தண்டனை


சகோதரர்கள் துக்கிராம் ரூயி, சிதாம் ரூயி அவர்களின் மனைவிகள் ராதா மற்றும் சந்திரா எனும் நான்கு முக்கிய பாத்திரங்கள்.


குரி சாதியைச் சேர்ந்த உழைக்கும் வர்க்கம் இந்தக் குடும்பம். ஊர்ப் பெரியவர்கள் அழைத்தால் கூலி வாங்காமல் கூட பணி செய்வது இவர்களின் கடமை. இவர்கள் மனைவியர் எப்போதும் பெருத்த குரலில் சச்சரவிடுவார்கள். ஒரு வண்டியின் ஸ்ப்ரிங் ஓசை எழுப்புவதை போல இவர்கள் சண்டையும் தவிர்க்க முடியாது என்று இரண்டு சகோதர்களுமே நினைக்கிறார்கள். இயற்கை பேரிடர் நடந்த நாள் ஒன்றில் நாள்முழுதும் உழைத்துக் களைத்து வீடு திரும்புகிறார்கள்.

தம்பியின் மனைவி சந்திரா ஒரு ஓரத்தில் படுத்திருக்கிறாள். அண்ணன் மனைவி ராதா அழும் தன் மகனை தூங்கவைத்து விட்டு கடும் கோபத்தில் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறாள். துக்கிராம் அவளிடம் பசிக்குது சோறு போடு என்கிறான்.
//அவனுடைய மனைவி வெடிமருந்து மூட்டையில் தீப்பொறி விழுந்தாற்போல, வானத்தை எட்டுவது போன்ற உரத்த குரலில், "சோறு எங்கேயிருக்கு போடறதுக்கு?" நீ அரிசி கொடுத்துட்டுப் போனியா? நான் சம்பாதித்து உனக்கு சோறு போடணுமா?" என்று கத்தினாள்.
நாள் முழுதும் வேலை செய்த களைப்பு, கேட்க நேர்ந்த வசை, இவற்றுக்கு பிறகு சோறில்லாத இருண்ட வீட்டில் பற்றி எரியும் பசித்தீ, வீட்டுக்காரியின் கடூரப் பேச்சு, குறிப்பாக அதில் தொனித்த அசிங்கக் குறிப்பு இவையெல்லாம் பொறுக்கமுடியாததாக இருந்தன துக்கிராமுக்கு. கோபம் கொண்ட புலிபோல அவன், "என்ன சொன்னே!" என்று கத்திக்கொண்டு அரிவாளால் அவள் மண்டையில் தாக்கினான். அவள் தன் சிறிய ஓரகத்தியின் மீது போய் விழுந்தாள். உடனே அவள் சாவு நேர்ந்துவிட்டது.//
இந்த இரண்டு பாராக்களில் தாகூர் கடத்தியிருக்கும் அடர்வான வலி இதயத்தை குத்தீட்டியால் கீறுகிறது.

இந்த பெரும் சிக்கலில் இருந்து வெளிவர அவர்கள் சின்னவள் சந்திராவை அவளே தற்காப்புக்காக ராதாவை வெட்டியதாக சொல்லச் சொல்கிறார்கள். கோர்டில் இப்படிச் சொன்னால் வெளியில் வந்துவிடலாம் என்று சொல்கிறார்கள்.

இதன் பின்னர் கதை வேறு லெவலுக்கு போகிறது.

முன்சீப் கோர்ட் துவங்கி ஹ ஹோர்ட் வரை சந்திரா "நான்தான் ராதாவைக் கொன்றேன், அவள் சும்மாத்தான் இருந்தாள் நான் தான் வெட்டிக் கொன்றேன்" என்று சொல்கிறாள். ஆக தூக்குக் கயிறை தானே கழுத்தில் மாட்டிக்கொண்டார் போல தீர்மானமாய்ச் சொல்கிறாள்.

தூக்கிடும் முன்னர் டாக்டர் யாரையாவது சந்திக்க விரும்புகிறாயா என்கிறார். தன் அம்மாவைப் பார்க்க விரும்புகிறதாக சொல்லும் சந்திராவிடம் உன் கணவன் உன்னை பார்க்க விரும்புகிறான் என்கிறார் டாக்டர்.
சந்திரா சொல்கிறாள்

"சீ"

இந்தத் தொகுப்பின் எனக்கு மிகுந்த நெருக்கமான கதை இதுதான். உழைக்கும் வர்கத்தின் பிரச்சனைகள் பலவற்றுக்கு பசி பிரதானமான காரணம் என்பதையும், ஜமீன்தார்கள் சாதி முறையைக் கொண்டு உழைக்கும் வர்க்கத்தை அட்டைகள் போல உறிஞ்சிக் கொழுத்து விட்டு பூசை புனஸ்காரங்களில் ஈடுபட்டார்கள் என்பதையும் செவிட்டில் அறைந்தது போல சொன்ன கதை.

கொலை நடந்த அன்று ஜமீந்தார் வீட்டு வயலில் ஆற்று நீர் புகுந்துவிடாமல் வரப்புயர்த்தி பணி செய்து களைத்து பட்டினியில் வீடு திரும்பியதே முக்கியமான காரணம். அந்த ஜமீந்தார் இந்த சகோதர்களுக்கு ஒரு வாய் நீராகாரம் கொடுத்திருந்தால் கூட ராதாவின் உயிர் போயிருக்காது. தங்கள் வீட்டில் தாரளமாய் ஆடிய தரித்திரத்தின் காரணமாகவே ராதாவும் சந்திராவும் இடைவிடாது சச்சரவில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆம், சந்திரா ஏன் தன் சாவை தேர்ந்தெடுத்தாள்?

முதல் மனஅதிர்வு வெட்டுப்பட்ட ராதா உயிரிழந்தது சந்திராவின் மடியில்தான், இந்த அதிர்ச்சியில் பேச்சற்று போகிறான் வெட்டிய அண்ணன் துக்கி, சந்தா அப்போது பேசும் வாக்கியங்கள் கொடூரம்.

பொண்டாட்டி போனா இன்னொரு பொண்டாட்டி கட்டிக் கொள்ளலாம் அண்ணன் போனா யார் தருவா ?

இந்த ஒற்றை வாக்கியம்தான் சந்திராவை போங்கடா நீங்களும் உங்க குடும்பமும் என்ற முடிவுக்குத் சந்திராவைத் தள்ளியிருக்கிறது.

என்னதான் ராதாவுடன் சச்சரவிட்டாலும், சந்திரா ஒரு சக மனுசியாய் ராதாவின் சாவில் அதிர்ந்து போகிறாள், அதுவும் ஸ்பேர் பார்ட் மாற்றுவது போல மனைவியை மாற்றிக் கொள்ளலாம் என்கிற தன் கணவனின் நிலைப்பாடு அவளுக்கு ஸ்டாயிக் கரேஜ் தருகிறது. உணர்வுத் தளத்தில் ராதாவின் மரணம் சந்திராவை அதீதமாகப் பாதித்துவிடுகிறது. அவள் மடியில்தானே ராதாவின் உயிர் பிரிந்தது.

இந்தக் கதையில் உழைக்கும் வர்கத்தின் பாட்டைச் சொல்லுவதோடு, சந்திராவின் அசாத்தியமான மன உறுதியை காண்பிக்கும் தாகூர் மாறாதா மறையாத ஒரு வாசிப்பனுபவத்தை தருகிறார்.

இந்தக் கதையை நான் படித்த நாட்களில் தான் கரோனோ ஆயிரம் மைல் பயணத்தில் இருபத்தி மூன்று பேர் பட்டினியால் மரணம் என்கிற செய்தியும் வந்திருகிறது. தாகூர் காலத்திலும் சரி நம் காலத்திலும் சரி, எதிர் காலத்திலும் இந்துத்துவம் இப்படித்தான் ஏழைகளை கொல்லும், கர்மா என்று சொல்லித் தோள்குலுக்கிக் கடக்கும்.

அவர் காலத்தில் வெகு நுட்பமாக தாகூர் சொல்லிவிட்டார், எதிர்காலத்திற்கு தேவையில்லா ஆணி இந்த இந்துத்வா சாதி வெறி என்பதை நாம்தான் சொல்ல வேண்டும். இந்த விசயத்தில் சக நண்பர்களின் இலக்கியச் செயல்பாடுகள் ஆறுதல் தருகின்றன, அதே போல பரிதி சூர்யா போன்றோரின் படைப்புகள் இந்த பாதையில் இருந்தால் காலம் அவர்களின் படைப்பை பத்திரப்படுத்தும்.

சிதைந்த கூடு முற்றிற்று.
நன்றி
வணக்கம்(தற்போதைக்கு)
அன்பன்
மது
#Tagore #10

Comments

  1. இன்னும் என்னென்ன நடக்குமோ...?

    ReplyDelete
    Replies
    1. நல்லதே நடக்கும் என்று நம்புவோம்

      Delete
  2. தாகூர் காலத்திலும் சரி நம் காலத்திலும் சரி, எதிர் காலத்திலும் இந்துத்துவம் இப்படித்தான் ஏழைகளை கொல்லும், கர்மா என்று சொல்லித் தோள்குலுக்கிக் கடக்கும்.

    வேதனை
    இன்னும் நூறு பெரியார்கள் தமிழ் மண்ணுக்குத் தேவைப்படுகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அண்ணா

      Delete
  3. மிகவும் கொடுமை

    ReplyDelete

Post a Comment

வருக வருக