிந்திருந்த சீருடையை அணிந்து அவரது படத்தை நெஞ்சில் குத்திக் கொண்டு கம்பீரமாக கலந்து கொள்வார்.
பென்ஷன் பணத்திலும் மிச்சம் செய்து பார்க்கும் குழந்தைகளுக்கு நேதாஜியின் புத்தகங்களை இனிப்புகளுடன் வழங்கி படிக்கச் சொல்வார்.சென்னையில் சுனாமி தாக்கிய போது தனது முழு பென்ஷன் தொகையையும் அரசுக்கு முதலில் வழங்கியவர்.நேதாஜி தொடர்பான விழாக்களில் தன் வயதையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டு உற்சாகமாக தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்பவர்.

கடைசி வரை யாருக்கும் பராமாக இல்லாமல் நேதாஜியின் புகழ் பாடிய ராஜாமணி நேற்று காலை கூட ராயப்பேட்டை விநாயகர் கோவிலுக்கு சென்று அங்குள்ள தனக்கு பழக்கமான பூக்கடைக்காரர்கள் ஆட்டோக்காரர்கள் மற்றும் நண்பர்களுக்கு பொங்கல் வாழ்த்து சொல்லி தன்னால் முடிந்த பணத்தை கொடுத்து ஆசீர்வாதம் செய்திருக்கிறார்.

அப்படிப்பட்டவர் நேற்று காலை திடீர் உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார்.மதுரையில் இருந்து ஜெய்ஹிந்த சாமிநாதன் குறுஞ்செய்தி அனுப்பிய போது மனது அதிர்ந்துவிட்டது.
போட்டது போட்டபடி கிடக்க தேசத்தின் மீது அளவற்ற பாசம் கொண்ட அந்தத்தாயை பார்க்க அவர் குடியிருந்த சென்னை பீட்டர்ஸ் காலனி வீட்டிற்கு ஒடிச்சென்றேன்.

சிறிய பனை ஒலைப்பாயில் கிடத்தப்பட்டு இருந்தார்
அவரது உடலில் அவருக்கு விருப்பமான அவரது ராணுவ உடை அணிவிக்கப்பட்டு அதன் மேல் தேசியக்கொடி போர்த்தப்பட்டிருந்து, உடையின் மீது அவர் உயிராக போற்றி மதித்தி நேதாஜியின் படம் இடம் பெற்றிருந்தது.

அவரது வயதை ஒற்றிய அவரது வயதான சகோதரிகள் அழவும் சக்தியற்று அருகில் அமர்ந்திருந்தனர்.சடங்குகள் முடிந்ததும் நாலு பேர் பத்திரமாக அம்மாவை துாக்கி வேனில் வையுங்க என்றனர்,அம்மாவின் பாதம் தொட்டு வணங்கி அந்தப்புனித பணியை நானும் மேற்கொண்டேன்.

ராயப்பேட்டையில் துவங்கிய இறுதிப்பயணம் ஐஜி ஆபிஸ் மயானத்தில் முடிவுற்றது.அங்கே இறுதி மரியாதை செய்யப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

நேதாஜியின் வீரத்தை தீரத்தை சொல்லிக்கொண்டே இருந்த, எஞ்சியிருந்த எனக்கு தெரிந்த அந்த ஒர் உன்னத உயிரும் உதிர்ந்துவிட்டது,நாமும் நாடும் அனுபவிக்கும் சுதந்திர காற்றில் கலந்துவிட்டது.

ஜெய்ஹிந்த்...

நன்றி:தினமலர்.காம்/நிஜக்கதை

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in


Comments

  1. ராஜாமணி அம்மாவின் பெயர் வரலாற்றில் தனி இடம் பெற்றுத் திகழும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

    ReplyDelete

Post a Comment

வருக வருக