படைப்பு


காலத்தை வென்ற, ஒருமுறை வாசித்தாலே ஆன்மாவில் உறைந்துவிடும் படைப்புகளை தந்த படைப்பாளர்கள் என்ன நுட்பத்தை பயன்படுத்தினார்கள் என்று இளம் படைப்பாளர்கள் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.தாமஸ் ஹார்டி ஆங்கில நாவலாசிரியர்களில் பெரும் ஆளுமையாக இருப்பவர். 1840இல் பிறந்து 1928இல் மறைந்தாலும் இன்றும் இவர் படைப்புகள் போற்றப்படக் காரணம் என்ன ?

உங்களுக்கு ஒரு விஷயம் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்.

நான் இளங்கலை இலக்கியம் பயில்கையில் என்னால் அதிகம் வெறுக்கப்பட்ட படைப்பாளர் இவர்!

ஆமாம், எழுதும் அத்துணைப் புதினங்களையும் துன்பியல் காப்பியமாக எழுதினால் எப்படித்தான் படிப்பது. அந்த நாட்களில் என்னுடைய சூப்பர்ட் ஸ்டார் சார்ல்ஸ் டிக்கென்ஸ்தான், மனிதன் என்ன ஆப்டிமிஸ்ட்டிக்காக எழுதுவார்.

ஆனால் பின்னால் முதுகலை இலக்கியம் படிக்கையில் ஹார்டி குறித்துப் படித்த  ஒரு ஒரு தகவல் என்னை அவரது அடிமையாகவே மாற்றிவிட்டது.

ஹார்டியின் கதைகளில் முதன்மைக் கதா பாத்திரம் கதை துவங்கும் முதல் அத்தியாத்தில்    சமூகத்தின் மிக உயர்வான இடத்தில இருக்கும்.  இறுதி அத்தியாயத்தில் தன்னுடைய உடமைகளை இழந்து, புகழை இழந்து தனது கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் பரிதாபத்திற்குரிய வகையில் மரணிக்கும். இந்த மரணம் வாசகர்களின் மனதை குத்திக் கிழிக்கும்.

மேயர் ஆப் காஸ்டர் பிரிட்ஜ், டெஸ் ஆப் தி டி அர்பர்வில்ஸ் போன்றவை ஹார்டியின்ன் துன்பியல் உச்சங்கள். ஹார்டியின் பெரும்பாலான படைப்புகள் சினிமாவாகிவிட்டன. விருப்பம் இருப்பவர்கள் இவற்றை பார்க்க முடியும்.

டைம் வார்னர்ஸ் டிஎன்டி சானெலில் பார் ப்ரம் தி மாடிங் க்ரவ்ட் படத்துக்கு அவ்வளவு அழகாக அறிவிப்பார்கள்.  பெரும்பான்மையான கிளாசிக்ஸ் படங்களை, நாவல்களை அப்படித்தான் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

ஒரு நகருக்கு மேயராக இருக்கும் மைக்கேல் ஹென்சார்ட், எப்படி ஒரு அனாதைப் பிணமாகப் புதைக்கப் படுகிறான் என்பதுதான் மேயர் ஆப் காஸ்டர்பிரிட்ஜின் ஒன் லைன்.

அழகான நல்ல பண்புடைய டெஸ் எப்படி நாசமாகி இழக்கவேண்டிய எல்லாவற்றையும் இழந்து தூக்கில் தொங்குகிறாள் என்பது டெஸ் ஆப் டிஅர்பர்வில்ஸ்சின் ஒன் லைன்.

இப்படியான துன்பியல் காப்பியங்களை டிக்கென்ஸ்சை கொண்டாடுகிற எனக்கு பிடிக்காமல் போனதில் விசயம் ஒன்றுமில்லைதானே.

ஹார்டியின் நாவல்கள் ஏன் கொண்டாடப்பட்டன என்பதற்கு ஒரு தத்துவ அறிவியல் பின்புலம் இருப்பது எனக்குத்தெரியாது.

ஹார்டியை இப்படி எழுத வைத்தவர் ஒரு அறிவியல் ஆய்வாளர். அவருடைய நூல் உலகின் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த நூல் மனிதகுலத்தின் அடுத்தகட்ட அறிவியல் பாய்ச்சலுக்கு அடித்தளமானது.

அந்த நூல் தி ஆரிஜின் ஆப் ஸ்பீசிஸ். எழுதியவர் சார்லஸ் டார்வின்.

ஒரு அறிவியல் நூல் இலக்கிய உலகில் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் காரணம் என்ன?

டார்வின் தனது நூலில் பரிணாமக் கொள்கையை வெளியிட்டு கடவுள் என்று ஒரு கருத்துரு இருக்கவே முடியாது என்பதை சொல்லிவிட்டார்.

இந்த தகவல், அதைப் நிருபிக்கும்  அறிவியல் ஆய்வு, மறுக்க முடியாத தரவுகள் உலகில் ஒரு பெரும் புயலை ஏற்படுத்தின.

அறிவியல் ஆய்வாளர்கள் பலர் ஏற்றுக் கொண்ட பொழுதும், எளிய மக்கள் மனதில் ஒரு சொல்லொணாத் துயர்!

நேற்றுவரை கடவுள் சொர்க்கத்தில் அமர்ந்து கொண்டு தங்கள் பிரார்த்தனைகளை கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று  மக்கள் மரபுப் பண்புகளில் ஊறிப்போன நம்பிக்கையை போட்டுத்தள்ளிவிட்டது டார்வினின் ஆய்வு.

பல கோடி மனிதர்கள் தாங்கள் அனாதையாக்கப் பட்டுவிட்டோம் என்றும், தங்களை வஞ்சிக்கப்பட்டவர்களாகவும் உணர்ந்தார்கள்.

இந்த பொது உணர்வை படைப்பில் கடத்துவதை இலக்கிய உலகம் செய்தது. இதனால்தான் அந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான படைப்புகள் மனிதத்திரளின் இந்த உணர்வை பிரதிபளிக்கின்றன.

இந்த செய்தியைப் படித்த பிறகு ஹார்டி திடுமென என் மனசுக்கு நெருக்கமாக மாறிவிட்டார். அவர் படைப்புகள் பிடித்தமானவையாக மாறிவிட்டன.

ஹார்டியின் காதல் கதை குறித்து பின்னர்தான் படித்தேன். அதற்குள் போனால் பதிவு ரொம்பவே இலக்குத் தப்பிவிடும். எனவே இப்போது ஹார்டியின் நுட்பங்கள்.

முதலில் ஹார்டியின் கதைகள் நிகழுமிடம் வெஸ்ஸக்ஸ் எனுமிடத்தில்தான் நிகழும். இது முழுக்க முழுக்க ஹார்டியின் கற்பனை உலகு. இதற்கு மேப் உண்டு! ஹார்டியின் வெஸ்ஸக்ஸ் அவருடைய இளம் பிராயத்தில் அவர் ரசித்த, பார்த்த, வசித்த இடங்களின் கற்பனைப் பரப்பு.

இங்கிலாந்து என்று ஒன்று உருவாவதற்கு முன்னால் ஆங்கிலோ சாக்சன்களால் ஆளப்பட்டுவந்த பகுதி வெஸ்ஸக்ஸ். ஒரு நாட்டையே தன் கற்பனையில் உருவாக்கிய ஹார்டி, ஊர்களை பொறுத்தவரை இங்கிலாந்தின் பல ஊர்களின் பெயரை மட்டும் மாற்றி பயன்படுத்திக் கொண்டார்.

டோர்செஸ்ட்டர் நகரை காஸ்டர்ப்ரிட்ஜ் ஆக்கியது போல பல ஊர்களின் பெயரை மாற்றிப் பயன்படுதியிருக்கிறார்.

அதே போல ஹார்டியின் மறைவிற்கு பிறகு அவர் அறையை பார்த்தவர்கள் செய்தித்தாள்களின் பல துண்டுகளைக்  கண்டுபிடித்திருக்கிறார்கள்!

அன்றாடம் செய்திகளில் வரும் சம்பவங்களை தன் கதைப் போக்குக்கு ஏற்றவாறு மாற்றிப் பயன்படுத்தியிருக்கிறார்  ஹார்டி!

வாவ் இல்லையா!

ஹார்டியின் பெரும்பாலான படைப்புகள் தொடர்கதையாக வந்து நாவலாக பதிப்பிக்கபட்டவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒவ்வொரு வாரம் ஒரு பாகம் வரும்பொழுது அது அந்த வாரம் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்படும் பொழுது பெரும் வரவேற்பை பெற்றது.

ஆக ஹார்டியிடமிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது


புதிய நாடு ஒன்றை படைப்பது,

அறிவியல் ஆய்வை சார்ந்து அது எழுப்பிய விளைவுகளில் படைப்புகளை கட்டமைப்பது

செய்திகளை வெற்றிகரமாக கதைகளில் பயன்படுத்துவது.

பின் குறிப்பு

இதே போல துன்பியல் காப்பியங்களை எழுதி படிப்போரை பதறச் செய்த இந்தியர் ரபீந்திரநாத் தாகூர் - காரணம் டார்வினேதான்.

தொடர்வோம்

அன்பன்
மது

டார்வின் பழங்கால ஆங்கில வரலாற்றை படித்து அதன் துணை கொண்டே அவரின் கற்பனை உலகை வடிவமைத்தார்.  அந்த வகையியல் தமிழர்களுக்கு இருக்கவே இருக்கு லெமுரியா, சிந்து, குமரிக் கண்டம் ...உங்கள் பட்டியலைத் தாங்க பார்க்கலாம்

Comments

 1. Thanks for bringing Thomas Hardy live again Sir.

  Unanimously agree with your view and Wessex land.

  Have read "Far from the Madding Crowd" and the vague presentation carried away once.

  R.K.Narayan's 'Malgudi'town is a replica of Wessex in Indian Writing.

  ReplyDelete
 2. அருமையான அறிமுகம் மற்றும் விமர்சனம்

  ReplyDelete
 3. கற்பனை உலகைப் படைத்து அங்கே கதை நடப்பதாக எழுதும் வழிமுறையைப் படித்த உடன் குமரிக் கண்டம் பற்றி என் நண்பருக்கும் எனக்கும் அண்மையில் நடந்த உரையாடல்தான் நினைவுக்கு வந்தது. பார்த்தால், கடைசியில் நீங்களும் அதையே குறிப்பிட்டு விட்டீர்கள்!

  சுவையான கட்டுரை! எனக்கும் துன்பியல் கதைகள் பிடிக்கா. அதுவும் என் ஐந்தாறு வயதுகளில், கதைத்தலைவன் கடைசியில் செத்துப் போகும் படங்களைப் பார்த்தால் எனக்கு அழுகையாய் வரும். ஆனால் உங்களுக்கு எனக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில் நீங்கள் வளர்ந்து விட்டீர்கள், நான் வளர விரும்பவில்லை. :-D

  ReplyDelete

Post a Comment

வருக வருக