தி கிரியேட்டர்செயற்கை நுண்ணறிவு பாய்ச்சலை நிகழ்த்திக்கொண்டிருக்கும் இந்த காலத்தில், இதுகுறித்த படங்கள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன. தி கிரியேட்டர் அவற்றில் ஒன்று, வழக்கமான அதிரடி திரைப்படங்களில் ஒன்றாக இல்லாது தனித்து நிற்பது சில குறிப்பிட்ட காட்சிகளை ஒரு பேரலை போல மூழ்கடிக்கும் அற்புத இசையால்! 

இசை ஹான்ஸ் ஸிம்மர் அப்புறம் வேறு எப்படி இருக்கும். படம் பார்க்கும் பொழுதும் பிறகும் பல்வேறு முறை கடைசி விவசாயி திரைப்படத்திற்கு இளையராஜா வழங்கிய இசையை மறுத்து அவரது பணியை புறந்தள்ளி வேறு ஒரு இசைக்கலைஞரை பயன்படுத்திக்கொண்ட மணிகண்டன் நினைவில் வந்தார். 

இந்தப் படத்தைப் பார்த்த பிறகு இளையாராஜா இசையைப்  புறக்கணித்ததற்காக மணியின்மீது இருந்த கோபம் வெகுவாக குறைந்துவிட்டது.  இயக்குனர், கதை, காட்சி இவற்றையெல்லாம் தாண்டி அற்புதத்தை விளைவிக்கும் ஒரு இசைகோவை படத்திற்கு அவசியமா என்கிற கேள்வி மில்லியன் டாலர் கேள்வி மனதில் எழுந்தது. 

நல்லவேளை காரத் எட்வர்ட்ஸ் தனது காட்சிகளை இசை மூழ்கடிப்பதை அனுமதித்திருக்கிறார். நம்ம மணிகண்டன் போல தூக்கிப் போட்டுவிடவில்லை. 

செயற்கை நுண்ணறிவு குறித்து வந்த படங்களில், தி டெர்மினேட்டர், ஈகிள் ஐ, மாட்ரிக்ஸ் போன்ற படங்கள் மனிதகுலத்தை பூண்டோடு அழிக்கும் கொடூரமான தொழில்நுட்பமாக செயற்கை நுண்ணறிவை காட்டியிருப்பார்கள். 

ஆனால், மனிதர்களிடமிருந்து தப்பிபிழைக்கும், தன்னை அழிக்கும் மனிதர்களைக் கூட நேசிக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவை இந்தப்படம் முன்வைக்கிறது. 

இப்படியான ஒரு காட்சியில் மனிதனான ஜோஸ்வா செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திர குழந்தையான  ஆல்பியிடம் பேசுகிறார், இயந்திர குழந்தை சுவர்க்கம் என்றால் என்ன என்று கேட்கிறது, மேலே இருக்கும் அமைதியான இடம், மரணத்திற்கு பிறகு மனிதர்கள் அங்கே போவார்கள் என்று சொல்ல, அதற்கு குழந்தை அப்போ நீ அங்கே போவாயா என்கிறாள், ஜோஷுவா, இல்லை நான் போக முடியாது, நல்லவர்கள் மட்டும்தான் அங்கே போக முடியும் என்று சொல்கிறான். இதற்கு இயந்திர குழந்தை, ஆக நீ நல்லவன் இல்லை என்பதால் சொர்க்கத்திற்கு போக முடியாது, நான் இயந்திரமென்பதால் போக முடியாது என்று சொல்ல, இந்த வாக்கியம் முடிகிற இடத்தில் ஹான்ஸ் சிம்மர் நிகழ்த்தியிருக்கும் இசை கோர்வை ஒரு பேரற்புதம். 

எனக்கென்னவோ இயக்குனர் நமது தற்கால வாழ்வியல் முறை சுயநலமிக்க இயந்திரமாக நம்மை மாற்றிவிட்டதாக சொல்வதாகவேபடுகிறது. 

இது எனக்கு ஒரு பிரதியோகமான பிரச்சனையை ஏற்படுத்திவிட்டது, DWD என்று படம் பார்ப்பவன் நான், (டௌன்லோட் வாட்ச் டெலீட்) இந்தப்படத்தை டெலீட் செய்ய மனம்வரவில்லை! இசைக்  கோவையைத்  தனியே வைத்திருந்தாலும் சில காட்சிகளை அவற்றின்  இசைக்காகவே திரும்பத்  திரும்ப  பார்க்க வேணும் என்று தோன்றுகிறது. 

படம் எடுத்து எண்பது மில்லியனில், வசூல் செய்தது நூற்றி நான்கு  மில்லியன். நட்டமில்லை என்றாலும் இன்னும் நன்றாக போயிருக்கலாம். 

படத்தின் நாயகனாக ஜான் டேவிட் வாஷிங்டன், நாயகியாக ஜெம்மா சென், குழந்தையாக மெடாலின் என நடித்திருக்கும் ஒவ்வொருவரும் மிக அற்புதமாக தங்கள் பங்களிப்பை செய்திருக்கிறார்கள். 

செயற்கை நுண்ணறிவு பிரியர்கள், சாட் ஜிபிடி நண்பர்கள் தவிர்க்ககூடாத படம். 

தொடர்வோம் 

அன்பன் 

மது 

பி.கு.

காரிகனை ரொம்பவே மிஸ் பண்றேன். மனுஷன் பார்த்திருந்தா இன்னுமோர் அற்புத இசைப்பதிவு சாத்தியமாகியிருக்கும். 

Comments