ஏன், இடஒதுக்கீடுகள் தொடரவேண்டும்?


தேசம் விடுதலை பெற்று எழுபது ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இந்த இட ஒதுக்கீடுகள் இன்னும் கைவிடப்படவில்லையே?



தேசத்தின் வளர்ச்சியை இட ஒதுக்கீடுகள் பாதிக்கின்றனவே என்று அக்கறையான குரல்கள் ஒலிப்பதைக் கேட்டு வருகிறோம்.

காலை கட்செவிப் பதிவு ஒன்றில் மிக நேர்த்தியாக எழுதப்பட்ட ஒரு கட்டுரையை படிக்க நேர்ந்தது.

அது, இரண்டு மாணவர்கள் எப்படி கல்லூரியில் கட்டணம் செலுத்தி இடம் பெற்றார்கள் என்பதை விவரித்தது. ஒரு மாணவரிடம் நீங்கள் இடஒதுக்கீட்டில் வந்திருக்கிறீர்கள் எனவே குறைந்த கட்டணம் போதும், என்றும் இன்னொரு மாணவரிடம் தொன்னூற்றி எட்டாயிரம் கட்டணம் பெற்றுக்கொண்டு  மாணவரின் பெற்றோரை பேருந்துக்கட்டணம் கூட இல்லாமல் அனுப்பி வைத்த அந்த கல்வி நிலையத்தை குறித்து பேசி, நச்சியமாக இனி இடஒதுக்கீடுகள் பொருளாதார அடிப்படையிலும் வழங்கவேண்டும் என்று முடிந்திருக்கிறது.

தேர்ந்த வாசகர் ஒருவரால் பின்னணியில் எழுதும் விரல்களின் காவிக் கறையை அடையாளம் கண்டுவிடமுடியும். ஆனால் அதை படித்தவுடன் எழும் நெகிழ்வான மனநிலையில் இளவல்கள் அதை பார்வர்ட் செய்துவிடுகிறார்கள்.

இந்த தருணத்தில் நாம் சில விசயங்களை ஒப்பிட்டு பார்ப்பது அவசியம்.

கல்விக்கு தொடர்பே இல்லாத விசயம் என்று நினைத்தாலும் இந்த பார்வை வெகு அவசியம்.

கேரள முதலமைச்சர் தலித்துக்கள் அரச்சகராகலாம் என்று ஒரு அரசாணையிட, பலர் நியமனம் பெற்றனர்.

மகிழ்வு இரண்டு நாட்கள்கூட நீடிக்கவில்லை.

நியமிக்கபட்ட அர்ச்சகர் ஒருவர் "என் கையில் விபூதி வாங்கிக்கொள்ள கூச்சப்படுகிறார்கள்" என்று போட்டுடைத்தார்.

ஆக, அரசே ஆணையிட்டாலும் சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை.

ஒரு புரட்சிகர மாற்றத்தை இளவல்கள் எப்படிக் கொண்டாடியிருக்கவேண்டும்? புதிய அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்ட அந்தக் கோவில்களுக்கல்லவா படைஎடுத்திருக்க வேண்டும். ஒரு நடிகர் படம் வெளியானால் ட்விட்டர் டிரன்ட் செய்யும் நம் இளவல்கள் இதையும் அல்லவா டிரன்ட் செய்திருக்கவேண்டும்..

இப்போது எதற்கு இந்த கேள்வி?  கல்வி நிலையங்களில் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடுகள் குறித்து பேசும் பொழுது எதற்கு கருவறையில் இருக்கும் அர்ச்சகர்பற்றி பேசுகிறாய் என்று நீங்கள் கேட்கலாம்.

இறைவனை வணங்கும் இடத்தில், சாதியை பேணிப் பாதுகாக்கும் ஒரு சமூகத்தில், அதற்கான முழு இட ஒதுக்கீட்டையும் அனுபவிக்கும் ஒரு சாதியை கேள்விகேட்ட வக்கற்ற ஒரு சமூகம், கேள்வி கேட்டகாவிட்டாலும் பரவாயில்லை, பண்டைய சனாதான தர்மங்களை தங்கள் டி.என்.ஏவில் சுமக்கும் ஒரு சமூகத்தில் நிச்சயம் சமூக சமநிலைக்கான இட ஒதுக்கீடுகள் அவசியம்.

பள்ளிக் கூடத்தில் இருக்கும் பிரச்சனையை எதுக்குப்பா கோவிலில் கொண்டே நிறுத்துகிறாய் என்று நீங்கள் கேட்கலாம்.

நமது வழிபாடு, மதம், கலாச்சாரம் எல்லாமே சமத்துவத்திற்கு எதிராக இருக்கும் பொழுது சட்டம் மனித குல சமத்துவத்திற்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும்.

இந்தப் புள்ளியில்தான் ஆண்டாண்டுகாலமாக கல்வி மறுக்கப்பட்ட தலைமுறைகளுக்கும், ஒடுக்கப்பட்ட தலைமுறைகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

வெகு சமீபத்தில்தான் இந்த பிரிவுகளை சேர்ந்த குழந்தைகள் ஜெனரல் கோட்டாவில் வரும் அளவிற்கான உச்ச மதிப்பெண்களை பெறுகிறார்கள், அதற்கான வழிகளை அவசரமாக அடைப்பதற்கு மனு தர்மவாதிகள் துடித்தார்கள். "நீட்டாக" ஒரு திட்டம் போட்டார்கள்.

ஒடுக்கப்பட்ட சமூகங்கள் பல்வேறு போராட்டத்திற்கு பிறகு அடைந்த இட ஒதுக்கீட்டை ஒரே இரவில் பெற்றுவிட்டார்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர் ஆண்டுக்கு ஒன்றரை லட்சத்திற்கு அதிகமாக ஊதியம் பெற்றால் அவர்களுக்கு சலுகைகளை மறுக்கும் நிலையில் உயர்சாதி பிள்ளைகளின் பெற்றோர் ஆண்டுக்கு எட்டு லெட்சம் பெற்றாலே ஏழைகள் என்று கருதப்பட்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படலாம் என்பதில் இருக்கும் கயமை இன்னும் உங்களுக்கு புரியவில்லை என்றால் இந்தியாவிற்கு விடிவே இல்லை.

புரிந்துகொண்டால் சமூகம் உயரும்.

புரிந்து கொள்வீர்கள் என்கிற நம்பிக்கையில்

உங்கள்

கஸ்தூரி ரெங்கன்.

(மார்வல் பதிவுகளை இடையறுத்து கொஞ்சம் சமூகம் பக்கம் வர வைத்த அந்த கட்செவி காவிப்பதிவுக்கு நன்றி)

வாய்ப்பிருப்போர் இந்த பதிவையும் பகிரலாம்.

Comments

  1. புரிந்து கொள்வோம் நண்பரே

    ReplyDelete
  2. நல்ல பதிவு நண்பரே! காலத்திற்கு வேண்டிய பதிவு! நீங்கள் கூறிய அதே வாட்சப் பரப்புரையை நானும் பார்த்திருக்கிறேன்; எனக்குத் தெரிந்த வரையில் மறுத்துரையும் அளித்திருக்கிறேன். ஆனால் நம் எதிர்த் தரப்பில் இருப்பவர்கள் நம் கருத்துக்களை ஏற்பதில்லை. அதே நேரம் நாம் எழுதுவது, எல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டே நீலிக் கண்ணீர் வடிக்கும் இத்தகைய பதிவுகளைப் பரப்புகிற பேர்வழிகளுக்காக அல்லவே! இட ஒதுக்கீடு, சாதிய அமைப்பு, இதன் கொடுமைகள் எதையுமே தெரிந்து கொள்ளாமல், ஓரளவு வளர்ந்ததும் ஏன் இப்படியெல்லாம் இட ஒதுக்கீடு எனும் பெயரில் அரசே பாகுபாடு வளர்க்கிறது எனக் கேட்கும் நம் வீட்டுப் பிள்ளைகளுக்காகத்தான். எனவே தொடர்ந்து எழுதுவோம்! இப்படி ஒரு பதிவுக்காக நன்றி!

    பி.கு.: கட்செவி என்றால் பாம்பு எனும் பொருள் ஏற்கெனவே தமிழில் உண்டு. எனவே அச்சொல்லை வாட்சப் என்பதற்கான தமிழ்ப் பதமாகப் பயன்படுத்த வேண்டா நண்பரே! வாட்சப் என்பது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் பெயர் என்பதால் அதை மொழிபெயர்ப்பது தவறு என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. எனவே வாட்சப்பு அல்லது வாட்சப் எனக் குறிப்பிட்டாலே போதுமானது. ஒருவேளை வாட்சப்பு, தெலிகிராம் போன்ற இத்தகைய சேவைகள் அனைத்துக்குமான பொதுச் சொல் ஒன்று வேண்டும் என நீங்கள் விரும்பினால், ஏற்கெனவே தமிழ் மையம் ஒன்றால் ஏற்பிசைவு செய்யப்பட்ட ‘புலனம்’ எனும் சொல்லைப் பயன்படுத்தலாம்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக