பச்சை ரத்தமும் பதவிஉயர்வுக் கலந்தாய்வும்
கடந்த பதினெட்டு ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றிய எனக்கு திடுமென பதவி உயர்வு வாய்ப்பு ஒன்று கிட்டியது. கடந்த 8/03/2022 அன்று பதவி உயர்வுக் கலந்தாய்வு என்று அறிவிக்க சற்றே தயக்கத்துடனேயே கலந்தாய்வில் கலந்துகொண்டேன். 

ஆனால் 08/03/2022 அன்று கலந்தாய்வு நடைபெறுவதில் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருந்தன. காலை 9:30 மணிக்கு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட நாங்கள் காத்திருக்க  பணிக்கப்பட்டோம். முதல் நாளே முடிந்திருக்க வேண்டிய முதுகலை உயிரியல்  ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பல்வேறு தொழில்நுட்பக் காரணங்களால் நிறைவுறவில்லை. இந்த சிக்கல் தீர்ந்தால் மட்டுமே பதவி உயர்வுக் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிந்தோம். காலை ஒன்பது மணிக்கு துவங்கிய காத்திருப்பு மதியம் ஒருமணிவரை நீளவே அயர்ச்சி துவங்கியது. 

கலந்தாய்வுக்கு வந்த இளவல் தென்னரசுவுக்கு அன்று பிறந்தநாள், மதியம் அவர் அளித்த சிறப்பு விருந்து, இதைக் கடந்து மாலை ஐந்து மணிவரை ஒரு முன்னேற்றமும் இல்லை. இப்படிப்பட்ட நீண்ட காத்திருக்கும் வாய்ப்புகளை வாசிப்பு எளிதாக்கிவிடும் என்பதால் இல்லம் திரும்பி மூன்று புத்தகங்களை  எடுத்துக்கொண்டேன்.

கவிஞர் இந்திரன் குறித்த ஒரு நீண்ட நூல், இந்திர ஜாலம், இன்னொன்று பச்சை ரத்தம். 

கவிஞர் ந.வே.அருள் அவர்களின் இந்த இரண்டு நூட்களோடு கூடவே தி ஹாபிட் என்கிற நூலையும் எடுத்துக்கொண்டு உணவை தவிர்த்துவிட்டு கலந்தாய்வுக்கு திரும்பினேன். இரவு ஒன்பதுக்குள் பச்சை ரத்தம் முழுவதையும்  படித்துவிட்டேன். கலை மக்களுக்காவே என்று இயங்கும் இடதுசாரி பின்னணியில் ஊறிப்போன ஒருவர் கவிநயம்  மிக்கவராக, கலாச்சார படிமங்களை அனாயசமாக கையாளத் தெரிந்தவராக இருந்தால் இப்படி ஒரு படைப்பு சாத்தியம். 

டெல்லி குளிரில் நின்று போராடி வென்ற பஞ்சாப் விவசாயிகளுக்கு அர்ப்பனமாய் எழுதப்பட்ட தொகுப்பு இது. ஒரு முழுக் கவிதைத் தொகுப்பையும் ஒரு போராட்டத்திற்கு அர்ப்பணிக்க முடியுமா? இவ்வளவு மொழி ஆளுமையோடு சமூகக் கவிதைகளை எழுத முடியுமா என்கிற வியப்பெல்லாம் தாண்டிய அற்புதம் இந்த தொகுப்பு. 

இந்த வாசிப்பு தந்த நிறைவில் இந்திர ஜாலத்தையோ, ஹாபிட்டையோ தொட விளையவில்லை மனம். ஒருவழியாய் இரவு ஒன்பது மணிக்கு எங்களுக்கு கலந்தாய்வு துவங்கியது, பதினோரு மணி சுமாருக்கு எனது முறை வந்தது. நான் ஆற்றல்மிகு தலைமையாசிரியரை கொண்ட காவேரி நகர் பள்ளியை தேர்ந்தெடுத்தேன். 

நண்பர்களில் பலரின் முறை வரும் வரை காத்திருந்துவிட்டு, இரவு ஒன்னரை மணிக்கு வீடு திரும்பினேன்.  

அனுபவங்கள் 
தொடரும் 

இவன் 
அன்பன் மது 

Comments

 1. பதவி உயர்வுக்கு வாழ்த்துகள்!

  பதவி உயர்வுக்கும் கலந்தாய்வா? புதிய தகவலாக இருக்கிறதே.

  கீதா

  ReplyDelete
 2. காத்திருக்கும் நேரத்தை அரட்டை அடித்து வீணாக்காமல் அப்பொழுதும் நூல்களை நாடும் உங்கள் படிப்பார்வம் வியக்க வைக்கிறது தோழரே! தில்லி உழவர் போராட்டம் உலகப் போராட்ட வரலாற்றின் முக்கியப் பக்கங்களில் கட்டாயம் இடம்பெற வேண்டிய ஒன்று. அதற்கான முதல் சங்க முழக்கமாய் இந்தக் கவிதை நூல் அமைந்திருக்கும் போலும்! முடிந்தால் ஆசிரியர் அந்நூலைப் பஞ்சாபியில் வெளியிட்டால் யாரைப் போற்றி எழுதினாரோ அவர்களுக்கு நூல் சென்றடையும்.

  ReplyDelete
 3. பணி உயர்வு பெற்ற உங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். தொடரட்டும் உங்களது சீரிய பணி.

  ReplyDelete

Post a Comment

வருக வருக