நாம் அறியாமல் செய்யும் தவறு


மிக எளிய கேள்விகள் கூட மனங்களை ரணப்படுத்திவிடும்
கடந்த ஒருவார காலமாக திரு.சங்கர் முனைவர் சுப்ரமணியன், திரு.புகாரி, திரு விக்னேஷ் உள்ளிட்ட குழுவில் புதுகை மாவட்ட பள்ளிகளில் மாணவர்கள் சமர்ப்பித்திருந்த ஆய்வறிக்கைகளை மதிப்பீடு செய்யும் பணி.

திங்கள் மற்றும் செவ்வாயில் முதற்கட்ட வாசிப்பு மற்றும் ஆய்வுப் பணி.

புதன் முதல் வெள்ளி வரை மாணவர்களின் வழங்கல் மற்றும் நேர்முக மதிப்பீடு.

வெகு நேர்த்தியாக திட்டமிடப்பட்ட நிகழ்வு.

ராசி பன்னீர் அவர்கள் திட்டமிட்டால் அதில் ஒரு தெளிவும் நேர்த்தியும் இருக்கும்.

கல்வி மாவட்ட அளவில் மற்றும் வருவாய் மாவட்ட அளவில் ஆய்வுக் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டன.

கடந்த வாரங்களின் கசப்பு கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போய் மாணவர்கள் மற்றும் அவர்களைத் தயார் செய்த ஆசிரியர்கள் மீது பெரும் வியப்பும் மரியாதையும் வந்தது.

வேலை நிறுத்த கசப்புக்களுக்கு பிறகு துறையில் நான் அனுபவித்த முதல் நேர்மறை உணர்வு இம்பார்ட் கட்டுரைகளும் அதற்காக பிரம்ம பிரயத்தனம் செய்த மாணவர்களும் வழிகாட்டும் ஆசிரியர்களும்தான்.

இன்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற ஒரு குழுவின் தலைவியை கவனித்தேன்.

அரசுப் பள்ளி மாணவி, சரளமான ஆங்கிலத்தில் பேசினாள், சிறு சிறு குறைகள் இருந்தனதாம். ஆனால் அவை செய்தி அல்ல.

அவளுடைய நம்பிக்கையும் மேடை நளினமும் எப்படி இப்படி ஒரு குழந்தை சாத்தியம் என்னும் கேள்வியை என்னுள் எழுப்பின.

ஒருவழியாய் நிகழ்வுகள் முடிந்த பின்னர் அரங்கில் தனியே அந்தக் குழு குழந்தைகள் மட்டும் இருந்தனர்.

வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் முகம் கொள்ளாப் பெருமிதம்.

நான் பேசாமல் ரசித்துவிட்டு வந்திருக்கலாம்.

மெல்ல அந்தக் குழுவை அணுகி அதன் தலைவியான அவளிடம் பாப்பா உன் அப்பா என்ன செய்றார் என்றேன்.

அப்பா இல்லை சார் என்றாள்.

அம்மா ...

அம்மாவும் இல்லை என்று சொல்லி அழ ஆரம்பித்துவிட எனக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது.

உனக்குத்தான் கீதா அக்கா இருக்காங்களே என்றேன்.

இதற்குள் வழிகாட்டி ஆசிரியர்களும் அவளோடு சேர்ந்து கலங்க...

இத்துணை அக்காக்கள் உன்னுடன் இருக்கும் பொழுது எதற்கு கலங்குகிறாய் என்றேன்.

அதற்குள் தமிழ் ஆய்வு நடுவர்களில் ஒருவரான அண்ணன் மகா அங்கே வரவும் உனக்கு இன்னொரு அண்ணன் என்றேன்.

ஒரு எளிய கேள்வி எவ்வளவு ரணத்தை விளைவிக்கும் என்று கண்கூடாகப் பார்த்தேன் இன்று.

மாலை புத்தகத் திருவிழாவில் Devatha Tamil (கீதா அக்காவைப்) பார்த்து நடந்ததைப் பகிர்ந்தேன்.

எவ்வளவு தூரம் மேலே படிக்கக விரும்பினாலும் நாம் செய்வோம் என்று சொன்னேன்.

நிச்சயம்பா ...என்றார் அவர்.

சற்றே நிம்மதி.

அவளின் வெற்றியை கொண்டாட, உச்சி முகர, தானும் கலங்க, இன்னும் சொல்லன்ன உணர்வுகளில் தவிக்க அவளுக்கு பெற்றோர் இல்லாமல் போயிருக்கலாம்.

ஆனால் அவள் சிந்திய சில துளி கண்ணீர் அவளது ஆசிரியர்களின் கன்னங்களிலும் வழிந்தது.

அவள் எதிர்காலம் குறித்து எனக்கு கவலையேதும் இல்லை. அவளது ஆசிரியர்களே போதும்.

#அரசுப்பள்ளி

Comments

 1. வாழ்க ஆசிரியர்கள் ..Thendral கீதா அவர்கள் போதுமே .அக்குழந்தை எதிர்காலம் சிறப்பாக அமையும் .

  ReplyDelete
 2. ம்ம் இந்த கேள்விகள் எனக்கேற்பட்ட ஒரு தர்மசங்கட அனுபவத்திற்குப்பிறகு ( தந்தையர் தினத்துக்கு அப்பாக்கு கார்ட் செய்து கொடுத்தியான்னு கேட்டேன் தெரியாம ஒரு சிறுமிக்கிட்ட) அந்த பிள்ளை வயிற்றில் இருக்கும்போதே தந்தை :( அதிலிருந்து இங்கே நாங்கள் எந்த பிள்ளை யாயிருந்தாலும் அதன் பெயர் கேட்டுட்டு பிறகு யார்யார்வீட்டில் இருக்கிறாரகள் என்று கேட்ட்ப்போம் . பல பிள்ளைகள் தாய் அல்லது தந்தை கூட இல்லைன்னா பாட்டி தாத்தா கூட வளருகிறவங்க ..
  சரி கவலைப்படாதீங்க நாமெல்லாரும் கற்றுக்கொள்கிறோம் ஒவ்வொரு சம்பவங்கள் வழியாக

  ReplyDelete
 3. மிகவும் கலங்க வைத்துவிட்டது தங்களின் பதிவு. ஆம் அறியாமல் கேட்கும் சில கேள்விகளின் தாக்கம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை தங்களின் பதிவு தெளிவுபடுத்தியுள்ளது.

  ReplyDelete
 4. இப்படி எத்தனையோ குழந்தைகள் நம் அருகில் இருக்கிறார்கள். இக்குழந்தைக்கு இந்த அளவு ஆதரவு அளிக்க நீங்கள் அத்தனைபேரும் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி.

  இந்த ஆதரவு கூடக் கிடைக்காமல் தெருவில் சுற்றித் திரிகின்றன பல குழந்தைகள். அக்குழந்தைகளைப் பார்க்கும் போது மனம் வேதனைப்படத்தான் செய்கிறது.

  உங்கள் அனைவரது முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள்.

  துளசிதரன், கீதா

  ReplyDelete
 5. பாருங்க கஸ்தூரி எங்களுக்கு அந்தத் தவறு கூடக் கண்ணில் படவில்லை...நல்லதே பட்டது. அக்கேள்வி கேட்டதில் தவறு இல்லை...அது மொமென்ட்ரி அக்குழந்தையின் உணர்வுகளும் மொமென்ட்ரி...ஏனென்றால் அப்படித் தெரிந்ததால் இப்போது அக்குழந்தைக்குக் கூடுதல் சப்போர்ட் கிடைக்கிறது இல்லையா!! அப்படியும் நேர்மறையாக எடுத்துக் கொள்ளலாம்தானே?!!!

  கீதா

  ReplyDelete

Post a Comment

வருக வருக