மாபெரும் சபைதனில் வீதி 81


கொரோனா பேரலைக்கு பிறகு நேரடியாக நடைபெற்ற முதல் வீதிக் கூட்டம், பெருமகிழ்வு. விழா குறித்தும் வீதி குறித்தும் நீங்கள் அறிய நான் இன்னொரு பதிவை எழுதுகிறேன் இப்போது வீதியில் நான் பேச நினைத்த உரை.... இந்த உரையில் சில வாக்கியங்கள் விடுபட்டுவிட்டன அவையில் பேசும் பொழுது இதோ முழுமையான உரை 

மாபெரும் சைபைதனில் வீதி 81

வாழ்வென்பது மாயப் புள்ளிகளாலானது.

புள்ளிகளை இணைக்கும் வளைகோடுகள் வண்ணக் கோலங்களாலாக விரிகின்றன. ஒருவர் பொறியியல் படிப்பில் துவங்கி தமிழ் இலக்கியம் நோக்கி நகர்ந்தார் நமக்கு ஒரு அதிகாரி கிடைத்தார். இன்னொருவர் தமிழ் இலக்கியத்தில் துவங்கி தொழில் நுட்பம் நோக்கி நகர்ந்தார் நமக்கு இன்னொரு அதிகாரி கிடைத்தார். இருவரும் பெருமாள் முருகனின் கூட்டுப் பறவைகள் என்பதும், கூட்டிலிருந்து துவங்கியதுதான் வீதி என்பதும் நமக்கு உணர்த்துவது இதைத்தான்.  

ஆக, தமிழ் தம்மை நேசித்தவர்களை உயர்த்தும் மாபெரும் சபையில் அமர்த்தும் என்பதற்கான நல்உதாரணங்கள் இவர்கள். 

ஆம், நண்பர்களே வாழ்வு புள்ளிகளாலானது, அவை இணைகிறபோழுது வண்ணக் கோலங்கள் விரிகின்றன, கூட்டிலிருந்து வீதி, வீதியிலிருந்து கணினித்தமிழ்ச்சங்கம், இந்த அமைப்புகளில் நான்பெற்ற அனுபவங்களின் நீட்சியாக இன்று பசுமை புரட்சியை செய்துகொண்டிருக்கும் வீதியின் பசுமை விழுது விதைக்கலாம் என எத்துணைப் புள்ளிகள் கோலங்கள்!

கலை மக்களுக்காகவே என்கிற தளத்தில் இயங்கும் வீதி இன்று வந்தடைந்திருக்கும் இந்த மாபெரும் சபையில் உங்களையெல்லாம் சந்தித்ததில் பெருமகிழ்வு. 

வெறும் நூல் விமர்சனம், படைப்பு என்று மட்டும் சுருங்கிவிடாமல், சக மனிதர்களின் துயர் துடைப்பதில் வீதி தனித்துவம் மிக்கது. 

வீதியின் கூட்டங்களில் வெளிச்சமாய் இருந்த வைகறை திடுமென மறைந்த பொழுது அவர் குடும்பத்திற்கு ஐந்து லெட்சம் ரூபாய் திரட்டிக் கொடுத்த தளம் இது. 

கஜா நம் மாவட்டத்தை கிழித்தெறிந்த பொழுது 247கிராமங்களுக்கு சில கோடி மதிப்பில்  நிவாரணப் பொருட்களை வழங்கி களம் கண்ட தளமிது. அந்த நிகழ்வில் தங்கள் சேவையை வழங்கிய இளம் தோழர்கள், சமீபத்தில் திருமணமான லெட்சியா, விரைவில் திருமணமாகவிருக்கிற சினேகா இப்போது அவையை தன் குரலால் மகிழ்வித்திருக்கிற சுபா என்கிற பெரும் படையின் சாதனை அது. ஜெரால்ட், யூசுப் என இளம் தன்னார்வலர்கள் அப்படி கஜாவில் துவங்கி விதைக்கலாமில் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். 

கொரோனா பெருந்தொற்று முடக்கிய நாட்களிலும் களத்தில் நின்றது வீதி. 

வீதிக் கூட்டங்களை பெருந்தொற்றுக் காலத்தில் எப்படி நிகழ்த்துவது, முடங்கிவிடுவோமோ என்ற கலக்கதை தவிடுபொடியாக்கி ஜூம் சந்திப்புகள் மூலம் வீதியை உலகமெங்கும் எடுத்துச் சென்று வேறு லெவலில் நிறுத்தியிருக்கும் கவிஞர் கீதா

வீதியின் எல்லா அசைவுகளுக்கும் பின்புலமாக இருக்கும் அண்ணன் நிலவன், உலகத்தரம்வாய்ந்த விமர்சகர் அண்ணன் ராசி, அய்யா திருப்பதி, கவிஞர் அமிர்தா தமிழ், அன்பு சகோதரி விஜய லெட்சுமி, சங்கத்தமிழ் ஐ.ஏஎஸ் அகடமியின் நிறுவனர்கள் மற்றும் நாளைய ஐ.ஏ.எஸ் அலுவர்கள் அனைவர்க்கும் வணக்கம். 

ஒரு தேர்வறையில் ஆசிரியர் தோளுக்கு பின்னிருந்து எட்டிப்பார்க்க தேர்வை எழுத சிரமப்படும் ஒரு மாணவனின் நிலையில்தான் நான் இப்போது இருக்கிறேன், வீதியின் நிறுவனர் அய்யா அருள்முருகன், அய்யா உதயச்சந்திரன் என இருவரும் இருக்கும் அவையில் பேசுவது சவாலாகவே இருக்கிறது எனக்கு. 

குறிப்பாக நிறுவனர் முத்தொள்ளாயிரம் குறித்து எழுதிய திறனாய்வுக் கட்டுரை ஒரு மைல்கல் கட்டுரை, அவரது பேச்சுக்கு பின்னர் நான் பேசுவது இயலுமா?

இவர்களெல்லாம் பேசிய ஒரு நூலை இவர்கள் பேசிய பிறகு பேசுவது ?

நான் பேச விழைந்திருந்த ராஜாமார்த்தாண்டன் அனுபவம் குறித்தும், பாம்படம் ஆட ஜல்லிக்கட்டை ஆண்டாண்டுகாலமாக நடத்திய இடத்திலேயே நடத்தவேண்டும் என்ற பாட்டி குறித்தும் அன்புச் சகோதரி கிரேஸ் பேசிவிட்டார். 

இனி பேச என்ன இருக்கிறது என்று தோன்றலாம், ஆனால் நண்பர்களே 

அளவிற்கு மீறிய வளர்ச்சியில் 

எலி 

பயத்தில் 

பூனை 

என்கிற நான்கு வரிக் கவிதையை ஒரு வலதுசாரி சொன்னால் அது இட ஒதுக்கீட்டுக்கு எதிராகவும், இடதுசாரி சொன்னால் சமூக நீதிக்காகவும் புரிந்து கொள்ளப் படுகிற மாஜிக்  இருக்கிறது இல்லையா?

அதே போல தோழர்களே எனக்கு ஏற்பட்ட ஒரு வாசிப்பு அனுபவத்தை மட்டும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். 

ஈரோட்டு விவசாயிகள் குறித்த அந்தக் கட்டுரை, ஒருமுறை ஈரோட்டுக்குச் சென்று அவர்களோடு கரம் குலுக்க தூண்டுகிறது. ஒற்றை நெல் நடவை ஆட்சியர் முன்னெடுத்த பொழுது வெறும் 50 ஹெக்டேரில் நடந்த சோதனையை, கலக்டர் விரும்பினால் 500 ஏக்கருக்கு விரிவடைய செய்யலாம் என்ற அதிகாரிகள் பரிந்துரைக்க, ஆட்சியரோ ஈரோட்டின் விவசாயிகளை குறைத்து மதிப்பிடவேண்டாம் 5000 ஹெக்டேருக்கு திட்டமிடுங்கள் எனப் பணிக்க பயிற்சி துவங்குகிறது. 

இந்த பயிற்சியின் பொழுது ஏற்பட்ட பின்னடைவு புதுமையை விரும்பிய விவசாயிகள் சக விவசாயிகளின் கேலியையும் தாண்டி சங்கடப்பட்ட விஷயம் தங்கள் மனைவிமார்களின் எள்ளல். 


இதை அறிந்த ஆட்சியர் தன் குழுவை தீர்வுகளை கண்டறியச் சொல்ல ஒரு இளம் அதிகாரி பயிற்சியில் கணவன் மனைவி இருவரையுமே ஈடுபடுத்துவோம் என்று சொல்ல மாற்றம் சாதியப்படுகிறது. 

ஆணும் பெண்ணும் இணைந்தால்தான் சமூக மாற்றங்கள் சாத்தியம் என்பதை சொன்ன அனுபவ பாடம் இது.

ஒரு நூல் வாசிக்கப்படும் பொழுது நம்மை வியக்க வைக்கும், திகைக்க வைக்கும், சிரிக்க வைக்கும்.

காலண்டர்களின் கதை சொன்ன அத்தியாத்தில் ராஜா ரவிவர்மா குறித்த தகவல்கள் எனக்கு ஒரு பெரும் அனுபவம். 

ராஜா ரவிவர்மா குறித்து எனக்கு ஒரு தட்டையான புரிதல் உண்டு. அவர் ராஜ வம்சத்தில் பிறந்து, கடவுளர் ஓவியங்களை, இதிகாச ஓவியங்களை வரைந்தவர். 

சுக வாழ்வு வாழ்ந்து, பெரும் கடனோடு மரித்துப் போனவர் என்றவரைதான் என் புரிதல்.  திருமணத்திற்கு பிறகு இணையர் மேனகையின் ஓவியத்தை காண்பித்து இடப்புறம் மெல்லிருளும் வலப்புறம் வெளிச்சமும் இருப்பதை பாருங்கள் என்று சொன்ன பொழுது ரவிவர்மா குறித்து ஒரு சின்ன மரியாதை மனசுக்குள்.

கடவுளர் ஓவியங்களை வரையும் ஒரு ஓவியர் என்ற அளவில் ஒருவிதமான காழ்ப்பு அவர்மீது எனக்கு உண்டு. கிட்டத் தட்ட ஒரு குருடன் யானையின் வாலை பிடித்துப் பார்த்துவிட்டு யானை ஒரு விளக்குமாறு போல் இருக்கிறது என்று சொன்னது போல.

இந்த மனநிலையில் ராஜ ரவிவர்மா குறித்த கட்டுரை, அவரது வாழ்வை சுருக்கமாக அறிமுகம் செய்து, அவர் எப்படி மேற்கத்திய தொழில் நுட்பங்களை உள்வாங்கி தனது ஓவியங்களை சர்வதேச தரத்தில் அச்சிட்டு அயல்நாடுகளுக்கும் அனுப்பி வைத்தார். பிரிட்டிஷ் மக்கள் அவற்றை எப்படி கொண்டாடினார்கள், என்பதையெல்லாம் சொல்லி வரும் பொழுது எனக்கு ஏற்பட்ட புரிதல் திடுக்கிட வைத்தது. 

அருகே இருந்து பார்க்க அனுமதிக்கபடாத கடவுளர்களை லேட்சோப லெட்சம் சாதாரண மனிதர்களின் கரங்களில் தவழ விட்டவர் ராஜா ரவிவர்மா என்கிற செய்தி என்னை ஆட்டிவிட்டது. படித்துவிட்டு பக்கத்தில் இருந்த சோபாவில் ஆனந்த விகடனை போட்டுவிட்டு அழுதேன். 

இதைப் புரிந்துகொள்ள நீங்கள் பெரியாருக்கு முந்தைய தமிழகத்தை உணரவேண்டும். சாமான்ய மனிதர்களை கோபுர தரிசனம் கோடிப் புண்ணியம் என்று சொல்லி கோவில்களுக்குள்ளேயே விட மறுத்த அந்தக் காலகட்டத்தில் ராஜ ரவிவர்மா தனது கலை மூலம் ஒரு பெரும் புரட்சியை அல்லவா ஏற்படுத்தியிருக்கிறார்?

இந்த நூலை படிக்கும் முன் நான் அறிந்த ராஜா ரவிவர்மாவிற்கும் இப்போது நான் அறிந்திருக்கும் ராஜா ரவிவர்மாவிற்கும் எத்துனை வித்தியாசம்? 

அவர் நான் வெறுத்த ஒரு கலைஞர். இன்றோ அவரே நான் கைதொழும் தலைவர்! 

இந்த நூலைப் படிக்கும் நானே வேறு கஸ்தூரி ரெங்கன் படித்த பின்னர் வேறு கஸ்தூரி ரெங்கன். 

வாசிப்போம் நண்பர்களே, காந்தியார் டால்ஸ்டாயை வாசித்தார் நமக்கு விடுதலை கிடைத்தது, அனைவர் உள்ளங்களிலும் அன்பும் நட்பும் மலர்ந்தது. அவரை கொன்றவர்களும் வாசித்தார்கள். 

நாம் நம்மை காந்தியின் பக்கம் நிறுத்தும் நூற்களை வாசிக்கும் பெருங்கூட்டமாக மாறுவோம். 

அய்யா உதயச் சந்திரன் அவர்களின் இந்த நூல் நம்மை காந்தியின் பக்கம் நிறுத்தும். 

வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன் 

வணக்கம். 

Comments

  1. வீதியின் பயணம் சிறப்பாகத் தொடர மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. உங்கள் பதிவில் சில வரிகள் புரியவில்லை, சில புதுக் கவிதைகள் போல.

    நீங்கள் குறிப்பிட்ட நூலின் பெயர் என்ன?

    ReplyDelete
  3. சிறப்பானதொரு உரை. பாராட்டுகள் மது.

    ReplyDelete
  4. ஆகா! ஆகா!! ஆகா!!! என்ன ஒரு பேச்சு!! இனி எதைப் பேசுவது என்று சொல்லி விட்டு இப்படிப் பிளந்து கட்டி விட்டீர்களே!

    ராஜா ரவிவர்மா பற்றிய உங்கள் புரிதலுக்கும் என் புரிதலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. உங்களுடைய அந்தப் புரிதலை ‘மாபெரும் சபைதனில்...’ நூல் மாற்றியது. என்னுடையதை வீதியின் அவைதனில் நீங்கள் ஆற்றிய இந்த உரை மாற்றியிருக்கிறது. தொடர்ந்து படிப்போம்! மிக்க நன்றி!!

    ReplyDelete
  5. அருமையான உரை. ஒரு தேர்ந்த பேச்சாளரின் உரையாக அமைந்துள்ளது. வீதி இன் செயல்பாடுகள் போற்றத் தக்கது.வாழ்த்துகள்

    ReplyDelete
  6. அருமையான உரை ... எத்தனை அழகான புரிதலான நடை....ஆற்றொழுக்கானநடைபடிக்கத்தூண்டும்விதம் அருமை வாழ்த்துக்கள் சகோதரரே

    ReplyDelete
  7. "புள்ளிகளை இணைக்கும் வளைகோடுகள் வண்ணக் கோலங்களாலாக விரிகின்றன." அண்ணா, உங்கள் எண்ணக்கோர்வை அன்று கேட்கும் பொழுதே ஈர்த்தது . ஆகா! எப்படிச் சிந்திக்கிறீர்கள் என்று! அருமையான உரை அண்ணா. வாசிப்பின் ஆழத்தை, அதன் தேவையை அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக