அப்பத்தாவின் கருக்கருவா -ஆலங்குடி வெள்ளைச்சாமி

அப்பத்தாவின் கருக்கருவா -ஆலங்குடி வெள்ளைச்சாமி appathavin karukkaruvaa


அப்பத்தாவின் கருக்கருவா
ஆலங்குடி வெள்ளைச்சாமி

அனிச்சம் பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இந்த தொகுப்பு தமிழ் கவிதைப் பேராழியின் இன்னொரு துளி. வெற்றிகரமான் பட்டிமன்றப் பேச்சாளராக அறியப்பட்டிருக்கும் ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களின் தொகுப்பு. அவப்போது ஆனந்த விகடனில் பார்த்த கவிதைகள் மட்டுமே கைவசம் வைத்திருப்பார் என்கிற என் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வைத்த படைப்பு. அதோடு மட்டுமல்லாமல் உலகத்தரம் வாய்ந்த கவிதைகளை தந்திருப்பத்தின் மூலம் வாசகர்கள் பரவலாக பேசும் தொகுப்பாகவும் ஆகியிருக்கிறது.

கவிதைத் தொகுப்பின் தலைப்புக் கவிதையே முதல் கவிதையாக வந்திருப்பது சிறப்பு.  கொஞ்சம் கொஞ்சமாக அப்பத்தாவின் கருக்கருவாளை அறிமுகம் செய்து சிகரம் வைத்தது போல இறுதி வரிகளில்

//அவள் இல்லாத
தனிமையில்
தாழ்வாரத்தில்
அப்பத்தாவின் கைரேகையோடும்
என்
தொப்புள் கொடியின் பிசிறுகளோடும்
ஏதோதோ கதைத்துக் கொண்டிருக்கிறது
அப்பத்தாவின் கருக்கருவா//


கஜா புயலின் கோரத்தை மனிதம் வழிய வேப்பமரத்து மாரியப்பன் என்கிற கவிதையில் பேசுகிறார் கவிஞர், காணமல் போனவர்கள் கவிதையில் கிராமத்து வீதிகளில் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் வரை அலைந்து திரிந்து தெருவில் வண்டியிலோ, சைக்கிளிலோ அல்லது தலைச்சுமையாகவோ விற்பனை செய்யும்   வியாபாரிகளை குறித்த நாஸ்டால்ஜிக் பதிவு.

வெறுமே வீதியின் குரல்கள் என்று கடந்துவிட முடியவில்லை, விற்பனையாளர்களின் பெயரைக் கொண்டே அக்காலச் சமூகம் எப்படி மத வேறுபாடு இல்லமல் தாயாய் பிள்ளையாய் இருந்தது என்பதையும் சொல்லும் நுட்பம்தான் இந்த கவிதையின் ஹைலைட்.

இரட்டை தோசை காயாம்பூ பாட்டி, ஐசுக்கார ரஹீம் அத்தா(!), தயிர்கார ஆரோக்கிய மேரி என்று வரிசையில் வரும் பொழுது அந்த பொன்நாட்கள் நம் நினைவில் மோதி, இன்றைய கோசமிடும் குரங்குகளை நினைத்து அல்லலுறுகிறது. இப்படி உணர்வுப் பிரவகத்தை ஏற்படுத்துவதுதானே கவிதை!

பேரன்பு என்கிற கவிதை உங்கள் விழிகளை நனைக்கும். நாய்க்குட்டிக்கும், பூனைக்குட்டிக்கும் ஒரு ஒற்றைக்கால் காகத்திற்கும் இருக்கும் பிணைப்பை இவ்வளவு நேர்த்தியாக கவிதையில் தந்திருக்கும் நபர் வெள்ளைச்சாமியா? என்கிற திகைப்பை ஏற்படுத்தியது இந்தக் கவிதை. 

வெகுநாட்களாக கவிதைகளைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய விரும்பியது உண்டு. இதற்காகவே கவிதைகளும் குழந்தைகளும் என்கிற முகநூல் பக்கம் ஒன்றை ஏற்படுத்தினேன். ஆனால் முடிக்க வேண்டிய பதிவேடுகள் இந்தமாதிரி பணிகளை செய்யவிடவில்லை.  இந்தத் தொகுப்பின் பல கவிதைகளை வகுப்பறைக்கு கடத்தலாம். குறிப்பாக பேரன்பை பாடத்திலேயே வைக்கலாம் என்பதுதான் சிறப்பே. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால்  சர்வதேச அளவில் அன்பின் கவிதையாக அடையாளப்படும்.

மத ஒருமையை பேணும் “பாடம்”, பசிக்கு “காவடி” சாலை விழிப்புணர்வு பாணியில் வாழ்வின் பாடம் சொலும் “திருப்பங்கள்”, மரபணுவில் அடிமைத்தனம் ஒட்டிக்கொண்ட நம் பார்மபரியத்தை விமர்ச்கிகும் “அதிகாரத்தின் நிழல்”, வாக்களர்களை வேட்பாளர்கள் எப்படி நினைகிறார்கள் என்பதை சொல்லும் “அடிமாடுகள்”, அதிகாரத்தின் போதையைப் பேசும் “ஒற்றைச் செருப்பு”, திகிலூட்டும் உடலுறுப்புத் திருட்டை பேசும் “நவீன மருத்துவமனை”, நெஞ்சம் உலுக்கும் “நிறைசூலி”, வெற்றி இலக்கியம் பேசும் தன்னமபிக்கை கவிதை “வழிகாட்டும் வலிகள்”, முதுகில் குத்தும் மனிதர்களை நோக்கி “உன் இடத்தில்” சாமி தன் குறைகளை பக்தர்களிடம் சொல்லும் “படையல்”, என்று காத்திரமான தொகுப்பு இந்த அப்பத்தாவின் கருக்கருவா. 

சரி பலவரிக் கவிதைகள்தான்  இப்படி என்றால்

அதிர்ந்தார்
முருகன்
மலையில் கிரானைட் அதிபர்

எனத் துவங்கி பட்டசு வெடித்திருக்கிறார் சிறு கவிதைகளில்.
*
அடைபெடுத்த சாக்கடைகள்
ஓடுகின்றன
சாலைகளிலும்
சைரன் வைத்த
கார்களிலும்.
*
வண்டியில்
எச்சில் இலைகள்
பின்னால் ஓடுகின்றன
சில நாய்கள்.
*
இலையைத்
தின்கிறது
ஆடு
காட்டையே தின்கிறான்
மனிதன்//

தனிமனித மனங்களில் எழும் உணர்வெழுச்சியை வார்த்தையில் வடித்து, அதை பலரும் கொண்டாடச் செய்தால் அது கவிதை. காதல் என்கிற ஒற்றை உணர்வை மற்றும் பேசும் மலையளவு தொகுப்புகளுக்கு இடையே, காமத்தை கொண்டாடும் சிறந்த தொகுப்புகளுக்கு இடையே “அப்பத்தாவின் கருக்கருவா” சமூகத்தின் வலியை, நிலையை பதிவு செய்கிறது. ஆசிரியர்கள் இதில் இருக்கிற பல கவிதைகளை வகுப்பறையில் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பதே இந்த தொகுப்பு மனசுக்கு நெருக்கமாக இருப்பதற்கு காரணம். 

அன்பன்
மது
அப்பத்தாவின் கருக்கருவா
ஆலங்குடி வெள்ளைச்சாமி
அனிச்சம் பதிப்பகம்
விலை : 100 

Comments

 1. நல்லதொரு நூல் அறிமுகம். அப்பத்தாவின் கருக்கருவா - கவிதையிலிருந்து எடுத்தாண்ட வரிகள் நெஞ்சில் நிற்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் பயணச்சித்தரே ...

   Delete
 2. குறிப்பிட்ட சில வரிகளும், விமர்சனமும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் சித்தரே

   Delete
 3. நூலை வாசிக்க ஆவல் மேலிடுகிறது அண்ணா. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விடுவோமா என்றும் தோன்றியது.
  குழந்தைகளுக்காக முகநூல் பக்கமா? அருமை அண்ணா.. இப்படி விதம் விதமாய் பிள்ளைகளுக்காக யோசிக்கும் உங்களுக்கு என் வணக்கங்கள்.

  ReplyDelete
  Replies
  1. யோசிக்க மட்டுமே இயலும்
   யோசிப்பதில் சிலவற்றை செய்யத்தான் இயல்கிறது

   Delete

Post a Comment

வருக வருக