1996 இல் என்னுடன் தனியார் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் முதுகலை ஆங்கில ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டு அரசு பணியில் சேர்ந்தார்.
வாழ்த்துக்கள் தெரிவித்து, அவர் தந்த சிற்றுண்டிகளை சுவைத்ததோடு நிறுத்திக் கொண்டேன்.
2012ம் ஆண்டு ஒரு தேர்தல் பணிக் களத்தில் இளவல் ஒருவரைச் சந்தித்தேன். அந்த இளவல் நண்பரின் கிராமதில் இருந்து வருவதாகச் சொல்லவும் அவரைத் தெரியுமா என்று கேட்டேன்
எங்க அண்ணன் சார் அவரு. என்றார்.
ஓ அப்படியா என்றேன் சிறு வியப்புடன்.
அவரைப் பார்த்துத் தான் நான் ஆசிரியர் ஆனேன் என்ற சொன்னார்.
ரொம்ப நல்ல விஷயம் இது என்றேன் நான்.
அவருக்கு வேலை கிடைத்தவுடன் எங்கள் கிராமத்தில் ஒரு விழிப்புணர்வு உருவானது, இன்றைக்கு 12 பேர் முதுகலை ஆங்கில பட்டத்துடன் இருக்கிறோம், அதில் ஆறு பேர் அரசுப் பணியில் இருக்கிறோம்.
எஞ்சியிருக்கும் ஆறு பேர் எம்பில் முடித்துவிட்டு இருக்கிறார்கள் என்றார்.
ஒரு பணி நியமன ஆணை என்பது கிராமத்தின் கல்விப் பாய்ச்சலை எவ்வளவு தூரம் முன் செலுத்துகிறது என்பதற்கான புரிதல் எனக்கு கிடைத்தது.
இன்றைய சூழலோடு இந்த நிகழ்வை பொருத்திப் பார்க்கிற பொழுது கிராமப்புற மாணவர்களின் கல்வி குறித்த அலட்சியத்திற்கு காரணம் போதிய வேலை வாய்ப்புகளை அமைப்பு உருவாக்காததுதான் என்பது தெளிவாக புரிகிறது.
whatsapp, சமூக ஊடகங்கள், பப்ஜி, பிரீ பையர், இன்ஸ்டாகிராம் என எத்தனையோ விளையாட்டுகள் மாணவர்களின் நேரத்தை தின்றாலும். பணி வாய்ப்புகள், அதற்கான பயிற்சி முகமைகள், இல்லாதது ஒரு பெரும் குறை.
அமைப்பின் குறைபாட்டால், மது அருந்துதல், வெட்டித் தகராறுகளில் ஈடுபடுதல், 76 ஆண்டுகளுக்கு பிறகும் ஜாதி பெருமை பேசுதல் என்ன பல்வேறு புறக் காரணிகள் இருந்தாலும் பிரதானமான காரணி வேலையின்மைதான்.
தங்கள் கண் முன்னால். தங்களது தெருவில், அண்டை வீட்டில். குறைந்தபட்சம் தங்கள் கிராமத்தில் யாராவது ஒருவர் குரூப் 4 தேர்விலோ, குரூப் 2 தேர்விலோ தேர்ச்சியுற்று தகுதி பெற்று இருந்தால், அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை கண்ணால் பார்த்திருந்தால் கிராமப்புற மாணவர்கள் செயல் திறனில் கல்வி ஆர்வத்தில் ஒரு பாய்ச்சல் வந்திருக்கும்.
இந்தப் பிரச்சனைக்கான தீர்வுகளை நோக்கிய முன்னெடுப்பு
முன்னாள் வேலை வாய்ப்பு துறை இயக்குனர் சுரேஷ்குமார் அவர்களின் வழியில் தன்னார்வ பயிலும் பட்டங்களை ஏற்படுத்துவதும், வெறுமனே தமிழக அரசு பணிக்கு மட்டுமே நமது மாணவர்களை தயார் செய்யாமல், அகில இந்திய போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்வதும் அவசியம்.
தற்போது எந்த வகுப்பு வினாத்தாள்களை எடுத்துக் கொண்டாலும், ஒரு மதிப்பெண் வினாக்களில் பல, கிட்டத்தட்ட போட்டித் தேர்வுகளில் கேட்கப்படுவது போலவே வடிவமைக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம்.
எதிர்வரும் காலங்களில் போட்டித் தேர்வுக்கான வினாக்களையும் அவற்றின் விடைகளையும் பாடத்திட்டத்தில் இணைத்து பயிற்சி அளித்தால் தமிழகம் இந்திய ஒன்றிய அளவில் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கும்.
நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வரும் தமிழகமும் இளைஞர் வேலைவாய்ப்பை ஜீரோ பட்ஜெட்டில் பெருக்கி விடலாம்.
இத்தனை அலுவலர்கள் இருக்கிறார்கள். ஏன் இப்படி யோசிக்க மாட்டேன் என்கிறார்கள் என்று தெரியவில்லை.
நல்லதே நடக்கும் என்று நம்புவோம்
தொடர்வோம்
அன்பன்
மது
Comments
Post a Comment
வருக வருக