ஞாநி மறைந்தார்


ஏன் ஞாநியின் மறைவு முகநூல் வட்டங்களில் பெரும் அதிர்ச்சி அலைகளை செலுத்துகிறது?

ஞானியை அறிந்தவர்கள் நேரில் பார்த்தவர்கள் அவரது உடல்நிலையை நன்கு அறிவார்கள்.

டயாலிசிஸ் செய்து மட்டுமே உயிர்வாழ்ந்த சமூக நல எழுத்தாளர் அவர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது உணவில் முற்றாக உப்பைத்தவிர்த்திருந்தார்.

ஆக, அவரது மன உறுதியும், சமூக செயல்பாட்டு ஆர்வமும்மட்டுமே அவரது நாட்களை நீட்டித்தன என்பதை அவரை நேரில் பார்த்து பேசியவர்கள் அனைவருமே அறிவார்கள்.

மனிதர்களுக்கேயுள்ள இன்னும் கொஞ்சம் ஆண்டுகள் இருந்திருக்க கூடாதா? என்கிற ஏக்கம்தான் இன்று இரங்கல்களாக வெளிப்படுகின்றன.

உலகமே கிழக்கு பக்கம் ஓடினால் மேற்கே இருந்து மிகச்சரியான வாதத்துடன், தரவுடன் வருவது ஞாநியின் பாணி.

ஞாநியின் எழுத்தை படிக்காமல் நமது சமூகத்தை அணுகுவது இருட்டு அறையில் குருட்டுப் பூனை தவ்வுவது போலத்தான்.

இன்று மிக முக்கியமான அவரது கட்டுரை ஒன்றை குறித்து பகிர்வது அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.

தனது நிலைப்பாடுகளால் பத்திரிக்கை பத்திரிகையாக மாறி இறுதியில் கல்கியில் அவர் எழுதிக்கொண்டிருந்தபொழுது வந்த கட்டுரை அது.

ராம் ஜென்ம பூமி குறித்து.

எப்படி பாப்ரி மசூதி ராம் ஜென்ம பூமியாக மாறியது, அதற்குப்பின்னர் எத்தனைஆண்டுகால ஒருங்கிணைக்கப்பட்ட, குவியப்படுத்தப்பட்ட காவி அமைப்புகளின் செயல்பாடுகள் இருந்தன என்பதை விரிவாக எழுதிஇருந்தார்.குறிப்பாக இந்துத்துவ செயற்பாட்டாளர்கள் எப்படி அரசு அமைப்புகளை ஊடுருவியிருக்கிறார்கள். காவல்துறை உயர்பதிவிகளில், நீதிமன்றங்களில், அரசு பணிகளில் என அவர்களின் ஆதிக்கம் முழுமைபெற்ற பிறகே பாப்ரி மஸ்ஜித் ராம் ஜென்ம பூமியானது என்பதை மிகத்தெளிவான தரவுகளுடன் முன்வைத்த கட்டுரை அது.

ஞானி சங்கரன் பிறப்பால் ஒரு பிராமணர், கல்கி ஒரு பிராமணிய பத்திரிகை என்ற முத்திரையோடு இருக்கும் பத்திரிக்கை. இந்த பின்புலத்தில் நின்று பார்க்கும் பொழுது எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் நம் மரியாதைக்குரிய மாண்புமிகு மனிதர்கள்.

"1984வாக்கில் நான்அயோத்தி சென்றிந்த பொழுது" என்கிற அவரது அனுபவம் கட்டுரையின் முக்கியமான தரவு.

சந்தகமே இல்லாமல் பேரிழப்பு...

ஞாநி போல் சிந்திக்க, ஞாநி போல் செயல்பட, ஞாநி போல எழுத இனி யாருமே இல்லை இங்கு என்கிற பொழுது அவரது இழப்பு துருவப்பிரதேச குளிராய் நமது எலும்புகளை ஊடுருவுகிறது.

போய் வாருங்கள் ஞாநி ...

உங்கள் வாழ்வை நீங்கள் உண்மையாக வாழ்ந்தீர்கள்.

சமூகத்தின் அறமும் மனிதமுமாக இருந்தீர்கள் ...


போய்வாருங்கள் ...

பேரிழப்பின் வலிகளோடு

மது

இணைப்புகள்

ஏனைய நண்பர்களின் இரங்கல்கள்
எழுத்தாளர் ஞானி அவர்களின் வீட்டிற்கு ஆவணப்பட நேர்காணல் ஒளிப்திவிற்கு சென்னையில் அவர் தம் வீட்டிற்கு சென்றிருந்தேன் புத்தக குவியலுக்கு நடுவே இருந்த அவரிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் என்ற போது " கேட்டு தண்ணீர் குடிக்கும் யாரும் இங்கு வருவதில்லை தோழர் " என்றார் இந்த மண்ணை மக்களை அவ்ளோ நேசித்த தோழர். தோழர் போன்ற நற்சிந்தை கொண்ட மனிதர்கள் மறைவு அதிர்வை தருகிறது. வயதும் பிணியும் அவரை படுத்தியமையில் இருந்து விடுவித்த மரணத்திற்கு...... அஞ்சலி

இது புதுகை செல்வா

----
“மனித உடலுடன் உறவாடும் மருத்துவர் எப்படி அதில் பொறுப்பின்றி விளையாடமுடியாதோ, அதே போல மனித மனங்களுடன் உறவாடும் சினிமாவின் படைப்பாளிகளும் பொறுப்பின்றி பொழுது போக்கு என்ற பெயரில் விளையாடமுடியாது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.” - எழுத்தாளர் ஞானி.

போங்க ஞானி...பின்னாடியே வருகிறேன்!.

ஞானி ஈரோடு புத்தகக்கண்காட்சியில் பேசும் போது எனது உலக சினிமா டிவிடி ஸ்டாலுக்கு கட்டாயம் செல்லவும் என உத்தரவிட்டதை நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டேன்.
என்றாவது நேரில் சந்தித்து நன்றி கூற ஆசைப்பட்டேன்.
ஆசை அதிகமாகி விட்டது.

இது எஸ்.பி.பி.பாஸ்கரன் அவர்களின் இரங்கல்
---
கீழே வருவது -திருப்பூர் சுகுணாதேவி- அவர்களின் இரங்கல்

இதுகாறும் நமது நட்பு வட்டத்தில் இருந்த திருமிகு. ஐயா.ஞாநி (ஞானி சங்கரன்) அவர்கள் கடந்த 40 வருடங்களாக இதழியல்,தினசரிப் பத்திரிக்கைத் துறை, நாடகத்துறை, சமூக அரசியல் பற்றிய விமர்சனம், தொலைக்காட்சித்துறை, சிறுவர் வாழ்வியல் ஆகிய களங்களில் தீவிரமாக இயங்கி வந்தவர்.

முகநூலில் கடந்த இரவு 8.27 மணிக்குப் பதிவிட்டிருக்கிறார்.அதுவே அவரது இறுதிப் பதிவாகிவிட்டது என்பதை இன்னும் நம்பவும் இயலவில்லை.

அன்னாரின் பிரிவுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்கிறேன்.

-திருப்பூர் சுகுணாதேவி-

-----
இது தீவிர திராவிட இயக்க செயற்பாட்டாளர் இசை இன்பன் அவர்களின் பதிவு

எழுத்தாளர் ஞானி மறைந்தார்
அவரது உடல் மருத்துவ கல்லூரிக்கு கொடையாக அளிக்கப்படுகிறது
-----

இது பிரின்ஸ் என்ராசு பெரியார்

உடல் உபாதைகளைத் தாண்டி தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தவர். தமிழக அரசியல் குறித்த அவரது நிலைப்பாட்டில் நிறைய மாற்றுக் கருத்துகள் நமக்கு உண்டு. ஆனால் மதவாத சக்திகளை எதிர்ப்பதில் எப்போதும் முன் நின்றவர். நாடகம் (பரீக்‌ஷா), இதழ்கள், மின்னணு ஊடகங்கள், தீம்தரிகிட, கோலம், கேணி, இணைய பக்கங்கள், சமூக ஊடகங்கள் என்று புதிது புதிதாகக் களங்களில் புகுந்தபடி இருப்பார். பா.ஜ.க. - வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே அரசுத் தொலைக்காட்சியில் “அய்யா” என்று தந்தை பெரியார் குறித்த குறுந்தொடரிடனை இயக்கியவர்.

எப்போதும் இளைஞர் கூட்டத்துடன் இருக்கும் அவர் வீடு. அது அவருடையதாக மட்டுமில்லாமல் பலருக்கும் கூடு.

இன்று பா.ஜ.க.வை தோற்கடித்திருக்கும் நோட்டா என்று அறியப்பட்டுள்ள ”49-ஓ” குறித்து தொடக்க காலங்களில் (எனக்குத் தெரிந்து) நிறைய எழுதியவர் அவர் தான்.

சென்னை வந்த புதிதிலிருந்து எப்போதையும் போல் அண்ணன் பெரியார் சாக்ரடீசு மூலம் #ஞாநி உடனான அறிமுகம் கிடைத்தது. இலக்கிய வட்டத்தில் சில, பல நண்பர்கள் அவருடைய வட்டத்திலிருந்து நான் பெற்றவர்கள். ‘மா’ பத்மா, நண்பன் மனுஷ் நந்தன் மற்றும் நண்பர்கள் அனைவருடனும் என் வருத்தத்தை பகிர்ந்துகொள்கிறேன்.

நான் மட்டுமல்ல... பலரும் எண்ணி எழுத அவருடனான நினைவுகள் ஏராளம் இருக்கின்றன.

சென்னை புத்தகக் காட்சி என்றாலே அவர் நினைவும் வந்துவிடும். ஒவ்வொரு முறையும் அவருடைய அரங்கிற்கு தேடிச் சென்று ஓட்டுப் போட்டுவிட்டு வருவது வழக்கம். அப்படியொரு புத்தகக் காட்சி நடைபெறும் நாளிலேயே அவர் மறைந்திருக்கிறார். இனி, அவர் இல்லாத சென்னை புத்தகக் காட்சி அவரை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

ஞாநி, 39, அழகிரிசாமி சாலை, கே.கே.நகர், சென்னை -78
------

இது நலங்கிள்ளி அவர்களின் வரிகள்

தமிழ்வழிக் கல்வி, இடஒதுக்கீடு இரண்டையும் தெளிவாக ஆதரித்தவர் ஞாநி. அவருக்கு ஆழ்ந்த இரங்கல்.

-----
மீண்டும் இசை இன்பன்

முதன் முதலாக தந்தை #பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை காட்சி அமைப்புகளோடு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், தோழர் உ. வாசுகி அவர்களோடு இணைந்து வழங்கியவர் எழுத்தாளர் #ஞானி அவர்கள்.

----
இது எழுத்தாளர் சமஸ்

தமிழ் மக்களின் உறுதியான உரிமைக் குரல். என்னைப் போன்ற எத்தனையோ பேருக்கு முன்னோடி. ஞாநி உங்களை இப்படி பறிகொடுப்போம் என எண்ணவில்லை. ஒரு குடும்பத்தின் இழப்பல்ல ஐயா நீ!

---
இது எழுத்தாளர் இரா.எட்வின்

1983 கோடையில் “தேன்மழை” பத்திரிக்கை இளம் படைப்பாளிகளுக்கான 15 நாள் பயிற்சிப்பட்டறையை சென்னையில் நடத்தியது.

அடுத்தநாள் தோழர் ஞாநியும் மாலன் சாரும் வகுப்பெடுக்கிறார்கள் என்று தெரிந்ததும் ரெக்கை கட்டிக் கொண்டது.

தோழர் ஞாநி அப்போது “தீம்தரிகிட” பத்திரிக்கையை நடத்திக் கொண்டிருந்தார். A4 அளவில் வண்ணமயமாக அது வந்துகொண்டிருந்தது. மாலன் சார் (மாலன் நாராயணன்) அப்போது திசைகள் நடத்திக் கொண்டிருந்தார். இரண்டின்மீதும் .அன்றைய இளைஞர்களுக்கு ஒரு மோகம் இருந்தது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

ஒரு கட்டுரையை எங்கு தொடங்கி எப்படி நகர்த்தி எங்கு முடிக்க வேண்டும் என்பதில் எனக்கு ஏதேனும் இருக்கிறது என்று சொன்னால் அதி அன்றைய அவர்கள்து வகுப்புகளுக்கும் அதற்குப் பிறகான மாமரத்தடி நிழலில் அவர்களோடான எனது உரையாடலுக்கும் மிகப்பெரிய பங்கிருக்கிறது. அதற்காக ஞாநி தோழருக்கும் மாலன் சாருக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன்.

தோழரோடான எனது நெருக்கம் “காக்கை”யின் (Kaakkai Cirakinile) வெளியீட்டு விழாவிலிருந்துதான் தொடங்குகிறது. தோழர் இன்குலாப், தோழர் ட்ராட்ஸ்கி மருது, தோழர் வீர சந்தானம், அருள்மொழி,
தோழர் ஞாநி ஆகியோர் பங்கேற்ற நிகழ்விற்கு நான்தான் தலைமை.

பங்கேற்றவர்களில் இன்குலாப், ஞாநி, மற்றும் அருள்மொழி ஆகியோரது உரைகள் வெகுவாய் ஈர்த்தன. அபோது சொன்னேன் ‘கருப்பும் சிவப்பும் சரியாய் இணையனும்”. இதுகுறித்து ஒரு தொடர் ஞாநி எழுத வேண்டும் என்று.

அடுத்தநாள் ஞாநி என்னை அழைத்தார்

”கருப்பும் சிவப்பும் மட்டும் போதாது எட்வின், நீலமும் இணைந்தால்தான் முழுமை பெறும். நிச்சயம் முயற்சி செய்கிறேன்” என்று சொன்னார்.

அதன்பிறகு நிறையமுறை அவரது வீடு சென்று சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது.

”தொடராக எழுதுவதில் சிரமம் இருக்கிறது. உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. வேண்டுமானால் கேள்விகளைக் கேளுங்கள். பதில்களைத் தந்து விடுகிறேன்” என்றார். இந்தப் பொறுப்பை நாந்தான் ஏற்றேன். இதன்பொருட்டும் அவரோடான உறவு கூடியது.

காக்கையில் அவரது கேள்வி பதில் பகுதி சிறப்பானதொரு கவனத்தைப் பெற்றது.

எட்வின், நீங்கள் பத்தி எழுதலாம், எழுதனும் என்று என்னை உற்சாகப் படுத்தியவர். ’65/66, காக்கைச் சிறகினிலே’ தொடங்கியபோது அழைத்து கொண்டாடி வாழ்த்தியவர்.

தனது அறுபதாவது பிறந்தநாளுக்கு அலைபேசி என்னை அழைத்திருந்தார். தம்பி நந்தனோடு (நந்தன் ஸ்ரீதரன்) போனபோது இருவரையும் அணைத்து மகிழ்ந்தவர்.

இரண்டு நாட்களுக்கு முன்னாள் புத்த்கக் கண்காட்சியில் வைத்து ஞாநியை தோழர் முத்தையா சந்தித்திருக்கிறார். வாரத்திற்கு மூன்றுமுறை டையாலிசிஸ் செய்யவேண்டிய நிலையிலும் மிகுந்த உற்சாகத்தோடு பேசியிருக்கிறார். ”காக்கை எஸ்டாப்ளிஷ் ஆயிடுச்சு” என்றிருக்கிறார்.

காக்கையை எஸ்டாப்ள்ஷ் செய்ததில் ஞாநியின் பங்கு மகத்தானது. போகிற திசை எல்லாம் காக்கையைச் சுமந்து திரிந்தவர்.

நாளையோ நாளை மறுநாளோ இல்லை இன்னும் கொஞ்சம் காலம் கடந்தோ என்னைத் தழுவ இருக்கிற மரணம் இன்றைக்கே தோழரை ஆரத் தழுவியிருக்கிறது.

எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் அழுகை வருகிறது ஞாநி.

எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்த எழுத்தாளுமைக்கு என் சார்பாகவும் காக்கையின் சார்பாகவும் ஆழ்ந்த இரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் .
----
இது சிகப்பு சிந்தனையாளர் அய்யா குமரேசன் அசாக்

கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்கள் வருகிறபோதெல்லாம் கண்டனம் முழங்கிடத் தயங்காமல் வந்து முன் நின்றவர் ஞாநி. ஊடகங்களின் நடுநிலை, சமூகப் பொறுப்பு ஆகியவை குறித்து சரியான பார்வையோடு வலியுறுத்தியவர். ஏற்கப்பட்ட கருத்துகளை அலங்காரச் சொற்களால் மாற்றி மாற்றிச் சொல்லி சால்வைகளைப் பெறுவதில் பெருமையில்லை, சமூக மாற்றத்திற்கான சிந்தனைகளை சமரசமின்றி வெளிப்படுத்தி சாடல்களைப் பெறுவதே சிறப்பு என மெய்பித்தவர். கம்யூனிஸ்ட்டுகள் பற்றிய விமர்சனங்களைக் கொண்டிருநதபோதிலும் எங்களோடு நெருக்கமாக நின்றவர். தமுஎகச மேடைகளுக்கு எப்போது நான் அழைத்தாலும் தயங்காமல் வந்து பங்களித்தவர்.

சென்னை புத்தகக் காட்சி தொடக்க நாளில் பேரருடன் சென்றிருந்தேன். தீம்தரிகிட அரங்கில் தனியாய் அமர்ந்திருந்தார் ஞாநி. தொலைபேசியில் யாருடனோ உரையாடிக்கொண்டிருந்தவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு நகர்ந்தவனைக் கையைப் பிடித்து இழுத்து அமரவைத்தார். தொலைபேசியில் பேசி முடித்ததும் ‘ஸாரி என்று சொல்லிவிட்டு உடல்நலம் விசாரித்தார். அலுவலகப் பணி ஓய்வுத் தகவலை அறிந்ததாகக் கூறிவிட்டு, இனி என்ன செய்யவிருககிறேன் என்று விசாரித்தார். என்னை விடவும் பேரருடன் மிகுந்த ஆர்வத்தோடு பேசினார்.

இன்று அதிகாலையில் அவர் காலமானார் என்ற செய்தி உறைந்துபோக வைக்கிறது. என்ன சொல்ல வருகிறாய் இயற்கையே?

தனது உடல் நிலை குறித்த புரிதலோடு, இருக்கிற வரையில் சரியானது என்று நாம் நினைக்கிற கருத்தைத் துணிவுடன் சொல்வோம், செயல்படுவோம் என்று வாழ்ந்த, நாடகத் தளத்தை அரசியல்-சமூக விமர்சனங்களுக்கான பரீட்சைக் களமாக்கியவர்...

அந்தத் துணிவுடன் சொல்லவும் செயல்படவும் உறுதிப்படுத்திக்கொள்வதன் மூலம் அஞ்சலி செலுத்துகிறோம் தோழர் ஞாநி.
----

இது ராஜகோபால் மீனாட்சி சுந்தரம் அவர்களின் நினைவோடை

ஞாநி எக்ஸ்பிரஸ் குழுமத்தில் பணியாற்றியவர். ஒரு கட்டத்தில் அவரை நிர்வாகம் திடீரென பணி நீக்கம் செய்தது. எதிர்த்து நீதிமன்றம் சென்றார். பணிநீக்கம் ரத்து செய்யப்பட்டு கணிசமான தொகை நஷ்ட ஈடாக பெற்றதோடு மீண்டும் பணி நியமன ஆணை பெற்றது அந்த காலகட்டத்தில் பரபரப்பான செய்தியாக இருந்தது.
ஆனால் அவர் மீண்டும் பணியில் சேரவில்லை.

பரீக்ஷா நாடக குழுவை சிறிது காலம் நடத்தினார். தீம்தரிகிட எனும் இதழையும் நடத்தி வந்தார்.

வார இதழ்களில் எழுதி வந்த கட்டுரைகள் பல்வேறு பிரச்சினைகளை அலசின.
மரண தண்டனையின் தீவிர எதிர்ப்பாளர்.
நான் அவரோடு போனில் பேசியதுதான் அதிகம். நேரடியாக ஓரிருமுறை பேசியதோடு சரி.

நான் மரணதண்டனையின் தீவிர ஆதரவாளன் என்பதால் எந்த உரையாடலும் சகஜமாக முடிந்ததில்லை.
இந்த ஆண்டு தொடக்கத்தின் முதல் மரண செய்தியாக அவர் மரணம் வந்திருப்பது வேதனையின் உச்சம்.

-----

இவை அஞ்சல் துறையில் இருக்கும் இளவல் சிவாவின் வரிகள்


விகடனில் ஓ பக்கங்கள், அறிந்தும் அறியாமலும் தொடர் மூலம் என்னளவில் வாசிப்பில் ஆர்வம் ஏற்படுத்தியவர் ஞானி..

ஆழ்ந்த இரங்கல்கள்

-----

இது பத்திரிக்கை.காம் பொறுப்பாசிரியர் டி.வி.எஸ்.சோமு அவர்களின் இற்றை


ஞாநி அவர்களின் சில கருத்துக்களோடு முரண்பாடுகள் உண்டு. பலவற்றில் உடன்பாடு உண்டு.

அப்படி உடன்பாடான ஒன்றை, இறந்தும் செய்திருக்கிறார் ஞாநி.

தனது உடலை மருத்துவமனைக்கு தானமாக எழுத்தி வைத்திருந்ததை அடுத்து, இன்று மாலை 4 மணி சுமாருக்கு அவரது இறுதி ஊர்வலம் அரசு மருத்துவமனை நோக்கிச் செல்கிறேன்.

இதற்காக அவரது குடும்பத்தினருக்கும் நெகிழ்ச்சியான நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும்.

உடல்தானம் செய்திருந்தாலும், சம்பந்தப்பட்டவர் மறைந்தபிறகு, குடும்பத்தினர் அதற்கு உடன்படாத சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன.

அப்படி இன்றி ஞாநியைப்போலவோ பொது நோக்கம் கொண்ட அவரது குடும்பத்தினர் உடல் தானத்துக்கு ஒப்புக்கொணட்டிருக்கின்றனர்.

-----

இது ப.சதீஷ் அவர்களின் இற்றை

விகடனில் ஏதோ ஒரு கட்டுரை வழியாகவே அறிமுகமானார். பின் ஓ பக்கங்கள் . இளம் வயதில் ஒரு விசயத்தை அவர் அணுகும் கோணமும் நுட்பமும் பெரிதாக என்னை ஈர்த்துக்கொண்டது . 49 ஓ பற்றிய அறிமுகமும் அவ்வாறே. இரு தேர்தல்களில் 49 ஓ வை சண்டை யிட்டு போட வைத்தது அவரே .

அறிந்தும் அறியாமலும் என்ற தொடரும் பல திறப்புகளை பார்வைகளை கொடுத்த தொடர்.

முதன் முதலில் விஷ்ணுபுரம் விருது விழாவிற்க்கு சென்ற போது அங்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதே அவர் உடல் நிலை மிக மோசமாக இருந்ததை உணர முடிந்தது. என் தயக்கத்தால் கூச்சத்தால் அதிகம் அவரிடம் பேசவும் முடியவில்லை. நான் வாங்கி இருந்த சில புத்தகங்களில் ஒன்றில் அவர் கையெழுத்து வாங்க கேட்டேன். அவர் நான் எழுதிய புத்தகங்களிலேயே கையெழுத்திடுவதில்லை என மறுத்துவிட்டார்.

அதன் பின் என் வாசிப்புகள் திசைமாறிவிட்டது . என் சிந்தனை தளத்தை பாதித்தவர்களில் ஞாநி முக்கியமானவர்.

ஆழ்ந்த இரங்கல்கள் .
---

மாபெரும் எழுத்தாளுமை

நுட்பமான பார்வை

மறுக்கமுடியாத விவாதங்கள்

என தமிழ் எழுத்துப்பரப்பில் இடையறாது இயங்கிக்கொண்டிருந்த ஆளுமை ஒன்றை இச்சமூகம் இழந்திருக்கிறது.

வருத்தங்கள்தான்

மீள்வோம்


Comments

  1. பள்ளிக்கூட நாட்களிலேயே விண்ணிலிருந்து மண்ணுக்கு டிவி தொடரில் மனதில் இடம் பிடித்தார். ஓ பக்கங்கள் விரும்பி வாசிப்பதுண்டு மிகவும் அபார ஆற்றலுள்ள no compromise type மனிதர் .ஆழ்ந்த இரங்கல்கள் .

    ReplyDelete
  2. பேரிழப்பு
    ஆழ்ந்த இரங்கல்கள்

    ReplyDelete

Post a Comment

வருக வருக