தாமஸ் ஹார்டி எப்படி வெஸ்ஸக்ஸ் என்ற உலகைப் படைத்தாரோ, அதே போல பல எழுத்தாளர்கள் தங்கள் உலகங்களைப் படைத்திருக்கிறார்கள். சர் தாமஸ் மூர் சொல்லும் கற்பனை பொன்னுலகு "உத்தொபியா" ஒரு மிகப் புகழ்வாய்ந்த அடையாளம்.
டோல்கீனின் மிடில் எர்த் |
ஜே.ஆர்.ஆர். டோல்கீன் தனது கதைக்களத்தை மொரோடோர் என்கிற கற்பனை உலகில் அமைத்தார். இவரது சகா சி.எஸ்.லீவிஸ் நார்னியா எனும் கற்பனை உலகைப் படைத்தது அதில் நிகழும் சம்பவங்களைக் கதையாக்கினார். பேசும் சிங்கங்களையும் போராடும் மரங்களையும் இன்னும் மறக்காத பார்வையாளர்கள் அநேகம் பேர்.
நார்னியாவின் கதைகள் |
பிலிப் புல்மான் எனும் எழுத்தாளர் ஹிஸ் டார்க் மெடீரியல்ஸ் என்கிற புதினத்தில் ஒரு படி மேலே போய் கதைக்களத்தை பல்லண்டங்களில் நிகழ்த்துகிறார். (Multiverse என்பது பூமி ஒன்றுமட்டுமல்ல, பல்வேறு பூமிகள் இருகின்றன எனும் அறிவியல் தத்துவம்).
லைராவும் அவள் விலங்கும் |
உலகின் பெரும் வெற்றிபெற்ற தொலைக்காட்சித் தொடர்களில் ஒன்றான கேம் ஆப் த்ரோன்ஸ் கதைக்களம் டைட்டிலில் விரியும் அழகே அழகு இல்லையா. இரண்டு கண்டங்களைச் சேர்ந்த ஏழு அரச பரம்பரைகளின் ரத்தவெறிபிடித்த அதிகாரப் போட்டியே கதை. ஜார்ஜ் ஆர்.ஆர். மார்டின் படைத்த வெஸ்ட்ரோஸ் மற்றும் எஸ்சொஸ் எனும் இரண்டு நாடுகளில் நிகழும் போர்கள், நாகரீகமடைந்த நாடுகளின் எல்லைக்கு வெளியே இருக்கும் பனிக்காடு, அதில் திரியும் வினோத உயிரினங்கள், அவற்றின் நர வேட்டை என அசத்தலான கற்பனை விருந்தது. பனியும் நெருப்பும் இசைத்த கானம் எனும் நாவலின் திரைவடிவம்தான் இந்த தொலைக்காட்சித் தொடர்.
நாத் தீவுகள் |
பனிக்காடுகள், ஆழ் கடல்கள், பாலைவனம், கொஞ்சம் அரேபிய நாகரீகத்தை தழுவிய நகர்கள், ஐரோப்பிய பனிநிறை நகர்கள் என வெரைட்டி நிலப்பரப்பை கற்பனையில் சமைத்தசத்திய மார்டின் படைப்பு பெற்ற வெற்றி அதிரி புதிரி.
நுட்பத்திற்கு ஒரு சின்ன உதாரணம்.
மிசாண்டி எனும் கதா பாத்திரம். நாத் தீவுகளில் இருந்து அடிமையாக விற்பனை செய்யப்பட்டவள். இவள் கதை நமக்கு இப்போதைக்கு தேவையில்லை. மார்டினின் கற்பனை மேதமையைக் கண்டறிய நாம் நாத் தீவுகள் குறித்து படிக்கவேண்டும். அந்த தீவுகளில் இருக்கும் மக்களை பாதுகாக்க இராணுவம் இல்லை. இதன் காரணமாகவே அடிமை விற்பனையாளர்கள் அந்தத் தீவிற்கு வந்து அவர்களைப் பிடித்துப் போய்விடுகிறார்கள்.
நாத் தீவில் அவர்கள் நிரந்தரமாக இருக்க வேண்டியதுதானே? ஏன் மீண்டும் மீண்டும் பயணிக்க வேண்டும்? இந்த இடத்தில் எழுத்தாளர் சொல்லியிருக்கும் கதை வாவ்.
நாத் தீவுகளில் இருக்கும் மக்கள் அந்த தீவில் பரவும் ஒருவகை நோயிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள எதிர்ப்புத் திறன் கொண்டவர்கள். அந்நியர் வந்தால் அதோ கதி. பட்டர்ப்ளை பீவர் எனும் வியாதி வந்து தசைகள் எலும்புகளை விட்டு கழண்டு விழுந்துவிடும். இந்த பாதுகாப்பு இருப்பதாலேயே நாத் தீவுகள் தனக்கன ஒரு இராணுவத்தை வைத்துக் கொள்ளவில்லை!
மேலும் நாத் தீவுவாசிகள் போரை வெறுப்பவர்கள், மாமிசம் உண்ணாதவர்கள், இசையை நேசிப்பவர்கள். இந்த பண்புகள் அவர்களை அடிமை வியாபாரிகளின் டார்கெட்டாக மாற்றியிருப்பதில் வியப்பு என்ன?
ரிச்சர்ட் கே.மோர்கன் எழுதிய ஆல்டர்ட் கார்பன் இன்றிலிருந்து மூன்னூறு ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்கள் பரகாயப் பிரவேசத்தை டிஜிட்டல் வழியில் செய்வதை சொல்கிறது. இந்த கதை நிகழ்வது மோர்கன் படைத்த பே சிட்டி என்கிற தொழில்நுட்ப உச்சமடைந்த பெருநகர் ஒன்றில்.
கலக்கல் பே சிட்டி |
2012இல் துவங்கி 2015வரை நான்கு பாகங்களாக வந்த தி ஹங்கர் கேம்ஸ் நாவல் சூசனா காலின்ஸ் என்பவரால் எழுதப்பட்டது. இவரது கற்பனை உலகு பணாம். ஒரு வட அமரிக்க கற்பனை நகர். பதிமூன்று நகரங்களின் ஒன்றியம். அதீதமாக கொண்டாடப்பட்ட திரைப்படம் இது.
இந்த நாவலில் மாக்கிங் ஜே எனும் ஒரு பறவை மனிதர்கள் எழுப்பும் ஒலியை மிமிக் செய்யும். ஹாய் என்றால் ஹாய் எனச் சொல்லும், பாடினால் பாடும், பேசினால் பேசும்.
இந்த பறவைக்கு ஒரு தனிக்கதையை வைத்திருக்கிறார் சூசனா, தொழில் நுட்பத்தில், மரபுப் பொறியியலில் மிகவும் முன்னேறிய பணாம் நகரின் ஆட்சியாளர்கள் புரட்சியில் ஈடுபடும் மக்களை உளவு பார்க்க வடிவமைத்த பறவைதான் ஜாபர்ஜேய்ஸ், ஆனால் புரட்சியாளர்கள் இந்த பறவை உளவு பார்பதை தெரிந்து கொண்டு தவறான தகவலைக் கொடுத்து முட்டா டி போன்ற ஆட்சியாளர்களைக் குழப்பவும் அரசு ஒட்டுமொத்தமாக ஜாபர்ஜேஸ் வகைப் பறவைகளை கைவிட, வனத்தில் பறந்தலைந்த அந்தப் பறவைகள் (அரசு ஆண் பறவைகளை மட்டுமே உற்பத்தி செய்யும்) மாக்கிங் பறவைகளோடு இணைந்து புதிய இனமான மாகிங்ஜே பறவைகளை உருவாக்கும்.
இப்படி உருவான பறவையை கதையின் போக்கில் புரட்சியின் அடையாளமாக மக்கள் கொண்டாடுவார்கள்!
மாகிங் ஜே |
ஒரு கதை சொல்லட்டுமா
ஒரு ஊர்ல நரி அதோடு சரி என்கிற எளிமையான கதைகள் ஒருபுறம் இப்படி பார்த்துப் பார்த்து செதுக்கும் கதைகள் மறுபுறம்.
எத்துனைக் கற்பனை உலகங்களை நம் எழுத்தாளர்கள் படைத்திருக்கின்றனர். எவ்வளவு நுட்பம்!
எத்துனை வாசகர்கள் எஸ்சக்சில், மால்குடியில், பே சிட்டியில், பணாம் நகரில், எஸ்சோஸ்சில், மொரோடோரில், நார்னியாவில் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
பணாம் |
நகர், அதன் நிலப்பரப்பு, கடற்பரப்பு, உயிரினங்கள் என எத்துனை அதிசயங்கள் சாத்தியப்படுகின்றன இந்த எழுத்தாளர்களுக்கு.
புதிதாக எழுத விரும்பும் நண்பர்கள் ஒரு பென்சில் மற்றும் கிராப் சீட்டில் தங்கள் கற்பனை உலகை படைத்தது செழிக்க வைக்கலாம்.
பணாம் நகரின் ஒரு பகுதி |
மேலை நாடுகளின் எழுத்தாளர்கள் எல்லாமே கிரேக்க இதிகாசங்களை, பிரஞ்சு கற்பனை உயிரினங்களை படைத்து, அவற்றில் இருந்து மீள உருவாக்கி வெல்கிறார்கள்.
தமிழில் அப்படி பல உயிரினங்கள் உண்டு.
யாழி, இந்த விலங்கு வந்தால் யானை பாறையை தந்ததை கொண்டு குடைந்தது ஒளிந்து கொள்ளும் என்று ஒரு அழகான கற்பனை உண்டு.
நிலாமுகி என்பது ஒரு பறவை. இது முழு நிலா நாட்களில் மட்டும் வெளி வந்து நிலவின் ஒளியை உணவாகக் கொண்டு உயிர்வாழும்.
இப்படி எண்ணிறந்த கற்பனை விலங்குகள், உலகுகள், நிகழ்வுகள் தமிழில் உண்டு.
இவற்றை எழுத்தாளர்கள் தம் கற்பனையில் பயன்படுத்தும் பொழுது அவர்கள் படைப்பு வேற லெவலுக்கு போகும்.
இப்போதைக்கு படைப்பு உலகு குறித்த கட்டுரைகள் நிறைவு பெறுகின்றன.
அன்பன்
மது
பொறுப்புத்துறப்பு
ஆல்டர்ட் கார்பன், கேம் ஆப் த்ரோன்ஸ் சீரிஸ் குழந்தைகளோடு பார்க்க ஏற்றவை அல்ல. இவை பற்றி விரிவாக பின்னொரு சமயம் எழுதுகிறேன்.
சிறப்பு..நம்ப முடியாத அதிசயங்கள்.. விக்கிரமாதித்தன் கதைகள் போல
ReplyDeleteகற்பனை உலகில் சஞ்சரிக்க வைக்கும் கதைகள். உங்கள் வழி புதிய புதிய செய்திகளையும் நிகழ்வுகளையும் தெரிந்து கொள்கிறோம். நன்றி கஸ்தூரிரெங்கன்.
ReplyDeleteஅப்பப்பா...மிகவும் அருமையாக தொகுத்துத் தந்துள்ளீர்கள். மிகவும் மலைப்பாக உள்ளது. அதிகம் ரசித்தேன்.
ReplyDeleteஅருமை அண்ணா, மேலை எழுத்துகளை ஆய்ந்து எவற்றை தமிழில் கையாளலாம் என்று ஒரு பொறியைத் தூண்டியிருக்கிறீர்கள். முயற்சி செய்கிறேன். மிக்க நன்றி அண்ணா
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteபடித்த போது மனம் வியப்பாக உள்ளது வாழ்த்துக்கள்