யார் இந்த நெ.து.சு? -முனைவர் மு.பிரபு


'பொன்மாலைப் பொழுது' பிரசங்கங்களில் மற்றுமொன்றை நேற்றிரவு பார்க்க முடிந்தது. தி ஹிந்து தமிழ் நடுப்பக்க ஆசிரியர் சமஸ் கேள்வி -பதில் போன்று தனது பிரசங்கத்தை கட்டமைக்கிறார். குள்ளமான கறுப்புத் தோற்றம். குரலுமே கூட சன்னமாகத்தான் வருகிறது. அவரது எழுத்தைப் படித்துவிட்டு ஆளையும் குரலையும் திடீரென்று சந்திக்க நேர்பவர் திகைத்துத்தான் போவார். மற்றபடிக்கு, சம்ஸ் அவர்களின் கருத்துக்களில் வேறுபட்டு நிற்பதற்கும் அதிருப்தி அடைவதற்கும், இந்தப் பொழிவைப் பொறுத்தவரை, எதுவும் இல்லை. ஒரு ஊடகவியலாளனாக இந்தியா முழுமைக்கும் சுற்றி வந்திருப்பதாகவும், உத்திரப் பிரதேசம் - பீஹார் மாநிலங்களோடு ஒப்பிடும்பொழுது தமிழ்நாடு மிகவும் முன்னேறிய மாநிலம் என்றும், சாதிய வேறுபாடுகளும், சொத்துப் பகிர்வில் மேற்சொன்ன மாநிலங்களோடு ஒப்பிடுகையில் இங்கு நிலைமை எவ்வளவோ பரவாயில்லை என்றும் கூறுகிறார். மொத்த மக்கள் தொகையில் பத்து சதவிகிதத்திற்கும் குறைவாக உத்திரப் பிரதேசத்தில் இருக்கும் பிராமணர்கள் / தாக்கூர்கள் அந்த மாநிலத்தின் மொத்த சொத்துக்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக வைத்திருக்கிறார்கள் என்றும் கூறுகிறார்.

இந்த இடத்தில் இன்னொன்றைச் சொல்ல வேண்டும். 1989-90-களில் ராமர் கோவில் விஷயத்தை ஒரு தேசிய பிரச்சனையாக பாஜக கையில் எடுத்த சமயம், வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுல்படுத்தினார். அதை எதிர்த்து வட இந்தியா முழுவதிலும் உயர்சாதிக் காரர்கள் போராட்டங்களை நடத்தினர். தில்லிப் பல்கலையில் ரஜீவ் கோஸ்வாமி என்ற மாணவர் தனக்குத் தீயிட்டுக் கொண்டார். (அவர் அதில் இறந்துபடவில்லை என்பது வேறு விஷயம்). இதை அன்றைய தேசிய பத்திரிகைகள் பூதாகரப்படுத்தின. நாடே ஆட்டம் கண்டு விட்டது போன்ற பிரமை வலிந்து ஏற்படுத்தப்பட்டது. இந்த ஊடக சதியை முன்னின்று நடத்தியவர்கள் பிராமண ஊடக முதலாளிகள்தான். இப்படிச் செய்வது இவர்களுக்கு கைவந்த கலை.

சென்னையில், 1930-களில் ஒரு போராட்டத்தின் போது பாஷ்யம் அய்யங்கார் என்கிற தேசாபிமானி பொலிசாரால் அடிபட்டு பூக்கடை வரை சாலையில் இழுத்து வரப்பட்ட செய்தியை சுதேசமித்திரன் போன்ற பத்திரிக்கைகள் மிகவும் பரபரப்பான செய்தியாக மாற்றியதாகவும், ஆனால் பாஷ்யம் அய்யங்காரை அடித்து இழுத்து வந்த போலிஸ் அதிகாரியும் (ரங்கசாமி அய்யங்கார்) ஒரு பிராமணர் என்பதால், அந்த அதிகாரியின் பெயர் எங்கும் வெளிவந்துவிடாமல் அந்தப் பத்திரிக்கைகள் பார்த்துக் கொண்டன என்றும், உண்மையில் பாஷ்யம் அய்யங்காருக்கு பலத்த அடி ஏதும் தரப்படவில்லை என்றும், காங்கிரச்கார்களுக்கு அப்போது ஒரு தியாகி தேவைப்பட்டதாகவும், அதை பாஷ்யம் அய்யங்காரை வைத்து உற்பத்தி செய்து கொண்டார்கள் என்றும் குடி அரசு எழுதியது நினைவுகொள்ளத் தக்கது.

சமஸ் பொழிவில் இன்னொன்றும் நியாயமானதாகப் படுகிறது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு தாழ்ந்துபோய் விட்டது என்றும், அதற்கு முன்னால் இங்கு தேனும் பாலும் ஓடியதாகவும் கட்டமைக்கப்படும் புனைவு சாரமும் உண்மையும் இல்லாதது என்கிறார். கொல்கொத்தா நகரில் இன்றும் மனிதரை மனிதன் இழுத்துச் செல்லும் கைவண்டிகள் உள்ளன என்றும், ஐம்பது வருடங்களுக்கு முன்னமேயே தமிழ்நாட்டில் இது ஒழித்துக்கட்டப்பட்டு விட்டது என்றும் சமஸ் கூறுவதில் உள்ள உண்மையை ஒப்புவதில் வெகுஜன மனதிற்குத் தயக்கம் இருக்கலாம். திராவிடக் கட்சிகளையும் அவர்களது ஆட்சியையும் குறை கூறுவது ஒரு மோஸ்தர் என்றாகிவிட்ட நிலையில் இது புரிந்துகொள்ளக் கூடியதே. அறுபதுகளில் கிராமங்கள் தோறும் பள்ளிகள் துவங்கப்பட்டதற்கு காமராஜரை மட்டுமே பாராட்டும் வெகுஜன / ஊடக மனம், அத்தகைய ஒரு நிலை இந்த மண்ணில் வருவதற்கு 1930-களிலிருந்தே கொஞ்சமும் அயராமல் இந்த மண்ணின் சனாதன சக்திகளோடு போராட்டம் நடத்திவந்த ஈ.வே.ராமசாமி நாயக்கரையும், பள்ளிக்கல்வித் துறை தலைமை அதிகாரியாக இருந்து செயற்கரிய செயல்களைத் திறம்பட செய்திட்ட நெ.து.சுந்தவடிவேலுவையும் கண்டுகொள்வதேயில்லை. இதையெல்லாம் புரிந்து கொள்வதற்கு concept engineering - media conspiracy - manufacturing consent என்பது பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

அண்ணா நூற்றாண்டு நூலக 'பொன்மாலைப் பொழுது' பிரசங்க வரிசையில் சமஸ் நிகழ்வு பொருட்படுத்தத்தக்க ஒன்று என்றுதான் அபிப்பிராயப்படுகிறேன்.

ஆக்கம்
முனைவர் பிரபு

Comments

 1. திரு சமஸ் பழகுவதற்கு இனியவர். அருமையான எழுத்துநடைக்கும், பேச்சு நடைக்கும் சொந்தக்காரர். முதன்முதலில் தினமணியில் வெளியான, பௌத்த ஆய்வு தொடர்பான என் பேட்டியை அவர் எடுத்ததை நான் என்றும் மறவேன்.

  ReplyDelete
 2. எல்லா மோசங்களும் நல்லதுகளும் இதற்கு முன்னும்க் இருந்ததுதான் தோழர்

  ReplyDelete
 3. நல்ல பகிர்வு.
  பகிர்வுக்கு நன்றி மது சார்.

  ReplyDelete

Post a Comment

வருக வருக