முதல் நம்பர்


#Tagore
சிதைந்த கூடு தொகுப்பின் ஆறாவது கதை

அத்வைத சரண் எனும் நாயகன்?, அவன் மனைவி அனிலா, அவள் சகோதரன் சரோஜ் மற்றும் சிதாங்க்சு என ஒரு பெரும் பணக்கார அண்டைவீட்டுக்காரன்.
நாயகன் அத்வைத சரண் கதையை சொல்கிறான், அவன் ஒரு தீவிர வாசிப்புப் பிரியன், இலக்கில்லாமல் படித்துக் கொண்டிருந்ததால் பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரிப் படிப்புக்கு செல்லவில்லை. அவன் மனைவி அனிலா. 


அத்வைத சரணுக்கு தான் படித்த விசயங்களை பேச விவாதிக்க ஓர் குழு தேவைப்படுகிறது, துவக்கத்தில் உலகின் தத்துவங்கள் இயல்கள் குறித்து அணிலவிடமே பேசிகொண்டிருந்தவனுக்கு நண்பர்கள் கிடைகிறார்கள். துவைதம் என்கிற பெயரில் ஒரு குழுவாக உருவாகவும் செய்கிறது. அக்குழுவினரோடு நேரம் காலமில்லாது இலக்கிய, தத்துவ விவாதங்களில் ஈடுபடுவதே அத்வைத சரணின் வாழ்வு. இந்தக் குழுவிற்கும் சேர்த்தே சமைக்கிறாள் அனிலா. நேரம் கேட்ட நேரங்களில், அவர்களுக்கு தேவையான பொழுதெல்லாம்.

இந்நிலையில் மைத்துனன் சரோஜைப் படிக்க வைக்கச் சொல்லி ஒரு பெரும் தொகையை அணிலாவிடம் கொடுத்துவிட்டு மறைகிறார் அவள் தந்தை. அனிலா சரோஜை படிக்க வைப்பது குறித்து ஒரு வார்த்தைகூட தன் கணவனிடம் கேட்கவில்லை. அவளே ஒரு டியூசன் மாஸ்டர் வைத்து படிக்க வைக்கிறாள். இது குறித்து அத்வைத சரண், திடுக்கிடுகிறான்.  தான் பட்டப்படிப்பு படிக்கவில்லை என்பதால் தன்னை மதிக்கவில்லை போல என்றும் நினைத்துக்கொள்கிறான்.

இந்நிலையில் அந்த தெருவின் முதல் நம்பர் வீட்டுக்கு சிதாங்க்சு என்கிற ஒரு பெரும் பணக்காரன் வருகிறான். ஒரே படோபம். ஆரம்பத்தில் அவனை கடுமையாக வெறுக்கிறான் அதைவைத சரண். ஆனால் இசைக்கருவிகள் மீது அந்த பணக்காரனுக்கு இருக்கும் அசாத்திய திறமையை ரசிக்கிறான். இவன்தான் இப்படி என்றால் இவனது வீட்டிற்கு வரும் இவன் நண்பர்கள் எல்லோரும் அவன் வீட்டுக்கு சென்றுவிடுகிறார்கள்.

எதிர்பாரா விதமாக சரோஜ் பத்தாம் வகுப்பில் தவறியதால் அவன் அன்னை திட்டியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறான். இந்த பாரம் வேறு அனிலாவுக்கு. இந்த விசயத்தில் அண்டைவீட்டு சிதாங்சு அனிலாவின் தாய்வீட்டிற்கு சென்று போலிஸ் பிரச்சனைகளை கையாண்டு அவளுக்குதவுகிறான்.

இதன் நடுவே கடுப்பில் வீட்டை வேறு பகுதிக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்கிறான் அத்வைத். இதற்காக ஒரு விருந்தை தன் குழுவுக்கு கொடுக்க விரும்பி மெனுவெல்லாம் சொல்லி தடபுடல் ஏற்பாட்டை செய்கிறான். அவன் சிஷ்யர்களின் ஒருவன் சரோஜின் மரணம் குறித்து சொல்லி, விருந்தை தவிர்க்கலாம் என்கிறான். ஆனால் இருக்கட்டும் என்று அனிலா செய்துவிடுகிறாள். விருந்து இவன் கேட்டதற்கு மேலேயே தயாராகிறது. அனிலா ஏன் இவ்வளவு தடபுடலாக செய்கிறாள் என்கிற கேள்வி. ஆனால் விருந்து நடைபெறாமல் பண்டம் பாழாகிறது.

மறுநாள் அதுவரையான மாத செலவுகள் போக மீதப் பணத்தை ஒரு துணியில் கட்டி போட்டிருப்பதை பார்க்கிறான். அனிலா வீட்டில் இல்லை. சிதாங்சுவும் வீட்டைக் காலி செய்துகொண்டு போய்விட்டான். அனிலாவின் கடிதம் ஒன்று கிடைக்கிறது. பாதி கிழிக்கப்பட்ட ஒரு நீல நிறத்தாளில்

"நான் போகிறேன், என்னைத் தேட முயற்சி செய்யாதே, தேடினாலும் கிடைக்க மாட்டேன்"

இன்னொரு கடிதக்கொத்தும் கிடைக்கிறது, அது சிதாங்க்சு அனிலாவுக்கு எழுதியது, ஒவ்வொரு வரியிலும் காதல் சொட்ட எழுதப்பட்ட கடிதங்கள். முதல் கடிதம் நான்காக கிழிக்கப்பட்டு மீண்டும் ஒட்டப்பட்டிருப்பதை பார்கிறான். கடிதங்களை வைத்தே அனிலா ஒன்றிற்குகூட பதில் எழுதவில்லை என்பதையும் கண்டுபிடிக்கிறான்.

ஆக, அனிலா சிதங்க்சுவுடன் சென்றுவிட்டாள். வியப்பிலும் வியப்பாக அனிலாவை வர்ணித்து சிதங்க்சு எழுதிய கடிதகளை பெரும் சொத்தாக கொண்டாடும் மனநிலைக்கு வருகிறான்.

ஒசிதாங்சு இருக்கும் இடத்திற்கு சென்று தன் மனைவியை ஒரே ஒருமுறை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறான். ஒருவழியாய் சிதாங்க்சு இருக்கும் மாளிகையை கண்டுபிடிக்கிறான். அதன் மாடியில் உலாத்திக் கொண்டிருக்கும் அவனை சந்திக்கிறான்.

அனிலா குறித்துக் கேட்கிறான்.

ஒரு பக்தனுக்குரிய மரியாதையோடு "அவரிடமிருந்து" எனக்கு வந்த ஒரே கடிதம் இதுதான் என்று தன் சட்டைப் பையில்லிருந்து எனாமல் பதிக்கப் பட்ட ஒரு தங்க டப்பாவைத் திறந்து அதில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுக்கிறார்.

"நான் போகிறேன், என்னைத் தேட முயற்சி செய்யாதே, தேடினாலும் கிடைக்க மாட்டேன்"

அவனுக்கு எழுதிய பாதி கிழிபட்ட அதே நீல நிறத்தாளின் மறுபகுதி.

இப்போது எனது புரிதல்கள்

ஒரு கதையை எப்படி துவங்கி எப்படி முடிக்கவேண்டும் என்பதில் உலகத்தர நுட்பம் இந்த முடிவு.

அனிலா தன் கடமைகளை ஒருபோதும் தவறவிடுவதே இல்லை. தன்னை தன் வாசிப்பின் மேதைமையைக் குறித்த வித்யா கர்வி ஒருவனுக்கு வாக்கப்பட்டதுதான் அவள் விதி.

உலக இலக்கியங்களைத், தத்துவங்களை, மேற்கத்திய மஹா கவிகளின் கவிதையை படித்து ரசிக்கும் மஹா ரசனைக்கார கணவன் தன்னுடைய மனைவியின் அழகை அவளுக்கு வரும் கடிதங்களின் மூலமே உணர்கிறான் என்பது எவ்வளவு பெரிய முரண்!

தன்னை ஒரு மனுஷியாக மதிக்காத கணவன்மீது ஏற்படும் கோபத்தில்தான் அனிலா இல்லம் துறக்கிறாளே ஒழிய சிதாங்க்சு செய்யும் ஆரதனையால் அல்ல. மேலும் சிதாங்சு மேல் அவளுக்கு கிஞ்சித்தும் ஈர்ப்பில்லை. கலாச்சாரத்துக்கு மாறான அந்த உறவை அவள் ஏற்கவில்லை.

பெருவாரியான வாசகர்கள் அனிலா சிதாங்சுவுடன் ஒரு பெரும் மாளிகையில் ராணிபோல் வாழ்க்கை நடத்துவாள் என்கிற முடிவுக்கு வரவிட்டு எதிர்பாராத ஒரு திருப்பத்தை தரும் பாணி வாவ்.

அதுவும் அதே நீலநிறத் தாளின் இன்னொரு பகுதி, கணவனுக்கு எழுதப்பட்ட அதே வரிகள்.

இந்த கதையின் செமையான பாத்திரம் என்றால் அனிலாவுக்கு பிறகு சிதாங்சுதான், பிறன்மனை நோக்கா பேராண்மை விதியை அனாயசமாகத் தாண்டி அவன் எழுதும் காதல் கடிதங்களின் வரிகள் நிச்சயம் இந்த தலைமுறைக்கும் கைகொடுக்கும். காபி பேஸ்ட் பண்ணினாலே போதும். விக்கெட் விழுவது உறுதி.

அனிலாவின் சோகம், அத்வைதின் கற்பனை உலகம், சிதாங்சுவின் ரசனை என பல உணர்வுகளைக் கொண்ட, பாத்திரங்களை தாகூர் கையாண்டிருக்கும் விதம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.

தாகூர்
தொடர்வார்
அன்பன்
மது

Comments

  1. அருமை.. நான் எடுத்து வைத்து விட்டேன் படிக்க

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பார்வைக்காக காத்திருக்கிறோம்

      Delete
  2. நல்லதொரு கதை. விக்கெட் விழுவது உறுதி - :( இதைத் தவிர்த்திருக்கலாம்!

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி அய்யா

      Delete

Post a Comment

வருக வருக