ஒரு படம் மூன்று பெண்கள் ஒரு புரிதல்எனது மாணவி ஒருத்தி கனடாவில் ஒரு பனி போர்த்திய வீட்டின் முன் நின்று எடுத்துக்கொண்ட படத்தை முகநூலில் தரவேற்ற அப்படத்தின் சூழல் மிக அருமையாக இருக்க எனது தற்போதய அரசுப் பள்ளி மாணவிகளிடம் காட்டி கல்வி உன்னை எங்கே கொண்டுபோகும் என்று பார்த்தாயா என்று கேட்டேன்.

அவர்கள் விழிகள் வியப்பில் விரிந்தன ..
இந்த மாதிரி நேர்மறையான கனவை விதைப்பது ஆசிரியர்களின் கடமைகளில் ஒன்று என்று கருதுவதால் இதை செய்தேன்.

சில நாட்களில் எனக்கு ஒரு நினைவு முரண்டல். கனடாவில் பனி போர்த்திய அந்த வீட்டில் நின்ற பெண்ணுடன் பள்ளியில் படித்த அவள் அளவிற்கே சாதனை செய்த இன்னொரு பெண் என் நினைவில் வந்தாள்.

எங்காவது ஒரு மென் பொறியாளராகவோ, அல்லது  இஸ்ரோவிலோ இருக்ககூடும் அந்தப் பெண் என்று நினைத்துக்கொண்டேன். சைத்தான் அப்படி படிக்கும்.

அவர்கள் வகுப்பில் என்னைப் கிலி கொள்ளவைக்கும் ஒரு பெண்ணும் உண்டு. எப்போதும் கனவில் இருப்பதுபோலவே இருக்கும் அவள் எல்லாப் பாடங்களிலும் பாஸ் செய்வதே பெரும்பாடு.(இர.நடராசன், மாடசாமி, ஜன்னலில் ஒரு சிறுமி, கிஜூ பாய் என்று ஒருவரையும் எனக்கு தெரியாத 1998ஆம் ஆண்டு அது).

எனவே அவளை முட்டாள் என்று முட்டாள் தனமாய்த் திட்டுவது எனது வழக்கம்.

 சில ஆண்டுகள் முன்பு  ஒரு நாள் அவளது அப்பா ரோட்டில் என்னைப் பார்த்து சார் உங்க ஸ்டுடென்ட் இப்போ ஒரு ஆபீசர் தெரியுமா என்று குண்டைத் தூக்கிப் போட. என்றாவது ஒரு நாள் அவளது மேசைக்கு முன் போய் ஒரு சேவையைக் கேட்க விளையலாம் என்ற எண்ணமே எனக்கு பெரு நடுக்கமாய் இருந்தது.

இவள் ஆபீசர் ஆனது வேறு எனது இஸ்ரோ விஞ்ஞானி குறித்த எதிர்பார்ப்பை எகிறவைத்தது.

ஒரு பெரிய காரியத்திற்கு போய்விட்டு என் அம்மாவுடன் திரும்பும்  பொழுது எனது இஸ்ரோ விஞ்ஞானியின் தந்தை நடத்தும் மளிகைக் கடை வழியில் இருப்பது நினைவில் வர. வண்டியை நிறுத்திவிட்டு சொன்னேன் இது யார் கடை என்று தெரியுமா?

புரியாத அம்மா கேட்டார் "யார்கடை ?"

ஷானாஸ் கடைமா என்றேன். எனது அம்மாவிற்கும் ஷானாசை நன்றாக தெரியும்.

சரி ஒரு கலரை வாங்கு என்று சொல்ல கலர் ஒன்றை கேட்டேன்

அப்படியே என்னை அறிமுகம் செய்தும் கொண்டேன் பாய் உங்க பொண்ணு என்கிட்டேதான் படித்தாள் என்று சொல்ல.

எங்களை அடயாளம் கண்டுகொண்ட அவர் அவசரமாக சேர்களை எடுத்துப் போட்டு அமரச்சொன்னார்.

கருப்பு கலரை சுவைத்துக் கொண்டே என்னை பலநாள் துரத்திய அந்த கேள்வியைக் கேட்டேன்

ஷானாஸ்  படு ஸ்மார்ட் ஆச்சே இப்போ எங்கே இருக்கா ?

இங்கே தான் இருக்கா சார். இருங்க கூப்பிடுறேன். என்று சொல்லி அவளை அழைத்தார்.

கடைக்குப் பக்கத்தில் இருந்த குடிசையில் இருந்து ஒரு கைக்குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு வெளியே வந்தாள் ஷானாஸ்.

அம்மாவும் அவளும் பேசிக்கொண்டார்கள் எனக்கு கொஞ்ச நேரம் ஒன்றும் புரியவில்லை.

ஒருவழியாக கேட்டேன் நீ என்ன படிச்சிருக்க ?

ஒரு முதுகலைப் பட்டம், அப்புறம் ஒரு ஆசிரியர் பட்டம் என்றாள்.

சரி டெட் எழுதாதே. நேராக குரூப் டூ எழுதி டி.இ.ஒ ஆகிவிடு என்று சொன்னதை தவிர வேறொன்றும் பேசவில்லை நான்.

வரும் வழியில் அம்மாவிடம் சொன்னேன். வாழ்க்கை ஒரு புரியாத புதிர். குழந்தைகளின் பெற்றோர்கள் எப்படி அவர்களது வாழ்கையை அமைத்து தருகிறார்கள் பார்த்தீர்களா என்று ஆயாசத்துடன் கேட்டடேன்.

அம்மா எந்த சூழல் அவளை இப்படி ஒரு தேர்வை செய்யச் சொன்னது என்று நமக்கென்ன தெரியும் என்று சொல்லவும் வீடு வந்து சேரவும் சரியாக இருந்தது.

Comments

 1. வணக்கம் சகோ
  பெண்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் பெற்றோர்களாலோ, சூழ்நிலையாலோ திசை மாறிப் போகிறது என்பதைச் சிந்திக்க வைத்த உண்மை சம்பவம் மிகவும் நெகிழ வைத்தது. பெண் பிள்ளைகளின் திறமையை அறிந்து அவர்களின் கனவு நனவாக பாடுபடுவது நமது பொறுப்பு என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். பகிர்வுக்கு நன்றி சகோ.

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ...

   இப்போது தான் தங்களை பேருந்தில் அனுப்பிவிட்டு வந்த மாதிரி இருக்கிறது...
   தங்கள் பொறுப்பான கருத்துக்கு நன்றி..

   Delete
 2. அவர்களின் நிலைக்காக வருந்துகிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க மின்னல் அண்ணா
   முதல்லே படிங்க அப்புறம் வருந்துங்க...

   Delete
 3. விந்தை தான், இதை தான் விதி என்பதோ நாம் கையில் எதுவும் இல்லை. கனவும் காணவேண்டும், அப்பொழுது தானே முயற்சிக்கலாம். நம்பிக்கையும் வேண்டும் மிகுதி அவன் கையில், வாழ்த்துக்கள் சகோ ...!

  ReplyDelete
  Replies
  1. வருக சகோதரி...
   கருத்துக்கு நன்றி...

   Delete
 4. ஷானாஸின் இப்போதைய நிலை சற்று வருத்தம் தந்தாலும் அவள் சோடைபோகவில்லை என்று நினைத்து மகிழ்ச்சிதான். சூழல் அவளுக்கு சாதகமாக இல்லாதபோதும் மேற்கொண்டு படித்திருக்கிறாளே.. அதுவே ஒரு சாதனைதான். உங்களைப் போன்றவர்களின் உந்துதல் அவள் வாழ்க்கையில் ஒளியேற்றக்கூடும். துளிர்க்கும் நம்பிக்கையுடன் இனி செயல்படுவாள்.

  ReplyDelete
  Replies
  1. முதலில் எனக்கும் வருத்தம் தான் அப்புறம் அவள் இருக்கும் சூழலில் சோடைபோகாமல் இருப்பது ஒருவிதத்தில் மகிழ்வே..

   Delete
 5. படித்தவர்கள் அனைவரும் திறமையானவர்கள் அல்ல அதுபோல படிக்காதவர்களும் முட்டாள்களும் அல்ல படிக்காதவர்கள் பாடப் புத்தகங்களைத்தான் படிக்காதவர்கள் ஆனால் அவர்கள் வாழ்க்கை அனுபவங்களை படித்து கொண்டிருப்பவர்கள் அதனால் அவர்கள் வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளை அறிந்து கொண்டு முன்னேறி வருகிறார்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க வாங்க ... உங்கள் கருத்துக்கள் நானும் உடன்படக் கூடியதே..

   கொஞ்சம் முகநூலில் டாக்டர் ப்ருனோ சொன்னதையும் பாருங்கள்..

   Delete
 6. ஹ்ம்ம் என்ன சொல்வதென்று தெரியவில்லை..

  ReplyDelete
  Replies
  1. வருக வருக
   நல்ல பணியை ஆங்கிலத் தளத்தில் செய்துகொண்டிருக்கும் கவிஞரே உங்கள் வருகைக்கு நன்றி

   Delete
 7. சரிதான் நண்பரே! பல மாணவர்கள், மாணவிகள் நாம் அவர்களை நினைத்து எதிர்பார்ப்பது னிஜத்தில் வேறு மாதிரிதான் ஆகின்றது! ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது நிஜமோ என்று கூடதோன்றும்! ஆனால் படிப்பிற்கும், வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை என்பது தான் உண்மை! ஒரு சிலரால் மட்டுமே தாங்கள் கற்ற கல்வியை நடை முறையில் சாத்தியப்பட வைக்க முடிகின்றது! பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் கனவுகளுக்கு உயிர் கொடுத்தால் நன்றாகத்தான் இருக்கும்! பிள்ளைகளும் தங்கள் எதிர்கால இலட்சியங்களில் இறுதியாக இருந்தால் நல்லதுதான்...... உங்களது மாணவி ஷானாஸை நினைத்து கொஞ்சம் வேதனையாகத்தான் இருந்தது!....என்ன செய்ய.....

  ReplyDelete
 8. இதில் ஆண்களும் விதி விலக்கில்லை.

  ReplyDelete
  Replies
  1. அதற்கு ஒரு தனிப் பதிவு வைத்திருக்கிறேன்...

   Delete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...

Popular posts from this blog

Thaaraa Bharati (1947-2000) from yahoo voices...

ஆசிரியர் தின சிறப்பு கட்டுரை