புதுகை மாவட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஐ.சி.டி பயிற்சிகள் ICT Training for teachers in Pudukkottai District

எங்கள் குழு 

புதுகை மற்றும் அறந்தை கல்வி மாவட்ட ஆசிரியர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு  ஆர்.எம்.எஸ்.ஏ திட்டத்தின் மூலம் ஐ.சி.டி பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பயிற்சியை வழங்கும் வள ஆசிரியர்களில் இரண்டாவது நிலையில் இருந்ததால் ஆசிரியர்களைச் சந்தித்து ஐ.சி.டி குறித்த கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.

குறிப்பாக முதல் நிலை வள ஆசிரியர்கள் வெகு நேர்த்தியாகவும், வெகு சிரத்தையாகவும் பயிற்சிகளை எடுத்ததால் அதை அப்படியே மாவட்ட ஆசிரியர்களுக்கு கடந்தவேண்டிய இடத்தில் இருந்தேன்.

மாநில வள ஆசிரியர் குழுவின் தலைவராக இளவல் திலீப் ராஜு செயல்படும் பங்கு உண்மையில் பாராட்டுக்குரியது.

வகுப்பறைகளில் ஐ.சி.டி பயன்பாட்டுக்காக தேசிய நல்லாசிரியர் விருதை குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் அவர்களின் கரங்களில் இருந்து பெற்றுக்கொண்ட பெருமைக்குரியவர் திலீப்.

மாவட்ட பயிற்சிகளில் முடிந்தவரை சிறப்பாக செய்யவேண்டும் என்கிற உத்வேகத்தை தந்தது திலீப் தலைமையில் இயங்கிய மாநில வள ஆசிரியர் குழு. குழுவின் உறுப்பினர்களில்  அவர்போன்றே தேசிய விருதுபெற்ற ஆசிரியர்கள் உண்டு. குறிப்பாக விஜயகுமார் முத்து, திருமிகு சித்ரா போன்ற ஆசிரியர்கள் வெகு நேர்த்தியாக பயிற்சியளித்தனர்.

இம்மாதிரி குழுக்கள் எதிர்கொள்ளும் கேள்விகள் முக்கியமானவை என்றாலும் பயிற்சியின் நோக்கத்தை சிதைத்து ஊனப்படுத்தும் வீரியம் கொண்டவை.

கேள்விகள் என்ன என்கிறீர்களா ?

நான் பென்சில்லகூட படம்போட மாட்டேன் எனக்கு எதுக்கு கம்பூயூட்டர் பெயின்டிங் சொல்லிதாறீங்க?

எங்க ஸ்கூல்ல கரண்ட் கூட இல்லை எனக்கு என்னத்துக்கு இந்த பயிற்சி?

சார் எங்க ஸ்கூல்ல கக்கூஸ் கூட இல்லை நீங்க கணிப்பொறி பயிற்சி கொடுக்கிறீங்க ?

சிலர் வெளிப்படையாகவே பேசிவிடுவார்கள்.

சார் எந்த டீச்சர் எந்த பயிற்சியிலே என்னத்த கத்துக்கிட்டு இருக்காங்க ..எல்லாமே நாம் கேவாஸ்தான் ...

இவை அனைத்து கேள்விகளையும் கேட்குமிடம் பயிற்சித்தளமல்ல, ஒரு வலைப்பூவில் கேட்கலாம், சங்கங்கள் மூலம் நிதி திரட்டி பள்ளி மேம்பாட்டுக்கு செயல்படலாம். ஆனால் கேட்பவர்களால் முடித்ததெல்லாம்  கேள்விகள் கேட்பதுமட்டுமே.

இவர்கள் கேட்பதுமல்லாமல் ஒரு புற்றுக்கிருமி போல தன்னை சுற்றி ஒரு குழுவையும் உருவாக்கிக்கொள்வார்கள்.

இந்த சவால்களை கடந்துதான் பயிற்சிகளை தரவேண்டும்.

இந்த சவால்களை எப்படி சந்திக்கவேண்டும் என்பதை திலீப்பிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்.

அவர் எப்படி சமாளிக்கிறார்.

ரொம்ப சிம்பிள், அவற்றை அவர் கவனத்தில் கொள்வதே இல்லை!

குரூரமான இந்த கேள்விகளை புறந்தள்ளி அற்பணிப்போடு பயிற்சிகளை தொடர்கிறார்.

நான் எனது பயிற்சிகளில் இதை குறிப்பிட தவறவில்லை.

என்னை விட பத்து வயது குறைந்த இளைஞர் ஒருவர் தேசிய நல்லாசிரியர் விருதை பெற்றுள்ளார் என்பதை என்னை முன்னிறுத்தி சொன்னதால் சரியாய் சென்றடைந்தது.

மாவட்டத்தில் இரண்டு கல்வி நிறுவனங்கள் தங்கள் வளங்களை இந்த பயிற்சிக்கு வழங்கி பாராட்டத்தக்க ஒத்துழைப்பை வழங்கின.

மவுண்ட் ஸயன் பொறியியற் கல்லூரி மற்றும் செந்தூரன் பொறியியற் கல்லூரி என இரண்டு கல்லூரிகளும் இல்லாவிட்டால் பயிற்சிகள் சாத்தியமே இல்லை.


பயிற்சிக்கு முதல் நாள் மவுண்ட் ஸயன் கல்லூரிக்கு சென்று மென்பொருட்களை நிறுவினோம். மௌவுண்ட் ஸ்யன் பேராசிரியர்கள் தங்கள் பணிநேரம் முடிந்தும் பம்பரமாக சுழன்று பணிகளை மேற்கொண்டனர்.

செந்தூரன் கல்லூரியில் நாங்க இருக்கோம் நாளைக்கு வாங்க என்று நம்பிக்கையளித்தனர்.

இரண்டு கல்லூரிகளும் தங்கள் மாணவர்களுக்கான கணிப்பொறி நேரத்தை தியாகம் செய்துதான் ஆசிரியர்களுக்கு நேரமளித்தன.

ப்ரொஜெக்டர் ஏற்பாடுகளில் சில சிக்கல்கள் இருந்தாலும் சுப்பிரமணியன் என்கிற வள ஆசிரியர் தன்னுடைய சொந்த ப்ரொஜெக்டரை கொண்டுவந்து ஆபத்பாந்தவனாக உதவினார்.

நம்ப முடிகிறதோ இல்லையோ சுப்ரமணியன் ப்ரொஜெக்டர் இல்லாமல் வகுப்பெடுப்பதில்லை. தன்னுடைய சொந்தப்பணம்  முப்பதாயிரம் ரூபாயில் ஒரு எபஃஸனை வாங்கி அரசுப்பள்ளியில் வகுப்புகளுக்கு வர்ணம் சேர்த்துக்கொண்டிருக்கிறார்.

கூடுதலாக ஒரு தகவல், புதுகை மாவட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர்களில் சுமார் பதினைந்து பேர் அமேசானில் விற்பனையாகும் என்ட்ரி லெவல் ப்ரொஜெக்டர்களை வாங்கி வகுப்புகளில் பயன்படுத்தி வருகிறார்கள். இதைப்போன்ற நல்ல விஷயங்கள் நம்ம மீடியா கண்களுக்கு தெரியாது இல்லையா.


பயிற்சியில் என்னத்தை சொன்னோம் ?
ஐ.சி.டி என்பது ஒரு குடை பதம்.

ஒரு டி.வி, மைக், அல்லது செல்போன் வகுப்பில் பயன்படுத்தினாலே ஐ.சி.டி பயன்படுத்துவதாகத்தான் பொருள்.

கணிப்பொறியும் இணையமும் ஐ.சி.டி யின் ஒரு பகுதியே ஒழிய அவையே ஐ.சி.டி அல்ல.

சவுண்ட் ரெக்கார்டர் பயன்பாடு கூட ஐ.சி.டி பயன்பாடுதான்.

இதுகுறித்து பேசிவிட்டு ஓபன் ஷாட், கிம்ப், டக்ஸ் பெயிண்ட், ஸ்டெல்லரியம் போன்ற பல மென்பொருட்களை அறிமுகம் செய்தோம்.

மழை எல்லோருக்கும் தான், பயிர்கள் வளரத்தான் என்பதல்ல எல்லோருக்குமே மழை.

ஆர்வமிக்க பல ஆசிரிய பெருந்தகைகளை அடையாளம் காண முடிந்தது.

குறிப்பாக ப்ளிக்கர்ஸ் செயலியை பயிற்சியளித்த இளவல் தயாநிதி ஒரு நல்ல பயிற்சியனுபவத்தை அளித்தார்.

கஹுட் பயிற்சியில் சங்கர் அசத்தினார். இத்தனைக்கும் ஒரு தசாப்த்திற்கு முன்னர் அவரை வள ஆசிரியர் குழுவிற்கு வலிந்து அழைத்த பொழுது விலகி ஓடியவர் அவர். ஆனால் கணிப்பொறியின் கற்றல் சார் செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்ததால் கணிப்பொறி சார்ந்த ஆசிரிய பயிற்ச்சிகளில் தொடர்ந்து அசத்தி வருகிறார்.
ஆசிரியர் சங்கர் தனது வகுப்பில் ப்ளிக்கர்ஸ் பயன்படுத்திய பொழுது 

ஆசிரியர் சங்கர் சக ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்த பொழுத

ப்ளிக்கர்ஸ் பயிற்சியை அறந்தை மாவட்ட ஆசிரியர்களுக்கு தந்து அசத்தினார்.

பூமிநாதன், சரவணப்பெருமாள்  உள்ளிட்ட பெருங்குழு வள ஆசிரியர்கள் மாவட்ட பயிற்சிகளை ஒருங்கிணைத்து தங்கள் பணியை செவ்வனே செய்தார்கள்.

பொறுப்பு தலைமையாசிரியர் பெருமக்களும் தங்கள் பணிகளை சிறப்புற செய்தார்கள்.

மவுண்ட் சியான் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்களாக பங்குபெற்று பயிற்சி நடைபெற உதவியது அந்த கல்லூரி குறித்த மதிப்பை பன்மடங்கு அதிகரித்தது.

செந்தூரன் கல்லூரியின் கணிப்பொறி துறை பேராசிரியர்  ஸ்ரீனிவாசன் கிம்ப் பயிற்சியை ஆசிரியர்களுக்குத்தந்து அசத்தினார்.  ஸ்ரீனி வெகு ஆர்வத்துடன் கிம்ப் குறித்து நீண்ட தரவுகளை ஆசிரியர்களுக்கு தந்தார். பெரிய விஷயம் அது.

ஸ்ரீனிக்கு ஆசிரியர்கள் சார்பாக ஒரு ஸ்பெஷல் நன்றி. பயிற்சியின் வெற்றிக்கு ஸ்ரீனி போன்றோர் ஒரு முக்கிய காரணி என்பதுதான் உண்மை.

பயிற்ச்சியில் மாநில வள ஆசிரியரான ராஜ்மோகன் குவிஸில். காம் தளத்தை அறிமுகம் செய்தார். அசத்தல் அறிமுகம் அது. கஹுட் போல இல்லாமல் பல மேம்பட்ட வசதிகளைக்  கொண்டிருந்தது குவிஸில்.

நான் இதை அரங்கில் குறிப்பிட்டதும் எழுந்தது ஒரு ஒரு கைதட்டல் பேரலை! வாழ்த்துகள் ராஜு. தமிழ்த்துறையில் இருந்து ஐ.சி.டிக்கு மாநில வள ஆசிரியராக இருப்பது உண்மையில் பெருமிதத்திற்குரிய விஷயம்.

அவர்கள் செய்தது சரி நீங்க என்ன ஆணியை ...

என்பவர்களுக்கு

ஐ.சி.டி அறிமுகம், கணிப்பொறி பாகங்கள் அறிமுகம், ஓபன் சோர்ஸ் அறிமுகம்,  பேராளுமைகள் லேடி லவ் லேஸ் அடா, டாக்டர். லிசா சூ குறித்தும் பேசினேன்.

சில அமர்வுகளில் கஹுட் நிகழ்த்த முடிந்தது.

 ஒருவழியாக இந்த ஆண்டு ஐ.சி.டி பயிற்சிகள் முடிவுற்றன.

இனி அடுத்த ஆண்டுதான்.

பல ஆர்வமிகு ஆசிரிய பெருந்தகைகளை கண்டறிய உதவிய பயிற்சி.

திடுமென யாரும் வள ஆசிரியர்கள் பயிற்சிக்கு வர இயலாமல் போனால் ஆபத்பாந்தவன் மலையப்பன்தான், பயிற்சி முழுதும் இவரது பங்களிப்பு அருமை.

அவலோகிதம் நிரல் குறித்து அறிமுகம் செய்த அறந்தை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.ராசி பன்னீர் செல்வன் அவர்களின் உரை ஆர்வத்தை கிளறும் வண்ணம் இருந்தது.

Comments