அம்மா

கடந்த மாதம் அம்மாவிற்கு ஒரு சிறிய அறுவைச் சிகிச்சை. நெருங்கிய உறவுகளுக்குக் கூடச் சொல்லக்கூடாது என்றார்.
நான் ஒரு இற்றையில் அம்மாவின் அறுவை குறித்து சொல்லியிருந்தேன். மருத்துவமனைக்கு மனைவியின்,  தங்கையும் அவர் கணவரான என் தம்பியும் வந்துவிட்டனர்.எப்படித் தெரியும் என்று அவர்களை கேட்டுவிட்டு, பேஸ்புக் என்றவுடன் என்னை நோக்கி ஒரு கோபப்பார்வை. எனக்கு கொஞ்சம் ப்ரைவசி வேண்டும். ஏண்டா இப்படி பண்ற என்றார்கள்.

அறுவையில் இருந்து மீண்டு இல்லம் திரும்பும் பொழுது அவர்களின் எக்கோ டெஸ்ட் நார்மல் என்றார் மருத்துவர். இன்னும் பத்து ஆண்டுகளுக்கு கவலை இல்லை என்கிற எண்ணம் வந்து நிம்மதியாய் மனதில் அமர்ந்தது.

ஒருமாதம் கூட நிறைவுறவில்லை. எந்தப் பிரச்னை வராது என்று நினைத்தேனோ அதே பிரச்னை. மாஸிவ் ஹார்ட் அட்டாக் என வந்து அம்மாவின் உயிர் குடித்து என்னை நிராதரவாக நிற்கவைத்துவிட்டது.

கடந்த சில ஆண்டுகளாகவே அம்மா என்னை தயார் செய்துகொண்டே இருந்திருக்கிறார்கள்.

முகம் நிறைய புன்னகையோடு டேய் எந்த நேரமும் எனக்கு என்னவும் நடக்கலாம். என்ன என்ன கையொப்பங்கள் தேவையோ அனைத்தையும் வாங்கிக்கொள் என்பார்கள்.
கிறுக்கு மாதிரி பேசாதம்மா, அப்படி எதையும் செய்தால் கிளம்பிவிடுவாய், ஒரு ஒப்பமும் போட வேண்டாம் சும்மா இரும்மா என்றேன்.

இப்படியே பேசிக்கொண்டிருப்பார்கள்.

அம்மாவிற்கு அவர்கள் பக்கம் இருக்கும் அதிர்ச்சி செய்திகள் எதுவும் எனக்கு வந்துவிடக்கூடாது என்பதில் தேவையற்ற அக்கறையுண்டு.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் சென்னையில் அம்மா தங்கையோடு இருந்த பொழுது நடு இரவில் ஒரு அழைப்பு. மாப்பிள்ளையிடமிருந்து “என்னங்க இப்படி ஆயிருச்சு”, என்னங்க இப்படி ஆயிருச்சு” என்பதோடு விசும்பிவிட்டு வைத்துவிட்டார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை.

மூன்று மாதம் கழித்து அம்மாவை நேரில் பார்க்கும் பொழுதுதான் அவர்களின் கை உடைந்திருந்தது தெரிந்தது. அங்கேயே ஒரு புத்தூர் கட்டு கட்டுபவரிடம் காண்பித்து சரிசெய்துகொண்டு வந்துவிட்டார்.
ஏன் என்னிடம் சொல்லவில்லை என்றால் “டேய் நீ ஆண்டு இறுதித்தேர்வுக்கு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்தாய், உனக்கு எதற்கு டென்ஷன் என்று சொல்லவில்லை” என்றார் அமைதியாக.

அம்மா இதுபோல பல விசயங்களை என்னிடம் மறைத்திருக்கிறார்.
ஒவ்வொரு முறையும் நான் அவர்களிடம் வருந்தியிருக்கிறேன்.
மதியம் உடல் பிரச்னை இருந்தால் அதை உடனே என்னிடம் சொல்ல மாட்டார்கள். இரவு பிரச்னை ஆன பின்னரே சொல்வார்கள்.
இப்படி சில இரவுகளுக்கு பிறகு நிதானமாக அவரிடம் பேசினேன். அம்மா நீங்கள் செய்கிற உதவியில் பெரும் உதவி உடல் நலிவு என்றால் உடனே சொல்ல வேண்டியதுதான்.

கடந்த மாதம் மாலை சுமார் மூன்று மணிக்கு சொல்லவும், இரவு ஏழு மணிக்கெல்லாம் மருத்துவரை பார்க்க சென்றோம். அவர் மாத்திரைகளை மாற்றி எழுதித் தந்தார்.
ஒருவாரம் எந்த பிரச்னையும் இல்லாமல் ஓடியது.

திடீர் என 21/10/2018 அன்று இரவு பதினொன்று நாற்பதற்கு நெஞ்சில் வலிக்குது என்றார். சர்க்கரை நோய் அதிகமாக இருந்தததால் வலி தெரியவில்லை போல. ரொம்ப வலித்தவுடன் சொல்லவும் எதுவுமே செய்ய முடியாமல் போய்விட்டது.

என்ன இன்னும் வாஞ்சையாக, இன்னும் நேசமாக பேசியிருக்கலாம் என்ற குற்றஉணர்வு.

கடந்த விஜயதசமி அன்று மாலை திருமயம் ஆலய வளாகங்களை சுற்றி வந்தோம். இரவு எட்டு மணிவரை அந்த வளாகங்களில் இருந்தோம். அம்மா கோட்டை பைரவருக்கு ஒரு நேர்த்திக்கடன் செய்தார்.

புறப்படும் பொழுது சொன்னார், இன்னைக்கு நான் செய்தது என்னுடைய நேர்த்திக் கடன், இன்று நான் வைத்திருக்கும் நேர்த்திக் கடனை  அடுத்த வருடம் நீயும் மைதிலியும்  செய்ய வேண்டும் என்றார்.

என்னம்மா இப்படி பேசுறீங்க? அடுத்த ஆண்டும் நீங்கள் இருந்துதான் செய்ய வேண்டும் என்று இருவரும் அம்மாவை கோபித்தோம்.

பதில் இல்லை. வெள்ளி இரவு இந்த நிகழ்வு. ஞாயிறு விடை பெற்றுவிட்டார்.

அம்மா மணவையில் பிறந்தவர், அம்மாவின் தாத்தாவிடமிருந்ததுதான் நீதி மன்ற நடவடிக்கைமூலம் கருமுத்து தியாகராச செட்டியார் நிலத்தைப் பெற்றார். தியாகேசர்  ஆலை வளாகத்தின் பெரும் பகுதி அம்மாவின் குடும்ப சொத்து. உரிய தொகை பெற்றுவிட்டாலும் தலைமுறைகளுக்கு இந்த வருத்தம் உண்டு. இதனாலேயே அம்மாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலைப்பணிகளில் முன்னுரிமை இருந்தது.

இந்த ஆலை பணியாளர் நலனுக்காக ஒரு பள்ளியை நிர்வகித்து வந்தது. இன்று சி.எஸ்.ஆர் என்று சொல்லி செய்து கொண்டிருப்பதில் சேராது அது. கிட்டத்தட்ட ஒரு அறக்கட்டளை செயல்பாடுகளை போலவே நிகழ்ந்திருக்கிறது.

பணியாளர்களுக்கு குடியிருப்பு, காலை மாலை தூய குடிநீர் வழங்கல், குழந்தைகளுக்கு காப்பகம், பள்ளி என நேசமிகு வலைப்பின்னல் அது. ஆலைத்தொழிலார்களின் அடுத்த தலைமுறையை அடுத்த சமூக பொருளாதார நிலைக்கு உயர்த்தியதில் இவற்றுக்கு பங்குண்டு.

இந்தப் பள்ளியில்தான் அம்மா பயின்றார்கள். இங்கே அம்மாவும், அவரது தம்பியும் பெற்ற பரிசுகளை இன்னும் பாதுகாத்து வருகிறேன். ஒருமுறை கூட என் பள்ளிப் பருவத்தில் பரிசுகள் ஏதும் பெற்றதில்லை நான். ஆனால் அம்மாவும் மாமாவும் நேர் எதிர்.
இந்த பள்ளியின் அனுபவங்களை அம்மா சொல்லிக்கொண்டே இருப்பார்கள். என்ன விசயம் என்றால் என்னிடம் சொன்னதற்கு பின்னால் தன் பெயர்த்திகளிடமும் சொல்லி வந்திருக்கிறார்.
பெயர்திகள் நாங்க உங்க ஸ்கூல பார்க்கணும் என்று துவங்க ஒரு கோடை விடுமுறையில் அம்மாவின் பள்ளியை பார்த்துவந்தோம்.

அம்மாவின் சக வகுப்பு தோழிகள் இன்னும் அம்மாவிடம் பேசிவருகிறார்கள். அப்படி பார்க்கையில் எனக்கு நிறைய அம்மாக்களை அறிமுகம் செய்துவிட்டுதான் போயிருக்கிறார்கள்.
அம்மா உயிர் பிரிந்த அன்று ஒவ்வொருவராய் அழைத்து சொல்கிறேன். அவர்களது அலைபேசியில் இருக்கும் எண்களை அழைத்துச் சொல்கிறேன். பாண்டியில் இருக்கும் பாஃன்ஸி அம்மாவிடம் செய்தியை சொல்லிவிட்டு பிரார்த்தனை செய்யுங்கள் என்றேன்.

என்னப்பா இப்படிச் சொல்கிறாய் ?

அவ என்னிடம் என்ன சொன்னன்னு தெரியுமா?

சொல்லுங்க என்கிறேன் பதைப்பாய்.

நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கணும்னு பிரே பண்ண சொன்னா என்றவுடன் உடைந்து அழுகிறேன்.

இங்கே என்னிடம் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் தன்னுடைய மரணத்துக்கு என்னைத் தயார் செய்யும் தாய், அவர்களின் தோழியிடம் பேசி தன் ஆயுளுக்கு பிரார்த்தனை செய்யச் சொல்லியிருப்பது அவர்களின் நட்பின் மேன்மையை, அதை வழங்கி இறுக்கிய அவர்களின் பள்ளியை நினைவுகூரச் செய்தது.

ஞாயிறு இரவு அம்மாவை சுமக்கமுடியாத பொழுது அவர்களின் முகம் ஒரு பச்சைக் குழந்தையின் முகம் போல இருந்தது. திங்கள் காடு நோக்கி பயணிக்கையில் பார்த்தேன், எண்ணைவைத்து குளிப்பாட்டிய கேசங்கள் ஒரு சித்தனின் கேசம் போல, பட்டையிட்டு ரூபாய் ஒட்டிய நெற்றி சிவனின் நெற்றி போல இருந்தது.
என் மடியில் தன் உயிர் போக வேண்டும் என்று விரும்பிய அம்மாவின் கடைசி ஆசையைக்கூட நிறைவேற்றவில்லை, அவர்களின் பாதத்தை ஸ்பரிசித்த படி காடு சென்றோம்.
எரியூட்டினோம்.

ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தி இரண்டில் துவங்கிய பெரும் பயணம், இரண்டாயிரத்து பதினெட்டில் நிறைவுற்றது.
என் தங்கையோ, அம்மாவின் தங்கையோ இல்லம் வந்தால் வாங்க என்று சொல்லும் பழக்கம் எனக்கு இல்லை. நேரடியாக பேச ஆரம்பித்துவிடுவேன். பலநாள் விவாதங்களுக்கு பிறகு இப்போதுதான் அவர்களை வாங்க என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறேன்.

இப்படி ஒவ்வொரு விசயத்தையும் பார்த்துப் பார்த்து சொன்ன அம்மா தனக்கு என்ன என்பதைமட்டும் சொல்லாது மறைத்தது இழப்பு, நிச்சயம் அவர்களுக்கு அல்ல எங்களுக்கு.

மற்ற குடும்பங்களில் எப்படியோ இன்று எங்கள் குடும்பம் இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் அது எங்கள் அம்மா எங்களுக்கு கொடுத்த வரம். திக்காலுக்கு ஒன்றாக இருந்த எங்களை ஒன்றிணைத்தது அவர்களின் பேரன்பே.

எப்போதோ இறந்திருக்கவேண்டிய எங்கள் தந்தையை தன்னுடைய உயிரை கொடுத்து காப்பாற்றியவர் அம்மா. பக்கவாதம் வந்த அப்பாவை மீட்டு பழைய வாழ்விற்கு கொணர்ந்து மீண்டும் அரசுப் பணியில் சேர்த்து, முறையான ஓய்வை அவர் அனுபவிக்க காரணம் அம்மாவும் அவர்களின் குடும்ப உறவுகளும்தான். அம்மா வழிச் சொந்தங்கள் இல்லை என்றால் நாங்களும் இல்லை.

இந்த போராட்டமான நாட்களில்தான் அம்மாவிற்கு சர்க்கரை வந்தது. தன்னுடைய சிகிச்சையை தந்தையை கவனிப்பதின் காரணமாக தவிர்த்துவிட்டார். பத்து ஆண்டுகளுக்கு சர்கரைக்கு முறையான சிகிச்சை எடுக்கவில்லை. அது என் கல்லூரிக்காலம் எனவே என் குரலுக்கும் அம்மாவிடம் செயல் இல்லை. போடா, பார்த்துக்கலாம் என்பதே அம்மாவின் பதிலாக இருந்தது.
அப்பாவழிச் சொந்தங்கள் கொஞ்சம் விலகி இருப்பார்களே ஒழிய, அவசியமான நேரத்தில் எங்களை கைவிட்டதில்லை. இப்படி எல்லோரையும் அரவணைத்து செல்லும் பக்குவம் அம்மாவிற்கு மட்டும்தான் உண்டு. எனக்கு இருக்கிறதா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

இந்த ஏழு நாட்களில் அம்மாவின் பெயரன் பெயர்திகள் இல்லத்தில். அவர்கள் இருந்து ரசிக்க கொடுத்துவைக்கவில்லையே என்கிற ஏக்கம்.

அம்மா இல்லாத இந்த வாழ்க்கையை பழகிக்கொள்வது மட்டுமே இப்போதைக்கு என்முன் நிற்கும் கேள்வி.
விக்கித்துதான் நிற்கிறேன்.

Comments

 1. அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எனது பிரார்த்தனைகள்.

  அம்மாவின் மறைவு பேரிழப்பு. துயரிலிருந்து விடுபட எல்லாம் வல்லவன் அருள் புரியடட்டும்.

  ReplyDelete
 2. பேரிழப்பு நண்பரே
  காலம் தங்கள் இழப்பின் வலியை மெல்ல மெல்லக் குறைக்கும்
  இனி தங்களின் தாய் ஒளியாக உங்களின் உள்ளத்தில் இருப்பார்

  ReplyDelete

Post a Comment

வருக வருக