இந்தப் பதிவை படிக்காதீங்க


போஸ்டர் வேற லெவல் 

இது ஒரு திரைப்படப் பதிவு 

ரசித்துப் பார்க்க வேண்டும் என்போர் அருள் கூர்ந்து அப்பீட்ஆகவும். 

இல்லை நான் படிப்பேன் என்று அடம் பிடிப்போர் தொடரலாம். 


க்வின்டின் டொராண்டினோ தன்னுடைய படங்களுக்காக புகழ்பெற்றவர். இவரது படங்கள் கிரைன்ட் ஹவுஸ் படங்களின் பாணியில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் நிறைந்த படங்களாக இருக்கும்.

அதே போல இவரது படங்களில் உண்மைச் சம்பவங்கள் இருந்தால் அவற்றை இவர் இஷ்டத்துக்கு மாற்றி எடுத்துவிடுவார். 

வசூல் சாதனைகளைச் செய்திருக்கும் இவரது சமீபத்திய அட்ராசிட்டி  ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட். உச்ச நட்சச்திரங்களான லியோர்நார்டோ டி காப்ரியோ மற்றும் பிராட் பிட் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம். 

ஸ்பாயிலர் ஸ்பாயிலர் ஸ்பாயிலர் 

தனது சினிமா வாய்ப்புகளை இழந்துகொண்டிருக்கும் நட்சத்திரம் ரிக் டால்டன் (லியோ), இவனது உற்ற நண்பன் மற்றும் ஸ்டன்ட் டபுள் கிளிஃப் பூத் (பிராட் பிட்) இருவரின் வாழ்வு அனுபவங்களே படம் முழுக்க வருகின்றன.

தனது வாய்ப்புகளை இழந்து வரும் ரிக் தான் புதிதாக குடியேறிய உயர்தரக் குடியிருப்பின் அருகே புகழ்பெற்ற இயக்குனர் ரோமன் போலன்ஸ்கி இருப்பதை பார்க்கிறான்.

எப்படியாவது அவரது நட்பை பெற்றுவிட்டால் இன்னொரு ரவுன்ட் வந்துவிடலாம் என்று ஏங்குகிறான்.இவனுக்கு வாய்ப்பு கிடைத்தால்தான் கிளிஃப் பூத்துக்கும் வாய்ப்பு. கிளிஃப் பூத்துக்கு ஒரு தனி வேன் வீடு (கேரவன்) இருந்தாலும், இருவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள். ஒன்றாகக் குடிக்கிறார்கள். 

கிளிஃப் பூத் ஒருநாள் ஹிப்பி பெண் ஒருத்தியை அவள் குடியிருப்பில் விடச் செல்கிறான். அவள் இடத்தைப் பார்த்தவுடன் வியக்கிறான், அந்த இடம் அவன் பழைய நண்பன் ஜார்ஜ்ஜுக்கு சொந்தமான இடம். ஹிப்பிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே அவரை சந்திக்கிறான். அவரோ இவனை அடையாளம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. 

கிளிஃப்  ஒரு சின்ன மோதலுக்கு பிறகு வெளியேறுகிறான். ஜார்ஜ் எதோ வழியில் மடக்கப்பட்டு அவர் சொத்தை ஹிப்பிகள் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்கிறான். 

கிளிஃப் அதிரடி மன்னன் ப்ரூஸ் லியை பெண்டு கழட்டிவிட்டு (படத்தின் காட்சி) வீட்டில் ஆண்டெனா மாட்டிக்கொண்டிருக்கும் பொழுது அருகே இருக்கும் பிரபல இயக்குனர் வீட்டிற்கு யாரோ ஒரு ஹிப்பி வருவதைப் பார்கிறான். மெல்ச்சர் இருக்கிறானா என்று கேட்டுவிட்டு இல்லை என்றவுடன் அவன்பாட்டுக்கு போய்விடுகிறான். 

ரோமன் போலன்ஸ்கியின் இளம் மனைவி ஷரன் டேட் செமையான மயில் நீல வண்ண போர்ச் ஒன்றை எடுத்துக் கொண்டு ஷாப்பிங் போகிறாள். தான் நடித்த திரைப்படத்தை ரசிகர்களோடு உட்கார்ந்து ரசிக்கிறாள். தான் நடித்த காட்சிகளில் ரசிகர்கள் லயிப்பதை உணர்ந்து பெருமிதத்தோடு வீடு திரும்புகிறாள். 

சில நாட்களுக்கு பிறகு கிளிஃப் பூத்திடம், ரிக் தனது வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் தன்னுடைய ஆடம்பர வீட்டை விற்றுவிட்டு வாய்ப்பு கிடைக்கும் இடத்திற்கு செல்லப் போவதாகச் சொல்கிறான். 

அந்த இரவில் இருவரும் மொடாக்குடியாக குடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார்கள். ஒரு மூன்று ஹிப்பிகள் இவர்களின் வீட்டில் நுழைந்து இவர்களை கொள்ள முயற்சிக்கிறார்கள். கிளிஃப் பூத்தின் நாய் அவர்களில் இருவரை கண்ட இடத்தில் கடித்து கொத்துக் கறி ஆக்கிவிடுகிறது. எஞ்சிய ஒரு பெண் கிளிஃப் பூத்தின் இடுப்பில் கத்தியை சொருக, நிறை போதையில் தன் இடுப்பில் பாதி இறங்கியிருக்கும் அந்தக் கத்தியை விரலால் தட்டி பார்கிறான். 

பிறகு அந்தப் பெண்ணின் குடிமியைப் பிடித்து சுவற்றில் ஒரு ஐந்துதரம், மேசையில் ஒரு ஐந்து தரம் என்று கிடைக்கும் இடத்திலெல்லாம் மோதிச் சிதைக்கிறான். 

கடிவாங்கிய இன்னொரு பெண் துப்பாக்கியை எடுத்துச் சுட போதையில் மயங்கிவிடுகிறான் பூத். அந்தப் பெண் அலறிக் கொண்டே வெளியில் ஓடி நீச்சல் குளத்தில் தடுமாறி விழுந்து துப்பாக்கியை சுட்டுக் கொண்டே இருக்கிறாள். 

குளத்தில் ஒரு மிதவைச் சேரில் அமர்ந்து போதையில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் ரிக் அரண்டு போய் வீட்டில் உள்ளேலிருந்து ஒரு தீ கக்கும் துப்பாக்கியை கொண்டுவருகிறான். 

நீச்சல் குளத்தில் இருக்கும் அவளை பார்பிக்யூ செய்கிறான். 

போலிஸ் வருகிறது, கிளிஃப் பூத் மருத்துவமனைக்கு செல்கிறான், ரிக் பக்கத்து வீட்டிலிருக்கும் ரோமன் போலன்ஸ்கியிடம் என்ன நடந்தது என்று சொல்லிவிட்டு அவர் வீட்டுக்குள் செல்வதோடு முடிகிறது படம். 


நல்லாதானே இருக்கு ? என்கிறீர்களா ?

இப்போ கொஞ்சம் நிஜம். 

இது அமரிக்க குற்ற வரலாற்றில் மிக கொடூரமான கொலைகள் என்று கருதப்படும் மான்ஷன் பாமிலி கொலைகளை தழுவி எடுக்கப்பட்டது. 

உண்மையான நிகழ்வில் ஷரன் டேட் கொலையுண்டுவிட்டார். மிக இளம் வயதில் அதுவும் எட்டரை மாத சிசுவுடன் இருக்கும் ஷரன் பலமுறை கொடூரமாக கத்தியால் குத்தப்பட்டு தூக்கிலேற்றிக் கொல்லப்பட்டார். 

இந்த கொடூரத்தின் தாக்கம் இந்தத் தலைமுறைவரை அவரது கொலையை கடும் மன அச்சத்துடன், பாரத்துடன் பார்க்கவைக்கிறது. இதன் காரணமாகவே சட்டம் இந்தக் குற்றவாளிகளை வெளியேற்ற தயாராக இருந்தும் சிறப்பு வீட்டோ பவரை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஆம் இன்றளவும்.

அப்புறம் ஏன் குவின்ட்டின் கதையயை மாற்றி எடுத்தார்?

படத்துக்கான கதையை உருவாக்க குவிண்டின் மிக ஆழமான ஒரு ஆய்வை செய்தபொழுது ஷரன் டேட், தான் சந்தித்த அனைவரிடமும் அன்பை விதைத்தவராக, திரை உலகை நேசித்த பெண்ணாக இருந்ததை கண்டறிந்திருக்கிறார். 

இப்படி ஒரு மனுசியை திரையில் கொல்வதைவிட, வாழவைப்பதே சரியாக இருக்கும் என்று முடிவெடுத்து, கொலையாளிகளை தண்டிக்கவே இரண்டு கற்பனைக் கதா பாத்திரங்களை உருவாகியிருக்கிறார். ரிக் மற்றும் கிளிஃப் பூத்! 

ஒரு விதத்தில் இது ஒரு ஆகச்சிறந்த படைப்புதான். உண்மைகளை உருக்கிவிட்டார், வளைத்துவிட்டார் என்பதைவிட ஷரன் திரையிலாவது வாழட்டும் என்று முடிவெடுத்ததை அமேரிக்கா கொண்டாடித் தீர்த்திருக்கிறது.

மெல்சர் எனும் இசை தட்டு வணிகர் சார்லஸ் மான்சன் என்பவனின் பாடல்களை வெளியிடுகிறேன் என்று சொல்லிவிட்டு பின்வாங்கிவிட, இந்தக் கடுப்பில் சார்லஸ் மான்சன் தன்னுடைய தொண்டரடிப்பொடிகளை மெல்ச்சர் குடியிருந்த வீட்டுக்கு அனுப்பி அங்கே யார் இருந்தாலும் கொடூரமாக கொல்லுங்கள் என்று சொன்னதின் விளைவே இந்த சம்பவம். இந்த லட்சணத்தில் தன்னை இயசு கிறிஸ்த்து என்று சொல்லிவைத்திருக்கிறான் சார்லஸ் மேன்சன்!

என் மனசுக்கு கொடூர கொலைச் சம்பவங்களை படமாக்கும் குவிண்டின் டொரண்டினோ நெருக்கமாகியிருக்கிறார். அன்பன் 
மது 

Comments

  1. நன்கு ரசித்து எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
  2. பதிவின் தலைப்பிலேயே எச்சரிக்கை விடுத்தீர்கள். நான் கேட்கவில்லை. நீங்கள் சொன்னது போல் அடம் பிடித்துத் தொடர்ந்தேன். //இவரது படங்கள் கிரைன்ட் ஹவுஸ் படங்களின் பாணியில் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் நிறைந்த படங்களாக இருக்கும்// - இந்த இடத்திலாவது புரிந்து கொண்டிருக்க வேண்டும்; அதுவும் இல்லை. முழுக்கப் படித்து விட்டுத் திகைத்துப் போயிருக்கிறேன். நான் கொஞ்சம் பூஞ்சை மனதுக்காரன். இவ்வளவு கொடூரமான வருணனைகளெல்லாம் நமக்குத் தாங்காது. நான் வேறு ஏதாவது இனிமையாகப் படித்து விட்டுப் படுக்கப் போகிறேன்.

    ஆனால் ஒன்று, //நீச்சல் குளத்தில் இருக்கும் அவளை பார்பிக்யூ செய்கிறான்// - இந்த வரி படிக்கும்பொழுது கொடூரமாக இருந்தாலும் இதோ கருத்துரை எழுதி முடிப்பதற்குள் கொஞ்சம் மனம் மாறி விட்டது. அந்தக் காட்சியைப் பெரிதாக விவரித்து நடுங்க வைக்காமல் ஒற்றைச் சொல்லில் அதன் கனம் மாறாமல் பகிர்ந்த உங்கள் திறமையை வியக்கிறேன்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக