ஈழத்தின் குரலாக ஓர் கவிதை - ஐ. பிரகாசம்

மீண்டும் ஓர் முள்ளி வாய்க்கால்
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறான்
நிராயுதபாணிகளோடு நிகழ்த்துவதை
நிஜ யுத்தம் என்பவன்தான்
நிலை தடுமாறிப் பேசுவான்

எல்லாம் முடிந்தது என்றவன்
மீண்டும் ஒரு முள்ளி வாய்க்காலென்றால்
முடியவில்லை என்ற பொய்த்திரையை
முடிந்தவரை கிழித்துவிட்டான்
முழங்கும் ஒருநாள் வெற்றிப் பேரிரைச்சல்


வரலாறு தெரியாது வாளேந்துபவனுக்கு
ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் உரிமைக்குரல்
ஒருபோதும் ஓய்வதில்லை
நெல்சன் மண்டேலாக்களின்
நெடிய போராட வெற்றி புரியாததுதான்


உறங்கப் போடும் குழந்தையா
முள்ளி வாய்க்கால் கதை சொல்ல
வெற்றி ஒருவனுக்கே சொந்தமென்றால்
ஆங்கில ஏகாதிபத்தியத்திடம்
அஹிம்சைப்போர் தொற்றிருக்குமே


கை காலிழந்தார்
கண்ணிழந்தார், கற்பையும் இழந்தார்
ஒன்றை மட்டும் இழக்கவே இல்லை
இறுதிவெற்றி எமக்கென்ற
உயிரினும் மேலான இலட்சியத்தை


மரங்கள் சாய்ந்து போகலாம்
வேர்கள் விதை இடும்
உடல் சாய்ந்து போகலாம்
உரிமைக்குரல் உயிர் மூச்செடுக்கும்
ஆண்ட வரலாறு அப்படியே பதிவாகும்


வாளை எடுத்தவன் வாளால் மடிவான்
வேதங்கள் சொல்கிறது
மனிதமும் மாசும் மோதினால்
வெற்றியின் காலம் தாமதிக்கலாம்
மனிதம் ஒருபோதும் தோற்பதில்லை


இனி ஒன்றென்ன
நூறு முள்ளிவாய்க்கால் வந்தாலும்
அங்கே விதைக்கப்பட்டதோ விடுதலை வேட்கை
பாய்ச்சப்பட்டதோ செந்நீர்
பிறகென்ன அறுவடையோ வெற்றிதானே!

Comments

  1. என்ன ஒரு உணர்வு பூர்வமான மனதைத் தொடும் கவிதை..அருமை அருமை...மனம் அப்படியே கனத்தும் விட்டது. அது சரி கஸ்தூரி ஏன் உங்களது சில பதிவுகளுக்குப் பின்னூட்டங்களே காணவில்லை? நீங்கள் வெளியிடவில்லையா? அதுவும் நல்ல பதிவுகளுக்கு....ஆச்சரியமாக இருக்கிறது..

    ReplyDelete

Post a Comment

வருக வருக