பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் சங்கடங்கள்



பொதுவாகவே நான் தமிழாசிரியர்களை தவிர ஏனைய ஆசிரியர்கள் வினாத்தாள் எடுத்தாலே போதும் தமிழில் தேர்ச்சி சதவிகிதம் உயர்ந்துவிடும் என்று சொல்வது உண்டு.



ஒரு மாணவ மூளையில் எவ்வளவு விசயங்களை செலுத்த வேண்டுமே அதைவிட குறைந்தபட்சம் ஐநூறு மடங்கு உள்ளே செலுத்த விளையும் வேட்கை தமிழ் ஆசிரியர்களுக்கு உண்டு.

கேட்டால், தாய்மொழி, திறன் சார்ந்த கல்வி என்றெல்லாம் சொல்வார்கள்.

சரிப்பா கூடுதல் வாசிப்பு, பொதுவாசிப்பிற்கு எதாவது செய்திருக்கிறீர்களா என்றால் அதெல்லாம் எதுக்கு என்பதுதான் பதில். சில விதிவிலக்குகள் இருக்கலாம் ஆனால் இதுதான் விதி.

முதலில் ஒரு விஷயத்தை தெளிவாக உணர்வது அவசியம்.

பத்தாம் வகுப்பு வினாத்தாள் ஒரு திட்டத்தின் படி அமைக்கப்படும்.

தெளிவாக தவிர்க்கவே கூடாத கேள்விகள் என்று ஒரு பட்டியலை அனுபவமுள்ள ஆசிரியர்கள் தயாரித்துவிட முடியும்.

மொத்தமாக ஒரு அறுபது வினாக்களை தொடர்ந்து பயிற்சியளித்தாலே மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றே தேர்ச்சியடைந்துவிடுவார்கள்.

பயிற்றுவித்தல் குறைவாகவும் பயிற்சியளித்தல் அதிகமாகவும் மாறிப்போனது இந்தப்புள்ளியில்தான்.

ஐன்ஸ்டன் சொன்னதுபோல கல்வி என்பது சிந்தனையை தூண்டுவதுதான் என்பதை உணர்ந்தாலும் ஆசிரியர்களுக்கு தரப்படும் தேர்ச்சிவிகித அழுத்தம் சிந்தனைப்பக்கமே மாணவர்களை தள்ளாமல் தேர்ச்சி என்கிற ஒற்றை இலக்கை நோக்கி செலுத்த துவங்கி கால்நூற்றாண்டுக்கு மேலாகிறது.

இந்த சூழலில் நீட் அறிமுகமாகிறது.

சிந்தித்து விடையளிக்கும் வண்ணம் அதன் வினாக்கள் இருக்க நம் மாநிலப் பிள்ளைகள் திணறிப்போவார்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டாம்.

என்ன செய்வது என்றால் வினாத்தாள் முறை மேம்பாடு என்று தடாலடியாக உள்ளே இறங்கிவிட்டார்கள்.

இதன் விளைவுதான் தமிழ் முதல்தாள் வினாக்கள் என்று நினைக்கிறன்.

இது நாணயத்தின் ஒரு பக்கம்தான்.

சிந்தித்து விடையளிக்கும் பயிற்சியை இனி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தரவேண்டியதுதான்.

பகுத்தறியும், தொகுத்தறியும், பட்டியலிடும் திறன்களை மாணவர்கள் வளர்த்துக்கொள்ளாவிடில்  அதிர்ச்சிகள் நிகழலாம்.

அப்படீன்னா நீ இந்த மாற்றத்தை வரவேற்கிறியா என்கிறீர்களா?

முழுமையான புரிதல், பயிற்சி, பிறகு வகுப்பறையில் அறிமுகம் என்ற படிநிலைகளை தாண்டி வந்தால் வரவேற்கலாம்தான்.

இதை விடுத்தது திடுமென மாறுவது சமூக சமநிலையை பாதிக்கும்.

இனி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்கள் சிந்தனைத் திறனை வளர்க்க திட்டமிட, வளங்களை சேகரிக்க வேண்டும்.

இது ஒன்றும் கடினமான விஷயம் அல்ல.

முறையாக செயல்பட்டால் வரவேற்போம்.

Comments

  1. ஒன்பதாவது வரை ஒரு மாதிரியான படிப்பு,
    பத்தாம் வகுப்பில் தலைகீழாக மாறவேண்டும்
    ஆசிரியர்களும் மாற வேண்டும், மாணவர்களும் மாறவேண்டும்
    நடக்கிற காரியமா
    முதலில் நம் கல்வி முறை மாற வேண்டும் நண்பரே

    ReplyDelete

Post a Comment

வருக வருக