கல்வி உதவி ஒன்று கோடி நன்றிகள்

சில மாதங்களுக்கு முன்னர் அழைத்திருந்தார் அந்த வட்டாரக் கல்வி அலுவலர். மிகுந்த நம்பிக்கைக்குரிய மனிதர். அனைவரிடமும் மரியாதையோடு பழகக்கூடியவர்.

புதுகை தெற்குப் பகுதியில் தன் கணவனை இழந்துவிட  ஒரு தாய் தன்னுடைய இரண்டு பெண்களுக்கு (இரட்டையர்) கல்வி உதவி கோருவதாகவும், மிகுந்த பொருளாதர இடர்பாட்டுக்குட்பட்ட குடும்பம் என்று சொல்லவே, நான் உதவியை கோரிப் பெற்றுத் தருகிறேன் என்றேன்.

அய்யா ஷாஜகான் இருக்கும் பொழுது என்ன கவலை.

என்னுடைய மாணவி ஒருவர் மேல்நிலைப் படிப்பை முடித்த பின்னர் ஏழ்மை காரணமாக படிக்க இயலவில்லை என்று சொல்லவே அந்தப் பெண்ணுடைய அக்கா பையனிடம் சொல்லி ஷாஜ் ஐயாவை தொடர்பு கொள்ள சொன்னேன்.

அவன் இன்பாக்ஸில் அடித்ததை அப்படியே போட்டிருந்தார் அய்யா.

அய்யா நாங்க ஏழ்...

இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அரைகுறையாக விட்டுவிட்டான். (டேட்டா முடிந்திருக்க வேண்டும்)

இன்று அந்த பெண் ஒரு இயற்பியல் பட்டதாரி. இதைக் குறித்து எழுதியவுடன் அன்பு நண்பர் புவனேஸ்வரன் மற்றும் அவரது தோழர்கள் அந்தப் பெண்ணுக்கு பயணச் செலவுக்கு பணம் கொடுத்து தன்னார்வப் பயிலும் வட்டம் வரப் பணித்தனர்.

அனேகமாக இன்னும் ஒரு சில முயற்சிகளில் அந்தப் பெண் ஒரு அரசுப் பணிக்கு சென்றுவிடலாம்.

இது முன் கதை.

இந்த ஊக்கத்தில் அடியேன் வட்டாரக் கல்வி அலுவலர் கோரியபடி உதவிகளை பெற்றுவிடலாம் என்று சொல்லிவிட்டேன்.

வழக்கம் போல அய்யாவை தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்தேன்.

இந்தக் குடும்பத்தின் இல்லம் அருகே ஒரு ஆங்கில ஆசிரியர் இருப்பதை ஒரு பயிற்சிக்கு சென்ற பொழுது எதார்த்தமாக அறிந்தேன்.

அவர் இரண்டு நாட்களுக்கு பிறகு நிச்சயம் உதவி தேவை என்பதை உறுதி செய்தார்.

ஷாஜகான் அய்யா மிகுந்த பொறுப்புடன் இயங்கும் ஒரு அனுபவமிக்க கல்வி நிதியாளர். தன்னுடைய நண்பர்கள் தரும் ஒவ்வொரு பைசாவிற்கும் பொறுப்பு எடுத்துச் செயல்படுபவர்.

முதல் தகுதி உதவி கோரும் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் மட்டுமே பயின்றிருக்க வேண்டும்.

மிக முக்கியமான நிபந்தனை இது.

இதுவே பணால். உதவி கோரிய தாயார் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர். அவருக்கு அந்த நிறுவனம் கட்டணச் சலுகை கொடுக்கவே தன்னுடைய குழந்தைகளை அதே பள்ளியில் பயில அனுமதித்துவிட்டார்.

அய்யா கையை விரித்துவிட்டார்.

எனக்கு என்னடா இப்படி ஆகிவிட்டதே என்று அதிர்ச்சி.

சில தினங்கள் கழித்து அய்யாவே அந்த குழந்தைகளுக்கு பதினைந்து ஆயிரங்களை அனுப்பி வைத்தார்.

இது அவர்கள் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வுக்கு சென்றுவர உதவும்.

ஒரு குழந்தையை தஞ்சை பக்கம் இருந்த அரசு பொறியியல்  கல்லூரியில் அரசு கோட்டாவில் சேர்த்தாயிற்று.

இன்னொரு குழந்தை சிறப்பு கட்டணச் சலுகையோடு புதுக்கோட்டை மவுண்ட் சியான் பொறியியல் கல்லூரியில்.

அடுத்த முயற்சியாக புதுகையின் வெளியில் தெரியாத மாபெரும் சமூக செயற்பாட்டாளர் அய்யா பேராசிரியர் விஸ்வநாதன் அவர்களிடம் விசயத்தை கொண்டு சென்றேன்.

இதுகுறித்து வட்டாரக் கல்வி அலுவலரிடமும் சொல்லியாகிவிட்டது. பேராசிரியர் நேரடியாக பத்தாயிரத்தை அந்த அலுவலரிடம் கொடுத்துவிட கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு.

அடுத்து துண்டு விழுந்த எட்டாயிரம் ரூபாய்களுக்கு என்ன செய்வது என்று பார்த்தேன்.

இந்த மாதம் பொதுக் காரியங்களுக்கு மட்டும் எட்டாயிரம் ரூபாய்களுக்கும் மேல் நான் செலவிட்டுவிட்டேன்.

ஆக, நண்பர்களை கோருவது ஒன்றுதான் வழி.

ஒரே ஆளாக இந்தத் தொகையை கொடுக்கும் நண்பர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் என் நட்பு வட்டத்தில் இருக்கும் எளிய மனிதர்கள், கடினமாக உழைத்த பணத்தை எண்ணி எண்ணி செலவிடும் நண்பர்கள், அதே சமயம் சமூக அக்கறை உள்ளவர்கள் என ஒரு இருபது நண்பர்களை ஒரு கட்செவிக் குழுவாக்கினேன்.

சற்றே உடல் நலக் குறைவால் மருத்துவ விடுப்பில் இருப்பதால் பிற்பகல் நான்கு நாற்பதுக்கு இந்த குழுவை உருவாக்க முடிந்தது. முழு விவரத்தையும் பகிர்ந்து உதவி கோரினேன்.

முதல் ஆளாக இஸ்லாத்தை அப்படியே பின்பற்றும் நண்பர் ஐநூறு அனுப்பிவிட்டு க்ரூப்பில் போட வேண்டாம் என்றார்.

இவரைப் பற்றி எனக்கு நன்கு தெரியும். தன்னுடைய மாத வருவாயில் இஸ்லாமிய வழிகாட்டல் நெறிமுறைகளின்படி மிகத் துல்லியமாக ஒரு தொகையை எடுத்து வைத்துவிட்டுத்தான் தன்னுடைய மாத செலவை ஆரம்பிப்பார்.

அடுத்து புதுகையில் மேப் கணிப்பொறி நிறுவனத்தை நடத்திவரும் ஆனந்த் (நடிகர் சூர்யாவின் நண்பர், நந்தா படபிடிப்பின் பொழுது சூர்யா பெரும்பகுதி இவர் வீட்டில்தான் இருந்தார்) ஐநூறு.


எனக்கு கண்கள் திரையிட்டுவிட்டது.


வெளியே வானம் திறந்துகொண்டது போல் மழை.


இதில் மருமகன் மணி மட்டும் நான்காயிரம் ரூபாய்களை வழங்கிவிட்டான்.

என்னடா என்றால், சர்வதேச பணப்பரிமாற்றம் மாமா, குறைந்தபட்ச தொகையே நான்காயிரம்தான் என்கிறான்.

பல பட்டதாரிகளை உருவாக்கிய அண்ணன் கஷ்மீர் டேய் நான் ஐநூறு  என்கிறார்.

விபத்தை சந்தித்து இன்னும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் அய்யா பஷீர் அலி ஆயிரம் ரூபாய்கள்.

புதிதாக அப்பாவாக பணி உயர்வு பெற்றிருக்கும் பாஹாத் ஆயிரம்.


மாவட்டத்தின் மிகச் சிறந்த ஆங்கில ஆசிரியராக இருக்கும் புகாரி கான் அவர்கள் ஆயிரம்.

வனச் சரக அலுவலர் தாமோதரன் ஐநூறு.

புலவர் மகா சுந்தர் அவர்கள் ஐநூறு போதுமா என்றார்.

நோக்கமே எளிமையான ஒரு சிறு பங்களிப்பு என்றேன்.

வழங்கினார்.

மாலை ஏழு மணிக்கெல்லாம் இந்த தொகை அடையப்பெற்றுவிட்டது.

நிர்ணயிக்க பட்ட இலக்கைத் தாண்டியும் நிதி வந்துவிட்டது.

அய்யா சாமி போதும் நிறுத்துங்க என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

மழை ஓய்ந்து மீண்டும் பொழியத் துவங்கியிருக்கிறது.

தொகை நேரடியாக தாயாரின் கணக்கில் வரவு செய்யப்பட்டுவிடும் வண்ணம் அவரது கணக்கின் விபரங்களை குழுவில் பகிர்ந்திருந்தேன்.


தொடர் செயல்பாடு

முதல் ஆளாக பணம் செலுத்திய அந்த மனிதர் ஐந்து மணிக்கு மீண்டும் அழைத்தார். ஏன் சார் இன்னும் யாரும் பணம் செலுத்தவில்லை. பாருங்க இல்லைனா ஏழுமணிக்கு நான் முழுப் பணத்தையும் அனுப்பிவிடுகிறேன் என்று மிரட்ட வேறு செய்தார்!

மழை பொழிகிறது என்றால் சும்மாவா பொழிகிறது?

இதுகுறித்த அனுபவத்தை பொறியியல் கல்லூரியின் தலைவர் ஒருவருடன் பகிர்ந்து கொண்டேன். அவர் மைலோ குறித்தும் கீட்டோ குறித்தும் சொன்னார்.

பேச்சோடு பேச்சாக ஒரு கோரிக்கையை வைத்தேன். எம் பள்ளிக்கு கியூ ஆர் கோட் அடிப்படையில் ஒரு நூலக நிர்வாக செயலியை வடிவமைத்துத் தருமாறு கோரினேன். இசைந்திருக்கிறார்.

மிகுந்த மகிழ்ச்சி.Comments

 1. அனைவருக்கும் வாழ்த்துகள்....

  ReplyDelete
 2. நல்ல மனம் வாழ்க....

  ReplyDelete
 3. மனிதம் உள்ள மனிதர்கள்

  ReplyDelete
 4. போற்றத்தக்கவர்கள். பெரிய மனது. வாழ்த்துகள்.

  ReplyDelete

Post a Comment

வருக வருக