கோடிமலர்களின் கிராமம்


விதைக்கலாம் அமைப்பு கன்றுகளை கல்குடியிருப்பு அல்லது வேறு ஏதாவது நர்சரி ஒன்றில்தான் பெறுகின்றது.பலமுறை கல்லுகுடியிருப்பு செல்லவேண்டும் என்று நினைத்தாலும் ஏனோ அது தள்ளிக்கொண்டே சென்றது. கடந்த ஞாயிறு அன்று இயற்கை ஆர்வலர் பறவைத்தோப்பு அருண் அவர்கள் நட்சத்திர மரங்களை வாங்க விரும்பினார்.


சோதிட நட்சத்திரங்கள் இருபத்தி ஏழுக்கும் தனித்த மரங்கள். கல்லுக்குடியிருப்பு செல்லவேண்டும் என்றவுடன் முதல் ஆளாக பசுமை வெறியர் குருமூர்த்தி நானும் வரேன் என்றார், பாலாஜி நானும் வருகிறேன் என்று சொல்ல புறப்பட்டோம்.

அரிமளம் அருகே என்றார்கள். அரிமளத்தை கடந்தும் சென்றுகொண்டே இருந்தோம். ஒத்தைப்புளிகுடியிருப்பை கடந்து வலதுபுறம் திரும்பி நீண்டதூரம் செல்ல வேண்டியிருந்தது.

ஒருகோடி கணேசன் என்கிற நர்சரி உரிமையாளர் பெரும்பாலான கன்றுகளை வைத்திருப்பார் என்றார்கள்.

ஒருகோடி என்பது கணேசனின் அடைமொழி. ஊரில் எங்கே கேட்டாலும் மிகச்சரியாக அவரது  நர்சரியை அடையாளம் காட்டுகிறார்கள்.

வண்டியை அவரது நர்சரிமுன்னால் நிறுத்திவிட்டு செடிகளின் பட்டியலை கொடுத்தோம்.

ஓ நட்சத்திர கன்றுகளா என்றபடி வரிசையாக கன்றுகளை எடுத்துக்கொடுக்க  ஆரம்பித்தார்.

அவரிடம் இல்லாத கன்றுகளை வேறு பண்ணைகளில் வாங்கி தரவும் உதவி செய்தார்.

கருங்காலி மரக்கன்று மட்டும் கிடைக்கவில்லை.

ஒரு கன்று முன்னூறு ரூபாய்,கண்டனூரில் கிடைக்கும் என்றார்.

 27 நட்சத்திரங்களுக்கும் உரிய கன்றுகளை மொத்தமாக மூவாயிரம் ரூபாய்களுக்கு விற்பதை சொன்னார்.

கருங்காலி, அலரி மரக்கன்றுகள் போல இன்னும் சில மரக்கன்றுகள் மட்டுமே கல்குடியிருப்பில் கிடைக்கவில்லை. ஆனால் மொத்தமே முன்னூறு ரூபாய்களுக்குள் முடிந்துவிட்டது!

கல்லுக்குடியிருப்பின் வெற்றிக்கு

நாள்முழுக்க கொளுத்தும் வெயிலில் பணியாற்ற பணியாளர்கள் கிடைப்பது ஒரு காரணம். மண்கட்டிகளை அடித்து பொடியாக்கும் வேலையை செய்யும் ஆண் பணியாளருக்கு ரூபாய் ஐநூறும், கன்றுகளை சோதித்து, கவர்களில் மண் நிரப்பி, விதைகளை விதைக்கும் பெண் ஊழியர்களுக்கு 140 ரூபாய்களும் ஊதியமாக தரப்படுகிறது.


கல்லுக்குடியிருப்பு  ஒரு பிளாஷ்பாக்

இன்று ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து பெரும் லாரிகளில் வந்து கன்றுகளை மொத்தமாக வாங்கிக்கொண்டு செல்கிறார்கள்.

ஆனால் இருப்பது ஆண்டுகளுக்கு முன்னாள் கல்லுக்குடியிருப்பு இப்படி இல்லை.

கள்ளுக்குடியிருப்பாக இருந்திருக்கிறது.

சாராயம் காய்ச்சுதல், உற்பத்தியான சாராயத்தை நான்கு மாவட்டங்களுக்கு  விநியோகம் செய்தல் என்பதுதான் கே.புதுப்பட்டி, கல்லுகுடியிருப்பு பகுதியின்அடையாளம்.

காவல் நிலையத்தில் புகுந்து காவலர்களை தாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு கொடிகட்டி பறந்த நாட்கள்.

பல காக்கி அதிகாரிகள் இந்த கிராமத்தில் மாற்றத்தை கொண்டுவர முயன்றிருக்கிறார்கள்.

பிரச்னை வெகு தீவிரமானது, முப்பது வயதிற்குள் இருக்கும் பெண்களில் பலர் விதவைகள். கணவன்மார்கள் காய்ச்சி விட்டு அங்கேயே அதை அருந்திவிட்டு மரணிப்பது ஒருகாரணம்.

நிலைமையை கச்சிதமாக புரிந்த ஒரு ஆய்வாளர் அங்கே வந்திருக்கிறார். தற்போது எஸ்.பி அலுவலகத்தில் பணியாற்றும் அன்பழகன்தான் அவர்.

பிரச்சனையை மிகச்சரியாக அணுகியதுதான் அவர் பெற்ற வெற்றிக்கு காரணம்.

ஏழைகள் காய்ச்சுவது யார் கொடுக்கும் தைரியத்தில் என்று பார்த்தால், ஊர் பெருமுதலைகள். சத்தம் இல்லாமல் இவர்களை காய்ச்ச சொல்லி, அதை மொத்தமாக சேகரித்து விநியோகம் செய்திருக்கிறார்கள்.

அன்பழகனுக்கு முன்னர் காய்ச்சுபவர்களை மட்டுமே கைது செய்திருக்கிறது காவல்துறை.

இவர் மாற்றி அடித்துவிட்டார். அவர்களை விட்டுவிட்டு பெரு முதலைகளை கைது செய்ய மெல்ல மெல்ல நச்சு வளையம் தகர்ந்துபோக  ஆரம்பித்திருக்கிறது.

இதோடு மறுவாழ்விற்கான வாய்ப்புகளாக நர்சரி தொழிலை, அதற்கான பயிற்சியை வழங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இன்று கல்லுக்குடியிருப்பின் கசப்பான கடந்தகால சுவடுகள் எதுவுமே இல்லை.

கல்லுக்குடியிருப்பு இன்று பசுமை நேசர்களின் மெக்கா.

இயற்கை ஆர்வலர்கள் ஒருமுறையாவது சென்று பார்க்கவேண்டிய இடம்.

அடுத்தமுறைசெல்லும் பொழுது இன்னும் கூடுதல் தகவல்களை தருகிறேன்.

அன்பன்
மது

Comments

  1. வாவ்! பகிர்விற்கு நன்றி அண்ணா. அழகிய மாற்றம் வரக் காரணமாயிருந்த திரு.அன்பழகன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நல்ல அதிகாரிகள் இருந்தால் நாடு திருந்தும் என்பது உண்மையாகி இருக்கிறது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. could you please share this nursery location and contact info of ganeshan.

    ReplyDelete

Post a Comment

வருக வருக