அண்ணன் முத்துசாமி ஒரு நினைவு

15/08/2020 


இரண்டு நாட்களாக நிலைகொள்ளாமல் அலைகிறது மனம்.


மேஜர் டோனர் ரோட்டரியன் முத்துசாமி அவர்களின் மறைவு இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாத விசயமாக இருக்கிறது

முதலில் இளம் கதிர்தான் இந்தத்தகவலை எனக்குச் சொன்னான்.

நான் நம்ப இயலாது திரு.பெல் அவர்களுக்கு அழைத்து கேட்டேன்.

உண்மைதான் என்றார்.

அண்ணன் தங்கம் மூர்த்தியின் கட்செவி இற்றையை இணையர் என்னிடம் காட்ட நீண்ட பெருமூச்சு.

முத்துசாமி அவர்களின் புன்னகை இல்லாத முகத்தை நினைவில்கூட கொணர இயலவில்லை.

இன்று காலை பள்ளி வளாகத்தில் கொடியேற்றிய சில நிமிடங்களில் நண்பர்கள் அதிர்ச்சியோடு இந்த விசயங்களை பேச, நான் வளாகத்தில் உயர்ந்து நிற்கும் சில மரங்களை காட்டி இவை அவர் வைத்தவை என்றேன்.

பெண்குழந்தைகளுக்கான கழிவறை ஒன்றை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம் நிறுவி, பயன்பாட்டுக்கு வழங்கியபொழுது நட்ட மரக்கன்றுகள் அவை.

ஏனைய ரோட்டரி பிரமுகர்கள் வருவதற்குள்ளாகவே தானே ஒரு மண்வெட்டியை எடுத்து குழிகளை அகழ்ந்து நிகழ்வில் அர்பணிப்போடு செயல்படத் துவங்கினார்.

மண்வெட்டி பிடித்து குழி அகழும் ஒரு ரோட்டரியனை பார்த்த அதிர்ச்சியிலிருந்தேன் நான்.

மெல்ல நிகழ்வு முடிந்து உரையாடச் சந்தர்ப்பம் கிடைத்த பொழுது இதுகுறித்து எப்படிண்ணே என்றேன்.

அதுனால என்ன நம்ம நிகழ்வு நம்ம பள்ளி என்றார் இயல்பாக.

சூழ்ந்து நின்றுகொண்டிருக்கும் ரோட்டரி ஆளுமைகளுக்கு நடுவே அண்ணன் முத்துசாமி மண்ணில் முழங்காலிட்டு குழிகள் அகழ்ந்த அந்த நிகழ்வு ஒரு சித்திரம் போல இன்னும் மனதில் அழியாமல் இருக்கிறது.

கோவிட் இப்படி ஒரு நல்ல மனிதரின் உயிர்குடிக்கும் என்று நினைத்துப் பார்த்தது கூட இல்லை.

நிகழ்ந்துவிட்டது

எங்கள் பகுதியின் சிவா இவரெல்லாம் சாவாரா என்று அதிர்ச்சி விலகாமல் கேட்கிறார்.

புதுகையின் அத்துணை முக்கியமான இடங்களிலும் அண்ணன் சிரித்தவாக்கில் ப்ளக்சில் இருக்கிறார்.

அவர் என்னவோ வழக்கம் போல் மகிழ்வாகத்தான் சிரிக்கிறார்.

நமக்குத்தான் கண்ணீர் முட்டுகிறது. தலையை வெண்டி வேறுபக்கம் திருப்பிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

தடுப்பு மருந்து வரும்வரை நம் மரணம் தள்ளிப்போடப்பட்ட மரணம் தான் என்று தோன்றுகிறது.



Comments

  1. பெரிய இழப்பு. அவரது குடும்பத்தினருக்கு இந்தச் சூழலைக் கடக்கும் தைரியத்தினை எல்லாம் வல்ல இறைவன் தரட்டும்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக