இனியும் தேவையா ஒதுக்கீடு?




ஊழ்வினை ஊழ்வினை என்பார்களே அதுதான் இது 

ஒரு இலக்கிய அரங்கிற்கு சென்றிருந்தேன், நிகழ்வின் நடுவே  ஒருவர் அரங்கை விட்டு வெளியேற அவருக்கு தேநீர் வழங்கப்  பணிக்கப்பட்டேன். 

சில மிடறுகள் உள்ளே சென்றதும் சார் நான்  ஒன்று சொல்லவா என்றார்... சொல்லுங்க என்றேன்.



அய்யா சொன்னார் இனி எதுக்கு சார் இட ஒதுக்கீடு? பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு தருவதுதான் முறை என்றார். 

என்னை அவருக்கு தேநீர் வழங்கச் சொன்ன நண்பருக்கு நான் எதோ பெருந்தீங்கை செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படி ஒருவருக்கு தேநீர் வழங்க சொல்லி என்னை பணித்திருப்பாரா என்ன?

நான் மௌனமாக இருக்கவும் அதை சம்மதமாக எடுத்துக்கொண்டு மேலும் விளக்கினார். 

சார் நான்  ஒரு டாக்டர். என் பிள்ளையை நான் பணம் கட்டியே படிக்கவைக்க கூடிய அளவில் செல்வம் இருக்கிறது. இன்னும் எனக்கு எதற்கு இட ஒதுக்கீடு என்றார்.

நான் திருமாவிடம் நேரே கேட்கிறேன் எதற்கு இடஒதுக்கீடு என்று என்றார். ஏற்கனவே ஒரு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரிடம் கேட்டிருக்கிறேன், அதற்கு அவர் அதை எடுத்தால் எங்களால் வாழ முடியாது என்று  சொன்னதாக  சொன்னார் 

இந்த உரையாடல் நடந்துகொண்டிருக்கும் பொழுதே என் வகுப்பில் நீண்ட நாள் வராத மாணவர்களின் பின்புலம் நினைவில் வந்து வலித்தது. 

வாயில் வந்த தடித்த வார்த்தைகளை நசுக்கி விட்டு அய்யா நீங்கள் என்ன சாதி என்றேன். 

சொன்னார், எம்.பி.சி. 

அமெரிக்க கல்வி நிறுவனம் வெள்ளை மாணவர்களுக்கும் கறுப்பின மாணவர்களுக்கும் இடையே இருக்கும் கற்றல் அடைவுகளை குறித்த  ஒரு ஆய்வை செய்திருக்கிறதே தெரியுமா என்றேன்.

தெரியாதே எனவும் தொடர்ந்தேன் 

தேர்வு எழுத சென்ற வெள்ளை மாணவர் குழுவிடமும், கறுப்பின மாணவர் குழுவிடமும் அவர்களின் நிறம் குறித்த சில வாக்கியங்களைச் சொல்லி தேர்வு எழுத சொல்லியிருக்கிறார்கள். 

ஏய், நீ வெள்ளை இனம், செமையா தேர்வு எழுது என்றும், கறுப்பரிடம் நீங்கள் கறுப்பர்கள், அசிங்கம், தேர்வு தேவையா என்கிற ரீதியில் பேசி தேர்வறைக்கு அனுப்பபட்டார்கள் மாணவர்கள். 


தேர்வு முடிவுகள் சுமாராக படிக்கும் வெள்ளை இன  மாணவர்கூட தன் இயல்பாக வாங்கும் மதிப்பெண்ணை விட அதிகமாக பெற்றிருப்பதையும், நன்கு படித்து நல்ல மதிப்பெண் பெரும் கறுப்பின மாணவர்களின் மதிப்பெண் சரேலென சரிந்திருப்பதையும் பதிவு செய்திருக்கிறார்கள். 

இன உணர்வு எப்படி ஒரு மாணவரின் கற்றலை பாதிக்கும் என்பதற்கான நிரூபிக்கப்பட்ட ஆதாரம் இது. 

நிலவுக்கு நாலு ராக்கெட் விடும், செவ்வாயில் குடியேறும் திட்டம் வைத்திருக்கிற ஆனானப்பட்ட அமெரிக்காவின் சமூக நிலை இது. 

சமரசம் உலவும் இடமே என்று பாடும் இங்கே புதைப்பதைக் கூட பதைத்து பதைத்து செய்ய வேண்டியிருக்கிறது, என்கிற பொழுது குறிப்பாக சாதிய உணர்வு மரபுப் பண்புகளில் கடத்தப்பட்ட சமூக அமைப்பான டிசிட்டல் இந்தியாவில் இடஒதுக்கீடுகளை மறுப்பது மன்னிக்க முடியாத பெரும் குற்றம் என்றேன்.

இந்த தகவல்கள் எனக்குப் புதிது என்றார். 

யோசிக்கட்டும் ...அவர் 

Comments

  1. அருமையான பதிவு தோழரே!
    அவர் மட்டும் இல்லை எல்லாருமே சிந்திக்க வேண்டிய விதயம் இது.

    நான் பார்த்த வரை, இட ஒதுக்கீடு வேண்டா எனச் சொல்லும் இப்படிப்பட்டவர்கள் அனைவருமே அது பற்றி ஆழ்ந்த புரிதல் இல்லாதவர்களும் கள நிலவரம் அறியாதவர்களும்தாம். நாம் எடுத்துச் சொன்னாலும் திரும்பத் திரும்பச் சுற்றிச் சுற்றி வேறு கோணங்களில் தங்கள் வாதங்களை எடுத்து வைத்துக் கொண்டே இருப்பார்களே தவிர நாம் சொல்லும் கருத்துக்களில் உள்ள நயன்மையைச் (நியாயத்தை) சிந்தித்துப் பார்க்க மாட்டார்கள்.

    என் ஆருயிர் நண்பர் ஒருவர். பள்ளிப் பருவத்திலிருந்தே இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் பேசி வந்தவர். அவர் பேச்சுக்களைக் கேட்டு நானும் அப்படிப்பட்ட கருத்துக்களையே கொண்டிருந்தேன். பின்னாளில் எழுத்தாளர் ஞாநி அவர்களின் ‘ஓ பக்கங்கள்’ என்னைத் திருத்தின. ஆனால் அந்தத் தொடரில் நான் படித்ததையும் அதன் பின்னர் இணையத்திலும் பிற இடங்களிலும் நான் படித்த பலவற்றையும் எவ்வளவோ எடுத்துக் கூறியும் திருந்தாத என் நண்பர், ஓரீர் ஆண்டுகளுக்கு முன் ஒரு குறும்படம் பார்த்து இட ஒதுக்கீடு குறித்த தன் கருத்தை மாற்றிக் கொண்டார். என்ன செய்வது, நம் மக்களுக்கு எதையுமே காட்சி வடிவில் சொன்னால்தான் உறைக்கிறது.

    ReplyDelete

Post a Comment

வருக வருக