தமிழ் நாடு அடுத்த பிகார்/ஜார்கான்ட்

எட்டாம் வகுப்புக்குத் தேர்வா?
அரசு திடுமென அறிவித்து பின்னர் திரும்பப்பெற்ற ஒரு திட்டம் இது. எட்டாம் வகுப்பிற்கும் ஐந்தாம் வகுப்பிற்கும் அரசுப் பொதுத்தேர்வு என்பதின் பின்னால் இருக்கும் விளைவுகளைப் பற்றி பேசுவோம் இந்தப் பதிவில்.கல்வித்துறையில் இன்று இருக்கும் பல்வேறு ஏற்பாடுகள் யுகம் யுகமாக போராடிக்கதறிப் பெற்றவைதான்.

மேற்குலக நாடுகளில் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்வரை மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி கிடையாது. அரசுகள் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

கல்விக்கு செலவிடப்படுவது மக்களின் வரிப்பணம், அந்த வரிப்பணத்தை மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கு செலவிட முடியாது?

என்ன காருண்யம்!

பல்வேறு மேற்குலக நாடுகளில் பள்ளிகளைத் துவக்க அரசுகள் முடிவு செய்ததே தாயும் தந்தையும் பணிக்குச் செல்லும் பொழுது குழந்தைகள் ஒரு இடத்தில் இருக்கவேண்டும் என்று செய்த ஏற்பாடுதான்.

மாற்றுத்திறனாளியான லூயிஸ் பிரெயில் தனது எழுத்து முறையை அறிமுகம் செய்த பொழுது கடும் ஏளனத்திற்கு ஆளானார், பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரைப் போலவே ஒரு மாற்றுத் திறனாளி லூயிஸின் முறை வெகு எளிதாக இருக்கிறது என்று சொல்லி பிரச்சாரம் செய்ததின் பின்னரே அவரது எழுத்து முறைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இப்படி கல்விதொடர்பான ஒவ்வொரு சிறு செய்திக்கு பின்னாலும் மாபெரும் போராட்டங்கள், தியாகங்கள், அதிர்ச்சிகள் இருக்கின்றன.

நாம் அவற்றை ஜஸ்ட் லைக்தட் தூக்கிப் போட்டுவிட்டு போக எத்தனிக்கிறோம்.

அதே போல எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் தேர்ச்சி என்பதன் பின்னால் என்ன இருக்கிறது ?

பல ஆண்டுகால சமூக புரிதல், கல்வி ஆய்வுகள், கல்வியாளர்களின் கருத்துருக்கள் இவற்றைக் கொண்டே இந்த வழிமுறை தரப்பட்டது.

ஒரு மாணவனை தோல்வியடையச் செய்வது மிகவும் எளிது. ஆனால் தேர்ச்சி என்று அறிவிக்க மிகுந்த பிரயாசை வேண்டும். அப்படிப் பார்க்கையில் ஒரு தேசத்தின் பிள்ளைகளை தேர்ச்சி என்று அறிவிக்க எத்துனைப் பிரயாசை தேவைப்பட்டிருக்கும்?

இத்துணைக்கும் நமது மூத்த தலைமுறை காலத்தில்   பெயில் போடுவது  நடைமுறையில் இருந்தது.

அப்புறம் நடுவில் எப்படி மாறியது?

இதற்கான கேள்விக்கு விடைவேண்டும் என்றால் நீங்கள் சில ஆண்டுகள் பின்னோக்கி போக வேண்டும்.

நாங்கள் பணியில் சேர்ந்த வருடங்களில் முழுத்தேர்ச்சி கொள்கையை அறிமுகம் செய்து ஆசிரியர்களுக்கு விளக்கியது அரசு.

காவல் அதிகாரிகளின் நேரடி கள அனுபவங்களும், கல்வியாளர்களின் ஆய்வும், சர்வதேச கல்வி ஆய்வுகளும் சொன்ன தரவுகளை விளக்கி ஏன் ஆரம்பக் கல்வியில் முழுத்தேர்ச்சி அவசியம் என்பதை உணர்த்தினார்கள்.

இளம் வயதில் பள்ளியை விட்டும் விலகும் சிறார்கள் சில ஆண்டுகளுக்கு பின்னர் சமூக விரோத சக்திகளாக மாறுகின்றனர் என்பதை பல தரவுகளின் மூலம் உணர்த்தினார்கள்.

சிவகங்கை பகுதியில்  சனி ஞாயிறுகளில் கறிக்கோழி வெட்டும் பணிக்கு சென்ற சில மாணவர்கள் பின்னர் அதையே முழுநேரத் தொழிலாக மாற்றிக்கொண்டு இரத்தம் சதை குறித்து அஞ்சாமால் கொலைச் செயல்களில் ஈடுபடத்துவங்குவதை பதிவு செய்தார் ஒரு காவல் அதிகாரி.

எட்டாம் வகுப்பிற்குள் கறிக்கடைக்கு செல்லும் பல சிறுவர்களின் நிலை இதுதான் என்று வருந்தினார்.

ஒரு மாணவனை ஐந்தாம் வகுப்போடு பள்ளியை விட்டு விரட்டினால் என்ன ஆகும்?

இன்றைய பள்ளிகள் இருக்கும் லட்சணத்தில் நூலக புத்தகங்களை கூட வாசிக்கும் பழக்கத்தை இளம் தலைமுறைக்கு தருவதில்லை நாம் என்கிற பொழுது அவர்களின் ஒரே வடிகால் செல்போன்.

அந்த வயதில் பியர் ப்ரஷர் மூலம் ஒரு மாதிரிக் காணொளிகளை அவர்கள் தொடர்ந்து பார்க்கிற பொழுது அவர்களுக்கு அந்த செயல்களை தாங்களும் செய்ய வேண்டும் என்று தோன்றுவதும், அதனால் எந்த குற்ற உணர்வும் இன்றி கொலை, வன்புணர்வு போன்ற விவகாரங்களில் இறங்குவதும், இல்லை ஏதாவது ஒரு சாதிக் கட்சியில் இணைந்து சேவை செய்வதும், (பின்னர் அதன் தலைவனாலேயே கொல்லப்படுவதும்) நடக்கும். நாளய நிர்ப்யாக்களின் வன்புணர்வு நிகழ்தகவை உறுதியாக்கியிருக்கும்  இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்திருந்தால்

இதைத்தான் உன்னத சமூகம் என்கிறீர்களா?

இந்த விளைவுகள்தான் நிகழும் என்பது உங்களுக்கு இன்னும் புரியவில்லையா?

ஆக, ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது மதவாத தீவிர இயக்கங்களுக்கு  தொண்டர் சேர்க்கும் வேலை என்பதாவது புரிகிறதா இல்லையா?

இன்னொரு செய்தியையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

பல்வேறு வடஇந்திய மாநிலங்களில் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டோர் இங்கே பாணி பூரி விற்றுக்கொண்டு மோடி ஜி நல்லவர், இவர் பெயரச் சொன்னாலே சும்மா அதிருது என்று வாய்ச்சவடால் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்த லட்சணத்தில் தமிழகத்தில் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தால், இங்கேயும்இன்னும் சில ஆண்டுகளில் இங்கும் புதிய ராம ஜென்ம பூமிகள் வரும், தேவாலயங்களில் குண்டுகள் வெடிக்கும்.

அதற்கான விதையைத்தான் இன்று விதைக்க விரும்புகிறது இந்த அரசு.

இதற்கான தீர்வு முதலில் கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வருவதே ஆகும்.

நம் மாநிலத்திற்கான கல்வித் தேவைகளை இங்குள்ள வட்டார வளங்களை முன்னிறுத்தி நாமே வடிவமைத்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

பிரச்சனையின் தீவிரம் இப்படி இருக்க, டேய் வாத்தியாருங்க பாடம் நடத்தாமலே தேர்ச்சி அறிவித்துவிட்டு சொகுசா இருக்காங்க என்றும் சிலர் பேசுகின்றனர்.

இன்றைய சூழலில் தொடக்கக்கல்வித்துறைதான் மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகும் துறை.

மாணவர்களின் கற்றல் அடைவுகளை உறுதி செய்ய, புதிய புதிய அளவீட்டு கருவிகளை கல்வித்துறை அறிமுகம் செய்துகொண்டே இருக்கிறது.

துவக்கப் பள்ளியில் இருந்து வெளிவரும் மாணவர்கள் படைப்பாற்றலில், வினா எழுப்பும் திறனில் மிளிர்கிறார்கள்.

அத்துணை மெனக்கெடல்கள் துறைக்கு உள்ளே நிகழ்கின்றன. இந்தப் புள்ளியில் மீண்டும் பழைய முறைக்கு திரும்ப யத்தனிப்பது மிக மோசமான அரசியல் நகர்வு.

அடுத்த தலைமுறையின் முகவரியை மொத்தமாக மாற்றி எழுதி, வெறும் வாக்கு மந்தைகளாக மக்களை மாற்றுவதே இந்த அறிவிப்பின் பின்னே இருக்கும் அரசியல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்பன்
மது

Comments

  1. நல்ல வேளை தப்பித்தேன்...பத்தாப்புல அஞ்சு வருசம் படிச்ச மாதிரி அஞ்சாப்பல பத்து வருசம் படித்திருப்பேன்...!!!!!!!!!!!!!

    ReplyDelete

Post a Comment

வருக வருக