அதிகாரிகளிடமிருந்து எவ்வளவு விலகி இருக்க முடியுமே அவ்வளவு விலகியிருப்பது என்னுடைய பழக்கம். மாவட்ட வள ஆசிரியராக இருந்ததால் தவிர்க்கவேமுடியாமல் அலுவலர்களை சந்திக்க நேரும். பெரும்பாலும் மோனோலாக்தான் அத்தகு சந்திப்புகள்.
அதிகாரிகள் தங்கள் கருத்தை கூற, சரி என்று சொல்லிவிட்டு வெளியில் வந்துவிடுவது என்னுடைய பாணி.
இந்த தமிழாசிரியர் சங்கத்தினர் இருக்கிறார்களே அவர்கள் அப்படியே நேர் எதிர். எந்த ஒரு நிகழ்வையும் திட்டமிட்டு நேர்த்தியாக செய்யவேண்டும் என்று உறுதியாக நிற்பார்கள், அதிகாரிகளுடன் வாதிடுவார்கள். பெரும்பாலான நேரங்களில் செயல்களுக்கு நீளாது வாதத்துடன் முடிந்துபோய்விடும்.
அதிகாரிகளுடன் வாதிடுவதோ, கருத்துச்சொல்வதோ இந்திய துணைக்கண்டத்தில் தேவையற்ற ஒன்று என்பதை நான் நன்கு புரிந்துவைத்திருந்தேன். அவர்கள் சொல்வதை அப்படியே செய்துவிட்டோம் என்றால் நமக்கு தேவையற்ற மனஎழுச்சிகள் அவசியப்படாது.
இந்த அணுகுமுறையோடுதான் நான் அதிகாரிகளை பார்ப்பேன். பண்புடைய அதிகாரிகளை மட்டுமே சந்தித்துவந்திருக்கிறேன். அதிகாரத்தின் முடைநாற்றம் வீசும், அதிகாரச் சீழ் அவர்களின் நாற்காலியை சுற்றி தேங்கியிருக்க வாரத்தைகளை வரம்பின்றி வீசும் அதிகாரிகளிடம் எக்காரணம் கொண்டும் நெருங்குவதில்லை.
இவை அனைத்தையும் மாற்றிபோட்டார் ஒரு அதிகாரி. ஒவ்வொரு ஆசிரியரின் குரலையும் கேட்க பிரியப்பட்டார். அவருடனா சந்திப்பிற்கு பிறகு முன்னைவிட தீவிரமாக மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு தயார் செய்தார் நண்பர் குருநாதசுந்தரம். அத்தகு நேர்மறை அலைகளை ஏற்படுத்தியவர் ஒருவர் புதுகையில் பணிபுரிந்தார்.
முதல் முதலில் வலைத்தளம் ஒன்றை புதுகை கல்வி மாவட்டத்திற்கு ஏற்படுத்தவேண்டும் என்ற யோசனையை முன்வைத்து ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். வழக்கம்போல வரவே மாட்டேன் என்றவனை வந்து தொலை என்று இழுத்துப்போட்டவர் அண்ணன் நிலவன்தான். ஏற்கனவே தொடங்கி நடந்துகொண்டிருந்த கூட்டத்தின் இடையேதான் சென்றேன். வலைத்தளம் குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள். மிக கவனமாக அந்த பேச்சு முடிந்ததும் புதிதாக வந்தவர்கள் அறிமுகம் செய்துகொள்ளுங்கள் என்றார் முதன்மைக் கல்வி அலுவலர்.
அறிமுகத்திற்கு பிறகு விவாதம் தொடர்ந்தது. எளிமையான கருத்துக்களை மட்டுமே பகிர்ந்தேன். பிறகு மாவட்டத்திற்கு ஒரு வலைத்தளம் துவங்கப்பட்டது. கூகிள் பார்ம் ஒன்றில் மூலம் மாணவர் வருகை பள்ளிவாரியாக பெறப்பட்டது. ஜி மெயில் மூலம் முதன்மைக் கல்வி அலுவலக கடிதங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு மிக கடும் எதிர்ப்புகள் மாவட்டம் முழுதும் எழுந்தது அன்று. ஆனால் இன்று ஜி.மெயில் பார்ப்பது என்பது புதுகை கல்வி மாவட்டத்தின் ஒவ்வொரு தலைமை ஆசிரியருக்கும் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாகிவிட்டது.
இந்த நிலைபெற்ற மாற்றத்தை இன்றும் நினைவு கூர்கிறார்கள் ஆசிரியர்கள். இதுதான் மாற்றம், மாற்றம் என்பது இப்படிதான் இருக்க வேண்டும், பதவியிலும் அதிகாரத்திலும் இருக்கும் பொழுது முன்னெடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை அந்த அதிகாரி பணியிட மாற்றம் பெற்றதும் மறைந்து போவதுதான் வாடிக்கை. ஆனால் இவர் அறிமுகம் செய்த மாற்றங்கள் இன்றும் பின்பற்றப்படுகின்றன.
ஒரு முதன்மைக் கல்வி அலுவலர் என்பதையும் தாண்டி, தொல்லியல் சின்னங்களின் மீது தீராத தாகம் கொண்டவர், ஒவ்வொரு மாணவரும் தம் பகுதியில் இருக்கும் தொல்லியல் சின்னங்களை குறித்து அறிந்திருப்பதும் அவற்றைப் பாதுகாப்பதும் அவசியம் என்றும் பேசியவர்.
திருமயம் பாறை ஓவியங்களை கண்டறிந்து தொல்குடி தமிழ் மரபின் தொன்மையை நிறுவியவர், தொடர்ந்த பல்வேறு தொல்லியல் தேடல் பயணங்களை முன்னெடுத்தவர்.
தமிழ் நேசர், தமிழ் நேசம் என்றால் என்ன, தமிழ் அறிவு என்றால் என்ன என்பதை இவரை சந்தித்த பின்னர்தான் அறிந்துகொண்டேன். தமிழ் உலகின் வெளியில் தெரியாத பேராளுமைகளை எங்களுக்கு அறிமுகம் செய்தவர், இவர் சொன்னதற்கு பிறகுதான் பொ.வேல்சாமி என்று ஒரு அறிஞர் இருக்கிறார் என்கிற செய்தியே எனக்குத் தெரியும்.
பெருமாள் முருகனின் கூட்டின் பறவைகளில் ஒருவராக இருந்ததால் அதையொட்டியே வீதி என்கிற அமைப்பை புதுகையில் துவங்கினார். அண்ணன் நிலவன், தமிழாசிரியர் திருப்பதி, மகா சுந்தர், இளவல் பாண்டியன் போன்றோர் அமைப்பில்ஆர்வத்துடன் இணைந்தனர். இவர்களோடு கூடவே அடியேனும் வீதியின் உறுப்பினரானேன். வீதி என்னுடைய இலக்கிய ஆர்வத்திற்கு தீனி போட்டது. புதுகையின் இலக்கிய ஆளுமைகள் அத்துணை பெரும் கூடும் ஒரு தளமாக வீதி வளர்ந்தது. வெறும் இலக்கிய அமைப்பாக இல்லாமல் வீதியின் உறுப்பினர்களில் சிலர் அகாலமாக மறைய அவர்களின் குடும்பத்தை தாங்கும் பொறுப்புடைய அமைப்பாக வீதி புதிய முகத்தை காட்டியது. எதிர்பாராமல் வீதியின் ஆகச்சிறந்த முகங்களில் ஒன்றான கவிஞர் வைகறை உடல்நலிவுற்று மறைந்த பொழுது வீதி இரண்டரை லட்சம் ரூபாய்களை திரட்டி அவரது தனையனுக்கு ஒரு காப்பீட்டு உறுதிமொழியை வழங்கியது.
இலக்கியத்தை அடுத்த தலைமுறைக்கு அறிமுகம் செய்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் வீதி உறுப்பினர் ஒருவரின் இழப்பை கையாண்ட விதம் மற்ற இலக்கிய இயக்கங்களுக்கு ஒரு முன் மாதிரி.
அடுத்த பேரிழப்பாக குருநாத சுந்தரம் மறைந்தபொழுது, அவருக்கு வீதி அமைப்பும், தமிழக தமிழாசிரியர் கழகத்தின் புதுகை கிளையும் ஒன்றிணைந்து நிகழ்த்திய நினைவேந்தல் நிகழ்வு இன்னொரு ஆறுதல்.
வீதி ஐம்பதில் பலர் உடல்தானம் செய்த பொழுது இதைக்குறித்து முனைவர்.அருள்முருகன் சமூக பொறுப்பில்லா இலக்கியங்கள், இலக்கிய அமைப்புகள் சமூகதிற்கு தேவையில்லை என்ற பிரகடனத்தோடுதான் நிகழ்வைத் துவங்கினார்.
சுரேஷ் மான்யா, சச்சின், தூயன், போன்ற அடுத்த தலைமுறை படைப்பாளிகள் வீதியின் பயணத்தில் தவிர்கமுடியாத மைல் கற்கள். தோழர் கவிவர்மன் முதல் கவிஞர் மீரா செல்வக்குமார் வரை எத்துனை முகங்களை வீதி இன்னொரு தளத்திற்கு அறிமுகம் செய்திருக்கிறது!
இன்று புதுகையின் இலக்கிய தளத்தில் வீதி ஒரு தவிர்க்கமுடியாத அங்கம். வீதியின் பொறுப்பாளர்களில் ஒருவரான சுரேஷ்மான்யா சென்னையில் அரசுப்பணியில் இருந்தாலும், சக பொறுப்பாளரான கவிஞர் தேவதா தமிழ் வீதியை மிகுந்த சவால்களுக்கு இடையே தொடர்ந்து செலுத்தி வருகிறார். வீதியின் அதி முக்கியமான அங்கமாக திருமிகு.தேவதாதமிழ் மாறியிருக்கிறார். மாநிலம் தழுவிய அவரது இன்றய வளர்சிக்கு வீதியும் ஒரு காரணி என்பதும் இந்த இயக்கத்தை துவக்கிய முனைவர்.அருள்முருகன் அவர்களின் வெற்றிதான்.
வீதி இயக்கத்தின் வடிவமைப்பைச் செய்தாரே ஒழிய அதன்மீது தனது அதிகாரத்தை ஒருபோதும் செலுத்தியதில்லை. நான் பொறுப்பேற்று நடத்திய கூட்டங்களுக்கு அலைபேசி வாயிலாகவோ, குறுஞ்செய்தி வாயிலாகவோதான் இவரை அழைத்திருக்கிறேன். அவர் மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர், அடியேன் ஒரு பள்ளியின் பட்டதாரி ஆசிரியர். இருப்பினும் முறையாக அழைக்கிறேன் பேர்வழி என்று இவரது அலுவலகத்திற்கு சென்று காத்திருந்து அழைப்பிதழ் கொடுத்து அழைத்ததெல்லாம் இல்லை. காரணம் எளிதானது அவருக்கு மாவட்டத்தின் எத்தனையோ பணிகள் இருக்கும், அந்த நேரத்தில் நாம் சென்று, முன்அனுமதி பெற்று அவரை சந்திக்கவே ஒருமணிநேரத்திற்கும் அதிகமாக ஆகும். ஒரு அதிகாரியாய் இதை அவர் வலியுறுத்தியிருந்தால் நிச்சயம் நான் வீதியில் தொடர்ந்திருக்க மாட்டேன். ஒரு அதிகாரி என்பதையும் கடந்து அவர் தமிழை நேசிக்கிற ஒரு சக மனிதனாக அவரை உணர்ந்ததால்தான் வீதியில் தொடர்ந்தேன். இத்தகைய உணர்வுப் பாலத்தை அவர் தன்னுடைய நேசமிகு நடவடிக்கைகளால் மட்டுமின்றி அவரது ஆழ்ந்த தமிழ்ப்புலமையினாலும் நிருபித்திருந்தார். எனவேதான் அவர் புதுகை மாவட்டத்தின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றில் இருந்து தற்போது மாநிலப் பதவி ஒன்றிற்கு மாற்றப்பட்ட பொழுதும் வீதியின் மையப் புள்ளியாக இருக்கிறார்.
இவரது பதவிக்காலத்தில் பல ஆசிரியர்களை தன்னுடைய நேசமிகு நடவடிக்கையால் பாதுகாத்திருக்கிறார். புதுகையின் கிராப்புற பள்ளி ஒன்றில் தேர்ச்சி விகிதத்தை பாதுகாக்க காலை ஏழு மணிக்கெல்லாம் வகுப்புகள் துவங்கிவிடும். அப்படி ஒரு வகுப்பிற்கு வரவில்லை என்பதால் பெற்றோரை அழைத்துவர சொல்லியிருகிறார் பொறுப்பாசிரியர். வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் குப்பை மேட்டில் ஒரு எலி பேஸ்ட் கிடப்பதைப் பார்திருக்கிறார்கள், புத்தி பளிச்சென வேலை செய்ய, அதை கையில் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று தாங்கள் பள்ளிக்கு தாமதமாகச்சென்றதால் ஆசிரியர் திட்டியதால் எலி பேஸ்டை தின்றுவிட்டதாக சொல்ல, கிராமம் தீ பிடித்தது போல மாறி, மாணவர்களை புதுகை டீம் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருந்து சிகிச்சையளிக்கப்பட்டு வீடு திரும்பும்வரை அந்த மருத்துவமனையில் இருந்தார் முனைவர்.அருள்முருகன். அவர் இடத்தில் அதிகார பித்தேறிய இன்னொருவர் இருந்திருந்தால் தொடர்புடைய ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துவிட்டுதான் மருத்துவமனைக்கு வந்திருப்பார்கள். ஆனால் அப்படி எந்தவொரு நடவடிக்கையும் இவரிடமிருந்து இல்லை என்பதே ஆசிரிய சமூகதிற்கு ஆறுதலாக இருந்தது. ஆசிரியர்களின் மனதில் இவருக்கென ஒரு இடம் ஏற்பட இவரது இம்மாதிரியான நடவடிக்கைகள்தான் காரணம்.
இவருக்கு முன்னரும் இலக்கிய ஆர்வமிக்க தலைமை ஆசிரியர்கள் இங்கே அதிகாரிகளாக இருந்தார்கள், ஆனால் அவர்கள் தனியே ஒரு இலக்கிய அமைப்பை ஏற்படுத்தவில்லையே ஒழிய, ஏற்கனவே இருந்த அமைப்புகளின் மேடைகளில் இருந்தார்கள். இவருக்கு முன்னரும் வரலாறு தெரிந்த அலுவலர்கள் பொறுப்பில் இருந்திருக்கலாம். ஆனால் புதுகையின் தொன்மை அடையாளங்கள் நோக்கிய களப்பயணத்தை முன்னெடுத்த அதிகாரிகள் இல்லவே இல்லை. இனி இருக்கப்போவதும் இல்லை.
சித்தன்ன வாசல் மலையை எல்லாத் திசைகளில் இருந்தும் ஏறி இறங்கிய ஒரே முதன்மைக் கல்வி அலுவலர் இவர்தான். அங்கே இருந்த பாறை ஓவியங்களை அடையாளப்படுத்தியதும், திருமயம் பாறை ஓவியங்களை உலகிற்கு அறிவித்ததும் இவரது தொல்லியல் ஆர்வத்திற்கு ஒரு சான்று.
மேட்டுப்பட்டியில் கிடந்த ஒரு தமிழ் மைல் கல்லை பிடித்துகொண்டு தஞ்சைவரை பயணித்து ராஜராஜன் பெருவழி (படைகளை விரைவாக அனுப்ப அக்கால மன்னர்கள் பராமரித்த குறுக்குவழிப் பாதைகள்) ஒன்றை அடையாளம் கண்டு நிறுவினார். இந்த பயணத்தை ஒரு மே மாத வெயில் நாளில் செய்துவிட்டு, காய்ந்த கருவாடு போல அந்தவார வீதிக் கூட்டத்தில் பங்கேற்றார். அவர் நிறமே மாறிப் போயிருந்தது. எனக்கும் தொல்லியல் சான்றுகளில் ஆர்வம் இருந்தாலும், இப்படி ஒரு அற்பணிப்புள்ள களப்பயணத்தை நினைத்துக்கூட பார்க்க இயலவில்லை.
இவரது சில களப்பயணங்களுக்கு என்னை அழைத்தார், ஆனால் வார இறுதியில் சிறப்பு வகுப்புகளை வைத்திருந்ததால் இவருடன் போக இயலவில்லை. பெரிய இழப்பு அது.
எதிர்பாரா ஒரு விபத்தில் இவரது வாழ்க்கைத் துணையாய், வரமாய் வந்த திருமிகு.ஜோதி அவர்கள் மறைந்த பொழுது, அந்த ஈடு செய்யமுடியாத இழப்பில் புதுகையின் இலக்கிய ஆளுமைகள் முதல், ஆசிரியர்கள் அவனைவருமே பங்கேற்றனர். குறிப்பாக கோவை மாவட்டத்தில் இருந்து பல பேருந்துகளில் பயணித்து பெரும் திரளாக வந்திருந்தனர் அந்த மாவட்ட ஆசிரியர்கள். எந்த ஒரு அதிகாரிக்கும் ஆசிரியர்கள் இத்தகு ஆதரவைத் தந்ததே இல்லை என்றால் இவரது பணிப் பாணி உண்மையில் போற்றுதலுக்குரியதுதானே?
ஒரு கல்விதுறை அதிகாரி எத்தகு மாற்றங்களை சமூகத்தில் விளைவிக்க முடியும் என்பதற்கான ஆகச்சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார் முனைவர்.அருள்முருகன்.
அமைப்பு தனக்கு வழங்கிய அதிகாரத்தை மட்டுமே சுவைத்து, ஆசிரியர்களுக்கும் தனக்கும் ஒரு கோட்டைச்சுவரை எழுப்பிகொண்ட கடந்த தலைமுறை அதிகாரிகள் போலல்லாமல் ஒரு புதிய தலைமுறை அதிகாரியாக மிளிர்கிறார் முனைவர்.அருள்முருகன்.
கல்வித்துறை அதிகாரி என்கிற பணி எல்லைகளை அனாயசமாக கடந்து, சமூகத்திலும் இலக்கியத்தளத்திலும் எத்தகு மாற்றங்களைச் செய்ய முடியும் என்பதற்கு ஒரு ஆகச்சிறந்த முன்மாதிரி இவர்.
முகவர்களைத் தொடர்வோம்
அன்பன்
மது
முனைவர் அருள்முருகன் அவர்களைப் பற்றிய அருமையான பதிவு. அவரை நன்கறிவேன், நம் வலைப்பதிவுகள் மூலமாக. அவரைப் போன்ற அலுவலர்கள் கிடைப்பது அரிது. அன்னாரின் பெருமையைப் போற்றுவோம். அவர் பணி சிறக்க வாழ்த்துவோம். அவரை முன்மாதிரியாகக் கொண்டு இளைஞர்கள் முன்வர வேண்டும். அதுவே அவருடைய உண்மையான உழைப்பிற்கு நாம் தரும் மரியாதை.
ReplyDelete