மலரும் நினைவுப் பதிவு 2
பாலத்தில் திணறியது
புல்கட்டு ஏற்றிய
வண்டியின் மாடு
ஒட்டிய வயிறோடு
பீடுமிகு ரோட்டரி இந்தியாவில் போலியோவை ஒழித்த இயக்கம். உலகளாவிய சேவை இயக்கம். மாவட்டம் 3000த்தின் கிளை இயக்கமான புதுகைக் கிங்டொரியன் சங்கம் இவ்வாண்டு தசவதராத் திட்டங்களில் ஒன்றான நாயகன் திட்டத்தை முன்னெடுத்தது.
இவ்வாண்டின் ஆற்றல்மிகு தலைவர் சத்யமூர்த்தி அவர்களின் இசைவில், முன்னாள் தலைவர் ரோட்டேரியன் அண்ணாமலை அவர்கள் மாவட்டத்தின் சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்க விரும்பினார்.
உயரிய நோக்கம் கொண்ட நிகழ்வு என்றாலும் எளிமையாகத் திட்டமிடப்பட்டது. ரோட்டரி வார நிகழ்வு ஒன்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை கௌரவிப்பது என்று முடிவானது.
இதற்கான பின்புல வேலைகளை அண்ணன் அண்ணாமலை இழுத்துப்போட்டுகொண்டு செய்யத் துவங்கினார். அடியேன் பள்ளிப் பணி, செயத்தக்க செய்க என்று இன்னொரு சுழலில்.
புதுகை மாவட்டத்தில் எத்தனையோ நல்லாசிரியர்கள் குடத்திலிட்ட விளக்காக தாங்கள் இருக்கும் இடத்தை வெளிச்சமாக்கி வருகிறார்கள். அவர்களில் சிலரை அறியமுடிந்த நிகழ்வு இது.
நிகழ்வின் முதல் தேர்வு அரசு உயர்துவக்கப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் அவர்கள்தான்.
பள்ளிப் பணியைக் கடந்து ஒரு மாவட்டத்தின் கல்வி செயல்பாடுகளில் அர்பணிப்போடு ஈடுபடுவது மீனாட்சி மற்றும் ராஜேஷ் போன்ற சில ஆசிரியர்களுக்கே இயலும்.
விடைத்தாள் திருத்தும் முகாம் ஒன்றில் முகாம் அலுவலர் நிறைவுக் கூட்டத்தில் வியந்துபோய் இவர்களின் பணியைப் பாராட்டினார். ஈகோ எல்லாம் இல்லாமல் முகாம் பணிகளை பார்க்க இவர்கள் எடுக்கும் பிரயத்தனம் எல்லோருக்கும் இயலாது. சமயத்தில் தரையில் அமர்ந்து பணியாற்றுவதைப் எங்களில் பெரும்பாலானோர் பார்த்திருக்கிறோம்.
அதே போல தங்கள் பள்ளி மாணவர்களின் கற்றல் செயல்பாட்டில் எள்ளளவும் குறை சொல்ல முடியாதவண்ணம் செயலாற்றும் பாங்கு போற்றுதலுக்குரியது. குறிப்பாக மீனாட்சி சுந்தரம் தன் பள்ளிக்கு ஸ்மார்ட் கிளாஸ் ஒன்றை எங்கள் சங்கத்தின் மூலம் பெற்று, அதை குளிர்சாதன வசதியோடு செயல்படுத்தி வருகிறார். இத்தகைய பணிகளில் எங்கள் சங்கத்தின் பங்களிப்பு இருந்தாலும் அதுமட்டுமே இவருக்கு விருதளிக்க காரணமல்ல, இவற்றைக் கடந்து தங்கள் பள்ளிக்கு பெற்ற வளங்களை தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருப்பதும், முப்பதுக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே பயின்றுகொண்டிருந்த பள்ளியில் இன்று முன்னூற்றி முப்பது மாணவர்களை கடந்து மாணவர் சேர்க்கையில் புரட்சி செய்துவரும் பள்ளியின் தலைமை ஆசிரியரின் செயல்பாடுகளில் தவிர்க்கஇயலா பங்களிப்பை தந்து பணியாற்றும் பள்ளியை வளர்த்துக் கொண்டிருக்கிறார் இவர்.
அடுத்து அடையாளப்படுத்தப்பட்ட ஆசிரியர் ஒரு ஆங்கில ஆசிரியர். அரசு மேல்நிலைப் பள்ளி, பெருங்குடியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மாணவர்கள் இவரோடு தங்கள் உணவைப் ரொம்ப இயல்பாக பகிர்ந்து கொள்வது வியப்பு.
இவற்றைக் கடந்து தன் தோழர்கள் பதினாறு பேரின் நிதி உதவியோடு தன் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவு மற்றும் திடீர் மருத்துவச் செலவினங்களை ஓர் சேவையாக செய்துவருகிறார்.
கஜா தினங்களில் தன் பள்ளிப் பிள்ளைகளின் கிழிந்த குடிசைகளுக்கு தார்பாய் வழங்கியது, ஓணான்குடி கிராமத்தை சுற்றி இருந்த சிறிய கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கியது என பாலாஜியின் சேவையும் வாவ்தான்.
ஆசிரியர் பாலஜிக்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ரோட்டேரியன் அண்ணாமலை அவர்கள் பொன்னாடை போர்த்தியபோழுது |
இதுவரை தன் பள்ளிப் பிள்ளைகளுக்கு இவர் செலவிட்ட தொகை ரூபாய் ஒரு லட்சத்தி ஐம்பதாயிரத்தை தாண்டுகிறது.
எனவேதான் இவர் எம் சங்கத்தால் கௌரவிக்கப்பட்டார்.
மூன்றாவது முத்து
முத்துக்குமாரேதான்
தன்னார்வ பயிலும் வட்டம் ஒன்றை நிறுவிய முத்துக்குமார் மண்டல ஒருங்கிணைப்பாளர் கான் அவர்களாலும் முன்னாள் ஆளுநர் கோபால் அவர்களாலும் கௌரவிக்கப்பட்ட பொழுது |
அரசு உயர்நிலைப்பள்ளி, வெள்ளாளவிடுதியில் பணியாற்றி வரும் இளவல் முத்துக்குமார். அற்பணிப்புள்ள ஆசிரியர், தன் மாணவர்களை அறிவியல் தளத்தில் சிந்திக்க உதவுதல், மேலும் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தில் மாவட்ட பொறுப்பில் சுழன்று சுழன்று செயல்பட்டுவருபவர் என்பதற்காக இல்லை இவருக்கு விருது...
ஒரு ஆசிரியர் தன் பள்ளியை, தன் பிள்ளைகளின் தேர்ச்சி சதவிகித்தைமட்டும் பார்த்தால் போதும் என்ற லிமிடெட் அச்சீவ்மென்ட் மனநிலையில் இருந்து இவர் வேறு ஒரு பணியை ஒசைபடாமல் செய்துவருகிறார்.
கரம்பக்குடியில் ஒரு தன்னார்வ பயிலும் வட்டத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இதுவரை தகுதிவாய்ந்த பட்டதாரிகள் பலரை அரசுப் பணிக்கு தேர்ச்சியுற வைத்திருக்கிறார். இந்த செயலில் இவர் போலவே சமூகப் பொறுப்புள்ள பதினாறு இளைஞர்கள் இவரோடு இருக்கிறார்கள். ஒரு இளைஞர் பட்டாளம் ஆக்கப்பூர்மான சமூக கட்டமைப்பை செய்கிற பொழுது அதை ஊக்குவிப்பது நமது கடமைதானே?
அடுத்ததாக வரும் சுப்பிரமணியன் வெகு வெகு எளிமையான மனிதர்.
உண்மையச் சொல்லப்போனால் இவரைப்போல தோற்றம் கொண்ட ஒருவர் அரசு பள்ளி ஆசிரியரா என்கிற தோற்றப்பிழை எங்கள் ரோட்டரி இளவல்களிடம் இருந்தது.
இவர் ஏற்புரையின் பொழுது நன்றிகூறிப் பேசும்பொழுது எனக்குப் பெருந்திரை வீழ்த்தி மூலம் பாடம் எடுப்பதுதான் பிடிக்கும். நான் யாரிடமும் கொடையளிக்கச் சொல்லி கேட்காமல் நானே வாங்கிவிட்டேன். அதன் பின்னர் அதற்கான மின் இணைப்பு வசதிக்காகவும் நானே செலவிட்டு என் வகுப்பை நானே ஸ்மார்ட் வகுப்பாக மாற்றிவிட்டேன் என்றார்.
தமிழ் நாட்டில் தன் கற்றல் கற்பித்தல் உபகரண செலவிற்காக தன்னுடைய சொந்தப் பணம் ஒரு லட்சம் ரூபாயை செலவிட்ட ஆசிரியர்களில் ஒருவர். (இன்றய தேதியில் ஆறாயிரம் ரூபாய் பெருந்திரை வீழ்த்திகளை என் நட்பு வட்டத்தில் பதினைத்து ஆசிரியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்). ஆனால் இவர் அவர்களுக்கு பல ஆண்டுகள் முன்னோடிமட்டுமல்லாது மாணவர்களுக்கான காணொளிக் கட்சிகளின் பெரும் தொகுப்பை வைத்திருப்பவர்.
நிகழ்வு முடிந்த மறுநாள் இளவல் விக்னேஷ் அண்ணே அவர் யாரோன்னு நினைச்சேன், சான்சே இல்லைனே இப்படியெல்லாம் அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்றார். சிரித்துக் கொண்டேன்.
அடுத்த அசத்தல் ஆசிரியர் அய்யா சோமசுந்தரம், தூய மரியன்னைப் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாதம் தன் ஊதியத்தில் இருந்து முதல் செலவாக நூற்களுக்கு என்று ஆயிரம் ரூபாயை எடுத்து வைத்துவிட்டு பிறகுதான் ஏனைய செலவுகளை திட்டமிடுபவர்.
இவரைப் பற்றி எழுதினால் எழுதிக் கொண்டே இருக்கும் அபாயம் இருப்பதால் ஒரே ஒரு சம்பவம் மட்டும்.
இவர் ஒரு அறிவியல் ஆசிரியர், ஒருமுறை புதுகையின் கீழ ராஜ வீதியில் இவரை சந்தித்திருக்கிறார் இவரது முன்னாள் மாணவர், தான் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருப்பதாகவும், மாதம் எண்பதாயிரம் ஊதியம் பெறுவதாகவும் சொல்லியிருகிறார். உரையாடலினூடே அந்த மாணவர் தயங்கி தயங்கி சார் முன்பெல்லாம் சுவத்தில கவிதை எழுதிப் போடுவீங்களே இப்போ எழுதிறீங்களா என்று கேட்டிருக்கிறார்.
சோமு அய்யா தான் படிக்கும் கவிதைகளில் சிலவற்றை ஆங்காங்கே சுவற்றில் சார்ட் அட்டைகளில் எழுதி ஓட்டுவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
அப்படி அவர் என்றோ எழுதிப் போட்ட கவிதையை மறக்காமல் சாலையில் சொல்லியிருக்கிறார் அந்த முன்னாள் மாணவர்.
/நினைவிலிருந்து/
பாலத்தில் திணறியது
புல்கட்டு ஏற்றிய
வண்டியின் மாடு
ஒட்டிய வயிறோடு
என்கிற பொருள்படும் கவிதையை நினைவாகச் சொல்லிவிட்டு சார் எங்க அம்மா வீடு வீட்டுக்கு போய் பத்துப்பாத்திரம் தேய்த்துத்தான் என்னைப் படிக்க வச்சாங்க, அந்த மாடு எங்க அம்மா மாதிரி உழைச்சதா நான் உணர்ந்தேன் ...அன்னைக்கு உணர்ந்து படிச்சதால்தான் சார் இப்போ இங்கே நிக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்.
மிகுந்த அர்பணிப்போடு தன் பணியைச் செய்துவருபவர் அண்ணன் சோமு
இவர்கள் ஐவரோடு கூடவே மணிகண்டன் ஆறுமுகமும் வந்திருந்தார், விருதுபெறும் முத்துக்குமாரோடு, அன்றையதினம் இருவரும் இன்னொரு கல்வெட்டை கண்டறிந்து அதை படியெடுத்துவிட்டு மிகுந்த களைப்போடு இருந்தார்கள்.
தன் உற்றநண்பன் விருதுபெறும் நிகழ்வுக்கு வந்திருந்து அசத்தலான ஒரு உரையை வழங்கி நிகழ்வைச் சிறப்பித்தார் மணிகண்டன்.
நிகழ்வில் விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டி முன்னாள் தலைவர்கள், முன்னாள் ரோட்டரி கவர்னர் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினார்கள்.
சங்கத்தின் ஆற்றல் மூலம் தலைவர் சத்யமூர்த்தி செழுமையான ஒரு வாழ்த்துரையை வழங்கி இன்று ஐவறல்ல ஆறு தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் பாராட்டப்பட்டிருக்கிறார்கள் என்று தனக்கேஉரிய பிரசன்ஸ் ஆப் மைன்ட்டோடு சொன்னார்.
புதுகைக்கு முதலில் அதீதத் தரம் வாய்ந்த பிஸ்கட்டுகளை அறிமுகம் செய்த முன்னாள் கவர்னர் கோபால் அவர்கள், முன்னாள் தலைவர் சாந்தம் டவர்ஸ் சவரிமுத்து அவர்கள், மண்டல ஒருங்கிணைப்பாளர் கான் அப்துல் கபார் கான் அவர்கள், முன்னாள் தலைவர், கல்வியாளர் முருகப்பன் அவர்கள், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசன் அவர்கள், இளவல் விக்னேஷ் என கலந்து கொண்ட ஒவ்வொருவரும் தங்கள் ஆசிரியர்களையும் நினைவுகூர்ந்து விருதாளர்களை இதயத்தின் அடித்தளத்திலிருந்து வாழ்த்தினார்கள்.
குறிப்பாக முன்னாள் தலைவர் விஜயகுமார், மிக நீண்ட உணர்ச்சிப் பிழம்பான ஒரு வாழ்த்துரையை வழங்கினார், இதேபோல செயலர் கணேஷ்குமார் அவருக்கே உரிய தனித்த ஆளுமையோடு ஒரு உரையை வழங்கினார்.
விருதாளர்களை தன்னுடைய சாஸ்தா உணவகத்திற்கு அழைத்து விருந்தோம்பிச் சிறப்பித்தார் ரோட்டேரியன் கிருஷ்ணன்.
களத்தில் வழக்கம்போல ஒருங்கினைத்ததைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை அடியேன், எல்லாப் புகழும் ரோட்டரிக்கே, ஆற்றல் மிகு தலைவர் சத்தியமூர்த்திக்கும், நேர்த்தியாக திட்டமிட்டு சமீபத்திய ரோட்டரி நிகழ்வுகளில் முத்திரை பதித்த நிகழ்வு ஒன்றை சாத்தியமாக்கிய முன்னாள் தலைவர் ரொட்டேரியன் அண்ணாமலைக்குமே பாராட்டுக்கள் தகும்.
அசத்தல் ஆசிரியர்களைக் கொண்டாடிய ரோட்டரிக்கு அன்பும் முத்தங்களும்.
அன்பன்
மது
சிறப்பு
ReplyDeleteபாராட்டுகள்
மகிழ்ச்சி, வாழ்த்துகள்.
ReplyDeleteஅசத்தல் ஆசிரியர்கள் - அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். இப்படிப்பட்ட சிறந்தவர்களால் தான் இன்னும் கல்வி சிறக்கிறது.
ReplyDeleteதகவல் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றி மது.