செல் சொல் நந்தன் ஸ்ரீதரன் ...

 நண்பனொருவனுக்கு பெரிய மனத்தாங்கல்.. இந்தப் பெண்கள் எவ்வளவு வெட்கமற்று இருந்தால் நடக்கும்போது செல்ஃபோனில் பேசியபடி போவார்கள் என்று.. அவன் சொன்ன பின்புதான் கவனித்தேன்.. பல பெண்கள், அவர்கள் அலுவலகம் முடிந்து வீடு செல்பவர்களாய் இருக்கட்டும், அல்லது படிப்பு முடிந்து வீடு செல்பவர்களாய் இருக்கட்டும்.. அவர்கள் இயர் ஃபோனிலோ அல்லது காதணைந்த செல்ஃபோனிலோ பேசியபடியேதான் நடந்து கொண்டு இருந்தார்கள்..

அப்போதுதான் எனது தோழி ஒருத்தியின் நினைவு வந்தது..

அவள் எப்போதும் ஒரே நேரத்துக்குதான் செல் பேசுவாள். அவள் பேசும் பொழுதுகள் அனைத்திலும் போக்குவரத்து வண்டிகளின் சத்தம் கேட்டபடியே இருக்கும்.. உண்மையில் அது பேச்சுக்கான பெரிய இடையூறு.. என் நண்பனின் புண்மொழியைக் கேட்டதும் அந்த தோழியிடம் கேட்டேன்.. எதற்காக இப்படி மாலை 5.30 க்கு கால் பண்ணுகிறாய்..?

அதற்கு அவள் சொன்ன பதில் முக்கியமானது: நான் வீட்டில் இருந்து பேசும்போது நான் உன்னிடம்தான் பேசுகிறேன் என்று தெரிந்தாலும் என் கணவர் மாமியார் உட்பட என் குடும்பத்தினர் அனைவரும் அமைதியாகி அந்தப் பேச்சைக் கேட்கத் துவங்கிவிடுகிறார்கள்.. நிச்சயம் அவர்களுக்கு என்மீது எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் நான் என்ன பேசுகிறேன் என்று அவர்களுக்குத் தெரிந்தாக வேண்டி இருக்கிறது. என் பேச்சு கண்காணிக்கப் படுகிறது என்பதைவிட என்னை அவமானப்படுத்தும் செயல் வேறென்ன இருக்க முடியும்..? வீடு இப்படி என்றால் என் அலுவலகம் இதைவிட மோசம். அனைவரும் அவரவர் ப ணியில் கவனமாக இருக்கிறார்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கையில் எனது செல்ஃபோன் ஒலித்தாலோ அல்லது எனது செலஃபோன் எனது காதருகில் போனாலோ அனைத்து சகவேலையாட்களும் தத்தம் வேலைகளுக்கு pause போட்டுவிட்டு என் உரையாடலை கவனமாகக் கேட்கத் துவங்கிவிடுகிறார்கள். இதில் ஆண் பெண் வேறுபாடே இல்லை..

நான் அவர்களிடம் சென்று எதற்காக எனது உரையாடல்களைக் கேட்கிறீர்கள் என சண்டை போட முடியாது. அவர்கள் அதைக் கேட்கவில்லை என மறுக்கக் கூடிய அனைத்து முகாந்திரமும் உள்ளது. எனது பேச்சு கேட்கப் படுகிறது என்பதை என்னால் உணர மட்டும்தான் முடியும். சில நேரம் நான் நம்முள் இருக்கும் நெருக்கத்தின் காரணமாக அவ்வ்வ் மற்றும் ஸ்ஸப்பா இப்பவே கண்ணக் கட்டுதே.. போன்ற வசனங்களைப் பேசும்போது என் ஆபீசில் பரிமாறப்படும் பார்வைகளை விட மேலே அள்ளி வீசப்படும் மலம் மேலானது எனத் தோன்றிவிடும்.. என்னவென்று தெரியவில்லை.. செல்போனில் பேசும் பெண் என்பவள் அவர்களைப் பொறுத்த வரையில் கொஞ்சம் ஒரு மாதிரி கேஸ் என்றும் அவளது செல்ஃபோன் பேச்சில் காமம் வழியக்கூடும் என்பது போலவும் ஒரு எண்ணம் பொதுவாக நிலவுகிறது என நினைக்கிறேன்..

மாறாக அலுவலகம் முடிந்து பேருந்தில் இருந்து என் வீட்டுக்கு நடக்க பதினைந்து நிமிடம் ஆகிறது. அந்த நேரத்தில் நான் பேசுவதை யாராவது கேட்டுத்தான் ஆக வேண்டும் என்றால் என் கூடவே நடந்தால்தான் உண்டு.. நல்ல வேளை அந்த தைரியம் இதுவரை யாருக்கும் வரவில்லை..அது மட்டுமல்ல.. அந்த பதினைந்து நிமிட நடையின் தனிமையை நமது பேச்சு போக்கிவிடுகிறது என்று சொன்னாள்.. மனசு கனத்துப் போனது..

இடையில் ஒரு வேலையாக நண்பருடன் அவரது பைக்கில் வடசென்னைப் பகுதிக்குப் போக நேர்ந்தது. அங்கே போக வேண்டிய இடம் போய்ச் சேர்ந்து சந்திக்க வேண்டிய நபருக்காக ஒரு பத்து நிமிடம் காத்திருக்க வேண்டி வந்தது.. அப்போது போகிற வருகிற பெண்களைப் பார்த்தபடி நின்றிருந்தோம். நண்பர் சொன்னார்.. நார்த் மெட்ராஸ்ல பாத்தீங்களா..? ஒரு பொண்ணு கூட காதுல போனை வச்சிக்கிட்டு நடக்கல..இதுவே நம்ம ஏரியாவா இருந்தா இதுகளோட அளப்பிறை எப்புடி இருக்கும் என்றார்..

நடக்கையில் பேசக்கூட உரிமையற்றுப் போன வடசென்னைப் பெண்களை நினைக்க எனக்கு பெரும் துக்கமாக இருந்தது..
 மூலம்  : https://www.facebook.com/janakiraman.hariharan/posts/10201908684429074

Comments