சிதைந்த கூடு குறித்த ஒரு பார்வை



சிதைந்த கூடு கதையின் நாயகன் பூபதி, அவன் மனைவி சாருலதா, அவன் மைத்துனன் உமாபதி, அவன் மனைவி மந்தாகினி, நாயகன் பூபதியின் சகோதரன் அமல் என குறைந்த கதாபாத்திரங்கள்.



பூபதி ஒரு அப்பர் மிடில் கிளாஸ் இளைஞன், எழுத்தில் நாட்டம் உள்ள வக்கீல். தன் தொழிலில் சரிவர சோபிக்க முடியாத பூபதியை அவன் மைத்துனன் ஒரு பத்திரிக்கை துவங்கச் சொல்கிறான். பேரார்வத்தோடு அதை செய்கிறான் பூபதி. அவன் இளம் மனைவி குறித்தோ அவளுடன் நேரம் செலவிடவேண்டிய கடமையோ அவனுக்கு உரைக்கவில்லை.

அவன் மனைவியின் தனிமை குறித்து உறவுக்கார பெண் ஒருத்தி பூபதியிடம் சொன்ன பொழுது தனது மைத்துனன் உமாபதியின் மனைவியை அவளுக்குத் துணையாய் வரவழைத்து தன்வீட்டிலேயே இருக்கப் பணிக்கிறான்.

தன சொந்தச் சகோதரன் அமலிடம் அண்ணிக்கு எதாவது பாடம் எடேன் என்கிறான். பொதுவாகவே வட இந்தியக் குடும்பங்களில் அண்ணி அம்மா நிலையில்தானே இருப்பாள். அமலுக்கும் சாருவுக்கும் நட்பு முகிழ்க்கிறது. பல இலக்கிய கட்டுரைகள், கவிதைகள் குறித்த உரையாடல்கள் அவர்களுக்குள்ளே. வீட்டில் சாருவுக்கு துணையாக வந்த மந்தாகினி இலக்கியம் ஏலக்காய் குறித்தெல்லாம் கவலைப்படுவதே இல்லை. அமலுக்கும் சாருவுக்கும் இடையே நிகழும் உரையாடல்களை பைத்தியங்களின் உளறல் போல நினைக்கிறாள்.

சாருவும் அமலும் ஒருவருக்கொருவர் பேசி, அமலைக் கட்டுரை எழுதத் தூண்டுகிறார்கள், அமல் ஒரு இலக்கிய எழுத்தாளராக வளருகிறான். ஆனால் அமலின் வளர்ச்சி சாருவுக்கு பிடிக்கவில்லை. மந்தா திடீர் மாற்றம் அடைந்து அமல் குறித்து புகழ்ந்து பேச ஆரம்பிக்கிறாள். இலக்கியம் குறித்து கூட பேசவும் படிக்கவும் முயல்கிறாள்!

கொஞ்சம் கொஞ்சமாக மந்தாவை வெறுக்கத் துவங்குகிறாள் சாரு. இதிலும் நுட்பமாக மந்தாவுக்கும் அமலுக்கும் ஒரு புரிதல் ஏற்படுகிறது. இருவரையும் விட்டு சாரு விலக ஆரம்பிக்கிறாள்.

இந்த நிலையில் பூபதி தன்னுடைய சொந்த மைத்துனன் தன்னை ஏமாற்றியதை உணர்கிறான். கணக்கு வழக்குகளில் விளையாண்டு அவனுடைய சொந்த கிராமத்தில் அவனுக்கென ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறான்.

நொந்து போன பூபதி ஆறுதல் தேடி மனைவியிடம் வருகிறான். அவளோ அவளுடைய சோகத்தில் மூழ்கி இருக்கிறாள். அதிர்ச்சியடைந்த பூபதி பிரச்சனையை சொல்லவே இல்லாமல் வெளியேறுகிறான்.

தொடர்ந்து உமாபதியும், மந்தாவும் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள்.

இந்த புள்ளியில் அமல் கடும் கோபம் கொள்கிறான், அண்ணியை வெறுக்கிறான். அண்ணி தன் அண்ணனிடம் சொல்லி மந்தாவை விரட்டிவிட்டுவிட்டாள் என நம்புகிறான். அவன் ஒரு திருமணத்தை செய்து கொண்டு லண்டன் சென்று பாரிஸ்டர் படிப்பில் சேர்கிறான்.

தனது அரசியல் பத்திரிக்கையை நிறுத்திவிட்ட பூபதி இப்போது, வீட்டில் இருந்து இலக்கியம் படிக்கிறான். கவிதைகளை எழுத முற்படுகிறான். சாருலதா அவனை ஒரு குறையும் இல்லாமல் கவனித்துக் கொள்கிறாள். ஆனால் யாருமற்ற தனிமைகளில் அவள் அழுதுகொண்டே இருப்பதை கண்டறிகிறான். இந்த புள்ளியில் கூட அவனுக்கு எதுவும் தோன்றவில்லை.

லண்டனில் இருக்கும் அமல் ஏன் ஒரு தந்தி கூட அடிக்கவில்லை என்று கேட்கிறாள் அவள்.

ஐயோ அதற்கு நூறு ரூபாய் ஆகும் என்று பூபதி சொல்கிறான். சில நாட்கள் கழித்து ஒரு கிராமத்திற்கு உறவினர்களைப் பார்க்க கிளம்பும் அவன் எதிரே வந்த தந்தி ஊழியரைப்பார்த்து ஒரு தந்தியை பெற்றுக் கொள்கிறான்.

அது லண்டனில் இருக்கும் அமல் அனுப்பியது. நலம் என்கிற ஒரு வார்த்தை மட்டுமே இருக்கிறது.

பூபதி அந்த தந்தி இருவழித் தந்தி என்பதையும் சாரு தன்னுடைய நகையை அடகு வைத்து அவனுக்கு தந்தி அனுப்பியிருக்கிறாள் என்பதையும் கண்டு உணர்கிறான்.

சில வாரங்களுக்கு பிறகு மைசூரில் இருக்கும் ஒரு பத்திரிக்கைக்கு பொறுப்பாசிரியாக கிளம்புகிறான், சாரு அவனுடன் கிளம்ப முற்படுகிறாள், அவன் மறுக்கிறான், பின்னர் மனம் மாறி சரி வா என்கிறான்.

இல்லை நான் வரலை என்பதோடு முடிகிறது கதை.

பெண் மனதை நுட்பமாகப் பேசும் தொகுப்பு என்று சாகித்ய அகாதமி வெளியிட்டிருக்கும் சிதைந்த கூடு உள்ளிட்ட பத்து கதைகளைக் கொண்ட தொகுப்பின் முதல் கதை இது.

கேள்விகள்
ஒரு பத்திரிக்கை ஆசிரியன் இவ்வளவு மண்ணு முட்டியாக இருப்பானா ?

இருப்பான், ஏன் என்றால் கதை நிகழ்வது பால்ய விவாகங்கள் நடைபெற்ற விடுதலைக்கு முன்னர் இருந்த புனித இந்தியாவில். ஒரு பதினான்கு வயது பெண் பிள்ளையை பார்த்தால் ஐயோ ஏன் இன்னும் வீட்டில் வைத்திருகிறீர்கள் என்று கேட்கும் உன்னதமான இந்துக்கள் நிறைந்திருந்த நாட்களில். இந்த பாழாய்ப் போன பிரிட்டஷ்காரர்கள் வந்து இந்த கலாசாரப் பெருமைகளை சட்டங்கள் இயற்றி அழித்துவிட்டனர்.

ஆக, ஒரு பத்து வயது பையனுக்கும் ஒரு எட்டு வயது பெண்ணுக்கும் ஏற்பட்ட திருமண பந்தம். இருவருமே விளையாட்டுப் பிள்ளைகள். ஒரு பெண் என்பவள் அற்புதம், அவளுடைய உணர்வுகளுக்கு வடிகால் தேவை என்பதெல்லாம் இக்கால ஆண்களுக்கே இல்லை எனும் பொழுது, அந்தக் கால பூபதிக்கு எப்படி இருந்திருக்கும்?

துணை இல்லாமல் உன் மனைவி வாடுகிறாள் என்று உறவுக்கார பெண்மணி சொன்ன பொழுது மந்தாகினியை துணையாக நினைத்தானே ஒழிய தன்னுடைய அருகாமை, ஸ்பரிசம் அவளுக்கு தேவை என்பதை உணராத பரிதாபத்துகுரிய ஆணாக பூபதி இருக்கிறான்.

அமல் -சாரு- மந்தா பிரச்னை என்ன ? செக்ஸா ?

ஒரு இடத்தில் கூட அவயங்கள் பற்றிய குறிப்புகளை எழுத்தாளர் பயன்படுத்தவில்லை. எழுபதுகள் ஏன் எண்பதுகளில் கூட பெண்கள் பஸ்ஸில் போகும் பொழுது ஆண்கள் மேலே பட்டால் கர்ப்பம்தரித்துவிடுவோம் என்கிற நிலையில்தான் கல்லூரிக்கு செல்லும் பெண்களே இருந்தார்கள் எனும் பொழுது நிச்சயமாக இந்தப் படைப்பில் காமம் இல்லை.

இன்றைய தலைமுறை பத்துரூபாய்க்கு எட்டு ஜி.பி அட்டுப் படம் பார்த்து பிஞ்சில் வெம்பிய நிலையை அன்றைய நிலையோடு குழப்பிக்கொள்ள தேவையில்லை.

அருகாமை மட்டுமே சாருவுக்கு தேவை, துரதிஷ்டவசமாக அது அமலின் வழியே கிடைக்கிறது.

அவர்களின் நுட்பமான உறவை எழுத்தாளர் நிறுவும் இடத்தில் எவ்வளவு பெரிய படைப்பாளர் என்பதை நம்மை உணர வைக்கிறார்.

குறிப்பாக அமலின் படைப்புகள் முதல் முதலில் பத்திரிக்கையில் வருவதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைகிறாள் சாரு. அவளைப் பொறுத்தவரை அவளுக்கும் அவனுக்குமான உலகின் அதி ரகசிய சொத்து அமலின் படைப்பு. அதை பலர் படிப்பதை அவளால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை.

இப்படி ஒரு விசயம் இருப்பதை சொல்கிற இடத்தில் எழுத்தாளார் பெரும் வாழ்வியல் பாடத்தையே எடுக்கிறார்.

அதே போல ஊர் பாராட்டும் எழுத்தாளராக வளரும் அமலுக்காக தன் இயல்பை மாற்றிக்கொள்ளும் மந்தா என எத்துனை உளவியல் அனுபவங்கள் கதையில்!

கொம்புக்கு ஏங்கும் ஒரு கொடி, தனக்கு கிடைத்த கொம்பைப் பற்றிக் கொண்டு வளர்வது போல ஒரு நேசம் அமலுக்கும் சாருவுக்கும்.

அதே போல பூபதியின் மன உணர்வுகளையும் அற்புதமாக வெளிக் கொணர்ந்திருக்கிறார்.

தொழில் நட்டமடைந்த பொழுது மனைவி தனக்கு செய்யும் பணிவிடைகளில் மகிழும் அவன் "யவனம் திரும்பியது போல உணர்வதை" படம் பிடித்திருக்கிறார். சாருவின் மனதில் அமல் இருக்கிறான் என்று தெரியும் இடத்தில் "கிழடு தட்டிப் போனது போல உணர்ந்தான்" என்கிறார்.

யாருமே எதிர்பார்க்கும் வண்ணம் சாருலதா போயிருங்க நான் வரலை என்று கணவனை உதறுகிற இடத்தில் கதையை முடிப்பதும் இவருக்கே உரிய வித்தை.

யாருக்கு அவசியம் இந்த நூல் ?

எழுத்தாளர்கள், கவிஞர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் மனித உறவுகள், மன உணர்வுகள் குறித்து அத்துணை கவித்துமாக எழுதப்பட்டிருகிறது.

பூபதி இந்திய ஆண்களின் பிம்பமா ?

என்பதுக்கு முன்னால் ஆண்கள் தங்கள் மனைவிமார்கள், அவர்களின் உணர்வுகள் குறித்தெல்லாம் பெரிதாக அலட்டிக்கொண்டது கிடையாது என்றே தோன்றுகிறது. ஆனால் நைன்டீஸ் கிட்ஸ் தலைமுறை இதில் கில்லி! ரொமான்ஸ் அவர்களுக்கு வெகு எளிது. விதிவிலக்குகள் இருக்கலாம்.

மனைவியை ஒரு பொருளைப் போல, தாலி கட்டினால் அவள் கணவனின் உடைமை, ஒரு மிக்சி, கிரைண்டர், பிரிஜ் போல அவள் வீட்டில் இருக்கும் இன்னொரு பொருள் என்று நினைக்கும் பூபதிகள் இன்றும் இருக்கிறார்கள். சிலருக்கு எழுத்து, பேச்சு, பலருக்கு தொழில். இவற்றில் ஒரு பிரச்னை என்றால்தான் அவர்களுக்கு மனைவியின் நினைவே வருகிறது.

அமரிக்க ஆய்வு ஒன்று கணவன்மார்கள் மனைவியை குறைந்தது நான்கு முறை கட்டியணைக்க வேண்டும், தொடுதல் இருக்க வேண்டும், ஒரு நாளில் இரண்டு முறையாவது ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்கிறது.

இன்றைய அமரிக்க ஆய்வு ஆணிகளே தேவையில்லை இந்தக் கதை ஒன்றே போதும். இல்வாழ்வு சிறக்க.

மிக நுட்பமான உளவியல் தளத்தில் எழுதப்பட்டிருக்கும் கதை

பெண்களின் உளவியல் தேவைகள், ஆண்களின் மொட்டை ஈகோ, வெளிப்படைத்தன்மை இல்லாத உரையாடல்கள் என்ன நிலைக்கு குடும்பங்களை சிதைக்கும் என்பதைக்குறித்து இவ்வளவு நேர்த்தியாக யாரும் எழுதியிருக்க முடியுமா என்பதே என் கேள்வி?

பூபதி அவன் பிரச்சனைகளை அமலிடமோ, சாருவிடமோ சொல்லியிருக்கக் கூடாத என்கிற ஏக்கம் நம் மனதில், மனைவியின் சகோதரன் செய்த துரோகத்தை சொல்வதைவிட, தான் ஒரு ஏமாளி என்று தெரிந்துவிடக்கூடாது என்பதுதான் பூபதியின் நிலையாக இருக்கும்.

இந்தக் கதையில் நான் வெறுக்கும் பாத்திரம் யார்?

மந்தா?
சாரு?
அமல் ?
நம்பிக்கை துரோகி உமாநாத் ?

பூபதி!
இறுதிவரை தன் மனைவின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமலே இருக்கும் கனவான்! இவன் செய்கைக்கு சாருவுக்கு செருப்பாக கிடக்க வேண்டும் ஆனால் அந்தப் புள்ளியிலும் விலகியே ஓடுகிறான். பெண் மன உணர்வுகளை மட்டும் பேசவில்லை, பொதுவான ஆண்கள் புத்தியையும் பேசியிருக்கிறார் எழுத்தாளர்.

அப்புறம் சும்மாவா சொல்கிறார்கள் "இந்தியச் சிறுகதையின் தந்தை" என தாகூரை?

எதுக்கு கிடைச்சுச்சு நோபல் என்பதை நான் புரிந்து கொண்ட படைப்பு இந்த தொகுப்பு.

இருபது பாகங்களாய் இருக்கும் ஒரு குறுநாவல் அல்லவா இதை ஏன் சிறுகதை என்று சொல்கிறார்கள்?

ஆங்கில இலக்கிய வகைப்பாட்டின்படி மூன்று அல்லது நான்கு மணிநேர்த்திற்குகுள் படித்து முடித்துவிடும் படைப்பை சிறுகதை என்றே சொல்கிறார்கள்.

இன்னும் ஒன்பது கதைகள் இருக்கின்றன தொடர்வோம்.

அன்பன்
மது 

Comments

  1. நல்லதொரு கதை. இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பயணச்சித்தரே

      Delete
  2. அருமையான விமர்சனம்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி அய்யா

      Delete

  3. சிறப்பான அறிமுகம்

    http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி வருகைக்கும் இணைப்பிற்கும்

      Delete
  4. நீங்கள் சொல்லியிருப்பதை வாசித்த போது பெண்ணின் உணர்வுகள், உளவியல் ரீதியாகச் சொல்லப்பட்டக் கதை என்று தெரிகிறது. கதை பல வருடங்களுக்கு முன் ஊடகங்கள் அத்தனை முளைத்திருக்காத காலம். அப்போதையக் காலகட்டத்தில் பூபதி போன்றோர் இருப்பது பெரிய ஆச்சரியமில்லை...மனப்பக்குவமே இல்லாத போது மணம்....இப்போதும் பூபதி போன்ற கேரக்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    இப்போதைய காலக்கட்டம் வேறு. எத்தனையோ நுட்ப உணர்வுகளை உளவியல் பிரச்சனைகளை அலசிக் காயப்போடப் புத்தகங்கள், காணொளிகள், பேட்டிகள் கட்டுரைகள் என்று பெண்கள் இதழ் மற்றும் பல ஊடகங்களில் பேசப்பட்டாலும் , பூபதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஐடி துறை கொஞ்சம் கூடுதலாகவே இதில் விளையாடுகிறது. ப்ராஜெக்ட் நைட் முழிப்பு இருவரும் வேலைக்குச் செல்லுதல் ஒருவருக்கு நைட் வேலை மற்றவருக்கு பகல் என்று பல காரணங்கள்...மனச்சிக்கல்கள் நிறையவே எழுகின்றன. அது ஒரு புறம்....மனைவி நல்லவிதமாக இருந்தாலுமெ அல்லது கணவன் நல்லவிதமாக இருந்தாலுமே கூட கவனிப்பில்லை என்று கோர்ட்டில் பிரிதல். காரணங்கள் வெரி சில்லி...

    உளவியல் பிரச்சனைகளுக்குக் கவுன்சலிங்க் கொடுக்கும் ஒரு தம்பதியர்க்கு க் கொஞ்ச காலம் உதவி புரிந்த அனுபவத்தில் நிறைய அறிய முடிந்தது. சிலதை என்னையே டீல் செய்யக் கூடச் சொல்லியதால் ஆச்சரியமான பல அறிய முடிந்தது.

    நல்ல விமர்சனம்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சகோ

      Delete

Post a Comment

வருக வருக