நிகிலும் நானும்

செல்வன் நிகிலேஷ்வரன் 

ஜே சீஸ் அமைப்பின் மண்டலம் பதினெட்டின் தலைவராக திரு ரகுராமன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு மண்டல மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திரு சுப்புராஜ் மிக அருமையான மண்டலத் தலைவர் உரையொன்றை வாசித்தார்.

மண்டல மாநாட்டில்  நிக்ஹில் பவுண்டேசன் என்று எழுதப்பட்ட மஞ்சள் டி ஷர்டில் ஒரு குழு இருக்க நான் மெல்ல ஒருவரை அணுகி யார் சார் நீங்க? அது என்ன நிகில் நிறுவனம் என்று கேட்டேன். அன்று நான் கேட்டது மண்டலம் பதினெட்டின் முன்னணி பயிற்சியாளரிடம் என்பதோ பெரும்பாலான பயிற்சியாளர்களுக்கு அவர் எழுதிய நூல்கள் தான் கையேடுகளாக பயன்படுகின்றது என்பதோ எனக்கு தெரியாது!

அவரோ மிகப் பொறுமையாக நாங்கள் வாழ்வியல் திறன் பயிற்சியை கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறோம். தன்னை அறிதல், இலக்கமைதல், தொடர்பாற்றல் மற்றும் நினைவாற்றல் பயிற்சிகளை கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கிவருவதையும் பொறுமையாக விளக்கினார்.

எதற்காக நிகில் என்று பெயர் என்றபோது மிக சாதரணமாக சொன்னார் நிகில் என்னுடய மகன் ஒரு சாலைவிபத்தில் இறந்துவிட்டார். அவரது நினைவாக இந்த பயிற்சிகளை அவரது கடைசி விருப்பத்தின் பெயரில் கிராமத்து குழந்தைகளுக்கு இலவசமாக தருகிறோம் என்றார்.  மத்திய வணிக வரித்துறையில் பணிபுரிவதாகவும் கூறினார். (அவர் பணி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இணையானது என்பதெல்லாம் அப்போது எனக்கு தெரியாது)

நிறுவனர்  திரு சோம. நாகலிங்கம் 
எனது பள்ளி மாணவர்களுக்கு இந்தப் பயிற்சியை கொடுக்க விரும்பினேன் தலைமை ஆசிரியர் மருத்துவ விடுப்பில் சென்றதால் முடியவில்லை. அந்த ஆண்டு ஆசைப்பட்டது 2012ஆம் ஆண்டு தான் சாத்தியமானது. ஆனால் இன்று நானும் ஒரு நிகில் பயிற்சியாளன்! எழுதும் பொழுதே புன்னகைக்கிறேன். எல்லாம் காலம் செய்யும் கோலம்.

நிகில் நிறுவனம் எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக செயலற்றுகொண்டிருந்த ஆசிரியனை உயிர்ப்பித்தது என்றால் மிகையல்ல. பல்வேறு ஊர்களில் பலவாறு தர மாணவர்களை சந்திப்பதும், பல்வேறு பயிற்சியாளர்களை சந்திக்கும் வாய்ப்பும் அவர்களின் மேலான சிந்தனையும் என்னை மீட்ருவாக்கம் செய்தது.  சத் சங்கம் என்று சொல்வார்களே அது நிகில் மாதிரி தன இருக்கும் என்று நினைக்கிறன்.


முள்ளன்குறிச்சி, ஆமனக்கண் பட்டி சிவகாசியின் ஒரு பள்ளி என மிக அருமையான மாணவ மாணவியரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது மாணவர்களை நான் மனதிற்குள் எடைபோடவும் அவர்களின் நல்ல பண்புகளை உணரவும் முடிந்தது ஒரு கூடுதல் பலம். சில நேரம் வித்யாசமான அனுபவங்களும் கிடைக்கும். ஒரு பள்ளியில் பயிற்சி எடுத்தபொழுது எனது ஷூவை மிதித்தான் ஒரு மாணவன்!

பயிற்சி, பயிற்சியாளர்கள் சந்திப்பு ஒரு பெரிய பரிசு என்றாலும் மிக நீண்ட 3+3 மணி நேர பயணத்தின் பொது நான் கேட்கும் ஒலிப் புத்தகங்கள் ஒரு வரம். வேறு எந்த நிலையிலும், இடத்திலும் கேட்க முடியாத இந்த புத்தகங்கள் எனது வாழ்வின் சில ஒளி விளக்குகளை ஏற்றி வைத்தது என்றால் மிகையாகது.

நான் சந்திக்கிற மாணவர்களின் புன்னகையில் நிகில் வாழ்வதாக உணர்கிறேன் நான். நான் மாணவர்களின் வாழ்வை மேம்படுத்தும் பயிற்சியை அளிக்கிறேன், நிகில் என்னை மேம்படுத்தும் அனுபவங்களை எனக்கு தருகிறான்.


தங்களின் தாள முடியாத இழப்புக்களை கூட சமூகத்திற்கு பயன்தரும் ஒரு செயலாக வெளிப்படுத்துவதில் நிறுவனர் திரு நாகலிங்கம், தலைவி திருமதி மலர்க்கொடி நாகலிங்கம் தம்பதிகள் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்கள். உலக சுகாதார அமைப்பினால் வலியுறுத்தப்பட்ட பயிற்சிகளில் ஆறு பயிற்சிகளை மாணவர்கட்கு அளித்து வரும் நிகில் நிறுவனம் தேசத்தின் கட்டுமான பணிகளின் ஒரு எளிய பங்களிப்பாளர்.

நன்றி நிகில்.

அன்பன்

மது.  

பயிற்சிகள் குறித்து அடுத்த பதிவில் .....

Comments