வகுப்பறையில் ஆசிரியர்கள் பகிரவேண்டிய பதிவு -1 must share post classroom worthy

முகநூல் நண்பர் Pyaree Priyan அவர்களின் பதிவு 


 #அயநுட்பம்..

நாம் இழந்ததில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் #இரும்புஉருக்குநுட்பம் குறித்து.திரு.அண்ணாமலை சுகுமாரன் அவர்களின் பதிவுத்தொகுப்பு...
அனைவரும் அறிய...

#வரலாற்றில்_போர்_வாட்கள்-பகுதி1
தொல் தமிழர் வணிகத்தில் சிறந்து விளங்கினர் என்று வரலாறு கூறுகிறது. அவர்கள் வெளிநாடுகளுக்கு வணிகத்துக்கு அனுப்பிய பொருள்கள் எனும்போது மிளகு கிராம்பு போன்ற உணவு மணமூட்டிகள் , சந்தனம், அகில் , மயில்தோகை யானைத்தந்தம் என்று தந்திரமாக வேளாண்மை பொருள்களையே அனுப்பியதாக வரலாற்றுக்குறிப்புகளில் சொல்லுவது வழக்கம் .

ஆனால் தொல் தமிழர்கள் பல பொருள்களின் உற்பத்தித்துறையில் தலை சிறந்து விளங்கினர் , உற்பத்திதுறையில் உலகின் தலை சிறந்து இருந்ததால் தான் பல நாட்டினரும் இங்கேத்தேடி வந்தனர் உற்பத்தியில் சிறந்து விளங்கியவரைதான் இந்தியா செல்வம் மிக்க நாடாக இருந்தது இன்றுவரை பல நாட்டினருக்கு புதிராக இருக்கும் பல தொழில் நுட்பங்கள் தமிழரிடம் பண்டைக்காலத்தில் இருந்து வந்திருக்கிறது .

இப்போது இது எதிர்மறையாக உள்ளது ? இத்தகைய சீர்கேடு எப்படி நிகழ்ந்தது என்பதன் பதில் வரலாற்றை ஆழமாகத் தேடினால் தான் கிடைக்கும் .

நாம் இழந்ததில் முக்கியமானது இரும்பு உருக்கு தொழில் நுட்பம் .

அப்போதைய இந்தியாவின் ( அப்போது இந்தியா 56 நாடுகளாக இருந்தது எங்கும் தமிழர்கள் பரவி வாழ்ந்தனர் இரும்பு தாது கிடைக்கும் இடமெல்லாம் பரவியிருந்தனர்) உற்பத்தி செய்யப்பட்ட போர்வாட்கள் உலகின் பல நாடுகளிலும் போற்றி போட்டிபோட்டு வாங்கப்பட்டிருக்கிறது .
நமது வணிகப் பொருள்களில் போர்வாட்கள் முக்கிய பங்கு வகித்திருக்கக் கூடும் என்பதை கிடைத்திருக்கும் சான்றுகளால் அறியலாம்.
தென்னிந்திய மக்கள் வாள் வீச்சிலும் அதன் உற்பத்தியிலும் உயர்புகழ் பெற்றுவிளங்கினார் .
போரின் போது அணியும் கவசத்தை துளைத்து கொண்டு செல்லும் இரும்பை விட கடிமையான ஒரு தனிப்பட்ட தனிமனால் செய்யப்பட்ட அரிய வாள்கள் நம்நாட்டில் இருந்துள்ளன. அதிலும் அதிச்சிறந்த வாளாக கருதப்படுவது கிமு 300 – 500 காலகட்டத்தில் தமிழகத்தின் தயாரிக்கப்பட்ட வூட்ஸ் எஃகு வாள் எனப்படும் உருக்கு வாள்.

Wootz Steel எனப்படும் உலையில் உருக்கப்பட்டு தயாரிக்கப்படும் இவ்வகை எக்கு இரும்புகள்(Crucible Steel) கார்பன் அளவை மிக அதிகமாக கொண்டிருக்கும். உயர்வெப்ப உலையில் வைத்து தயாரிக்கும் முறை தமிழகத்தின் அப்போதைய சேர மன்னர்களிடம் இருந்தது. சொல்லப் போனால் உலகிலேயே அவர்களிடம் மட்டுமே அப்போது இருந்தது.

மூன்று உற்பத்தி கட்டங்களைத் தாண்டிய இவை மிக உறுதியானவை அதேநேரம் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டவை. நேர்த்தியான வடிவமைப்புடன் கைப்பிடிகள் அழகான வேலைப்பாடுகள் கொண்டதால் பண்டைய காலத்தில் இதன் மதிப்பு அதிகமாக இருந்தது.

புராதன தமிழகத்தின் கொடுமணல் இதன் தயாரிப்பின் மிக முக்கிய பகுதியாகவும் தெலுங்கானாவின் கோல்கொண்டா, கர்நாடகா மற்றும் இலங்கையிலும் தயாரிக்கப்பட்டு சீனா, ஆப்பிரிக்க மற்றும் மத்திய தரைகடல் நாடுகளுக்கு ஏற்றமதி செய்யப்பட்டு இருக்கிறது.


அலெக்ஸ்சாண்டரின் இந்திய படையெடுப்பின் போது அவரை வழியனுப்பும் விதமாக தலைசிறந்த எக்கு இரும்பால் தயாரிக்கப்பட்ட தென்னிந்திய வாள்(எடை 15kg) ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது. உலகில் இதுவரை அறியப்பட்ட இரும்புகளில் மிகவும் மேன்மையானது தென்னிந்திய உருக்கு இரும்புகளே என்கிறது உலக கனிமவியல் தொல் ஆராய்ச்சி.

வூட்ஸ் என்ற சொல் உக்கு என்ற பண்டைய தமிழில் இருந்து பிரிந்த கன்னட சொல் அல்லது உருக்கு என்ற தமிழ் சொல்லில் இருந்து வந்தது. மேலும் சில உள்ளூர் மக்கள் அந்த சொல்லிற்கு உயர் சிறப்பு வாய்ந்தது(Superior Iron) எனும் பொருள் இருந்ததாகவும் சொல்கிறார்கள். டச்சுக்காரர்கள் இந்த கத்தியை இந்துவாணி (Hindwani) என்ற அழைத்தார்கள்.

அதிக அளவில் கப்பல் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்ட உருக்கு வாள்கள் அன்றைய காலகடத்தில் நடந்த பெர்சியா,இரான், ஐரோப்பிய போர்களில் முக்கிய இடம் வகித்தன. அரபு மொழியில் Jawab-E-hind என அந்த கத்திகளில் பொறிக்கப்பட்டிருந்தது. அதற்கு உலகிற்கு இந்தியாவின் பதில் என பொருள். இறக்குமதி செய்யபட்ட வாளையும் குத்துவாளையும் வைத்திருப்பதை அவர்கள் பெருமிதமாக கருதினார்கள்.

இந்தியாவில் நடந்த பல போர்களில் இவ்வகை வாள் முக்கியத்துவமாக இருந்துள்ளது. திப்பு சுல்தான் வாள் புகழ் பெற்றது .பஞ்சாப் மன்னர்கள் வளையும் தன்மை கொண்ட வாள்களை உற்பத்தி செய்து கொண்டு போனார்களாம். போர்க்கத்தி என்றாலே நினைவுக்கு வரும் சப்பானிய சமுராய் கத்திகளை விட இவை சிறப்புவாய்ந்தவை.. கிலிஜ்(Kilij Swords) எனப்படும் துருக்கிய வாள்கள் உலகின் வலிமையான வாள்கள் பட்டியலில் உள்ளது. இவை வூட்ஸ் இரும்புகளாலே தயாரிக்கப்பட்டவை

பிற்காலத்தில் உருக்கு எக்கு தயாரிக்கும் தொழிற்நுட்பம் மெல்ல அரபு நாடுகளுக்கு பரவியது. கொடுமணம் உள்ளிட பல இடங்களில் இருந்த தயார் செய்யப்பட்ட எக்குகள் மலபார், ஆந்திரா கடற்கரை வழியாக கப்பல் கப்பலாக அரபு தேசங்களுக்கு பயணப்பட்டது. அங்கே டமாஸ்கஸ் என்ற இடத்தில் போர் வாள்கள் தயார் செய்யப்பட்டு உலகமெங்கும் பரவியது.

இந்திய தொழிற்நுட்பத்தை கண்டுகொண்ட சிரியா நாட்டவர் டமாஸ்கஸில் பெரும் சந்தையை உருவாக்கினர். அதனாலே டமாஸ்கஸ் கத்திகள் என உலகம் அதனை அறிந்தவாறு உள்ளது. அப்படித்தான் நமது பல பண்டைய பெருமைகள் பறிபோயின.

16 நூற்றாண்டுகளில் நெதர்லாந்துக்கு மட்டும் 1,50,000 பவுண்ட் உருக்கு இரும்புகள் அனுப்பபட்டன. என்றுகூறப்படுகிறது அரபு நாடுகள் வழி நெப்போலியன் காலத்தில் பிரான்ஸ் சென்றடைந்த உருக்கு இரும்புகள் அங்கு பல்வேறு ஆய்வுக்கு உட்படுத்தபட்டு பல வலிமையான கத்திகள் உருவாக காரணமாக இருந்திருக்கிறது.

பல நூற்றாண்டுகளாக இப்படியொரு வலிமை வாய்ந்த ஆயுதத்தை பற்றி அறிந்திராத ஐரோப்பிய தேசங்கள் அதன் திறன் கண்டு ஆச்சரியமடைந்தனர். டச்சுக்காரர்களுக்கு பின்(1670-1681) இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் ஆட்சி பொறுப்பு கிடைத்ததும் சக்தி வாய்ந்த இந்த ஆயுதங்களை தமக்குரியதாக மட்டுமே மாற்றிக்கொள்ள ,பிறருக்குக்கிடைக்கக்கூடாது என விழைந்தனர்.

இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது 1851 ஆண்டு நடைபெற்ற லண்டன் கண்காட்சியில்(The Great Exhibition) இடம்பெற்ற இந்திய வாள்கள் தாம். பல இந்திய மன்னர்கள் தங்கள் பேரரசின் அடையாளமாக வூட்ஸ் கத்திகளை ஆங்கிலேயர்களுக்கு பரிசளித்தனர். 1862ம் ஆண்டு அதே லண்டனில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியிலும் அரசர்கள் அனுப்பி வைத்த போர்க்கத்திகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.


17-19 நூற்றாண்டு முழுதும் பிரிட்டிஷ் அரசு இதனை ஆய்வு செய்தது. ஆங்கிலேய பேராசை ஆதிக்கத்தின் போது இந்தியாவிலிருந்த அத்தணை உருக்கு ஆலை கூடங்களும் முழுவதுமாக தடை செய்யப்பட்டன. அதன் தொழிற்நுட்பம் முழுவதுமாக வழக்கொழிந்து அழிக்கப்பட்டது என சொல்லப்படுகிறது.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு காரணமாக இந்த அபூர்வ வாள்கள் புதைந்து போயின. தற்போது உலகில் இரான், துருக்கி, லண்டன் போன்ற ஒரு சில அருங்காட்சியங்கள் தவிர வேறு எங்கும் இத்தகைய அரிய வகை வாள்கள் காண கிடைப்பதில்லை.

Zschokke என்ற ஆராய்ச்சியாளர் கிடைக்கப்பெற்ற பல்வேறு கத்திகளை ஆராய்ந்து இப்பொழுதிருக்கும் கத்திகள் முழுமையான வரைமுறையில் உருவாக்கப்பட்டதில்லை எனவும் Fe3C அணுக்கள் அவற்றில் உருவாவதில்லை என்கிறார். அதாவது சரியான வெப்பநிலை, பதம், தாதுக்கள் சேர்த்து மட்டுமே தயாரிக்கபட்ட இவற்றின் சரியான கலவை அளவீடு இப்போது உயிர்வாழும் யாருக்கும் தெரியாது.

ரகசியமாக பாதுகாக்கப்பட்ட இதன் தொழிற்முறை வம்சவளிக்கு மட்டுமே பகிரப்பட்டது. ஒரு காலகட்டத்தில் அத்தியாவசிய தாதுத்துகள் கிடைக்கபெறாமல் போக இதன் ரகசியம் அடுத்த தலைமுறைக்கு தெரியாமலே அழிந்து போயிருக்கலாம் என எண்ணப்படுகிறது. இந்திய உருக்கு முறையின் அழிவுக்கு ஓரளவிற்கு ஏற்குபடியான காரணமாக இருப்பினும் உண்மை இன்னும் மர்மமாகவே உள்ளது.

இவை வெறும் போர் ஆயுதமாக மட்டுமில்லாமல் நவீன அறிவியல் வளர்ச்சியிலும் தனிமவியல் கோட்படுகளிலும் பெரும் தாக்கத்தை உண்டாகின. தாதுக்களிருந்து உலோகங்களை பிரித்தெடுக்கும் முறையிலும் பயன்பட்டுள்ளது. பல்கலைக் கழகங்கள் உலோகவியலின் (Metallurgy) இன்றைய ஆராய்ச்சி பயன்பாடுகளில் வூட்ஸ் கத்திகள் பெரும் பங்காற்றியதாக பாராட்டுகின்றன.
சாதாரண கார்பன் இரும்போடு ஒப்பிடும் போது 1-2% அதிக கார்பன் வூட்ஸில் இருக்கிறது. ஜெர்மன் அறிவியலார்கள் 1991 ஆம் கிடைக்கபெற்ற கத்தியை ஆராய்ந்து அவை கார்பன் நானோகுழாய்களால்(CNT) உருவாக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தனர். எனவே 2000 வருங்களுக்கு முன்பே நானோ தொழிற்நுட்பம் பயன்படுத்தியதாக சொல்கிறார்கள்.

இன்றைய நவீனத்தால் பல வலிமையான கத்திகள் உருவாக்கப்பட்டாலும் அவற்றின் நிலைப்புத் தன்மை இந்திய உருக்குக்கு நிகராக வருவதில்லை. சில உலோவியலார்களால்(metallurgists) நெருங்கிய போதும் தொன்மைக்கு இணையான அதே கட்டுமான நுட்பத்தில் தென்னிந்திய வாள்களை யாவராலும் இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் உருவாக்க முடியவில்லை, ஆராய்ச்சிகள் இன்னமும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

நுண்துளையுள்ள இரும்பை, அதீத வெப்பத்திலிருக்கும் போது அடித்து உருவாக்கப்படும் இத் தொழில்நுட்பம் தமிழர்களால் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு அடிக்கப்பட்ட இரும்புப்பட்டை, மரத்துண்டுகள் உள்ள, ஒரு களிமண் உறையில் இடப்பட்டு வெப்பப்படுத்தப் படும். அதீத வெப்பத்தினால் மரம் கரியாகி அது இரும்புடன் பிணைப்பை ஏற்படுத்தி எஃகாக மாறும். இதுதான் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் என உறுதியாகக் கூற நம்மிடம் ஆதாரங்கள் இல்லையெனினும், இதனையொத்த அல்லது இதை விட மேம்பட்ட தொழில் நுட்பத்தை தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவாகிறது. காலத்தின் பெருவெள்ளத்தில் இந்த தொழில்நுட்பங்கள் அடித்து செல்லப்பட்டு விட்டன அல்லது வன்முறையால் அழிக்கப்பட்டன .இப்போது அது உண்மையென்று நிரூபிக்க நெருக்கமான ஆதாரங்களை, பெங்களூரு, தேசிய உயர்கல்விக்கான மையத்தின் பேராசிரியர். சாரதா சீனிவாசன் அவர்களின், ஒன்றோடொன்று தொடர்புடைய இரு ஆய்வுக்கட்டுரைகள் முன் வைக்கின்றன.

பேரா. சாரதா உலோகவியல் முக்கியத்துவமுள்ள பல ஆராய்ச்சி கட்டுரைகளை ஏற்கனவே சமர்ப்பித்து உள்ளார்.

நம் பண்டைய தொழில்நுட்பங்களைப் பாதுகாக்க வேண்டியதும், இளம் தலைமுறையினருக்கு நம் பாரம்பரியப் பெருமைகளை உணர்த்த வேண்டியதும் நம் கடமை’’ என்று சொல்லும் சாரதா சீனிவாசனுக்கு, அதுவே அவரின் பணி இயல்பு. பெங்களூரில் உள்ள தேசிய உயர் ஆராய்ச்சி அமைப்பில் (National Institute Of Advanced Studies) துறைத் தலைவராகப் பணிபுரியும் பேராசிரியர் சாரதா, உலோகவியலில் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த 60-க்கும் அதிமுக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். 2011-ம் ஆண்டுக்கான ‘கல்பனா சாவ்லா’ விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். உலோகவியல் துறையில் பல புதிய ஆராய்ச்சிப் படிப்புகளை உருவாக்கி மாணவர் களுக்கு வழிகாட்டி வருகிறார். சாரதாவை பேட்டி கண்டு விகடனில் வெளியிட்டிருக்கிறார்கள் .

பண்டைய தமிழர்களின் ஆயுத உலோக ஆராய்ச்சியில் தன்னை வியக்கவைத்த தரவுகளைப் பற்றிப் பேசினார். திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள ஆதிச்ச நல்லூர் என்ற இடத்தில் தொல்லியல் துறையினர் அகழ்வாய்வு செய்தபோது பல சான்றுகள் கிடைத்தன. அவற்றை நானும் ஆய்வு செய்தேன். சர்வதேச அளவில் ஆய்வாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் உலோகம், உருக்கு. தமிழ் மன்னர்கள் போரில் பயன்படுத்திய வாள், இந்த உலோகத்தினால் தயாரிக்கப் பட்டது. ஆறாம் நூற்றாண்டில் இந்த உலோகம் தமிழகத்தில் புழக்கத்தில் இருந்திருப்பதை ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்த வித அதி நவீன தொழில்நுட்பமும் இல்லாத பண்டைய தமிழகத்தில், கொல்லர்கள் போரில் பயன்படுத்தக்கூடிய ஓர் உலோகத்தை உருவாக்கியது இன்றளவும் உலோகவியல் ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தும் விஷயம்.
வளையாத, உறுதியான, துருப்பிடிக்காத ஓர் ஆயுதத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பலகட்ட தோல்விகளுக்குப் பின் தமிழகக் கொல்லர்கள் உருக்கு உலோகத்தைக் கண்டுபிடித்திருக்க வேண்டும். உலக நாடுகள் எதிலும் புழக்கத்தில் இருந்திராத உலோகத்தை உருவாக்கி, ஆயுதங்களைத் தயாரித்து உலகுக்கே வழிகாட்டியிருக்கிறார்கள், பண்டைய தமிழகக் கொல்லர்கள்’’ என்று தன் ஆய்வு குறித்து ஆர்வமாகப் பேசும் சாரதா, நம் பிள்ளைகளுக்கு, தமிழராகப் பிறந்ததன் பெருமையைச் சொல்லி வளருங்கள்” என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
~~~~~~~~~~~~~~~~~~~~
#வரலாற்றில்_போர்_வாட்கள் -பகுதி 2

பண்டைய தமிழர்களின் கடல் வணிகத்தை மூன்று பெரும் காலகட்டமாக பிரிக்கலாம்.

முதல் காலகட்டம் என்பது கி.மு. 3000ம் முதல் கி.மு. 700 வரையான, வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம்.

இரண்டாம் காலகட்டம் என்பது வரலாற்றுத் தொடக்கத்துக்கு சற்று முந்தைய கி.மு. 700 முதல், சங்க காலத்தின் இறுதிக்கட்ட காலமான கி.பி. 300 வரையான 1000 ஆண்டுகள்.

மூன்றாவது காலகட்டம் என்பது சங்க காலத்திற்கு பிந்தைய காலமான கி.பி. 300 முதல், பிற்கால பாண்டியர்களின் இறுதிக் காலமான கி.பி. 1300 வரையான 1000 ஆண்டுகள்.
அதற்குப்பிறகு நமது தமிழர்களின் வணிகம் என்பது முகமதியர் ஆதிக்கம் ,அயல்நாட்டவர் ஆதிக்கம் ,நாயக்கர் ஆதிக்கம் ,மராட்டியர் ஆதிக்கம் என பல்வேறு ஆதிக்க சக்திகளின் கீழ் சிக்கி சீரழிந்தது .பல்வேறு அரிய தொழில் நுட்பங்களை நமது தொல் தமிழர்மூலம் வழிவழியாக வந்தது இந்தகாலகட்டத்தில் தான் அழிவுற்றது .

நமது வரலாறு என்பது சங்ககாலத்தை எல்லையாக கொண்டு கட்டமைக்கப்பட்டு விட்டது . தமிழர்களின் உண்மையான சிறப்புகள் அதற்கு முந்தியவை .அதிகம் உண்டு

ஏனோ சொல்லும் போதெல்லாம் சங்ககாலத்தை தமிழர் வரலாற்றின் எல்லையாக குறிப்பிடுகிறோம் அவ்வாறே சிந்துவெளியும் நமது வரலாற்றின் எல்லை அல்ல .சங்க இலக்கியங்கள் என்பது அந்த காலகட்டத்திற்கு முன் 1000 ஆண்டுகள் தமிழர் வாழ்ந்த விதத்தை விவரிக்கும் பல ஆயிரம் பாடல்களில் குறிப்பிட்ட சில மட்டும் தொகுக்கப்பட்டது ஆகும். இன்னமும் முழுமையாக ஆழமாக செல்லவேண்டும்.

இதற்க்கு தக்க ஆதாரங்களைத் திரட்டவேண்டும் .முதல் காலகட்டம் என்பது கி.மு. 3000ம் முதல் கி.மு. 700 வரையான, வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம். இந்தக்காலத்திய பண்டைய எகிப்து ,மெசபடோமியா சுமேரிய ரோம் மற்ற பண்டைய நாகரீகங்களுடன் தமிழர் தொடர்பு இருப்பது தெரிகிறது ஆனால் நமது பக்க தரவுகள் இன்னமும் வேண்டும் .

அப்போது நமதுதொல் தமிழர்களால் தயாரிக்கப்பட்ட மிக நேர்த்தியான வாட்கள் உலகம் எங்கும் வியந்து நோக்கப்பட்டது போட்டி போட்டுக்கொண்டு வாங்கப்பட்டன .

உலக நாகரிகங்களில் இரும்புப் பண்பாடு என்பது மனித இனப் பரிணாம வளர்ச்சிப் படிநிலைகளில், புதிய கற்காலத்துக்குப் பிறகு செம்பு உலோகப் பண்பாட்டுக்கும், வெண்கல உலோகப் பண்பாட்டுக்கும் அடுத்து மூன்றாவதாக உருவானப் பண்பாடாகும்.

ஆனால், இரும்புக் காலத்துக்கு தென்னிந்தியா நுழைந்தது என்பது உலகலாவிய தனித்துவமிக்க ஒரு பண்பாட்டு வளர்ச்சி நிகழ்வாக உள்ளது

தென்னிந்தியாவில் புதுக் கற்காலத்தின் இறுதிக்கட்டத்தில் இரும்பு தோன்றிவிட்டது என்று ஒரு பொதுவான கருத்து முன்வைக்கப்படுகிறது. பெருங் கற்படைப் பண்பாட்டுச் சுவடுகள் வெளித்தெரியத் தொடங்கிய கி மு 1500 அளவிலான காலகட்டக் புதுக் கற்காலத்தின் இறுதிக்காலம் என்று ஒரு பொது வரையறையை அடையலாம்.

ஐரோப்பாவில் இரும்புத் தொழில் தொடங்குவதற்கு வெகு முன்பே தென்னிந்தியாவில் இரும்புத் தொழில்நுட்பம் செய்யப்பட்டு வந்ததாக அறிஞர்கள்.கருதுகின்றனர்;

கற்கால மக்கள் பெரிதும் குன்றுகளிலும், மலைச்சரிவுகளிலும், வளமிக்க செறிந்த காடுகளின் ஓரங்களிலும் வாழ்ந்தனர்;

இரும்பினைக் கண்டறிந்த பிறகே, ஆதி மனிதர் காட்டினைத் தம்முடைய வாழிடமாகக் கொண்டு இருக்கலாம் என்று எண்ணுவதே பொருத்தமாகக் தோன்றுகிறது;

இரும்புக் கருவிக்கால நாகரிகமே, குன்றுகளில் வாழ்ந்த மக்களைக் காடுகளில் சென்று வாழுமாறு தூண்டியது;

மிகப் பழைய காலம் முதலே இரும்பைப் பயன்படுத்தி வருவதற்குரிய தடயங்கள் இந்தியாவில் கிடைத்து உள்ளன.

மேலும், துருப்பிடிக்காத வகையில் இரும்பைச் செய்யும் சிறப்புமிக்க ஒரு முறையையும் அவர்கள் அறிந்திருந்தனர்” என்று தென்னிந்தியாவில் இரும்புக் காலம் தோன்றியது குறித்து உலோகத் தொழில் கலையியல் வல்லுநர் போராசிரியர் கெளலாந்து குறிப்பிடுவது கவனிக்கத் தக்கதாக உள்ளது

உயர்தர இரும்பு செய்ய உயர்தர இரும்புத்தாது தேவை .மாக்னடைட், ஹேமடைட், லிமோனைட், சிட்ரைட் ஆகிய நான்கு வகை இரும்புத் தாதுக்களில் இருந்து இரும்பு கிடைக்கிறது.

இவற்றுள், மாக்னடைட் தாதுவில் இருந்துதான் மிக அதிக சதவீத இரும்பு கிடைக்கிறது.
இது இயற்கையாகவே நல்ல கருப்பு நிறம் கொண்டதாகும். ஹேமடைட் வகை தாதுவிலும் இரும்பு நிறைய இருக்கிறது. இது இயற்கையாக சிவப்பு நிறம் கொண்ட தாதுவாகும். லிமோனைட் தாது மற்ற தாதுக்களைவிட குறைவான இரும்பையும், பழுப்பு நிறத்தையும் கொண்டது.

சிட்ரைட், மஞ்சள் நிறம் கொண்ட இரும்புத் தாதுவாகும்.மாக்னடைட் தாது அதிக வெப்பம் தாங்கிக் கற்களையும், சாணைக் கற்களையும் செய்ய பயன்படுத்தப் படுகிறது. இத்தாதுவைக் கொண்டு, பல்வேறு துறையினர் பல்வேறு பயன்பாட்டைக் கொண்ட பொருட்களைத் தயாரிக்கின்றனர். இதுவே தேனிரும்பு என்று தமிழில் அழைக்கப்படுகிறது

தமிழ்நாட்டில், முதல்தரமான மாக்னடைட் இரும்புத் தாதுக்கள் சேலம் அருகே அமைந்துள்ள கஞ்சமலை, கோதுமலை, தருமபுரி மாவட்டத்தில் அரூர் வட்டத்தில் அமைந்துள்ள தீர்த்தமலை, நாமக்கல் மாவட்டத்து கொல்லைமலை, திருச்சி மாவட்டத்து பச்சமலை ஆகிய பகுதிகளில் மிகுதியாகக் கிடைக்கின்றன. இங்கு கிடைக்கும் இரும்புத் தாதுக்கள் உலகிலேயே சிறந்தவை என்பதால், உலகளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையை அடுத்து அமைந்துள்ள வேதியப்பன் மலைக் குன்றுப் பகுதிகளில் கிடைக்கும் இரும்பும், தருமபுரி மாவட்ட தீர்த்தமலை இரும்புத்தாதுவும் படிவுப் படுகைகளாகக் கிடைக்கின்றன,

இரும்பு உருக்கும் தொழிலுக்கு இன்றியமையாத துணைப்பொருளான சுண்ணாம்புக்கல்லும் இன்றைய சேலம், தருமபுரி, நாமக்கல் மாவட்டப் பகுதிகளில் பெருமளவு கிடைக்கிறது. இது, இப்பகுதிகளில் இரும்பு உருக்கும் தொழில் தொன்மையான காலத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும் என்ற கருத்துக்கு வலுகூட்டுவதாக உள்ளது.

கஞ்சமலைப் பாறைகளின் வயது ஏறத்தாழ 450 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என ஆய்வின் மூலம் அறியப்பட்டுள்ளது.

கஞ்சமலை, கோதுமலை, தீர்த்தமலை, கொல்லிமலை, பச்சமலை ஆகியவை அமைந்துள்ள நில அமைப்பானது கவனிக்கத்தக்க ஒன்றாகும். இம்மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் புள்ளியில், பெரும்பான்மையாக இரு மலைத்தொடர்களின் தொடர்பு அற்றும், ஒன்றுக்கொன்றும் தொடர்பற்ற தனித்தனி குன்றுகளாகவும், சிறிதே இரு மலைத்தொடர்களின் அறுபட்ட தொடர்பைக் கொண்டும் இருப்பதைக் காணலாம். இதனாலேயே, எண்ணிக்கை மிகுதியான சிறுசிறுபள்ளத்தாக்குகளால் நிரம்பியதாக இப்பகுதி காட்சி அளிக்கிறது.

மேற்குறிப்பிட்ட இடங்களன்றி, தமிழகம் முழுவதும் பரவலாக இரும்புத்தாது கிடைத்து உள்ளதை, கொடுமணல், ஆதிச்சநல்லூர், இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்து குட்டூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அகழாய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

பொதுவில், இரும்புத் தாதுக்கள் பூமிக்கடியிலும், மலைக் குன்றுகளிலும் கிடைத்தாலும், இரும்பை நேரடியாக எடுத்துவிட முடியாது. ஏனெனில், இரும்புத் தாதுக்களில் இரும்பைத் தனிமைப்படுத்தி எடுக்க அதிக அளவு வெப்பம் தேவைப்படும்.

அதனால், அந்த வெப்பத்தை உண்டாக்கக்கூடிய எரிபொருள் மரமாகவோ, நிலக்கரியாகவோ, வேறு எந்தப் பொருளாகவோ இருக்கலாம்.

இந்த எரிபொருள் பெரும்பாலும் இரும்புத்தாதுக்கள் கிடைக்கும் இடத்தின் பக்கத்திலேயே இருந்திக்க வேண்டும். ஏனெனில், எரிபொருளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்வதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதால், இரும்புத் தாதுக்கள் கிடைக்கும் இடத்துக்கு அண்மையிலேயே கிடைக்கும் எரிபொருளையே பண்டைக் காலத்தில் மக்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

ஒருபுறம் பெரிய தொழிற்சாலைகள் அமைத்து இரும்பு உருக்கும் தொழில் நடைபெற்றது போலவே, ஆங்காங்கே அடர்காடுகளின் நடுவேகூட சிறு உருக்கு உலைகள் மூலம் இரும்பை உருக்குவது குடிசைத்தொழிலாக செய்யப்பட்டு வந்ததை தருமபுரி, பென்னாகரம், கிருஷ்ணகிரி, ஒசூர், மேட்டூர் வட்டங்களில் ஆங்காங்கே காணக் கிடைக்கும் இரும்பு உருக்கிய கசடுகளின் எச்சங்களில் இருந்து அறிய முடிகிறது.
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில்கூட, இவ்வாறு சிறுசிறு அளவில் நடைபெற்று வந்ததைக் கண்ணுற்று புச்சனன் என்ற ஆய்வாளர் விவரித்துள்ளார். ஆனால் இவை அனைத்தும் நம்மை ஆண்ட ஆங்கிலேயர் ஆட்சியில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது .

கி மு 450-ல், க்டேசியஸ் (Ktesias) புராதன இந்தியா எனும் நூலின் தமது குறிப்பில், பெர்சிய அரசனுக்கு இந்திய உருக்கு வாள்கள் ப்ரியமாக பரிசளிக்கப்பட்ட விவரத்தையும், தென்னிந்தியர்கள் கி மு 5-ம் நூற்றாண்டிலேயே உருக்குத் தொழிலில் சிறந்து காணப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்

வார்மிங்டன் எனும் வரலாற்றாளரும் இதே கருத்தை, “இந்தியாவிலுள்ள எஃகில் இருந்து நல்ல உறுதிவாய்ந்த வாள்கள் செய்யப்பட்டன என்றும், அவை க்டேசியஸ் காலத்தில் பெரும்புகழுடன் விளங்கின என்றும், இந்தக்கால கட்டத்தில் இந்தியாவிலுள்ள இரும்பு மற்றும் எஃகு, எகிப்து நாட்டு வாணிபத்தில் சிறப்பிடம் பெற்றிருந்தது” என்றும் குறிப்பிடுகிறார்.

மு.பொ.ஆ. 300 அளவில் ஆப்பிரிக்கா, கிரேக்கம் மற்றும் கிழக்கித்திய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து இரும்பு ஏற்றுமதி செய்யப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்ர் கே.என்.பி. ராவ்.என்னும் ஆய்வாளர் .

பேரரசன் அலெக்சாந்தர் உலக வரலாற்றில் பெரும் வெற்றிகளைப் பெற்ற இராணுவத் தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவர் ஈடுபட்ட எந்தப் போரிலும் தோல்வியடைந்ததில்லை எனவும் சொல்லப்படுகிறது. ஆனால் பஞ்சாப் பகுதியை ஆண்டு வந்த இந்திய மன்னன் போரஸை போராடி வென்றார். அதுவரை யானைப்படையையே பார்த்திராத அலெக்ஸாண்டரின் படைகள் முதல் முறையாக யானைப்படையை போரஸின் படையில் பார்த்ததில் பிரமித்து பயந்து முதல்முறையாக பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். ஹைடஸ்பேஸ்-ஸில் கி.மு.326-ல் நடந்த இந்த போர்களில் ஆச்சர்யம் அடைந்த அலெக்ஸாண்டர் மன்னர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டினார். அவருக்கு போரஸ் @ புருஷோத்தமன் ஒரு சிறந்த எஃகு வாளை ப்ரியமாக கொடையாகக் கொடுத்தார் என்றுக் கூறப்படுகிறது .

கி மு .327-ல், கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தபோது, புருஷோத்தமன் (புருஸ்) சேலம் பகுதியில், அதாவது கஞ்சமலையில் வெட்டியெடுக்கப்பட்ட 38 பவுண்டு எஃகையே கொடையாகக் கொடுத்தான் என்று அறியமுடிகிறது. இது குறித்து, புகழ்பெற்ற உலோகவியலாளர் ஹீத், குயிண்டஸ் கர்டியஸ் (Quintus Curtius) வியந்து தெரிவிப்பதை எடுத்துக் காட்டுகிறார். அது - “உலகையே வெற்றிகொண்ட மகா அலெக்சாண்டருக்கு போரஸ் (புருஷோத்தமன்) நாட்டின் (இந்தியா) மீது படையெடுத்தபோது, அந்நாட்டு அரசன் 30 பவுண்டு 16 எடையுள்ள இந்திய எஃகை பரிசாக வழங்கியதாகவும், அந்த எஃகு பரிசாகப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு மதிப்புமிக்கதாக விளங்கியது என்பதையும் நாம் நம்புவதற்கு கடினமாக உள்ளது”. மிகவும் தொன்மையான காலத்தில் இருந்தே தென்இந்தியாவின்
மலபார் கடற்கரைக்கும், பெர்சிய வளைகுடாவுக்கும் சிந்துவெளிக்கும், செங்கடலுக்கும் இடையே நல்ல வணிகத்தொடர்பு இருந்தது ஆகையால், தென்னிந்தியாவின் எஃகு வட இந்தியாவைச் சேர்ந்த போரஸ் நாட்டின் வழியாக ஐரோப்பிய மற்றும் எகிப்து நாடுகளுக்குச் சென்றது என முடிவு செய்வதற்கு தக்க காரணங்கள் உள்ளது எனலாம் என்கிறார் .

அவர் மேலும் குறிப்பிடுகையில், புகழ்பெற்ற “டெமாஸ்கஸ் வாள்”கள் செய்ய இந்திய இரும்பு அனுப்பப்பட்டது என்று பல சான்றுகள் மூலம் நிறுவுகிறார்.

சர் ஜார்ஜ் பெர்டுவுட் குறிப்பிடும்போது, “இந்திய எஃகானது மிகவும் பழமையான காலத்தின் தொடக்கநிலையிலேயே வெகுவாகப் போற்றப்பட்டது; மேலும், டெலிடொ வாள்கள் (Toledo blades)பிற்காலத்தில் போற்றப்பட்டபோதும், இந்திய எஃகு கொண்டு செய்யப்பட்ட டெமாஸ்கஸ் வாள் தன்னுடைய முந்தைய தலைமை இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தது.

1875-ம் ஆண்டு, சர் ஜான் ஹிக்‌ஷா (Sir John Hicksha), என்பவர் தனது ஜனாதிபதி உரையில் குறிப்பிடும்போது, “நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளின் துவக்கத்தில் இந்தியாவிலிருந்து இரும்பின் ஏற்றுமதி எல்லை அற்றதாக இருந்தது. இந்தியா, மேற்கு உலகின் முந்தைய நாகரிகச் சமூகங்களில் இருந்து எந்தவகையில் பயன் அடைந்திருந்தாலும், மேற்கு உலகுக்கு இரும்பையும் எஃகையும் வழங்கியதன் மூலம், அதற்கு மிகச் சிறந்த கைமாற்றை செய்திருக்கிறது”.

அவர் மேலும் குறிப்பிடும்போது, “பண்டைய எகிப்தின் கருங்கல் தூண்களை செய்யப் பயன்படும் மிக உறுதியான துளைப்புக் கருவிகள் (drills) இந்திய இரும்பு கொண்டு செய்யப்பட்டவை. மேலும், முதலில் பெர்சியர்களும், பின்னர் அரேபியர்களும் இந்தியாவிடம் இருந்தே இரும்பை உறுதியாகும் எஃகுத் தொழில்நுட்பத்தை அறிந்தனர்; இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருப்பது, இடைக்கால வரலாற்றில் புகழ்பெற்ற #டெமாஸ்கஸ்_வாள்கள் ஆகும்.” என்கிறார் .

ரோஸ்ஸி மற்றும் ஸ்கொலெம்மர், தங்களின் புகழ்பெற்ற “வேதியியல் ஆய்வுகள்” நூலில், “இரும்பு இந்தியாவின் தாதுக்களில் இருந்து முதலில் பெறப்பட்டது எனத் தோன்றுகிறது எனக் குறிப்பிடுகின்றனர்”. இங்கு இந்தியா எனக் குறிப்பிட்டாலும், அது பண்டையத் தமிழகமான தென்னிந்தியாவைக் குறிக்கும் என்பதை நினைவில் கொள்வோம்.
~~~~~~~~~~~~~~~~~~~
இந்தியாவின் 18 ஆம் நூற்றாண்டின் ஆசியாவின் முதல் இரும்பு ஆலைப் பற்றியும் சித்தர்கள் இரும்பை வைத்து செய்த வித்தைகளைப்பற்றியும்..

#வரலாற்றில்_போர்_வாட்கள் -பகுதி 3

பொன்முடியார் எனும் சங்ககாலப்பெண்புலவர்,
“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறு வாள் அருஞ்சமம் முருக்கி களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே” – (புறம்: 312)
எனப் புறநானூற்றில் கூறியுள்ளார்.

இதில் வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே என்று கொல்லர்களை சிறப்பிக்கிறார். .பிறகு அங்கே வடிக்கப்பட்ட வாளைக்கொண்டு அதாவது ஒளிறு வாள் கொண்டு , யானையே வெல்லும் காளையர் வீரம் பற்றி சிறப்பிக்கிறார் .

சமுதாயத்தில் வேலும், வாளும் செய்யும் கொல்லர் இன்றும் அதேபெயரில் கொல்லர் என்று 2000 ஆண்டுகள் கழித்தும் வழங்குவது தமிழின் சிறப்பு .

தென்னிந்தியாவில் செய்யப்பட்ட போர்வாட்களுக்கு உலகெங்கும் பெரும் வரவேற்பு இருந்தது. எகிப்தில் பிரமிடுகள் கட்டும் போது அங்கு பாறைகளை வடிக்க தென்னிந்திய உளி முதலிய கருவிகள் பயன்பட்டதாகக் கூறப்படுகிறது .

தொல்தமிழகத்தின் வெளி நாடுகளுக்கான ஏற்றுமதியில் போர்வாட்களுக்கு சிறப்பான இடம் இருந்திருக்கக்கூடும் .

ஒவ்வொரு குடியிருப்பு கிராமங்களிலும் பலவித தொழில் நிபுணர்கள் இடம் பெற்றிருந்தனர் .அவர்களில் கொல்லர்களின் முக்கியப்பணியாக மன்னர்களின் படைகளுக்கு வேண்டிய போர்க் கருவிகள் தொடர்ந்துசெய்தல் இருந்து இருக்கிறது .

அதேசமயம் அத்தகைய கொல்லர்களுக்கு வேண்டிய எஃகிரும்பு தனியே அடர்ந்த காடுகளின் நடுவே இரும்புதாதுக்களும் , அவைகளை உருக்கத்தேவையான எரிபொருளாக மரங்களும் கிடைக்கும் இடங்களில் அமைந்திருந்தன .

அவர்கள் இத்தகையை இரும்புத்தாதுக்களை உருக்கவும் நுண்ணிய தரம் வாய்ந்த இரும்பாக மாற்ற சில மூலிகைகளையும் அப்போது ப்ரியமாக பயன்படுத்தி இருக்கின்றனர் .

19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருந்த ஒருஆய்வு கட்டுரையில் அந்த மூலிகை ஆவாரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
இதை பயன்படுத்திப் பார்க்கவேண்டும்
.
அத்தகைய உயர்வெப்பம் கிடைக்க சில தனி வகை மரங்களும் அறிந்திருக்கக் கூடும் .இத்தகைய தொழில் நுட்பங்கள் இப்போது மறைந்துவிட்டது .

நம்மை ஆண்டு கொண்டு இருந்த ஆங்கிலேயர்கள் இங்கிருக்கும் தொழில் நுட்பம் ,தாது இவைகளை தாங்கள் மட்டுமே பயன்படுத்தி இலாபமடைய அவர்களும் இத்தகைய தொழில் நுட்பங்களை அழிக்க துணைபோயினர் .

தொழில்புரட்சி காரணமாக ஐரோப்பியாவிலும் பல்வேறு தொழில்கள் பெருகின . அவர்கள் அப்போது நிலக்கரி பயன்படுத்த அறிந்திருந்தனர். இந்தியர்களுக்கு அப்போது நிலக்கரி என்பது அறிந்து இருக்கவில்லை .

இந்தியாவில் உருக்கிரும்பு செய்தால் 40% செலவு மிச்சம் ஆகும் என்று இந்தியாவில் இரும்பு தயாரிக்க எண்ணினர் அதற்கு ஆசியாவிலேயே முதலில் அமையவிருந்த இரும்பு தாதுவை உருக்கும் ஆலை அமைந்த இடம் தமிழ் நாட்டில் இருந்த #பரங்கிப்பேட்டை தான். இதில் இருந்தே இரும்பு உருவாக்கத்தில் தமிழ்நாடு பெற்றிருந்த முக்கியத்துவத்தை உணரலாம் .

கடலூரிலிருந்து 35கி.மீ. தூரத்தில் கடற்கரையில் அமைந்துள்ள பரங்கிப்பேட்டை முன்பு "போர்டோ நோவோ' என்று அழைக்கப்பட்டது! இங்கு போர்ச்சுகீசியர், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷார் என அடுத்தடுத்து அங்கே ஆதிக்கம் செலுத்தினர். மேலும் இங்குதான் மைசூர் மன்னருக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும் இடையே போர் நடந்தது.
பல நதிகள் கடலில் சங்கமிக்கும் கழிமுகப் பகுதியான இம்மாவட்டத்தினை தென்பெண்ணையாறு, கெடிலம், வெள்ளாறு, மணிமுத்தாறு, கொள்ளிடம் ஆகிய நதிகள் கடந்து செல்கின்றன.

இவ்வூர் முகமதியர் காலத்தில் மஹ்மூதுபந்தர், எனவும் போர்ச்சுகீசியர், காலத்தில் போர்டோநோவோ (புதிய துறைமுக நகரம்) மற்றும் நாயக்கர் காலத்தில் முத்து கிருஷ்ணபுரி என்றும் அறியப்பட்டிருக்கிறது

வங்காள வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ள இவ்வூர் போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிசாரால் காலனி ஆதிக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இது முக்கிய கப்பல் துறைமுகமாகவும் விளங்கியது.

ஆசியாவின் முதல் இரும்பு தொழிற்சாலை இங்கு நிறுவப்பட்டிருந்தது.

1830 இல் ஆசியாவின் முதல் பெரிய அளவிலான இரும்பு ஊருக்கு ஆலை பரங்கிப்பேட்டையில் கிழக்கிந்திய நிறுவனத்தில் முதலில் வேலை செய்த திரு ஹீத்( JOSHUA MARSHALL HEATH )என்பவரால் வெள்ளாறு கடலில் சேரும் முகத்துவாரத்தில் அருகே ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் POTONOVO IRON WORKS எனும் பெயரில் இரும்பு ஆலை நடத்தப்பட்டது. பிறகு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கிழக்கிந்திய கம்பனியில் இருந்து வாங்கிய கடனால் The Indian Iron and Steel Company என்று பெயர் மாற்றம் பெற்றது .

பின்பு தொடர்ந்து நீடித்த நெருக்கடியால் கிழக்கிந்திய கம்பெனியால் எடுக்கப்பட்டு The East India Iron Company’என்று பெயர் மாற்றம் பெற்று சில ஆண்டுகள் கழித்து 1874 இல் நிரந்தரமாக மூடப்பட்டது .

ஆனால் இதில் உற்பத்தி செய்யப்பட்ட இரும்புகள் அதன் தரத்தால் உலகெங்கும் பயன்படுத்தப்பட்டது .
இன்றும் #எழும்பூர் ரயில் நிலையத்தில் அதன் இரும்புத் தூண்களில் Made in Porto Novo'. என்ற பொறிப்பைக்காணலாம் என்று கூறப்படுகிறது .

மேலும் பறங்கிப்பேட்டையில் தயாரிக்கப்பட்ட இரும்பு, அதன் தரத்தின் காரணமாக இங்கிலாந்தில் உள்ள BRITAANICA TUBULAR மற்றும் STAIN STRAIT BRIDGE ஆகியவற்றில்
பயன்படுத்தப்பட்டது-

மும்பையில் உள்ள Bandra ரயில் நிலையத்தில் பயன் படுத்தப்பட்டது என்று S.B. JOSHI எனும் ஆய்வாளர் “HISTORY OF METAL FOUNDING ON INDIAN SUBCONTINENT SINCE ANCIENT TIMES” (pp97)தனது எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

இத்தகைய உயர்தர இரும்பு உருக்கு சேலத்திற்கு அருகில் இருக்கும் கஞ்சமலை எனும் மலையில் சுற்றி உதிரியாகக் குவிந்திருந்த தாதுக்களில் இருந்து பெறப்பட்டது .
கஞ்சமலை என்பது சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு மலை ஆகும். இந்த மலை சித்தர்கள் அதிகம்
வாழ்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. மலையின் உச்சியில் மேல்சித்தர் கோயில், கரியபெருமாள் கோயில் ஆகியன உள்ளன. சித்தர் கோயிலின் அருகில் ஒரு நீரோடை ஓடுகிறது.

இந்த மலையில் காளங்கிநாதர் என்ற சித்தர் வாழ்ந்தார் என்பதற்கான குறிப்பு திருமூலர் திருமந்திரத்தில் உள்ளது. மலையின் தென்பகுதியில் சடையாண்டி ஊற்று உள்ளது. மேல்சித்தர் கோயில் அருகில் ஒரு ஊற்றும் நீரோடையும் நல்லணம்பட்டி அடிவாரத்தில் உள்ளது. இந்த மலையில் சடையாண்டி சித்தர் வாழ்ந்ததற்கான அடையாளம் காணப்படுகிறது.மேலும் சித்தர் கோவில்,வற்றாத நீருற்றைக் கொண்டுள்ளது.

இந்த மலையில் இரும்புத்தாது அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இம்மலையில் மூன்று அடுக்குகளாக இரும்புத்தாதுகள் உள்ளன. இவை நல்ல தரம் வாய்ந்தவை.

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் நான் கஞ்சமலை சென்று அங்கே இருக்கும் நீர்நிலையில் குளித்து சித்தரை வழிபட்டதுண்டு ..

நான் சில நாட்களாக கஞ்சமலையைப் பற்றியும் சித்தர் காலாங்கி நாதர் பற்றியும் படித்து வந்தபோது ,சென்னை மறைமலை நகரில் வசிக்கும் திரு சரவணன் என்பவரும் எனோ சித்தர் காலாங்கி நாதர்க்குறித்து கஞ்சமலைக் குறித்து சில ஐயங்களை எழுப்பினார் . அப்போதுதான் இவைகளைக்குறித்து சிந்தித்திருக்கும் போது இவரும் காலாங்கி நாதர் பற்றி கேட்டது எனக்கு வியப்பாகவே இருந்தது .சித்தர்களின் ஆளுமை உலகில் பரவும் காலம் விரைவில் வரும் .

கஞ்ச மலையைச் சுற்றி சிதறிக் கிடக்கும் float ore எனும் உதிரித் தாதுதான் அள்ளிச் செல்லப்பட்டு இருக்கிறது. அதுவே பல லட்சம் டன்கள் இருக்கும். புதியதாகத் தாது வெட்டி எடுத்ததாகத் தெரியவில்லை.

கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன், சாலை வசதி இல்லை, ரயில் வசதி இல்லை. சுமார் இருநூறு கி.மீ. தூரம். கனமான இரும்புத் தாதுவை சேலத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு எப்படிக் கொண்டு சென்று இருப்பார்கள் ?
இப்போது வியப்பாக இருக்கலாம்

ஆனால் அப்போது காவேரி-கொள்ளிடம்- வெள்ளாறு வழியே பரிசல்களில் கொண்டு சென்று இருக்கிறார்கள். அப்போது “வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி” யில் ஆண்டில் ஆறு மாதம் தண்ணீர் ஓடிக் கொண்டு இருந்திருக்கிறது அப்போது கர்நாடகாவில் கே.ஆர். சாகர், கபினி அணை , இங்கே மேட்டூர் எதுவும் இல்லை

ஆனி முதல் மார்கழி-தை வரை தண்ணீர் ஓடியிருக்கும். சுமார் முந்நூறு கி.மீ. கஞ்சமலை இரும்புத் தாது. காவிரியில் மிதந்து வந்திருக்கிறது,

இது ஆங்கிலேயருக்கு சாத்தியம் ஆகி இருந்திருக்கிறது .
சேலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இரும்புத்தாதுவின் அளவு சுமார் 75 மில்லியன் டன்கள். மலையைச் சுற்றியும் கீழே விழுந்த தாதுதான் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது.

1960களில் இந்தத் தாது சேலத்திலிருந்து ரயில் மூலம் கடலூர் துறைமுகம் சென்று அங்கிருந்து ஜப்பான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

சேலத்தில் தற்போது செயல்படுவது இரும்பு உருக்காலை அல்ல;இரும்பு உருட்டாலை. இங்கே எந்தக் கனிமமும் உருக்கப்படுவது இல்லை. மாறாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.
(இந்தத்தகவல்களைப்பற்றி மறைந்து விட்ட நண்பர் சிங்கநெஞ்சம் சம்பந்தம். அவரது வலைதளத்தில் எழுதி இருக்கிறார்)

இவைகளை அறியும் போது என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ! என்றுதான் ஏங்கத்தோன்றுகிறது. நம்மிடம் கிராமங்களில் இருந்த கொல்லர்கள் இரும்பை பயன்படுத்தி வேளாண்மை ,மற்றும் போர்க்கருவிகளான வேல் ,வாள் இவைகளை செய்து குவித்தனர்.

அடர்ந்த காடுகளில் உள்ளே இரும்புத்தாதுக்கள் கிடைக்கும் , அவைகளை உருக்க எரிபொருளாக தனித்துவமான மரங்கள் மூலிகைகள் அங்கே கிடைக்கும் அத்தனைப்பகுதிகளுக்கும் சென்று ஆங்காங்கே சிறிய அளவில் இரும்பு உருக்கி தொழில் செய்தவர்கள் உயர்தரஇரும்பைத் தந்தவர்கள் எப்படி மறைந்து போனார்கள் ,?
எப்படி அழித்து ஒழிக்கப்பட்டார்கள் என்ற சோக வரலாறு இன்னமும் உண்டு.

இது ஒரு புறம் என்றால் நமது பண்டைய சித்த மருத்துவர்கள் இரும்பை உண்ணும் மருந்தாகச் செய்து அற்புதங்கள் செய்திருக்கிறார்கள் .

உடம்பு இரும்பு போல் இருக்கிறது என்றுகூறுவார்கள்
நமது வைத்தியர்கள். இரும்பையே எளியமுறையில் உண்ணத்தக்க மருந்தாக மாற்றிருந்திருக்கிறார்கள் .

அயபற்பம் எத்தகைய நோயையும் தீர்க்கும் என்று அறியப்பட்டுள்ளது .இன்னம் அயசெண்தூரம் ,அய வெள்ளை என எத்தனையோ அற்புத மருந்துகள் இன்னமும் கிடைக்கிறது .

இவைகளின் செய்முறைகளில் அதிக வெப்பம் தேவைப்படாமல், சில எளிய மூலிகைகளைப் பயன்படுத்தியே இரும்பின் தன்மையை மாற்றி இருந்திருக்கிறார்கள்
.
இத்தகைய மருத்துவ தயாரிப்பில் விழுதி இலை , பொற்றிலைகையான் , புளிப்பு, மாதுளை இன்னமும் நிறைய மூலிகைகள் பயன்படுத்தி இத்தகைய அற்புதங்களை சாதித்திருக்கிறார்கள் .

பெரிய அளவில் இரும்பை உருக்க ஆவாரம் பயன்படுத்தப்பட்டு இருப்பதை இன்னமும் நாம் மறைத்து வைத்திருந்து பயனில்லை .

இத்தகைய தொழில் நுட்பம் நம்மிடம் இருந்து பறிபோவதற்கு முன் அல்லது மறக்கடிக்கப்படுவதற்குமுன் , இவைகளைப்பற்றி எழுதி அவைகள் நம்முடையவை என்று உலகிற்கு அறிவிக்கும் கடமை தமிழருக்கு உண்டு.

படம் பரங்கிப்பேட்டையில் 1830 செயல்பட்ட ஆசியாவின் முதல் இரும்பு உருக்காலை
படம் அலெக்சாண்டருக்கு போரஸ் @ புருஷோத்தமன் அளித்த வாள் குறித்த ஓவியம்
படம்: ராணா ப்ரதாப் அவர்களின் போர்வாள். இதன் எடை 50 கிலோ.!
படம்: திப்பு சுல்தான் போர்வாள்
#ப்யாரீப்ரியன்..
https://m.facebook.com/story.php?story_fbid=3268185906597724&id=100002190405617

Comments

  1. அரிய செய்திகளைக்கொண்ட பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. சிறப்பான விரிவான இதுவரை அறியாத தகவல்கள்

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
  3. மறைக்கப்பட்ட வரலாறுகளை மீட்டெடுக்கும் பதிவு. நிச்சயம் இன்றைய தலைமுறையினர் குறிப்பாக மாணவர்கள் அறிய வேண்டிய தகவல்கள். தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்ட ஆதாரங்களைக் கொண்டு மறைக்கப்பட்ட வரலாறை மீட்டெடுத்தப் பதிவிற்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  4. நீண்ட பதிவு. 3 பகுதிகளாக வெளியிடலாம் என்பது தம்பியின் யோசனை. நிச்சயம் என் மாணவர்களுக்கு எடுத்துச் செல்வேன் இந்தப் பதிவினை.

    ReplyDelete
  5. அருமை. நன்றி

    ReplyDelete
  6. அருமை பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete

Post a Comment

வருக வருக