நிழற்பட நினைவுகள்


இடமிருந்து வலமாக - முதலில் இருப்பவரை உங்களுக்குத் தெரியும், இரண்டாவது ஜோனாதன்ஜெயபாரதன், மூன்றாவதாக இருப்பவர் சதீஷ், வலது ஓரம் ரிச்சர்ட்.


உண்மையைச் சொல்லப்போனால் நான் ஆசிரியராக தகுதியை வளர்த்துக் கொண்ட இடம் மௌன்ட் சயன்.

திரு.ஜோ இப்போது நிறுவனத்தின் முதுநிலை முதல்வர். இதைவிட சிறப்பு பள்ளி நிர்வாகத்திற்கு அவர் தன் அனுபவத்தாலும், கூர் மதியாலும் வடிவமைத்திருக்கும் நிர்வாகக் கட்டமைப்பு. மனிதர் செதுக்கியிருக்கிறார்.

என்னை இன்னும் இவருக்கு நெருக்கமாக(நாளைக்கு ரெண்டு முறை புலனத்தில் ஹை, ஊரில் உள்ள மொக்கை படங்களை பகிர்வது போல் அல்ல, மனதளவில்) இருப்பதற்கு காரணம் எந்தவித விளம்பரமும் இல்லாமல் சமூக உதவிகளுக்காக செலவிடும் இருபத்தி ஐந்து லெட்சம். (இதுபோன்ற நபர்களிடம் பெரும் தொல்லை என்னவென்றால் இதை ஏன் சொல்றீங்க என்பதுதான், இப்படி ஒருவருக்கு தனி செய்தியாக நன்றி என்று அனுப்பி அவர் என்னை நட்பு நீக்கம் செய்து ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டது) இருப்பினும் சொல்வது என்னுடைய உரிமை.

எம் பள்ளிக்கும் இவர் இதுவரை முப்பதாயிரம் ரூபாய்களை பொருட்களாகவும் சேவையாகவும் அனுப்பியிருக்கிறார்.

அடுத்து இருப்பவர் சதீஷ், உடற்கல்வி ஆசிரியர்
சினிமாவில்தான் இப்படி தந்தைகளைப் பார்க்க முடியும். தன் மகனுக்கு எங்க படிக்க பிடிக்கிறதோ அங்கே வீட்டை மாற்றிக் கொள்வார்!
நல்லவேளை பயல் லண்டன் கிங்சில் படிக்கணும்னு சொல்லல மனுஷன் சொத்து பத்தை விற்றாவது அங்கே போய்விடுவார். இவருடைய மகனுக்காக இவர் எடுக்கும் முயற்சிகள் என்னை கடும் சுய பரிசோதனையில் ஆழ்த்திய நாட்கள் உண்டு.

அடுத்து அமர்ந்திருப்பவர் ரிச்சர்ட் அல்போன்ஸ், வள்ளவிளை என்று களியக்காவிளை பக்கம் இருந்த கிராமத்தில் இருந்து வந்து கணித ஆசிரியராக இருந்தவர்.

ரிச்சர்ட்டை எங்கள் ஊர் புதுக்குளத்திற்கு அழைத்துக் காண்பித்த பொழுது ஜஸ்ட் லைக்தட் பார்த்துவிட்டு கடந்தார். எனக்கோ பெருவியப்பு இவ்வளவு பெரிய குளத்தை அலட்சியமாகக் கடக்கிறாரே என. 

அவர் ஊருக்கு அழைத்துச் சென்றார். களியக்காவிளையிலிருந்து  இருபுறமும் அடர்ந்த மரங்களூடே நகர்ந்தது பேருந்து. திடுமென ஒரு தேவாலயம். அதையொட்டி திரும்பிய பேருந்திலிருந்து விரிந்தது கடல்! அது ஒரு திடுக்கிடல் அனுபவமாகவே இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடல்! அப்புறம் எப்படி புதுக்குளத்தை மதிப்பார் ரிச்சர்ட்! 

தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் பணியில் இருக்கிறார். இவருடைய கிராமமும், வல்லங்களும், தேங்காய் அரைத்து ஊற்றிய மீன் குழம்பும் இன்றும் நாவில் நினைவாய். 

கட்டுமரத்திலேறி கொஞ்சம் உள்ளே போய்விட்டு வந்தோம். செமையான சாகசப் பயணம் அது.

அன்றய இரவில் ரிச்சர்ட் வீட்டிற்கு பின்னே இருந்த ஒரு மணல் மேவிய கால்பந்து மைதானம் ஒன்றில் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தோம்.

அப்போது மீனவர்கள் வாழ்வைக் குறித்து ரிச்சி சொன்ன சம்பவங்கள் கொடுமையாக் இருந்தன. குறிப்பாக புயலில் சிக்கிய ஒரு கட்டுமரத்திலிருந்து விழுந்துவிட்ட இளம் மீனவர் ஒருவர் உயிர் பிரிந்துகொண்டிருப்பதை உணர்ந்து "அம்மாட்ட சொல்லிருங்க" என்று சொன்னது, அவன் கைகளை உயர்த்தியபடியே மூழ்கியதச் சொன்னபொழுது அதிர்ந்து போனேன்.

2000ஆம் ஆண்டுப் பிறப்பின் பொழுது ரிச்சர்ட்டொடு அவர் கிராமத்தின் தேவாலயத்தில் சிறப்பு பூசையில் இருந்தது மனசில் வண்ணமாய் இருக்கிறது.

2000ஆண்டை முன்னிட்டு அந்த பாதிரியார் தேவாலய கதவில் ஒரு ஆணியைஅடித்து பூசை வைத்தது, கடற்கரையில் வெடித்த பலவண்ண வெடிகள், அன்று காலைச் சுற்றிக் கொண்டிருந்த  ரிச்சர்டின் அண்ணன் குட்டிக் குழந்தை மெர்லின்  இன்று அங்கே ஒரு மருத்துவர் என எத்தனை நினைவுகளை கிளர்த்திவிடுகிறது இந்தப்படம்.

நன்றிகள் திரு.ஜோனத்தன்

Comments

  1. படங்களும் அதைப் பற்றிய நினைவுகள் உங்கள் நண்பர்கள் குறித்த ஸ்வாரஸ்யமான நினைவுகளும் அருமை. நினைவுப்பெட்டகம். உங்களை அடையாளம் காண முடிந்தது.

    துளசிதரன்

    அட! கஸ்தூரி உங்களை பார்த்ததுமே தெரிஞ்சுருச்சே மொத ஆளு நீங்கதான்னு...ஹா ஹா ஹா இந்த சிரிப்பு அப்போதைய தோற்றத்திற்கு!!!!!

    ரிச்சர்ட் அல்போன்ஸ்// ஆஹா களியக்காவிளைக்காரரா....ஹையோ அந்த ஊர் மிக அழகான ஊரு. தோட்டமும் காடும் கடலும் என்று...ஒரே ஒரு முறை போயிருக்கிறேன். அதன் பின் வாய்ப்பு கிடைக்கவில்லை

    அட நீங்களும் கட்டுமரத்தில் போயிருக்கீங்களா. எனக்கும் அந்த அனுபவம் உண்டு. திருவனந்தபுரம் கோவளத்தில். ஹையோ செம த்ரில்லிங்க் அனுபவம்.

    கீதா

    ReplyDelete
  2. படம் தந்த நினைவுகள் நன்று. தொடரட்டும்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக