துப்பாக்கியும் பேனாவும் ஸ்ரீதர் சுப்பிரமணியன்

துப்பாக்கியும் பேனாவும்
=========================
ஸ்ரீதர் சுப்பிரமணியன் பதிவு 


.
உச்ச நீதிமன்றத்தால் முன்-ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் ஸ்காலர் மற்றும் தலித் செயல்பாட்டாளர் ஆனந்த் தெல்டும்டே தேசிய விசாரணை ஆணையம் (NIA) முன்பு சரணடைந்து இருக்கிறார். இது பற்றி அன்றே எழுதலாம் என்று நினைத்து நேரமின்றி இயலாமல் போயிற்று. இன்று இதனை கையில் எடுத்துக் கொள்கிறேன்.

மகாராஷ்டிராவில் பீமா கொரேகாவ் என்ற கிராமத்தில் 2018 ல் நிகழ்ந்த கலவரத்திற்கு பின்னணியில் சதி செய்ததாக தெல்டும்டே மீது வழக்கு இருக்கிறது. கூடவே மனித உரிமைப் போராளியும் ஊடகவியலாளருமான கவுதம் நவ்லகாவும் இதே வழக்கில் கைதாகி இருக்கிறார்.
இந்தக் கைது ஏன் என்பதைப் புரிந்து கொள்ள பீமா கொரேகாவ் விவகாரம் என்ன என்று தெரிய வேண்டும். பிரிட்டிஷாருக்கும் மராத்தா பேஷ்வா ராஜ்ஜியத்துக்கும் இடையே 1818ல் நிகழ்ந்த போரில் பேஷ்வா படையை பிரிட்டிஷ் கம்பெனிப் படை தோற்கடித்து மராத்திய சாம்ராஜ்யத்தை வீழ்த்தியது. இது மேலாகப் பார்ப்பதற்கு இந்தியாவுக்கு கிடைத்த தோல்வி போலத் தொனிக்கலாம். ஆனால் அங்கே ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. பேஷ்வாக்கள் பிராமணர்கள். இந்தியாவில் பிராமணர்கள் நேரடியாக ஆட்சி அதிகாரத்தை சுவைத்த வரலாற்றில் பேஷ்வா சாம்ராஜ்யம் முக்கியமானது. இவர்களின் படையில் பெரும்பாலும் மராத்திய வீரர்கள், அரபிக் கூலிகள் மற்றும் கோஸைன் நாடோடி அடியாட்கள் இருந்தனர். பிரிட்டிஷ் படையில் மஹர் எனும் தலித் வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். (அம்பேத்கர் இந்த சாதியைச் சேர்ந்தவர்தான்.) இந்தப் போரில் வெற்றி பெற்றது கிழக்கிந்திய கம்பெனிதான் என்றாலும் தலித்துகள் இதனை அவர்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாக பார்க்கின்றனர். அதாவது முதன் முதலாக தலித் படை ஒன்று பிராமண ராஜ்ஜியத்தை கவிழ்த்துப் போட்ட சம்பவமாக அதனை அவர்கள் பார்க்கிறார்கள்.
போர் முடிவுற்றவுடன் பீமா கொரேகாவ் பகுதியில் போரில் இறந்த வீரர்களுக்கு பிரிட்டிஷ் அரசு ஒரு நினைவுச் சின்னத்தையும் எழுப்பியது. இந்த நினைவிடத்தை தலித்துகள் உணர்வு பூர்வமாக அணுகுகிறார்கள். 1928ம் ஆண்டு அம்பேத்கர் இந்தப் போர் நினைவிடத்துக்கு வருகை தந்து, நினைவு நாள் நிகழ்வில் பங்கெடுத்தது இதன் பெருமையை மேலும் உயர்த்தியது, அப்பொழுது முதல் ஆண்டு தோறும் இந்த நாள் தலித்துகளால் தொடர்ந்து அனுசரிக்கப் படுகிறது.
2018ம் ஆண்டில், போர் முடிந்த 200வது நினைவு நாள் வருகிறது என்பதால் அதனை விமரிசையாகக் கொண்டாட முடிவெடுத்து மாநிலமெங்கிலும் இருந்து தலித்துகள் பீமா கொரேகாவ் பகுதியில் குவிந்தனர். இடையில் இங்கே இருக்கும் சாம்பாஜி எனும் மன்னரின் கல்லறையை கட்டியது ஒரு தலித்தா இல்லையா என்ற வாய்க்கால் தகராறு வேறு தனியாக ஓடிக்கொண்டு இருந்தது. அங்கே அந்தப் பிரச்சினை திடீரென்று தலை தூக்கியது. உடனே ஊர்ப்பஞ்சாயத்தில் கடைகளை மூட ஆணை பிறப்பித்தனர். அதனை எதிர்த்து தலித்துகள் மாநிலமெங்கும் போராட்டங்களைத் துவக்க, பிரச்சினை வலுத்தது. விளைவு, வன்முறை துவங்கி ஒருவர் இறந்து, நூற்றுக்கணக்கில் காயமுற்றனர். போலீசார் நிறைய பேர் பெரும் காயமடைய, பிரச்சினை தேசிய அளவில் கவனத்துக்கு வந்தது.
இதில் உண்மையில் பிரச்சினை செய்தது இந்துத்துவ இயக்கங்கள்தான் என்று தலித்துகள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக இந்து ஜன்ஜாக்ரண் சமிதி என்ற இயக்கத்தின் தலைவர் மிலிந்த் எக்போடே மற்றும் ஷிவ் ஜாகர் பிரதிஷ்டான் எனும் இயக்கத்தின் தலைவர் மனோகர் பிடே இருவர் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இருவரும் மகாராஷ்டிராவில் பெரும் செல்வாக்கு பெற்றவர்கள். இருவர் மீதும் எஃப்ஐஆர் தாக்கல் செய்யப்பட்டது. எக்போடே கைதாகி, உடனே ஜாமீனில் விடுதலை ஆகி இப்பொழுது வரை வெளியேதான் இருக்கிறார். ஆனால், பிடே மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. (முன்னர் மகாராஷ்டிராவில் பிடே ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் பங்கு பெற்ற பிரதமர், மேடையில் வைத்து அவரை 'என் குருஜி' என்று அழைத்து பாராட்டி இருந்திருக்கிறார். 'பிடே குருஜி எனக்கு அழைப்பிதழ் எதுவும் அனுப்பவில்லை; ஆனால் உத்தரவு இட்டார். வந்தேன்!' என்று பேசி இருக்கிறார். அப்படிட்ட ஒருவர் மேல் போலீஸ் கை வைத்து விடுமா என்ன?)
பயந்த மாதிரியே விரைவில் விசாரணையின் நிறம் மாறியது. பீமா கொரேகாவ் கலவரத்துக்கு நக்சல் நிறம் பூசப்பட்டது. நக்சலைட்டுகள் சதி செய்துதான் அந்தக் கலவரத்தை அரங்கேற்றினார்கள் என்று போலீஸ் அறிவித்தது. அந்த சதிக்கு ஏற்பாடு செய்ததாக மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் கைதானார்கள். அவர்கள் அனைவரும் சமூகத்தில் வலம் வரும் எழுத்தாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், சமூக ஆர்வலர் போன்றோர். இவர்கள் எப்படி மாவோயிஸ்ட் ஆனார்கள் என்ற கேள்விக்கு இவர்கள் ‘அர்பன் நக்சல்கள்' என்று சொல்லப்பட்டது. (இந்த சம்பவம் மூலம்தான் அந்தப் பட்டம் பிரபலமாகி பாஜகவை விமர்சிக்கும் எல்லாருக்கும் வழங்கப் பட்டது - எனக்கும்கூட அவ்வப்போது இப்பட்டம் சூட்டப்படுகிறது!)
மகாராஷ்டிராவில் தேர்தலில் பாஜக தோற்று ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அதுவரை மாநிலப் போலீஸ் விசாரித்துக் கொண்டு இருந்த இந்த வழக்கு தேசிய விசாரணை ஆணையத்துக்கு (NIA) மாற்றப்பட்டது. அப்பொழுதே ஷரத் பவார் இதனை எதிர்த்தார். ‘தங்களை விமர்சிக்கும் எழுத்தாளர்களை பழிவாங்க பீமா கொரேகாவ் வழக்கை அரசு பயன்படுத்திக் கொள்கிறது,' என்று விமரசித்தார். ஆயினும் வழக்கு கை மாறியது. தலித் மற்றும் மனித உரிமைப் போராளிகளுக்கு எதிரான மத்திய அரசின் அடக்குமுறை தொடர்ந்தது. ஏப்ரல் 8ம் தேதி தெல்டும்டே பதிந்த முன்-ஜாமீன் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப் பட்டது. (இந்த மனுவை தள்ளுபடி செய்த பெஞ்சில் இருந்த நீதிபதிகளில் ஒருவர் அருண் மிஸ்ரா. இவர் முன்னர் ஒரு பொது நிகழ்ச்சியில் பிரதமரை 'தொலைநோக்காளர்', visionary, என்று சிலாகித்துப் பேசி சர்ச்சையை கிளப்பி புகழ் பெற்றவர்.) முன்ஜாமீன் தள்ளுபடியான நிலையில் தெல்டும்டே மற்றும் நவ்லகா NIA அலுவலகத்தில் இந்த வாரத் துவக்கத்தில் சரணடைந்தனர்.
இவர்கள் நக்சல்கள் என்று சொல்வது போன்ற ஒரு அவலமான விஷயம் வேறு இருக்க முடியாது. என்னை ஒரு நக்சல் என்று பாஜக அபிமானிகள் சொல்லுவது போல்தான் இதுவும். ஆச்சரியம் என்னவென்றால், போகிற வருகிறவனை எல்லாம் ‘நக்சல்’ என்று இகழும் இவர்கள்தான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு முதல் தில்லிக் கலவரம் வரை எல்லா விஷயங்களிலும் வன்முறைகளை, கொலைகளை நியாயப்படுத்தியவர்கள். அரசியல் சாசனம் கொடுத்த உரிமையை பயன்படுத்தி அமைதியாக போராடும் தில்லிப் பெண்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த அறைகூவல் விடுத்தவர்கள். 'டிரம்ப் மட்டும் ஊரை விட்டுப் போகட்டும்; அப்புறம் இவங்களுக்கு வெச்சிருக்கோம் ஆப்பு!' என்று பேசி படுகொலைகளை திட்டமிட்ட தலைவர்களை தங்களிடம் கொண்டவர்கள். ஏழை மக்களை கூண்டோடு கப்பலில் ஏற்றி வங்காள விரிகுடாவில் வீசி எறிவோம் என்று பேசியவரை உள்துறை அமைச்சராக அமர வைத்து அழகு பார்ப்பவர்கள் இவர்கள்.
அப்பாவி பொதுமக்கள் கொலையுறுவதை இப்படியெல்லாம் ஆதரித்து நியாயப்படுத்திய இவர்கள்தான் பேனாவை கையில் எடுத்து விமர்சிப்பவர்களை 'அர்பன் நக்சல்' என்று அழைக்கிறார்கள். அவர்களை ஜாமீன் இல்லாத செக்சன்களின் கீழ் கைது செய்கிறார்கள். கையில் பட்டாக்கத்தி வைத்திருக்கும் இவர்கள், கையில் பேனா வைத்திருப்பவர்களைக் கண்டு வெகுண்டு எழுந்து அவர்களை சிறையில் தள்ளத் துடிக்கிறார்கள்.
தெல்டும்டே சரணடைவதற்கு முந்தைய நாள் மக்களுக்கு வெளிப்படையாக ஒரு கடிதம் எழுதினார். ‘NIAவின் கஸ்டடிக்குள் போகப் போகிறேன். அடுத்து எப்பொழுது வெளியே வருவேன் என்பது தெரியாது. உங்கள் முறை வருவதற்கு முன் நீங்கள் பேசுவீர்கள் என்று நம்புகிறேன்,’ என்று மக்களை விளித்து அந்தக் கடிதம் முடிந்திருந்தது.
நமது முறை வருவதற்கு முன் பேசுவோம். ஒடுக்கப்பட்ட இனத்திற்கு கிடைத்த ஒரு சிறிய வெற்றியைக் கூட அவர்கள் கொண்டாட முடியாதபடி நாசம் செய்த சாதியம் பற்றி பேசுவோம். தங்களை விமர்சித்து எழும் ஒவ்வொரு வலிமையான குரலையும் ஒடுக்க சீறி எழும் மதவாதம் பற்றிப் பேசுவோம். துப்பாக்கியை கையில் ஏந்தி நின்று கொண்டு, எதிரே பேனாவை பிடித்திருப்பவர்களை ‘நக்சல்கள்’ என்று முத்திரை குத்தும் வன்முறையாளர்கள் பற்றிப் பேசுவோம்.

Comments