என்ட் கேமில் மார்வலஸ் மொமென்ட்ஸ் 3


அதிநாயகப் படங்கள், வெறுமே நாயகர்களின் சக்தி பெருக்கை, அதைக் கொண்டு அவர்கள் மனித குலத்தை எப்படி காக்கிறார்கள் என்று மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தால் ஒரு பயல் பார்க்கமாட்டான்.


இதை மிக கச்சிதமாக பயன்படுத்தியவர்களில் கிறிஸ்டபர் நோலன் ஒருவர். அவரது சூப்பர் ஹீரோக்கள் சக்திவாய்ந்தவர்கள், ஆனால் உணர்வுகள்ததும்ப இருப்பார்கள்.

இது பார்வையாளர்கள் காட்சியோடு பிணைக்கும் மாஜிக்.

இந்த வித்தையை ரூஸோ பிரதர்ஸ் திறம்படச் செய்துவிட்டார்கள்.

பல ரசிகர்கள் ஏண்டா ஜவ்வு மாறி இழுக்குறாங்க என்றால், பதில் இதுதான், ஒரு ஸ்ப்ரிங்கை அழுத்துவது போல்  செண்டிமெண்ட் காட்சிகள் படத்தை அழுத்தி ஆக்சனுக்குள் தள்ளுகின்றன.

இந்த பதிவில் காப்டன் அமரிக்காவின் பாசமலர்.

ராணுவ முகாமில் ஷீல்ட் ஏஜெண்டுகளிடம் மாட்டிவிடக்கூடாது என்று ஒரு அறையில் நுழையும் கேப்டன் அவனது காதலியைப் பார்கிறான்.

பெகி, ஒரு கண்ணாடிச் சுவர் இடையே இருக்க முகத்தில் டன் கணக்கில் ஏக்கத்தை வைத்துகொண்டு கேப்டன் அவளைப் பார்க்கிற பார்வை, வாவ்.

இதனாலேயே பின்னால் டைம் ஹீஸ்ட்டை பயன்படுத்தி தன்னுடைய காதலியோடு வாழ துவங்குகிறார் கேப்டன்.

"உன்னோட பிரச்சனையே உனக்குத் தேவையான வாழ்க்கையை நீ வாழலை என்பதுதான்", என்று அயர்ன்மேன் சொன்னதை மிகக் கச்சிதமாக இந்த பாகத்தில் நிறைவேற்றிவிடுகிறார் காப்டன்.

அதோடு மீண்டும் இன்னொரு ஜம்ப் அடித்து வந்து தன்னுடைய ஷீல்டை பால்கனிடம் கொடுக்கிறார்.

இந்த சீரிஸில் இது ஒரு வாவ் மொமென்ட்.

இந்தப் படங்கள் ஏன் கொண்டாடப்படுகின்றன என்பதற்கு பதில் இதில் இருக்கிறது.

வெள்ளை இன காப்டன் தன்னுடடைய வாரிசாக கறுப்பின பால்கனை எடுப்பது வாவ் இல்லையா.

இவங்க இப்படிப் படம் எடுக்கிற பொழுது நம்ம ஜந்துக்கள் இரநூறு ரூபாய் டி ஷர்ட், நானுறு ரூபாய் ஜீன்ஸ் என்று படம் எடுக்கிறார்கள்.

இறுதிக் காட்சியில் காப்டன் தன் காதலிக்கு யுகம் யுகமாக சேர்த்துவைத்திருந்த ஏக்கங்களை ஒரு முத்தமாகத் தருகிறார்.

ரசிகர்கள் ரொம்ப விவாதிக்கும் இன்னொரு விசயம் எப்படி காப்டன் அமெரிக்க கடவுளான தோரின் சுத்தியலை தூக்குகிறார்.

தோரின் அழைப்புக்கு போவது போலவே காப்டனின் அழைப்புக்கும் போகிறதே தோரின் சுத்தி?

சுத்தியை உயர்த்த தூய இதயம் இருந்தால் போதும்.

இந்தப் பகுதியில் உலகை காக்க தன்னை இழக்க தயாராகும் காப்டனின் அழைப்பிற்கு சுத்தி போகாமல் என்ன செய்யும்?

இன்னொரு விஷயம் ஏஜ் ஆப் அல்ட்ரானில், காப்டன் சுத்தியை தூக்க முயற்சிக்கும் பொழுது தோருக்கு நம்பிக்கை இருக்காது.

அதாவது அந்த சுத்தியை கேப்டன் தூக்கிவிடுவார் என்பது தோருக்கு அன்றே தெரியும், ஆனால் கேப்டன் ரொம்ப அடக்கி வாசிக்கிறார் என்கிற சந்தேகம் அன்றே தோருக்கு உண்டு.

அதனால்தான் இந்த திரைப்படத்தில் காப்டன் சுத்தியை தூக்கி தானோசை புரட்டி எடுக்கும் பொழுது "தெரியும்டா எனக்கு" என்று கூக்குரலிடுவார்!

கிளாஸ் மாஸ் இது.

அதே போல கேப்டன் பெகிக்காக உருவாக்கிய டைம் லைனில் பல சாகசங்களை செய்யப்போகிறார்.

எஜன்ட் கார்டர், என்று மார்வல் சானலில் வரப்போகிறது அது.

சந்திப்போம்
அன்பன்
மது.

Comments