வழக்கமான சயன்ஸ் பிக்சன், வழக்கமான காட்சிகள் இருந்தும் படம் பாக்ஸ் ஆபீசை ஆட்டி வைத்தது.
எப்படி?
ரிலீஸ் ஆன முகூர்த்தம் அப்படி.
உலகமே செயற்கை நுண்ணறிவு குறித்து விவாதித்துக்கொண்டிருக்கும் பொழுது மிகச்சரியாக வெளியானது.
படத்தில் நடக்கும் விஷயங்கள் நிகழ்வு சாத்தியத்திற்கு மிக அருகே இருப்பதால் ரசிகர்கள் தியேட்டர்களை மொய்த்தார்கள்.
எதார்த்தமான ரசிகர்களை ஏமாற்றாது படம். பக்கா ஆக்சன் சீக்குவன்ஸ் இருக்கு.
இசை, ஸ்பெஷல் எபக்ட்ஸ், காமிரா, திரைக்கதை என பழுது சொல்ல முடியாத பக்கா பேக்கஜ். இதுவும் ஒரு முக்கிய காரணம்.
படம் வெளிவந்து ஒரு வருடம் ஆகிவிட்ட காரணத்தால் ஸ்பாய்லர் எழுதலாம் என்றே நினைக்கிறன்.
படத்தை பார்க்க விரும்பும் நண்பர்கள் இத்தோடு டவுன்லோட் பக்கம் ஒதுங்கவும்.
ஹியூமன் ஆகுமெண்டேஷன்
கதையை புரிந்து கொள்ள ஹியூமன் ஆகுமெண்டேஷன் என்றால்
என்ன புரிந்துகொள்ளவேண்டும்.
டெர்மினேட்டர் படத்தில் காரின் விளக்குகளை அணைத்துவிட்டு ஆர்னால்ட் என் விஷன் ஆகுமெண்ட்டட் என்பார்.
இருளிலும் பார்க்க இயலும்வகையில் ஆர்னால்டின் கண்களின் திறன் மேம்படுத்தப்பட்டிருக்கும்.
இதைத்தான் ஆகுமெண்டேஷன் என்பார்கள்.
இது தற்போது நடைமுறைக்கு வந்து கொண்டே இருக்கிறது. போர்ட் நிறுவனத்தில் எக்ஸோ ஸ்கெலிடன் ஒன்றை ஊழியர்களுக்கு பொருத்தி அவர்களை அதீத எடைகொண்ட உபகரணங்களை தூக்கவைத்திருக்கிறார்கள்.
ஆக, மனித உடலின் திறனை மேம்படுத்தும் ஆய்வுகள், செயல்பாடுகள் வந்துவிட்டன.
இருளில் பார்க்கும் கண்ணை, இழந்து போன ஒரு கையை, நின்றுபோன இதயத்தை இந்த நுட்பம் கொண்டு இயங்க வைக்க முடியும்.
மனித மூளையை திறன்மேம்பாடு அடையச் செய்ய முடியுமா?
இந்த புள்ளியில் இருந்து துவங்கினால்தான் கதை புரியும்.
க்ரே டிரேஸ் ஒரு கார் மெக்கானிக், அவனது மனைவி ஆஷா ஹ்யூமன் ஆகுமெண்டேஷன் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு எஞ்சினீர்.
அமெரிக்காவின் நம்பர் ஒன் செயற்கை நுண்ணறிவு நிபுணன் ஈரான் கீனின் கார் ஒன்றை சரிசெய்கிறான் க்ரே ட்ரேஸ். அந்தக் காரை டெலிவரி கொடுக்க தன்னுடைய மனைவியின் உதைவியைக் கோருகிறான்.
கதை எதிர்காலத்தில் நிகழ்வதால், கார்கள் திறன்மிக்கவையாக, தானே செலுத்திக்கொள்ளும் இயல்போடு இருக்கின்றன. உங்கள் வீட்டு வரவேற்பறை சோபா அனுபவம்தான் கார் பயணம். இன்னும் சொல்லப் போனால் நகரும் வரவேற்பறை சோபா. ந்யூஸ் பேப்பர் படிக்கலாம், தூங்கலாம் போக்குவரத்தை, வேகத்தை பற்றி எந்தக் கவலையும் வேண்டாம். எல்லாவற்றையும் செயற்கை நுண்ணறிவு மிக்க காரின் சிப்புக்கள் பார்த்துக்கொள்ளும்.
ஹை! என்கிறீர்கள் இல்லியா.
இப்படி ஒரு பயணத்திற்கு பிறகு ஊரின் ஒதுக்குப்புறமாக இருக்கும் ஈரான் கீனின் (இலான் மஸ்க் ) இல்லத்திற்கு போகிறார்கள்.
திறந்திட்டு சீசேம் என்பதுமாதிரி வீட்டின் காம்பவுண்ட் திறக்கிறது! எதிரே இரண்டு உயர்ந்த கிரானைட் பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக சாய்ந்த நிலையில் ஒரு சிறிய திறப்பை கொண்டிருக்கின்றன.
அந்த திறப்பின் ஊடே கீழிறங்கும் படிகள், அதன் இறுதியில் அழகான குரோட்டன்ஸ் செடிகளினைத் தொடர்ந்து விரிகிறது ஒரு ஹை டெக் அண்டர்கிரவுண்ட் மாளிகை.
ஈரான் ஒரு மேசையின் மீது டெக் கருவி ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறான். இருள் மேகங்கள் உருவாகி , இடிஇடித்து மழை பொழிகிறது. ஒரு முழு அட்மாஸ்பியரை உருவாக்கியிருப்பான் ஈரான்.
அரண்டு போகிறாள், கிரே ட்ரெஸின் மனைவி ஆஷா.
ஒரு நட்சத்திரத்தை பார்த்த ரசிகை போல அவனிடம் பேசுகிறாள், தன்னுடைய நிறுவனச் செயல்பாடுகளை சொல்கிறாள், ஈரான் ஒரு மென் கர்வத்தோடு பேசுகிறான். அவனது நிறுவனம்தான் தேசத்தின் பாதி கணிப்பொறிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
கிரேஸ் விடைபெரும் பொழுது இன்னொரு அறையில் இருந்த விரல் முனை அளவே உள்ள ஒரு சிப்பைக் காட்டி இதுதான் ஸ்டெம் என்று சொல்கிறான்.
வீடு திரும்பும் வழியில் கார் கண்ணாடிகள் மறைத்துக்கொள்ள, ரொமான்டிக்காக பயணிக்கிறார்கள், திடுமெனப் பார்த்தால் கார் தொடர்பே இல்லாத இடத்தில் இருக்கிறது. யாரோ துரத்துகிறார்கள். இடிக்கிறார்கள் .
கட்டுப்பாடு இல்லை. நேரே ஒரு குடிசைப் பகுதியில் போய் நிற்கிறது.
இன்னொரு காரில் இருந்து ஒரு குழு இறங்குகிறது. மோதல், கிரே கண் எதிரே அவனது மனைவி உயிரிழக்கிறாள். இவனைத் தரையில் குப்புற அழுத்தி தொழில் ஒரு சொருகு.
விழித்துப் பார்க்கும் கிரே மருத்துவமனையில், கழுத்துக்குக் கீழே எதுவும் இயங்கவில்லை.
சில வாரங்களுக்குப் பிறகு வீடு, அம்மா உதவி, எல்லாவற்றிற்கும் அம்மா தேவை. ஒருபுறம் அவன் நிலை, நினைவில் இருக்கும் ஆஷாவின் முகம் அவனை கழிவிரக்கத்தில் தள்ள தற்கொலைக்கு முயல்கிறான்.
மீண்டும் மருத்துவமனை.
ஆனால், இம்முறை ஈரான் கீன் வருகிறான், விபத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறான். அவன் நினைத்தால் உடல் இயக்கத்தை திரும்பப் பெற முடியும் என்று சொல்கிறான். ஸ்டெம் சிப்பை உடலில் வைத்துக்கொண்டால் பாதிக்கப்பட்ட நரம்புகள் இயங்கும் பழையபடி நடக்கலாம் என்று சொல்கிறான்.
கிரே மறுக்கிறான், ஈரான் ஆஷாவிற்கு நீ பழி வாங்கணும் என்றவுடன் சம்மதிக்கிறான்.
இராணுவ செயல்பாட்டுக்கு செய்யப்பட்ட சிப் என்பதால் ரகசிய பிரமாணம் அவசியம் என்கிறான். பத்திரத்தில் கையெப்பம்.
பிறகு ஒரு அறுவை சிகிச்சை ஸ்டெம் சிப்பின் பூரான் கால்கள் போன்று இருக்கும் ஈய முனைகளை கிரேவின் முதுகெலும்பில் பொருத்துகிறார்கள்.
சிலபல திக் திக் வினாடிகளுக்கு பிறகு இயல்புக்கு வருகிறான் கிரே, அதுவும் இரண்டு நாட்களுக்குள் முழு உடல்திறனையும் பெற்று விடுகிறான்.
ஆனாலும் ஒப்பந்தம் காரணமாக, ரகசியம் காக்கிறான். தன்மீதான தாக்குதலின் ட்ரொன் வீடியோக்களை பார்க்கிறான். திடுமென நான் உதவட்டுமா என்கிறது மண்டைக்குள் ஒரு குரல்.
திகைத்துப் போகிறான் கிரே.
முதுகெலும்பில் இருக்கும் ஸ்டெம் அவனது காது நரம்புகளை இயக்குவதின் மூலம் அவனிடம் பேசுகிறது.
மிகச் சரியாக அந்த கொலையாளிகளின் ஒருவனை அடையாளம் கண்டு அவனது முகவரியைச் சொல்கிறது.
சக்கர நாற்காலியிலேயே அந்த முகவரிக்குச் செல்கிறான் கிரே.
அந்த வீட்டில் அவன் ஆராய்ந்து கொண்டிருக்கும் பொழுது, திடுமென திரும்பி வந்துவிடுகிறான் கொலையாளி.
நடுங்கிக் கொண்டிருக்கும் கிரேவை துவைக்கிறான், மீண்டும் ஸ்டெம் கேட்கிறது, எனக்கு பர்மிஷன் கொடு நான் பார்த்துக்கிறேன் என்கிறது..
கொடுக்கிறான், ஒரு மனித உடல் இப்படி இயங்க முடியுமா என்கிற அளவில் அவன் உடல் இயங்க ஆரம்பிக்கிறது.
தன் உடல் இயங்குவதை, தாக்குவதை நம்பமுடியாமல் பார்க்கிறான்.
சில செகண்டுகளில் கொலைகாரனின் வாயை கத்தியால் பிளந்து பரலோகம் அனுப்பி வைக்கிறது ஸ்டெம்.
அதைவிட ஸ்பெஷலாக உன் கைரேகை பட்ட இடங்களின் பட்டியல் தருகிறேன் அழி என்று சொல்கிறது.
மறுநாள் விசாரணைக்கு ஒரு போலீஸ் அதிகாரி வருகிறாள் .
கிட்டத்தட்ட க்ரேதான் என்று முடிவு செய்கிறாள் . ஆனால் எப்படி? சக்கர நாற்காலியில் இருக்கும் ஒருவன் ?
இதேபோல பல தரமான சம்பவங்களுக்குப் பிறகு ஆஷாவை கொன்ற குழுவில் பலரை அனுப்பி வைக்கிறான் கிரே, ஸ்டெம் உதவியுடன்.
இதை அறிந்த ஈரான் ஸ்டெம்மை செயல் இழக்க வைக்க முயல்கிறான். ஸ்டெம் இதைத் தடுக்க ஒரு ஹேக்கரிடம் போகச் சொல்கிறான்.
அங்கேயும் இவனை துரத்துகிறார்கள் ஒருபுறம் கொலைகாரக் கும்பல், இன்னொருபுறம் ஈரானின் ஆட்கள்.
ஸ்டெம்மைக் கண்டறிந்த ஈரான் அங்கே கணிப்பொறியில் ஒவ்வொரு விஷயமாக கட் செய்துகொண்டே வர கிரேவின் உடல்திறன் குறைய ஆரம்பிக்கிறது. உடல் திறனை முழுதாக இழக்க இருக்கும் தருணம் ஹேக்கரிடம் சென்றுவிடுகிறான்.
ஊர்ந்து வரும் கிரேவை ஒரு கணிப்பொறியில் இணைத்து ஸ்டெம்மை ஈரான் கட்டுப்படுத்த முடியாதபடி செய்துவிட்டு ஓடிவிடுகிறாள் ஹேக்கர்.
நினைவிழந்து கிடக்கும் கிரேவை நோக்கி வருகிறார்கள் கொலைக்கும்பல்.
வேற என்ன, ஸ்டெம் அவன் உடலை சர்க்கஸ் போல இயக்கி தப்புகிறது.
இந்த சண்டைக்காட்சிகளை இயக்கிய ஸ்டண்ட் இயக்குனரும் சரி, நடிகர் லோகன் மார்ஷுலும் சரி பின்னி பெடலெடுத்துவிட்டார்கள்.
இப்போது கிரேவின் வெறிகொண்ட சிந்தனை எல்லாம் தன்னை காலால் மிதித்து, கழுத்து நரம்பை அறுத்துவிட்டு, கண் எதிரே ஆஷாவை கொன்ற அந்த கொலைகாரனை போட்டுத்தள்ளுவதுதான்.
ஸ்டெம்மிடம் பிரச்சனையைவிட்டுவிட்டால் அது பார்த்துக்கொள்ளும். அவர்களை பேசக்கூட நேரம் கொடுக்காமல் போட்டுத்தள்ளிவிடும்.
ஆனால், அந்த ஈவிரக்கமற்ற கொலைகாரனை அடித்துத் துவைக்கும் பொழுது அவன் உளறிவிடுகிறான். டேய், சொன்னதத்தானே செஞ்சோம், உன்னை கத்தியால் குத்தலைடா, ஆப்பரேஷன் தியேட்டர்ல பயன்படுத்தும் உயர்நுட்ப கருவி, ரொம்ப சரியா உன்னை படுக்கவைத்தோம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது ஸ்டெம் அவனை அனுப்பி வைக்கிறது.
இப்போது, கிரேவின் முழுக்கோபமும் ஈரான் மீது இருக்கிறது.
அவன் வீட்டிற்கு விரைகிறான், துப்பாக்கி கொலைகள், தெறிக்க விடுகிறான் கிரே, ஸ்டெம் அல்லவா செய்கிறது.
கடைசியாக சுவரோடு சுவராக பல்லிபோல உட்கார்ந்திருக்கும் ஈரானை நோக்கி துப்பாக்கியோடு முன்னேறுகிறான்.
அமெரிக்காவே கொண்டாடும், அமெரிக்காவின் பாதிக்கும் மேலான கணிப்பொறியை நிர்வகிக்கும் கண்டுபிடிப்பு திலகம் ஈரான் ஒண்ணுக்கு மட்டும்தான் போகவில்லை.
வெறிகொண்டு அவனை நோக்கி வரும் கிரேவை விட அவன் பயப்படும் ஒரு விஷயம்...
ஸ்டெம்.
பயத்தில் திக்கித் திணறி உண்மையைச் சொல்லிவிடுகிறான் , ஸ்டெம்மை கண்டுபிடித்த நாள் முதல் அவனே ஸ்டெம்மின் கட்டுப்பாட்டில் ஒரு அடிமையாகத்தான் இருந்தான், என்பதையும், ஸ்டெம் அதற்கு ஒரு உடல் கேட்டு போட்ட திட்டம்தான் கார் ரிப்பேர், விபத்து, அதைத்தொடர்ந்து கொலையாளிகளை பேசவே விடாமல் போட்டுத்தள்ளியது என கொஞ்சம் கொஞ்சமாக கிரேவிற்கு புரிய ஒரு திகில் படருகிறது அவனுக்குள்.
போதாதகுறைக்கு இவன் உடல் இவன் கட்டுப்பாட்டை மீறி அங்கே இருக்கும் போலீஸ் அதிகாரியை சுட, இவன் உடலை இவனே கட்டுப்படுத்த முடியவில்லை, ஈரானும் போய்ச் சேருகிறான், சரி சுட்டுகிட்டு செத்துருவோம் என்று தாடையில் துப்பாக்கியை வைத்து அழுத்தும் கிரே இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் எழுந்திருக்கிறான்.
அன்பு மனைவி ஆஷா, இரண்டு நாள் மயக்கத்தில் இருந்த இனி பிரச்சனை இல்லை என்று சொல்லி அணைத்துக் கொள்கிறாள்.
மனித மூளையை ஸ்டெம் வெற்றிகரமாக பிரித்துவிட்டது, அதாவது கிரேவின் மனசுக்கு தேவையான ஒரு வாழ்க்கையை ஒரு தீராக்கனவு மூலம் அவனுக்குள் பொதித்துவிட்டு, அவன் உடலை தன்னுடைய இருப்புக்கு எடுத்துக்கொள்கிறது ஸ்டெம்.
குலைநடுங்கவைக்கும் முடிவு.
ஏ.ஐ குறித்து பரவலான விவாதங்கள் துவங்கியிருக்கும் இந்த காலகட்டத்தில் இந்தப் படம் வெளிவந்தால் வசூலில் தூள் கிளப்பிவிட்டது.
பல காட்சிகள், ஏற்கனவே வெளிவந்த படங்களை நினைவுபடுத்தினாலும் படம் தெறி மாஸ் வெற்றியைப்பெற்றது.
தொடர்வோம்
அன்பன்
மது
சிறு வயதிலோ..இளவயதிலோ சினிமா பார்க்கவழியில்லை..சரி இந்த வயதிலாவது படம் பார்க்கலாம் அதற்கும் நேரம்மில்லை...இப்படி திரை விமர்சனத்தை படித்தாவது காலத்தை ஓட்டவேண்டியதுதான்...
ReplyDeleteபழைய படம்தான் தோழர் தாராளமா yifyஇல் கிடைக்கும். பார்க்கலாம்.
Deleteவருகைக்கு நன்றி
பார்த்தால் பாதிப்படம் புரியாது. உங்கள் விமர்சனம் படிக்கும்போது ஆர்வம் வருகிறது.
ReplyDeleteவாருங்கள் எங்கள் ப்ளாக் ஸ்ரீ ...வருகைக்கு நன்றி
Delete