ரோட்டரி கஜா தினங்கள்

இந்தியாவில் பல்ஸ் போலியோ இயக்கத்தின் மூலம் போலியோவை விரட்டிய ரோட்டரி கஜா தினங்களில் செய்த சேவைகள் பெரும் ஆறுதல்.


எனது சங்கமான புதுகை கிங்க்டவுன் ரோட்டரியின் சங்க வளாகத்தில் நிறைந்தன மீட்புப் பொருட்கள். கஜா ஓய்ந்த அன்று மதியமே களமிறங்கிய ரோட்டரியன்கள் கான், மற்றும் வில்சன், ரோட்டரியன் பிரசாத்,  நிவாரணப் பணிகளை முன்னெடுக்க, மாவட்டம் மூவயிரத்தின் ஆளுநர் திரு கண்ணன் அவர்களும் ஆளுநர் தேர்வு திரு. லேனா. சொக்கலிங்கம் அவர்களும் களத்தில் இறங்கினார்கள். இதுபோன்ற நிகழ்வுகளில் தவிர்க்கவே முடியாத ரோடரியன் ஜெய்.பார்த்திபனும் இணைந்தார்.

ஒரு மீட்புப் பணியை எவ்வளவு நேர்த்தியாக முறையாக செய்ய வேண்டும் எனபதற்கு ரோட்டரி ஒரு நல்ல உதரணம். திரு வில்சன் அவர்கள் வருகிற பொருட்கள், நிதி அனைத்தையும் முறையாக வரவு வைத்தார். அதே போல வழங்கப்படும் பொழுது முறையாக வவுச்சருடன் தான் வழங்கினார். இது ரோட்டரியின் நேர்த்தியை பறைசாற்றியது.  மேலும் இந்த மீட்பு நிகழ்வுக்காக தனி கணக்கரே இருந்தார்.

ரோட்டரி மாவட்டம் மூவாயிரம் முழுதும் இருந்து நிவாரணப் பொருட்கள் குவிய ஆரம்பித்தன. ஜெய்.பார்த்திபன் என்னை விடாது அழைத்து அருணா அலாய்ஸ் மற்றும் ஸ்டீல் நிறுவனத்தின் மேலான் இயக்குனர்களுடன் நிவாரணப் பணிகளுக்கு அனுப்பிவைத்தார். நிறுவனத்திலிருந்து சேவைக்கு  தங்கள் நிறுவனத்தில் பெரும் பொறுப்பில் இருக்கிறோம் என்றெல்லாம் கருதாது களத்தில் அசத்தினார்கள். மூட்டைகளை தாங்களே தூக்கிச் சென்று மிகப் பொறுப்பாக வழங்கினார்கள். ரோட்டரியன்.திரு.மோகன்ராஜ் மிக நேர்த்தியாக வழிநடத்த புதுகை சிப்காட் அருகே இருந்த கிராமத்திற்கு நிவாரணம் வழங்கினோம். இவ்வளவு மோசமான சூழலில் வாழும் மக்களை வைத்துக் கொண்டுதான் நாம் வல்லரசு என்று கனவு காண்கிறோம். பவர் பாட்டரி நிறுவனத்தின் உரிமையாளர் வட்டாரப் பொறுப்பாளர் ரோட்டரியன் ஸ்ரீனிவாசனும் இந்த நிகழ்வுகளில் ஈடுபட்டது மகிழ்வு.

மனிதநேயப் பணிகள் என்றால் முதல் ஆளாக களத்தில் இருக்கும் ரோட்டரியன் முருகானந்தம் அவர்சார்பாக பல கிராமங்களுக்கு மீட்புப் பொருட்களை அனுப்பி வைத்தார். வழக்கம்போல அவருக்கே உரிய நேர்த்தியோடு.

மின்சாரப் பணிகளுக்காக வந்திருந்த அயல் மாநில, மாவட்ட மின்துறை அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ரோட்டரி இயக்கம் உணவு தயாரித்து வழங்கியது. மீட்புப் பணியில் ஈடுபட்ட ஒரு தொகுதி பணியாளர்கள் ரோட்டரி வளாகத்தில்தான் தங்கினார்கள்.

இவர்களுக்கான உணவு தயாரிப்பில் பொறுப்போடு செயல்பட்டது எப்போதும் விருந்தோம்பல் பணியை விருப்புடன் செய்யக்கூடிய ரோட்டரியன் அண்ணன் அண்ணாமலை, மற்றும் ரோட்டரியன், கல்வியாளர், கட்டிடப் பொறியியல் வித்தகர் என்று பன்முக ஆளுமையைக் கொண்ட அண்ணன் முருகப்பன். கஜா தினங்களில் இவர்கள் அனைவரும் ரோட்டரி சங்க வளாகத்தில் முழுநேரம் தங்கி பொறுப்போடு செயல்பட்டார்கள்.

மேலும் எனது இரண்டாம் ஆண்டு ரோட்டரி அனுபவத்தில் முதல் முதலாக ரோட்டரியின் பிரமாண்டம் புரிபட்ட நாட்கள் இவை. ஆனால் வலிநிறைந்த நாட்கள்.

ரோட்டரி செய்ய முடிவெடுத்துவிட்டால் எதையும் செய்து முடிக்கும் என்பதை உணர்ந்தேன்.

தொடர்வோம்

அன்பன்
மது

Comments

Post a Comment

வருக வருக