மூன் லைட் ஆஸ்கர் வின்னர் 2017!


எப்படி எப்படி என்று யோசிக்கவைக்கும் கதைக்களம். பொதுவெளியில் இன்னுமே பேசாப்பொருளாக இருக்கும் ஓரினச்சேர்க்கை குறித்து படத்தில் வரும் வசனம் ஒன்று
"நீ அப்படி இருப்பதில் தப்பு இல்லை"
"ஆனா அதற்காக யாரும் உன்னைக் கேலி செய்யதேவையில்லை, அதை நீ அனுமதிக்கக் கூடாது"

யோவ் என்னய்யா சொல்ற இந்தப் படத்துக்கா ஆஸ்கர் கொடுத்தாங்க?ஆம்.

வெறும் ஓரினச்சேர்க்கை பரப்புரை படமல்ல. மில்க் போன்ற படங்கள் இதற்கு முன்னரே வந்துவிட்டன. இருப்பினும் மூன்லைட் ஸ்கோர் செய்வது ஓரினச் சேர்கையாளாராக ஒருவன் மாறுகின்ற காரணிகளைப் பட்டவர்த்தனமாக சொல்லிப் போவதில்.

உண்மையில் இயக்குனர் பாரி ஜென்கின்ஸ் அசத்திவிட்டார். மேக்கிரான் என்பவர் எழுதிய  சுயசரிதைத்தான் மூன்லைட். இன் மூன் லைட் ப்ளாக் பாய்ஸ் லுக் பளு  என்கிற பெயரில் நாடகமாக எழுதினார் டாரல் ஆல்வின் மெக்கிரான். இதைத்தான் இப்போது திரைப்படமாக எடுத்து விருதை தட்டியிருக்கிறார்.
தனது அம்மா எய்ட்ஸ் நோயில் இறந்த மன அழுத்தத்தை கடக்க டாரல் ஆல்வின் மேக்கிரான் எழுதிய நாடகம் இன்று பெருவாரி விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறது.

படமா இது என்று விமர்சிக்கும் விமர்சகர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஹோமோபோபிக் என்று உதறித்தள்ளிவிட்டு படத்தை கொண்டாடுகிறார்கள் திரைக்காதலர்கள்.

தந்தை இல்லாச் சிறுவன் லிட்டில்  சக நண்பர்களால் தொடர்ந்து தாக்கப்படுகிறான். அவர்களிடம் இருந்து தப்ப அருகே இருந்த போதை பவுடர் விற்கும் வீட்டிற்குள் நுழைந்து தாழிட்டுக்கொள்கிறான். மீட்பராக வருகிறான் பவுடர்வியாபாரி ஜோன். வாயைத்திறந்து பேச மறுக்கும் அவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவிட்டு மறுநாள் காலை அவனது வீட்டில் சேர்ப்பிக்கிறான் ஜோன்.
ஒரு சின்ன தாங்க்ஸ்கூட சொல்லாமல் ஜோனை முறைக்கிறாள் அம்மா. இன்னொரு சந்திப்பில்  லிட்டிலின் அம்மா Pala, ஜோனின் முகத்தில் கதவைச் சாத்துகிறாள்.

லிட்டிலின் நண்பன் கெவின் அவனுக்கு சண்டையிடப்பழக்குகிறான்.

இதற்கிடையே வீட்டில் அம்மா யாரோ ஒருவனுடன் இருப்பதைப் பார்கிறான் லிட்டில்.

ஜோன் மற்றும் லிட்டிலின் நட்பு இறுகுகிறது. ஒருநாள் லிட்டிலை கடலுக்கு அழைத்துச் சென்று நீச்சல் பழக்குகிறான் ஜோன்.

காட்சிகள் மாற லிட்டிலின் தாய் தன்னுடைய இடத்தில் போதை மருந்தை புகைப்பதைப் பார்கிறான் ஜோன். கண்டிக்கிறான்.

நீ எதுக்கு விக்கிற என்று வாயை அடைதுவிடுகிறாள் Paula.


மிக மோசமான வசவுச் சொல்லான பாகட் (ஓரினச் சேர்க்கையாளர்களை மலினப்படுத்தும் சொல்) என்ற சொல்லால் அழைக்கப்படும் லிட்டில் ஜோனிடம் அதுகுறித்து உரையாடுகிறான். ஜோன் ஓரினச்சேர்க்கையாளாராக இருப்பதில் தவறு இல்லை என்றும் அதுகுறித்து வெட்கப்படத்தேவையில்லை என்கிறான்.
தொடர்ந்த காட்சியில் லிட்டில் ஜோனிடம் நீ என் அம்மாவிற்கு பவுடர் விற்றாயா என்று கேட்க தலையைத் தொங்கப் போடுகிறான் ஜோன்.

திரைக்கதை இப்போது செரோன் என்று இரண்டாம் பாகத்திற்கு போகிறது.

செரோன் வளர்ந்த பின்னரும் தொடர்ந்து கேலிக்கு ஆளாகிறான். பால்யத்தில் இருந்து தன்னை அவமானப்படுத்தும் அதே குழுவிடம் சிக்கி சின்னாபின்னமாகிறான். பதுங்கிப் பதுங்கித் திரிகிறான்.

ஒரு மோதலின் பின்னர் மன அழுத்தத்தில் மெட்ரோவில் பயணித்து ஒரு நிலையத்திலேயே தூங்குகிறான். பிறகு அங்கு வரும் தனது ஒரே நண்பன் கெவினுடன் தனது முதல் அனுபவத்தைப் பெறுகிறான்.

ஆனால் மறுநாள் பள்ளியில் கெவினை கார்னர் செய்து செரோனை தாக்கச் சொல்ல அவனும் தாக்குகிறான். கீழே விழும் செரோனை ஒரு குழு மிதிக்கிறது. பள்ளியின் முதல்வர் யார் அவனைத் தாக்கியது என்று கேட்க தெரியாது என்று சொல்லி வீட்டிற்கு போகிறான் செரோன்.

வாஸ்பேசினில் ஐஸ்கட்டிகளை நிரப்பி தனது முகத்தை முக்கி எடுத்து எதிரே இருக்கும் கண்ணாடியில் தெரியும் சிதிலமடைந்த தனது முகத்தை வெறிக்கிறான்.

மறுநாள் பள்ளியில் தன்னை மிதித்த குழுவின் தலைவனை பின்னிருந்து ஒரு நாற்காலியால்தாக்குகிறான். அவன் கீழே விழுந்து உணர்விழக்க உடைந்த ஒரு கைப்பிடியால் மீண்டும் ஒரு ஆக்ரோஷ குத்து. பதறும் ஆசிரியர்  விரைந்து வந்து அவனைப் பிடித்து அழுத்த அடுத்த ஷாட்டில் காவல் வாகனத்தில்  ஏறுகிறான்.

தன்னைப் பார்க்கும் நண்பன் கெவினை உணர்வுகளே இல்லாத ஒரு பார்வையை வீசி பிரிகிறான்.

அடுத்த பாகம் ப்ளாக் !

இப்போது செரோன் ப்ளாக், செதுக்கப்பட்ட  உடலுடன் இருக்கிறான். அவனே ஒரு போதை மருந்து வியாபாரி! ஆனால் தனியேதான் தூங்குகிறான். ஒருநாள் செல்போன் ஒலிக்க எடுத்தால் கெவின்!

கெவின் இப்போது ஒரு சமயற்கலைஞர்! ஒரு உணவுவிடுதி முகவரியைச் சொல்ல செரோன் அங்கே போகிறான். ஸ்பெசல் டிஷ் ஒன்றை சாப்பிட்டுவிட்டு மெல்ல பேசி அவன் வீட்டிற்கு போகிறான்.

அந்த கடற்கரை நாளுக்குப் பிறகு யாரிடமும் நெருக்கமாக உணரமுடியவில்லை என்று சொல்லும் செரோனை தனது தோளில் சாய்த்துக்கொள்கிறான் கெவின்.

திடுமென குட்டி செரோன் பரந்த கடலின் முன்னே நின்று பார்வையாளர்களைத் திரும்பப் பார்க்க திடுக்கென முடிகிறது படம்.


குழந்தைப் பருவத்தில் இருந்து தன்மீது சுமத்தப்படும் ஒரு பிம்பத்திற்கு எப்படி ஒருமனிதன் அடிமையாகிறான் என்பதைச் சொன்னதில் ஸ்கோர் செய்திருக்கிறது படம்.  அறிவுபூர்வமாக வாதிட்டால் தேர்வு செரோனிடம்தானே இருக்கிறது அவன் மாற்றைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே என்று கேட்கலாம்தான். ஆனால் வாழ்வு எப்போதும் அறிவுத் தளத்தில் இயங்குவதில்லை. மதவெறிப் படுகொலைகளை அரசியல் ஆதாயமாக்கியத்தைப் பார்த்தோம்தானே.

செரோனுக்கு அப்பா இருந்திருந்தால், அல்லது அவனது விதவைத்தாய் ஒழுக்கத்தோடு இருந்திருந்தால், முரட்டு நண்பர்களை சந்திக்கும் மனவலு அவனுக்கு இருந்திருந்தால், சிறிய வயதிலேயே அம்மாவின் நடத்தையின் மூலம் பெண்கள் மீது வெறுப்பு அவனுக்கு வராமல் இருந்திருந்தால் என ஏகப்பட்ட இருந்திருந்தால் பட்டியல் இருக்கு. ஆக ஒருமனிதனை சூழ்நிலை எப்படி பழிவாங்கும் என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம் இந்தப் படம்.

எனக்கு பிடித்த சில விசயங்கள்.

காமிரா. யாருப்பா அந்த ஜேம்ஸ் லாக்ஸ்டன்? அசத்தல் ஜாக்கி சேகர் என்ன சொல்றார்னு பார்ப்போம். ஜேம்ஸ் லாக்ஸ்டனின் ஒளிப்பதிவில் வரும் திரப்படங்களை மிஸ் பண்ணக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன்.
குறிப்பாக நீச்சல் பழகும் பொழுது காமிரா ஒரு தனிக்கதையே சொல்லிவிடுகிறது. அலைகளுக்குள் உயர்ந்து அமிழ்ந்து மீண்டும் எழும் லிட்டிலின் தலை இன்னும் பதைக்க வைக்கிறது மனத்திரையில்.

நடிப்பில்
ஜோனாக வரும் மகார்சாலா  அலி வாவ் நடிப்பு  என்றால் பாலாவாக வரும் நயோமி ஹாரிஸ் போதைஅடிமையாகவே மாறிவிட்டார். முழுக்க முழுக்க ஆப்ப்ரிகன் அமரிக்கர்கள் நடித்த படம் இது.

படத்தின் இரண்டு எடிட்டர்களில் ஒருவர் பெண்மணி. ஜோய் மெக்மிலன்!

சிறுபிராய அனுபவங்கள் எப்படி ஒருமனிதனின் பாலியல்தேர்வை முடிவுசெய்யக்கூடும் என்பதைவிட அதை சொன்ன விதத்தில் இருக்கும் நேர்த்திதான் படத்துக்கு அவார்ட் பெற்றுத் தந்திருக்கிறது. திரைக்கதைக்காகத்தான் விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள் படத்தை.

படம் வயது வந்தோருக்கு மட்டுமே என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை!

காதில் புகைவரவைத்தவிசயம் ஒன்று உண்டு என்றால் அது படத்தில் வரும் பள்ளி!

எத்துனை வசதிகள், எத்துனை ஏற்பாடுகள் நமது பள்ளிகள் அந்த நிலைக்கு போவதற்கு வேறொன்றும் வேண்டாம் நல்ல வாக்காளர்கள் இருந்தால் போதும்!
Share on Google Plus

About Kasthuri Rengan

  Blogger Comment
  Facebook Comment

20 comments:

 1. இந்தப் படத்தை பார்க்கவேண்டும் என்றிருந்தேன். இப்போது உங்கள் பதிவை படித்த பின் கண்டிப்பாக பார்க்க வேண்டாம் என்று தோன்றுகிறது. ஆணும் ஆணும் ---- என்ற தற்போதைய நாகரீக உலகின் புதிய ஆபாசத்தை இத்தனை அழகாக விமர்சிக்க முடியுமா என்று ஆச்சர்யம் ஏற்படுகிறது.

  ஓரினச் சேர்க்கை போன்ற euphemistic terms கொண்டு என்னதான் இதை நியாயப்படுத்தினாலும் மேற்குலகின் எல்லா புரட்சியையும் நாம் கொண்டாடவேண்டியதில்லை. ஏற்றுக்கொள்ளவும் தேவையில்லை.

  எப்படி ஒருவன் peadophile ஆக மாறுகிறான் என்று நாளைக்கு இதே அமெரிக்கர்கள் படம் எடுப்பார்கள். அதையும் நாம் கொண்டாடுவோம்.

  என் கோபம் இது போன்ற அபத்தங்களுக்கு ஆஸ்கார் அங்கீகாரம் கிடைத்ததே என்றுதான். உங்கள் மீதல்ல.

  ReplyDelete
  Replies
  1. உண்மையில் பாலியல் கல்வி எவ்வளவு அவசியம் என்று உணரவைத்த படம் ...
   அவ்வளவுதான் ...
   இது குறித்த திறந்த விவாதங்கள் துவங்கி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன
   விமர்சகர்கள் கொண்டாடுகிறார்கள் தோழர்

   Delete
 2. வித்தியாசமான படம்தான்
  அறிமுகத்திற்கு நன்றி நண்பரே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி தோழர்

   Delete
 3. பார்க்க விருப்பமே இல்லை...

  உங்களுக்கு பொறுமையும் அதிகம்...!

  ReplyDelete
  Replies
  1. எனது எழுத்துப் பாணி குறித்து சிந்திக்கவைத்த பின்னூட்டம்

   Delete
 4. நல்லதொரு விமர்சனம். நன்றி மது.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் பயணச்சித்தரே

   Delete
 5. நல்ல விமர்சனம். படம் பார்க்க வேண்டும்...இனிதான்...

  ReplyDelete
  Replies
  1. ஒளிப்பதிவிற்காக
   மேடை நாடக பாதிப்பில் இருக்கும் திரைகதைக்காக நீங்கள் பார்க்க வேண்டும்..

   Delete
 6. விரிவான பகிர்வுக்கு நன்றி தோழர்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ஜி

   Delete
 7. கஸ்தூரிரெங்கன் ..நேற்றே இந்த பதிவை வாசித்தேன் .அறியாப்பருவதில் மிருகமாக மனிதர்களால் பாதிப்புக்குளாகும் பிள்ளைகளே தனிமையை தேடி தன்னுள் சுருங்கி தனக்கென ஒரு பாதையை தேடி செல்கின்றார்கள் .இந்த படத்தில் போதைக்கு அடிமையாகாதிருந்தால் ஜான் போன்றோர் அப்பொருளை விற்காதிருந்தால் :( எந்த குழந்தையும் நல்ல குழந்தைதானே மண்ணில் பிறக்கையிலே ..அவன் நல்லவனாவதும் வழி தவறுவதும் அன்னையின் கையில் மட்டுமல்ல நம் சாமூகத்தின் கையிலும்தான் ..

  ஒரு வேலை நம்மூர்ல இருந்திருந்தா இந்த பின்னூட்டத்தை கூட போட்டிருக்க மாட்டேன் ..இங்கே பள்ளிகளில் அனைவரும் சமம் LGBT
  கம்யூனிட்டியம் மனிதர்களே யாரையும் எள்ளல் கூடாது என்று கற்று கொடுப்பாங்க ..பரந்த நல்ல மனப்பான்மை மனிதருக்கு இருந்தால் இப்படி ஒரு கம்யூனிட்டி உருவாகையிருக்காது :(

  ReplyDelete
  Replies
  1. அந்த நிலைக்கு இந்தியா பயணிக்க இன்னும் நூறு வருடங்கள் ஆகலாம்

   Delete
 8. இதை வெளியிட வேண்டாம் ..
  மைதிலி எப்படி இருக்காங்க ..வேலை பிசியா ..என் முன்போல் பதிவுகள் எழுதறதில்லை

  ReplyDelete
 9. என் மகளுக்கு 7 ஆம் வகுப்பிலேயே இவை சம்பந்தமான பாடங்கள் சொல்லிக்கொடுத்துவிட்டாங்க பள்ளிக்கூடத்தில் ஏனென்றால் நாம் வாழும் சமூகத்தில் அனைவரும் சமம் என்பது வெளிநாட்டினர் கொள்கை .ஒருவர் இந்த வகை வாழ்க்கையை தேர்வு செய்ததற்காக ஒரு ஒதுக்க கூடாதது ...ஆனால் இன்னும் பல பாகிஸ்தானியர் பஞ்சாபியர் களுக்கு இது வெறுப்பூட்டும் செயல் பெற்றோர் பிள்ளைகளை இந்த வகுப்புகளுக்கு அனுப்புவதில்லையாம் பல பள்ளிகளில் :(
  இதைப்பற்றி போதிய விழிப்புணர்வு மக்களிடத்தில் இருந்தால் பல தற்கொலைகள் மற்றும் வன்முறைகள் தவிர்க்கப்படலாம்

  ReplyDelete
  Replies
  1. காலின் பேரல் நடித்த அலக்ஸ்சாண்டர் படத்தில் இந்தியாவில் இருந்து அவர் கொண்டு போன ஒரு திருநங்கைதான் அவருக்கு விசமிட்டு கொள்வதாக காட்சி இருக்கும்.

   இங்கே இவை பழைய விசயங்கள்தாம்
   ஆனால் பொதுவெளியில் கற்பினை கதைக்கும் ஊரில் எப்படி எய்ட்ஸ் பரவுகிறதோ அதே போலத்தான் மக்களின் அணுகுமுறையும்

   Delete
 10. ஒரு ஆங்கில படத்தையும் பார்க்காமல் விட மாட்டீங்க போலிருக்குதே

  ReplyDelete
  Replies
  1. ஆகா வரும் பதினேழு வரை படங்கள்தாம்

   Delete
  2. பதினெட்டு வரை படங்கள் ஓடும்

   Delete

தங்கள் வருகை எனது உவகை...