செப்டம்பர் ஐந்து தமிழன் பெருமைப்பட இன்னொரு செய்தி

ஒப்பற்ற கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார் பிறந்த நாளில் தமிழர் உரிமைகளை மீட்டெடுக்க உறுதி ஏற்போம் !

தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களால் கப்பலோட்டிய தமிழன் என்று தமிழுலகத்துக்கு அறிமுகமான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதந்திரப் போராட்ட ஜோதியை தென்னிந்தியாவில் ஏற்றி வைத்து, அதன் பயனாய் கடுமையான தண்டனைகளை அடைந்தவர்.

தென்னாட்டில் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பி அவர்களோடு போரிட்டு தூக்கிலடப்பட்டு மாண்டுபோன பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த மண்ணுக்கு அருகிலுள்ள ஒட்டப்பிடாரம் தான் இவர் பிறந்த ஊர். இவர் பிறந்தது 1872 செப்டம்பர் 5ஆம் நாள். கட்டபொம்மனின் அமைச்சராக இருந்த தானாபதி பிள்ளை அவர்களின் உறவினராக வந்தவர் தான் வ.உ.சி. இவரது தந்தை உலகநாதப் பிள்ளை, தாயார் பரமாயி அம்மை. இவருக்கு நான்கு சகோதரர்கள், இரு சகோதரிகள் இருந்தனர்.

தூத்துக்குடியில் பள்ளிக் கல்வியும் வக்கீல் தொழிலுக்கான பிளீடர் கல்வியை திருச்சியிலும் பயின்று வக்கீலானார். ஒட்டப்பிடாரத்தில் இவர் வக்கீல் வேலை பார்க்கத் தொடங்கினார். 1895இல் தமது 23ஆம் வயதில் திருச்செந்தூர் சுப்பிரமணிய பிள்ளையின் மகள் வள்ளியம்மையைத் திருமணம் செய்துகொண்டார். அவர் ஆறு ஆண்டு காலத்தில் இறந்து போகவே மீனாட்சி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். வ.உ.சிக்கு இளமை முதலே தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் கொண்டிருந்தார். 1906இல் இவர் மகாகவி பாரதியாரை சென்னை 'இந்தியா' அலுவலகத்தில் சந்தித்து உரையாடினார். இவரும் ஓர் சிறந்த பேச்சாளர்.

வ.உ.சி. தூத்துக்குடியில் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி எனும் பெயரில் ஒரு கப்பல் கம்பெனி ஆரம்பித்தார். இதற்கு முதலீடு செய்வதற்குப் பலரையும் சென்று பங்குகள் சேர்த்து ஒரு கப்பலையும் வாங்கி பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்கு எதிராக சரக்கு ஏற்றுமதி இறக்குமதியைச் செய்தார். இதற்கு ஆங்கிலேயர்களின் பலத்த எதிர்ப்பு இருந்தது. போட்டி காரணமாக பிரிட்டிஷ் கம்பல் கம்பெனி பயணிகளை இலவசமாக ஏற்றிச் செல்வதாகக்கூட அறிவித்தது.

ஆங்கிலேயரை எதிர்த்து போராடியதற்கு வ.உ.சிக்கு நாற்பது ஆண்டுகள் தீவாந்தர தண்டனையும், சுப்பிரமணிய சிவாவுக்கு சிறை தண்டனையையும் கொடுக்கப்பட்டது. இதில் சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்பதற்காகவும் வ.உ.சிக்கு இருபது ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. அப்போது வ.உ.சிக்கு வயது முப்பத்தைந்துதான். இதனையடுத்து வ.உ.சி. மேல்முறையீடு செய்து அதில் அவரது தண்டனை குறைக்கப்பட்டு ராஜ நிந்தனைக்காக ஆறு ஆண்டுகள் தீவாந்தர தண்டனையும், சிவாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக நான்காண்டு தீவாந்தரமும் கொடுத்து இவற்றை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டனர். இதன் பின்னரும் இங்கிலாந்தில் இருந்த பிரீவி கவுன்சிலுக்கு அப்பீல் செய்ததில் தீவாந்தர தண்டனைக்குப் பதிலாக கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

இவர் கோயம்புத்தூர் சிறையில் இரண்டரை ஆண்டுகளும் கள்ளிக்கோட்டை சிறையில் இரண்டு ஆண்டுகளும் இருந்த போது மிகவும் கேவலமாக நடத்தப்பட்டார். சிறையில் இவரை கல் உடைக்கவும், செக்கிழுக்கவும் வைத்து வேடிக்கை பார்த்தது ஆங்கில ஆளும் வர்க்கம். இவரது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பிணித்து செக்கிழுக்க வைத்தனர். இந்த செக்கு இரண்டு கருங்கற்களால் ஆனது. இந்த செக்கு பின்னர் 1972இல் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அவை மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இவ்வாறு ஆங்கிலேயர்களே வியக்கும் வண்ணம் சுதந்திர மண்ணுக்காக போராடிய மாமனிதரை , ஒப்பற்ற தமிழருக்கு இந்த நாடு உரிய மரியாதை தரவில்லை என்பதே உண்மை . இவருக்கு இந்திய நாணயத்தில் இடமளிக்க வேண்டும் என பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் இன்று வரை இந்த தமிழருக்கு நாணயத்தில் இடம் தர மறுத்துள்ளது இந்திய அரசு என்பது வேதனை. இவரது வம்சாவழி வந்த பேத்தி அண்மையில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில் சேர பணமில்லாமல் தவித்தார் . அவருக்கு இணையத்தின் மூலமாக தமிழர்கள் பொருளுதவி செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரை பற்றி தமிழகத்தை தாண்டி வட இந்தியாவில் யாருக்கும் தெரியாது என்பது இவருக்கு இந்த அரசு இழைத்த அநீதியாகும். இவரது தியாகத்தை இந்தியா மறந்தே போனது. சுதந்திர இந்தியா வேண்டும் என போராடிய சிதம்பரனார் , இப்போது இருந்திருந்தால் , நிச்சயம் இந்திய மதிய அரசுக்கு எதிராக போராடி இருப்பார். அந்த அளவிற்கு இந்த அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழர்களின் மொழி உரிமை , மண் உரிமை, பண்பாட்டு உரிமைகளை மறுத்து வருகிறது. எல்லாவற்றிக்கும் மேலாக சிங்களவனுடன் கூட்டு சேர்ந்து தமிழீழ மக்களையும் , தமிழக மீனவர்களையும் அழித்து வருகிறது. இதையெல்லாம் சிதம்பரனார் கேள்விப்பட்டால் , அரசுக்கு எதிராக இப்பொது களம் கண்டிருப்பார். போராடி தமிழர்களுக்கு நீதி பெற்றுக் கொடுத்திருப்பார்.

இப்படிப்பட்ட தமிழரை அவரது பிறந்த நாளில் நாம் நெஞ்சில் நிறுத்துவோம் . இன்னும் தமிழர்களுக்கு முழுமையான விடுதலை கிடைக்கவில்லை என்பதை உணர்ந்து அன்னாரின் வழியில் நமது உரிமைகளை மீட்க போராடுவோம் என உறுதி ஏற்போம் .

-Rajkumar Palaniswamy 

https://www.facebook.com/WorldWideTamilPeoplehttps://www.facebook.com/WorldWideTamilPeople

Comments