ஏழை மாணவர்களுக்கு உதவ விருப்பமா ?


சமூக வலைத்தளம் நல்லதற்கா கெட்டதற்கா என்கிற கேள்விக்கு விடை, அது நம் உலகைபோன்ற ஒரு மெய்நிகர் உலகம் அவ்வளவே.

குற்றவாளிகளும், காவலர்களும், சாமான்ய மனிதர்களும் ஒரே நகரில் வசிப்பது போலவே சமூக வலைத்தளத்திலும் இயல்பு இருக்கிறது. 

ஆனால், நாம் நண்பர்களின் இன்பாக்ஸ் சென்று இம்சிக்காதவரை, நமக்கு பிரச்னை இல்லை. இந்த விதியை மீறுகிற பொழுது பிரச்சனைதான். 

இந்த இயல்பான பிரச்சனைகளை கடந்து சமூக வலைதளங்களால் நன்மை இருக்கிறதா என்றால் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. 

அவற்றில் ஒன்று நல்லோர் நட்பு. 

பொ.வேல்சாமி அய்யா, ஷாஜகான், கிரேஸ், காரிகன், இனியா, டிடி என பல நண்பர்களை உறவுகளை சமூக வலைத்தளம்  எனக்கு வழங்கியிருகிறது. 

குறிப்பாக அய்யா ஷாஜகான் தொடர்ந்து சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் பல லெட்சம் ரூபாய்களை அவர் கல்வி நிதி கோரும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கிவருகிறார். 

இது எப்படி சாத்தியம்?

பல தசாப்தங்களாக அவர் சமூக நலச் செயல்பாட்டில் இருந்து வருவதால் அவருக்கு உதவ நல்ல இதயங்கள் எப்போதும் தயாராக இருக்கின்றனர்.

அவரது வழிமுறை எளிமையானது. 

முதலில் கல்வி நிதி கோரும் குரல்களை அவர் தன் நண்பர்கள் மூலம் சரி பார்த்து அது நியாயமான கோரிக்கைதானா என்பதை உறுதி செய்து கொள்கிறார். 

பிறகு தேவைப்படும் தொகையை தன்னுடைய இற்றையில் சொல்கிறார். 

அந்தத் தொகையை அளிக்க முன்வரும் அவரது நண்பர்களிடம் உதவி கோரும் மாணவரின் கல்லூரி வங்கிக் கணக்கையோ, அல்லது அந்த மாணவரின் சேமிப்புக் கணக்கையோ சொல்கிறார். 

கல்வி உதவித் தொகை நேரடியாக செலுத்தப்படுகிறது. 

இந்த கல்வி ஆண்டு துவங்க இருக்கும் இந்த மாதத்தில் அவர் நிதி கோரி கோரிக்கை வைக்க இதுவரை ஒருலட்சத்து எழுபத்தி ஐந்து ஆயிரத்தி ஐநூறு ரூபாய்களுக்கான உறுதி பெறப்பட்டிருக்கிறது.


இந்த ஆண்டு புதுகையின் முன்னணி பதிவர்களையும், நண்பர்களையும் இந்த செயல்திட்டத்தில் இணைந்துகொள்ளச் சொல்லிக் கோரியிருக்கிறேன்.

மகிழ்வோடு இணைகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். 

நண்பர்களை கேட்டது சரி, நீங்க என்ன செய்றீங்க என்று கேட்கிறீர்களா? 

நானும் இணைய இருக்கிறேன். 

ஷாஜாகன் அவர்கள் எழுதிய நூற்களில் சில, விற்பனையும் நேரடியாக கல்வி நிதிக்கே செல்லும் என்பதையும் குறிப்பிடவேண்டும்.
இந்தக் இடுகையை ஷாஜகான் அவர்களின் ஒரு பஞ்ச் வரியோடு முடிப்பதுதான் சரியாக இருக்கும், அது, 

"போகும் வழியெங்கும் அன்பை விதைப்போம், யாரேனும் அறுவடை செய்யட்டும்"

அன்பன்
கஸ்தூரி ரெங்கன் (மது)

Comments

 1. கடைசி வரி பஞ்ச் அருமை!

  நல்ல பணி. நல்ல சிந்தனை.

  துளசிதரன், கீதா

  கீதா: எங்கள் குடும்பத்தில் செய்து வருகிறார்க்ள் ஆனால் வங்கிக் கணக்கிற்கு அனுப்புவது இல்லை. நேரடியாக அவர்கள் பள்ளியிலோ கல்லூரியிலோ அல்லது பொதுப்பரீட்சை அல்லது பயிற்கி என்று எல்லாவற்றிற்கும் கலெக்ட் செய்து நேரடியாகக் கட்டிவிடுவது. எதையும் அவர்கள் கையிலோ குடும்பத்திற்கோ கொடுப்பதில்லை. அதாவது இது கல்வி.க்காக...யூனிஃபார்ம் புக்ஸ் என்றால் அதுவும் நேரடியாகக் கடைக்குச் சென்று வாங்கிக் கொடுப்பது.

  எங்கள் அனுபவத்தில் முன்பு கையில் கொடுத்த பணத்தை வேறு செலவு செய்துவிட்டு குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தார்கள் எனவே அதிலிருந்து இப்படி.

  ReplyDelete

Post a Comment

வருக வருக