கீழடி -தமிழர் தொல் நாகரீகம்

மரபு வழி நடை பயணம் இரண்டு -பகுதி ஒன்று 

கவிஞர், இயக்குனர் நந்தன் ஸ்ரீதரன், கீழடியில் ஓராண்டுக்கு முன்பு

நட்பு வட்டத்தில் இருக்கும் கவிஞர்கள், இயக்குனர்கள், உணர்வாளர்கள்  சென்ற  ஆண்டே பார்த்துவிட்டு முகநூலில் படங்களை வெளியிட்டிருந்தனர். போகலாம் என்று தள்ளிக் கொண்டே போய்விட்ட பயணம். 


மரபு வழி நடையின் முதல் நிகழ்விலேயே அய்யா மேலப் பனையூர்  ராஜேந்திரன் அவர்கள் கீழடி தொல்பொருள் ஆய்வு நடந்த அகழ்வுக் குழிகளை மண்ணிட்டு நிரப்பப் போகிறார்கள் என்று சொல்ல திகீர் என்றது. பார்க்க முடியாமலே போய்விடுமோ என்றுதான் நினைத்தேன். நல்லவேளை மரபு நடைக் குழுவினர் திடீர்ப் பயணம் ஒன்றை ஏற்பாடு செய்து பயணத்தை சாத்தியப்படுத்தினர்.
மணிகண்டன் ஆறுமுகம் 

மரபு நடையின் இரண்டு ஆர்வலர்கள் கொஞ்சம் அலாதியானவர்கள். ஒருவர் மணிகண்டன். தமிழ் கல்வெட்டுக்களை, மைல் கற்களை தொடர்ந்து கண்டறிந்து வருபவர். இன்னொருவர் செல்வா, மரபு குறித்த புரிதலும் சமூக அக்கறையும் கொண்ட ஒரு ஒளிப்பதிவாளர். 

ஒரு  வேனில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது பக்கவாட்டில் ஏதாவது கல்வெட்டுகளை காண நேர்ந்தால் வேனில் இருந்து குதித்துவிடுவார் மணிகண்டன்.  எல்லாக் கோணங்களிலும் புகைப்படம் எடுத்துக் கொண்டுதான் அங்கிருந்து நகர்வார். 
செல்வா பதிவில் 

இன்னொருவர் செல்வா பயணத்தை, மணிகண்டனின்  பாய்ச்சல் முதல்   பயணத்தின் ஒரு நொடியைக் கூட விடாமல் காணொளியில் பதிவு செய்வார். பதிவுகள் அப்புறம் ஒரு லோக்கல் சானலில் வரவும் வாய்ப்பு உண்டு. 

இதன் காரணமாகவே பயணம் திட்டமிட்ட நேரம் தாண்டியும் நீளும். இருப்பினும் ஏனைய உறுப்பினர்கள் மகிழ்வோடு இந்த விசயங்களில் ஈடுபடுவதால் நேரம் குறித்த மருகல் ஏதும் இருக்காது. (என்னைத்தவிர).

இப்படியான ஆர்வமிகு ஆளுமைகளுடன் பயணிப்பது என்பது ஒரு அலாதி அனுபவம். ஏழு மணிக்கு புறப்படுவது எனத் திட்டமிட்டு ஒருவழியாக பத்து மணிக்கு புறப்பட்டோம். 

ஏன் தாமதமா? எல்லோரும் வர வேணும் அல்லவா. வந்ததும் அனைவரும் பயண நோக்கம் குறித்து காணொளிப்பதிவு செய்ய வேண்டும் அல்லவா? கூடவே காலை உணவும். 

பயணம் துவங்கிய சில நிமிடங்களுக்குள் எங்கள் நிலம் ஆவணப் படம் துவங்கியது. பசுமை மாபியா எப்படி புதுகை நீர் ஆதாரத்தினை அழித்து புதுகையின் பன்மைய காடுகளை காணமல் போகச் செய்தது என்பது குறித்த விழிப்புணர்வூட்டும் காணொளி. 

நம்மாழ்வார் இயற்கை நலவாழ்வுச் சங்கத்தின் தயாரிப்பு, சி.ஆ.மணிகண்டன், பழ. குமரேசன், புதுகை செல்வா முன்னெடுப்பில் உருவான படம். விரைவில் யூ டியூபில்  வெளியிடச் சொல்லி கோரியிருக்கிறேன். 

பயணம் ஒருவழியாக மதுரை புறவழிச்சாலையை  அடைந்து கீழடி நோக்கி பயணித்தது. விரைகின்ற வேனிலிருந்தே சாலை மேலிருந்த ஒரு கல்வெட்டைப் பார்த்துவிட்டார் மணிகண்டன். வரும் போது கட்டாயம் நிறுத்த வேண்டும் என்று சொல்லி பெரிய மனதுடன் பயணத்தை அனுமதித்தார். 

கீழடியை அடைந்தவுடன் தொல் பொருள் துறையின் ஒரு பதாகை வழிகாட்டியது. ஒரு சிறிய மண் சாலையில் நெளிந்து ஊர்ந்தது வேன். அடர்ந்த தென்னம் தோப்பின் நடுவே சில வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்க  அங்கே எங்கள் பெரிய வேனையும் நிறுத்த இயன்றது.

பசுமை  சூழும் ஒரு பெரும் தோப்பின் நடுவே பயணிக்க ஆரம்பித்தோம். சுமார் பதினைந்து அடியாழத்தில்  பள்ளங்கள் அகழப்பட்டிருக்க அவற்றை ஆவலுடன் எட்டிப் பார்த்தோம். 
தொன்மையான செங்கற்கள் 

செங்கல் கட்டுமானம் ஒன்றின் மிச்சம். ஒரு செங்கல் ஒன்றே கால் அடி நீளம், முக்கால் அடி அகலத்துடன் மிரட்டியது. இன்றும் கட்டுமானத்துக்கு பயன்படுத்தும் உறுதியுடன் இருக்கின்றன அவை! கிட்டத்தட்ட பொற்பனைக் கோட்டைக் செங்கல்களை ஒத்திருந்தன. 

குழிகளில் இருந்து எடுக்கப்பட்ட பானை ஓடுகள் மலையென குவிக்கப் பட்டிருந்தன. புதுகை செல்வா அகழ்வில் குவிக்கப்பட்ட பெரும் குவியல் மண் மேடு ஒன்றின் மீது ஏறி ஒளிப்பதிவை ஆரம்பித்தார். 
மலையென பானை ஓடுகள் -சீ.ஆ.மணிகண்டன் 


சுமார் ஓராண்டுக்கு முன்னர் நந்தன் ஸ்ரீதரன் அவர்கள் கீழடியில் இருந்து எடுத்த ஒரு சுயமியைப் பகிர்ந்திருந்தார். ஒரு தொன்மையான வீட்டின் நான்கு சுவர்கள் போல் ஒரு அமைப்பு பின்னணியில் தெரிந்தது. 

சரி வீடுகள் தான் அங்கே இருக்கும் என்கிற மொக்கையான புரிதலுடன்தான் கீழடியில் நின்றேன். 

ஆனால் அங்கே நான் பார்த்தது வீடுகளை அல்ல... 

கிட்டத்தட்ட பேதலிக்க வைக்கும் ஒரு அனுபவம் அது.

மரபு வழி நடை தொடரும்...

Comments

 1. அருமையான பதிவு

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர்

   Delete
 2. தொடர்ந்து வருகிறோம், உங்களுடன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி முனைவரே

   Delete
 3. சுவாரஸ்யமான தொடரை தொடர்கின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் அய்யா

   Delete
 4. ஒரு திருப்பத்துடன் பதிவை முடித்திருக்கிறீர்கள். அருமை, தொடர்கிறேன்.
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் பயணப் பதிவரே

   Delete
 5. அருமை சுவாரஸ்யம்! சகோ புதுகைத் தென்றல் கீதா அவர்கள் முன்பு பதிந்த நினைவு. படங்களுடன் அதுதானா இது??!! அப்படித்தான் நினைவு.

  தொடர்கின்றொம்...

  ReplyDelete
  Replies
  1. எனக்கு. நினைவில் இல்லை... தோழர்
   கவிஞர் கீதா பயணத்துக்கு தயங்க மாட்டார் எனவே அவர் அங்கே ஏற்கனவே வந்திருக்க கூடும்

   நன்றிகள் தோழர் ..

   Delete
 6. இன்று கீழடியை தொலைக்காட்சியிலும் காட்டினார்கள் ,உங்கள் ஞாபகம் வந்தது :)
  அடுத்த பதிவுக்கு ஆவலுடன் இருக்கிறேன் !

  ReplyDelete
 7. ஸ்வாரஸ்யமான துவக்கம். தொடர்கிறேன் மது.

  ReplyDelete

Post a Comment

தங்கள் வருகை எனது உவகை...