Skip to main content
"ஐயோ, அங்கிள், அந்த பலூன புடிக்கலாம்ல".
நேற்று
மாலை பெங்களுர் ஜெய நகரில் ஒரு விழா, நிறுவனத் தலைவரின் பங்களிப்புகள்
அதிகம் இருந்ததால் நானும் பங்கேற்க வேண்டியிருந்தது, காலையில் இருந்தே
பல்வேறு மனிதர்கள், பெண்கள், குழந்தைகள் என்று அரங்கம் நிரம்பி வழிந்து
விழாக்கோலம் பூண்டிருந்தது.
வேறு வேலை ஏதும் இல்லை என்பதால்
தொடர்ந்து குழந்தைகளை கவனித்துக் கொண்டே இருந்தேன், குறிப்பாக அவர்களின்
பாதுகாப்பு குறித்த அதீத அக்கறையில்.....
ஒரு அரை மணி நேரத்தில்
அவர்கள் யாரோடும் மிக நெருக்கமாகி விடுகிறார்கள், என்ன, குலம், கோத்திரம்,
சாதி, மதம் எல்லாவற்றையும் கடந்து அவர்கள் தங்கள் புன்னகையால் ஒருவரை
ஒருவர் இணைத்துக் கொண்டு விடுகிறார்கள்.
எல்லையற்ற மனித அன்பின்
வெளிப்பாடாக அவர்களின் சிரிப்பும், களிப்பும், ஆட்டமும், பாட்டமும்
இருக்கிறது. கள்ளமற்ற அவர்களின் பேரன்பில் சுவற்றில் படிந்த வெற்றிலைக் கறை
போல வளர்ந்த மனிதர்களின் சிரிப்பு உறுத்திக் கொண்டிருந்தது.
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான
டாக்டர்.எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினரும், பாரதீய
ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான திரு,அனந்த் குமார் இருவரும்
வருவதாக இருந்ததால் உள்ளூர் அரசியல் தலைவர்களும் பெருமளவில் கூடி
இருந்தார்கள்.
பல்வேறு காரணங்களோடும், நோக்கங்களோடும் அங்கிருந்த
மனிதர்களின் இடையே ஊடுருவியபடி எந்தக் காரணங்களும் இல்லாமல் விளையாடிக்
கொண்டிருந்த குழந்தைகள் அரங்கை உயிர்ப்பித்தபடி ஓடினார்கள்.
மாலை
நான்கு மணி இருக்கும், அரங்கம் கொஞ்சமாய்ப் பரபரத்தது, சரி யாரோ ஒரு தலைவர்
வருகிறார் என்று பலர் வெளியே நகரத் துவங்கினார்கள். திரு. அனந்த் குமார்
முதலில் வர, தொடர்ந்து டாக்டர் எஸ்.எம் கிருஷ்ணா வந்து கொண்டிருந்தார்.
தீவிரமான முகங்களோடு புகைப்படங்களுக்கு முகம் கொடுப்பவர்கள், புகைப்படம்
எடுப்பவர்கள் என்று மனிதர்கள் அங்குமிங்குமாய்ப் பரபரத்தார்கள்.
தலைவர்களும் தங்கள் தீவிரமான சிந்தனைகளோடு "வணக்கம்" வைத்தபடி அரங்க வாயிலை
நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
நான் மனிதர்களை அவர்களின்
முகபாவங்களை வெகு நுட்பமாகக் கவனித்தபடி படிகளில் ஒரு ஓரமாக நின்று
கொண்டிருந்தேன். இயல்பாக மேலே நிமிர்ந்து பார்த்தேன், குழந்தைகள் முதல்
தளத்தின் திறந்த முகப்பு வெளியில் இன்னமும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்
தலைவர்களின் வருகை குறித்த அக்கறையோ, கவலைகளோ இல்லாமல் பலூன்களை மேலும்
கீழுமாக அசைத்தபடி சிரித்தார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் திரு.
அனந்த் குமார் அரங்க வாயிலுக்கு அருகில் வரும்போது சரியாக மேலிருந்த ஒரு
குழந்தையின் கையில் இருந்த பலூன் கை நழுவியது, காற்றில் அசைந்தபடி அவரது
தலைக்கு மேலே கீழ்நோக்கிப் பயணித்த அந்த ஆரஞ்சு நிற பலூன் மெல்லக்
அசைந்தாடியபடி கீழிறங்கத் துவங்கியது.
சரியாக அவருக்குப்
பக்கவாட்டில் வந்து காற்றில் மீண்டும் வேறு திசைக்கு அந்தப் பலூன் மாறிய
போது முதல் தளத்தின் திறந்த முகப்பில் இருந்து திரு.அனந்த் குமாரை நோக்கி
இப்படிக் கத்தினாள் ஒரு குட்டிப் பெண்,
"ஐயோ, அங்கிள், அந்த பலூன புடிக்கலாம்ல".
அமைதியான, மிகத் தீவிரமான அந்த வளர்ந்த மனிதர்களின் வெளி வெடித்துச் சிதறி
அங்கே ஒரு குழந்தைகளின் உலகம் படைக்கப்பட்டிருந்தது. ஒரு கணம் திகைத்த
திரு. அனந்த் குமார் அந்த பலூனைப் பிடிப்பதற்கான முயற்சியில் தத்தக்க
பித்தக்கவென்று நடனமாடினார்.
பின்னால் வந்து கொண்டிருந்த
டாக்டர். எஸ். எம் கிருஷ்ணாவும் தன பங்குக்குக் கொஞ்சம் முயற்சி செய்ய,
தீவிரமான அந்த மனிதக் கூட்டம் இதயம் குலுங்கச் சிரித்துக் கொண்டிருந்தது.
"ஐயோ, அங்கிள், அந்த பலூனப் பிடிக்கலாம்ல" - பல்வேறு இடங்களில், பல்வேறு
நகரங்களில், வீடுகளில் நாம் வழக்கமாகக் கேட்கிற சொற்றொடர் தான், ஆனாலும்,
இம்முறை அது தீவிரமான பல்வேறு தரப்பட்ட மனிதர்களை உலுக்கி, அவர்களின்
இறுக்கமான முகங்களைத் தளர்த்தி ஒரு பேரண்ட வெடிப்பை நிகழ்த்திக் காட்டியது.
எந்தச் சூழலிலும் குழந்தைகள் உண்மையான சிரிப்புக்கும், அன்புக்கும் மிக
நெருக்கமான இடங்களில் தான் இருக்கிறார்கள், எல்லாவிதமான அடையாளங்களையும்
தாண்டி.........
"அது அனந்த் குமாரோ, பரக் ஒபாமாவோ முகத்துக்கு
நேரே பறக்கிற பலூனை இனிமேலாவது பிடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்", எத்தனை
கடினமான பாடம், ஓரிரண்டு சொற்களில் அற்புதமாய் விளக்கி விட்டு முகத்தைக்
கூடக் காட்டாமல் ஓடி விட்டிருந்தாள் அந்தக் குட்டிப் பெண்.
குழந்தைகள் கையில் கொடுத்து விட்டிருந்தால் இந்த உலகம் எப்போதோ ரட்சிக்கப்பட்டிருக்கும்.
குழந்தைகளின் உலகம் பரிசுத்தமானது, அவர்களின் உள்ளம் அப்பழுக்கற்றது என்பதை நிகழ்வு வெளிச்சம் போட்டுள்ளது. பகிர்ந்த உங்களுக்கும், எழுதிய நண்பருக்கும் நன்றி.
ReplyDelete