மேகமும் வெயிலும் தாகூர்

கடந்த பதிவு குறித்த சிறு கட்செவி உரையாடல்கள்
கவிஞர் கீதா வீதி வாசிக்கிறது குழுவின் அசத்தல் புதுவரவு விதைக்கலாம் நாகநாதனின் சகோதரி அழகு இந்தத் தலைமுறை இப்படி வாசிக்கிறது என்பதே வியப்பு, அதுவும் அழகு குழுவில் பகிரும் நூற்கள் தலை சுற்ற வைக்கின்றன.. நான்காம் வகுப்பில் பள்ளியில் மாணவியாக பார்த்த ஒரு குழந்தை இன்று இப்படி எழுதுவது வாவ்.


இது பரிதி சூரியா

"உலகில் ( குடும்பத்தில்)
எழும்பியடங்கும் மௌன அலறல்கள்"
கேட்பதற்கு திருமணமாக வேண்டுமோ ...?? 😁😉
பெண்களுக்கான ..சுதந்திரம், உரிமை, மகிழ்ச்சி ..இவைகளை ஆண்கள் கொடுக்க வேண்டுமா ..? ( இந்த சொல்லாடல்கள் இனி வேண்டாம் ...கொடுப்பதற்கு நாம் யார்..? ) விரைவில்.. அவர்களே ...அவரவர்களுக்கானதை மீட்டெடுப்பார்கள் .🙌
அவர்களுடன் எதார்த்த இயல்புடன் பேசி மதித்தாலே போதுமென நினைக்கிறேன்...💓🙏
பிறகென்ன மகிழ்ச்சி தான் ..💓 @⁨malartharu⁩ 😁🙏

இது  திருமிகு வள்ளிக்கண்ணு
சுதந்திரம் கொடுக்கப்படுவதல்ல. தைரியமுள்ளவர்களால் செய்யப்படும் பயிற்சி?! 
ஆதிவாசிகளாய் நாம் இருந்த போது நமக்கு இருந்த சுதந்திரம் நாகரீக விலங்காய் தற்போது .அப்துல் ரகுமானின் கவிதை துணைக்கு. 
நினைவுக ளெல்லாம் 
நெஞ்சின் விலங்குகள்
கனவுகளெல்லாம் 
கற்பனைத் தளைகள்
ஆசை பாசம்
அன்பென் றிங்கே
பேசுவ தெல்லாம்
அருவச் சிறைகள்
இதில்
சுதந்திரம் என்பது
சும்மா சொல்வது!
தொகுப்பு: நேயர்விருப்பம்
தலைப்பு:ஆயுள் தண்டனை.
படித்துக் கொண்டிருக்கிறேன் .review விரைவில். அனைவரது நூலாய்வும் சிறந்த எழுத்துதடையில் இருக்கிறது. என்னுடையது கற்றுக்குட்டியாக இருக்குமோ தயங்கினாலும் எழுதுவேன். கற்றுக்கொள்வேன் 💐💐💐💐


இது தங்கை கிரேஸ்
பிரமாதம் அண்ணா.. கண்ணீர் நிறைந்தது. சிதைந்த கூட்டிற்கு வந்த கருத்துகளையும் இணைத்து எழுதியது அருமை. பதின்வயதில் சூர்யாவின் மனநிலையில் நான் இருந்ததும்.. பிறகு நீங்கள் சொல்லியிருப்பது போல மௌன அலறல்கள் கேட்டிருப்பதும் உண்மை. பதின்வயதில் என்னைப் பக்கத்து வீட்டு அத்தை "போடி விவரம் கெட்டவளே" என்று சொன்னது அன்று புரியவில்லை, பிறகு பல தருணங்களில் புரிந்தது.

 அவர்களைப் போலவே நானுமே சில அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். நான் மேல்நிலை இரண்டாமாண்டு படிக்கும் பொழுது தன் வீட்டுப் பூனைக்குட்டிக்கேற்பட்ட சிறு காயத்துக்கு கண்ணீர் விட்டழுத கந்துவட்டி சித்தப்பா ஒருவரை பார்த்துகொண்டிருந்த பொழுது அந்த வயதில் எனக்கு ஏற்பட்ட உணர்வுகள் சில தசாப்தங்களுக்கு பிறகு உண்மையில் அவரைவிட நான் குரூரமாக இருந்திருக்கிறேனோ என்று என்ன வைத்தது.

தாகூர் போன்றவர்களின் கதையின் செம்மை வாசகர் மனதில் எழுதினால் இப்படி எழுத வேண்டும், இல்லாவிட்டால் ஆணியே புடுங்க வேண்டாம் என்கிற எண்னத்தை ஏற்படுத்தலாம். செம்மையான வாசிப்பு செழுமையான அனுபவங்களைத் தரும் பின்னர் அது படைப்புகளில் வருகிற பொழுது நமது முகவரியாக மாறும் என்பதுதான் இலக்கிய வரலாறு. தொடர்வோம். இப்போதைக்கு தாகூரை

தொகுப்பின் மூன்றாம் கதை
மேகமும் வெயிலும்

சசிபூஷன் என்கிற பார்வை மந்தமான வழக்கறிஞர், கிரிபாலா என்கிற சிறுமி, அவளின் அறம்கெட்ட தந்தை ஹரகுமார் மற்றும் ஜமீந்தார், ஆங்கிலத் துரைமார்கள்தான் கதை மாந்தர்கள்.

சசிபூஷன் வழக்கறிஞர் தொழிலை ஒழுங்காக பார்க்க இயலாமல், கிராமத்தில் இருக்கும் தன் பூர்வீக சொத்தை பார்த்துக்கொள்ள வருகிறான், அங்கு சொத்தை பார்த்துக் கொள்ளாமல் அறைமுழுதும் நூற்களை குவித்து வைத்துப் படிக்கிறான்.

எதிர்வீட்டில் இருக்கும் சிறுமி கிரிபலா நாவல் பழங்களை பொறுக்குகிறாள், சிலவற்றை சசிபூசனுகும் தருகிறாள், சிறுமிக்கும் சசிக்கும் நட்பாகிறது, சசி அவளுக்கு எழுத்துக் கூட்டி படிக்க சொல்லித்தருகிறான். ஆனால் அவனுடைய அதீதமான வாசிப்பு சிறு குழந்தையின் விளையாட்டுக்கு இடைஞ்சலாக இருக்கிறது.

இதனிடையே ஹரகுமார் சில சட்ட ஆலோசனைகளைக் கேட்க வருகிறான், சசி தனக்கு சட்டம் குறித்து பெரிதாக எதுவும் தெரியாது என்று சொல்ல ஹர்குமார் தன்னை அவமதிக்கிறான் என்று நினைக்கிறான்.

பின்னர் ஹரகுமாருக்கு ஒரு வெள்ளை துரையோடு பிணக்காகிறது, துரை ஹரகுமரை அடி வெளுத்துவிடுகிறான், இந்த இடத்தில சசி ஏன் வெள்ளைத் துரை மீது வழக்குப் போடக் கூடாது என்கிறான். ஹரகுமார் சம்மதிக்கிறான், வழக்கு விசாரனைக்கு வருகிறது. அதி தீவிரமாக வழக்குக்குத் தயார் செய்கிறான் சசிபூசன். நடுவில் நடப்பதை கேள்விப் பட்டு வெள்ளைத் துரை ஹரகுமாரை சமாதனம் செய்துவிடுகிறான்,  சசிபூசன் சதி செய்து தன்னை வழக்குப் போடவைத்துவிட்டான் என்கிறான் ஹரகுமார். வழக்கு திரும்பப் பெறப்பட்டு நன்றிக் கடனாக ஹர்குமார் துணை மாஜிஸ்ட்ரேட்டாகிறான்!

அனால் ஹர்குமார் தான் சசிபூசனை வஞ்சித்தது குறித்து ரகசியமாக புழுங்குகிறான், இதனால் சசிபூசனுக்கு பல தொல்லைகளை தருகிறான். தன்னுடைய அந்தரங்க அசிங்கத்தை உணர்ந்தவன், தன்னுடைய திடீர் வளர்ச்சியின் ரகசிய இருளை உணர்ந்தவன் என்பதால் ஹரகுமார் பல சதிகளைச் செய்து சசிபூசனின் சொத்தை பறித்துக் கொள்கிறான்.

இந்நிலையில் கிரிபாலாவிற்கு திருமணம் நிகழ்கிறது சசி பூசணுக்கு அழைப்பு இல்லை. இருந்தும் அவள் பல்லாக்கில் ஏறி, படகில் போகும் வரை தொலைவில் இருந்து பார்கிறான் சசிபூசண். ஆனால் கிரிபாலாவால் இவனைப் பார்க்கவே இயலவில்லை.

கிராமத்தின் சொத்துக்கள் பறிபோய், தந்தையைப் பறிகொடுத்து எதுவுமே இல்லாமல் நகருக்குத் திரும்ப முற்படுகிறான் சசி. விதி விடுமா? அவன் பயணித்த பாய்மரப் படகை, தன்னுடைய படகை முந்திவிட்டது என ஸ்டீம் போட்டில் வந்த வெள்ளை அதிகாரி ஒருவன் சுடுகிறான். இதில் பாய்மரம் கிழிந்து விபத்து ஏற்பட, சசி மீண்டும் வழக்குத்தொடுக்கிறான்.

கோர்ட்டில் நாம் எதிர்பார்த்த அதேதான்

சசிபூசண் வம்படியாக வழக்குப் போட்டிருப்பதாகவும், இறந்த, காயம்பட்ட மீனவர்கள் தாங்களே கீழே விழுந்து காயம் பட்டதாவும், தங்கள் வலைகளை தாங்களே கிழித்துவிட்டதாகவும் சொல்லிவிடுகிறார்கள்.

மன்னிப்பு கேட்பதை விட ஜெயிலுக்கு போகிறேன், அங்கே கோழைகள் இருக்க மாட்டார்கள் என ஐந்து வருடம் களி திங்கப்போகிறான் சசிபூசண்.

விடுதலை அன்று ஒரு கோச் வண்டி வந்து அழைத்து சொல்கிறது, ஒரு பெரும் மாளிகை, அதில் ஒரு இளம் பெண் இருக்கிறாள், தங்க அட்டைகள் போட்ட எண்ணற்ற புத்தகங்கள் அந்த மாளிகையில் இருக்கிறது.

விதவை கிரிபாலா...


கதையின் உளவியல் கூறுகள்

சிறுமியின் எண்ணவோட்டங்கள் குறித்த வர்ணனைகள், படிக்கத் தெரியாமலேயே ஒரு நூலை எடுத்து வைத்துக்கொண்டு உளறுதல், சசிபூஷன் மீது நாவல் பழ கொட்டைகளை எறிதல், அவன் கவனம் தன் மீது இல்லை என்றவுடன் அவன் நூற்களுக்கு சாபம் விடுதல் என ஒரு சிறுமியின் உளப்பாங்கை, உணர்வுகளை நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்.

ஹரகுமார் குமைச்சல், சசியின் நேரடி வாக்கியங்களை அவமானம் தரும் பதங்களாக எடுத்துக் கொள்வது, தன்னுடைய கோழைத்தனத்தை அறிந்த சசி ஊரில் இருக்கக் கூடாது என நம்பியார்தனமான காரியங்களை செய்வது, அதே வேளையில் வெள்ளைத் துரைமார்கள் கால்களை கழுவுவது என ஒரு பிழைப்புவாதியின், போலி பிம்பத்தின் படிமத்தை தாகூர் அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

முடிவு கொஞ்சம் சினிமாத் தனமாக இருந்தாலும், ஆணாதிக்க மனநிலையில் எழுதப்பட்டிருபதாகவே புரிந்து கொள்ள முடிகிறது.  (தான் காதலித்த பெண், விதைவையாகித் தனக்குக் கிடைக்க வேண்டும் என்பது மேல்ஷாவனிசம்தான்)
ஆனால் எந்த இடத்திலும் வெளிப்படையாக சசிபூஷண் கிரிபாலாவை காதலிப்பதாக வெளிப்படையாகத் தோன்றாது.

செவ்விலக்கிய தொடர்புகள்

பிக்மாலியன் என்கிற கிரேக்க இதிகாசத்தின் தொடர்பு இதில் இருப்பது கவனத்துக்குரியது. இந்த இதிகாசம் சிற்பக்கலையில் ஆர்வம் உள்ள பிக்மாலியன் என்கிற அரசன், தந்தத்தில் பெண் சிலை ஒன்றை செதுக்கி உயிர் கொடுக்கிறான். உயிர் பெரும் அச்சிலையின் பெரும் அழகில் மனம் மயங்கி அவளைக் காதலிக்கத் துவங்குகிறான்.

இந்த கதையின் கூறுகளை தாகூர் பயன்படுத்திக்கொண்டிருப்பதை நாம் எளிதில் இனம் காணலாம். கிரேக்க செவ்விலக்கியங்களை வாசிப்பதும், அவற்றைத் தழுவி படைப்புகளை எழுதுவதும் மங்காப் புகழைத் தரும் என்பதற்கு ஒரு சோற்றுப்பதம்தான் இந்தக் கதை.

தொடர்வோம்
அன்பன்
மது


Comments