ரஷ் Rush (2013 film)

நிஜவாழ்க்கை கற்பனையைவிட கிளர்வூட்டுவது என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை முழுமையாக உணரவேண்டும் என்றால் உண்மைச் சம்பவங்களில் இருந்து திரையில் விரிந்த ரஷ் பார்க்கவேண்டும். 

இயக்குனர் ரான் ஹோவர்டின் ஆகச் சிறந்த படம் என்று யு.எஸ்.ஏ டுடே சொல்லியிருக்கிறது. பார்த்தல்தான் புரியும். இரண்டு பார்முலா ஒன் ஓட்டுனர்களுக்கிடையே நிகழும் ஆரோக்கியமான போட்டி விரைந்தோடும் கார்களில் சடுதியில் வரும் மரணம் என படம் தொய்வின்றி பறக்கிறது. 

இயக்குனர் ரான் ஹோவர்ட்

நிக்கி லௌடா என்கிற ஆஸ்திரிய ஓட்டுனருக்கும், ஜேம்ஸ் ஹன்ட் என்கிற பிரிட்டன்  ஓட்டுனருக்கும் நடக்கும் தொழில் போட்டியே படம். என்ன விசயம்  ஒருவரியில் இப்படி சொல்லிவிட்டு போய்விடாத வண்ணம் செதுக்கப்பட்ட திரைப்படம். 

முதலில் இது நீட் பார் ஸ்பீட் மாதிரியோ அல்லது பாஸ்ட் அண்ட் பியுரியஸ் மாதிரி சமூகவிரோத கார்பந்தயங்களை குறித்த பொறுப்பில்லாத ஆக்சன் குப்பை அல்ல. 

மோட்டார் ஸ்போர்ட் என்று  ஹிட்லரால் அறிமுகம் செய்யப்பட்டு  (ஜெர்மனின் தொழில் உன்னதத்தை உலகுக்கு காட்ட)   பின்னர் உலகெங்கும் பரவிய எப்.ஒன் கார்பந்தயம் குறித்த அகன்ற புரிதலைத் தரும் படம்.

இரண்டு வீரர்களுமே பெரும் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர்கள். அவர்கள் கார் பந்தய  மோகத்திற்காக அவர்களின் குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள்! அவர்களின் ஆர்வம் அவர்களை எங்கே கொண்டு நிறுத்துகிறது என்பதுதான் படம்.

படம் ஒரு பந்தயப் பாதையில் ஆரம்பிக்கியது. பந்தயக் கார்கள் உறுமிச் சீர தயாராக இருக்கும் பொழுது நிக்கி லெளடாவின் குரல் பின்னணியில் ஒலிக்கிறது. 

ஒரு எப்.ஒன் போட்டியில் ஒரு பருவத்திற்கு இருபத்தி ஐந்து ஓட்டுனர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் அதில் இரண்டு பேர் இறக்கிறார்கள். என்னமாதிரி மனிதர்கள்  இந்தப் போட்டியில் பங்கேடுக்கிறார்கள். நிச்சயமாக இயல்பான மனிதர்கள் அல்ல. கலக்கக்காரர்கள், மனநோயாளிகள், கனவுக்கரர்கள்,   தங்கள் இருப்பை அழுத்தமாக பதிவு செய்ய விரும்புவர்கள், சாகத் தயாராக இருப்பவர்கள். 

படத்தின் முதல் வசனமே புட்டத்தையும் இருக்கையும் ஒன்றாக பிணைத்து விடுகிறது. கொஞ்சம் கூட கதாநாயக முகம் இல்லாத ஒருவனை கதைசொல்லியாக தேர்ந்தேடுத்தே ரான் ஹாவர்டின் துணிச்சலையும் திரைக்கதை மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையும் காட்டுகிறது. 

துருத்திக் கொண்டிருக்கும் பற்கள், முன்வழுக்கை, அதீதமான இயந்திர அறிவு வெகு கச்சிதமாக கணக்கிட்டு போட்டிகளை வெல்லும் நிக்கி லெளடாவாக டானியல் ப்ருஹேல் முத்திரை பதித்துவிட்டார்.

சரியான விளையாட்டுப் பிள்ளை, அலைபாயும் சடை முடி, காணும் பெண்களை பத்து வினாடியில் வீழ்த்தும், ஒவ்வொரு போட்டிக்கும் முன்னர் இரத்த அழுத்தம் எகிற வாந்தி எடுக்கும்,    உயிரைப் பணயம் வைக்கும் துள்ளல் நிரம்பிய இன்னொரு நாயகனாக கிரிஸ் கெம்ஸ்வொர்த். (தோர் படத்தின் நாயகன்). செமை ரகளையான மனிதராக கலக்கியிருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவு (ஆண்டனி டொட் மாண்டில், சத்தியமா இதுதான் பேரு)மிக உன்னதமாக இருக்கிறது, இசை அதி உன்னதம் (ஹான்ஸ் சிம்மர்). முப்பத்தி எட்டு மிலியன் அமெரிக்க டாலர்களைப் போட்டு தொண்ணூறு மிலியன் அமெரிக்க டாலர்களை எடுத்திருக்கிறார்கள். 

ஜேம்ஸ் ஹன்ட் ஒவ்வொரு நாளையும் தனது வாழ்வின் கடைசி நாளாக கொண்டாடுபவன். பெண்கள், குடி, கேளிக்கை என்று ஒவ்வொரு வினாடியையும் அவனுக்குப் பிடித்த முறையில் அனுபவித்து வாழ்பவன். எதார்த்தமாய் ஒரு நிமிடம் தன்னைப் பார்த்த சூப்பர் மாடல் சூசியை  தனது மணப்பெண்ணாய் மாற்றியவன்! மகிழ்வை வழிபடுகிறவன்! 

சிறிய போட்டிகளில் இருந்து பெரிய போட்டிகளுக்கு இருவருமே முன்னேறுகிறார்கள். நிக்கி பெராரி நிறுவனத்தில், ஜேம்ஸ் மெக்லாரன் நிறுவனத்தில். 

தொடர் போட்டிகளில் மாறி மாறி சாதிக்கிறார்கள். பல பெண்களோடு வாழ்வை கழிக்கும் தனது போட்டி ஜேம்ஸ் மாதிரி இல்லாமல் நிக்கி, மார்லின் நாஸ் எனும் ஜெர்மன் அழகியோடு வாழ்கிறான். அவர்களின் மணவாழ்வின் ஆரம்பத்தில் ஒரு பயம் அவன் மீது கவிழ்ந்துவிடுகிறது. 

மனைவியிடம் சொல்கிறான் நான் சந்தோசமா இருக்கேன். அது எனது வேலைக்கு எதிரி. 

பளிச்சென்று சொல்கிறாள் அவள் சந்தோசமாக இருப்பதை எதிரி என்று நம்பிய அந்த கணத்திலேயே நீ தோற்றுப் போய்விட்டாய். 

இந்த மாதிரி மனதில் ஒட்டிக்கொள்ளும் வசனங்கள் படம் முழுதும் உண்டு! 

வேறு எந்த ஓட்டுனரையும் விட புள்ளிகள் அடிப்படையில் முன்னணியில் இருக்கும் லெளடா நியுரம்பர்க் பந்தயத்தில் பங்கேற்க வேண்டாம் என்று சக வீரர்களைக் கேட்கிறான். ஜேம்ஸ் பந்தயம் நடக்க வாக்களிக்கிறான். 

நிக்கி லெளடாவின் எதிர்ப்பையும் மீறி கொட்டும் மழையில் பந்தயம் நடக்கிறது. ஈரத் தரைக்கான சக்கரங்களோடு பங்கேற்கும் வீரர்கள் பாதியில் சக்கரங்களை மாற்ற தலைப்படுகிறார்கள். பந்தய பாதை எதிர்பார்த்ததற்கும் விரைவாக காய்ந்துவிட்டதால் இந்த ஏற்பாடு. 

பந்தயத்தில் ஏற்படும் விபத்தில் நிக்கி  லெளடாவின் கார் சேதமுற்று வெடிக்கிறது. முதலுதவி வருவதற்குள் மூன்றாம் எண் தீக்காயங்கள். மருத்துவ மனையில் உயிருக்கு போராடி மீள்கிறான் லெளடா. மருத்துவர்கள் அவனது உடலில் விதவிதமாக வித்தைகளைக் காட்ட அவனது கண்கள் மட்டும் தொ.கா பெட்டியில் உறைந்து நிற்கிறது. 

ஜேம்ஸ் ஹன்ட் முன்னணியில்! 

தொடையில் இருந்த தோலை எடுத்துத் தலையில் வைத்து தைத்து ஒருவழியாக ஹன்ட்டை மீட்கிறார்கள். 

மருத்துவர்களின் அறிவுரையும் மீறி லெளடா பந்தயப் பாதைக்கு திரும்புகிறான். 

ஜேம்ஸ் ஹன்ட் அவனை சந்தித்து மன்னிப்பு கேட்கிறான். அந்த விபத்திற்கு காரணம் அவன் அளித்த வாக்கு என்பதால். அப்போது லெளடா பேசும் வசனம் வாவ். 

நீ பந்தயத்தில் என்னுடைய புள்ளிகளை எடுப்பதை மருத்துவமனையில் நான் பார்த்துகொண்டிருந்தேன். அதனால்தான் மீண்டு வந்தேன். எனவே என்னை மீண்டும் பந்தயத்தில் இழுத்துவந்ததும் நீதான்! வருத்தப்படாதே! 

தொடர்கிற பத்திரிக்கையாளர்  சந்திப்பில் நாகரீக எல்லைகளை மீறி குரூரமாக ஒருவன் கேட்கிறான். உன் பொண்டாட்டி என்ன சொன்னா? 

அவ சொன்னா ஸ்வீட்டி கார் ஓட்ட வலது கால் மட்டும் போதும் என்று செம கூலா பதில் சொல்லும் லெளடாவை மீண்டும் கேட்கிறான் அவன்

நீ சீரியஸா பதில் சொல்லு ஒன் மூஞ்சியை வச்சுக்கிட்டு திருமண வாழ்க்கையை தொடர முடியுமா?

கடுப்பான  லெளடா கெட்டவார்த்தையை சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறுகிறான். 

அந்தக் குருர கேள்வி நிருபரை பின்தொடர்கிறான் ஜேம்ஸ் ஹன்ட், அவனை ஒரு அறைக்குள் தள்ளி கும்மி எடுக்கிறான். பின்னர் வாக்மேனை அவனது வாயில் வைத்து ரப்பென அறைந்து இப்போ பொய் உன் பொண்டாட்டிகிட்டே கேள் என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறான். 

அன்றய போட்டியில் லெளடாவை முந்துகின்றன அனைத்துக் கார்களும். ஒரு திருப்பத்தில் இரண்டு கார்கள் ஒன்றோடு ஒன்று இடித்துக் கொண்டு தாறுமாறாய் கிடக்க அற்புதமாக மோதலைத் தவிர்த்து சீறிப் பறக்கிறான் லெளடா. அந்தப் போட்டியின் சாம்ப்!

ஜப்பானிய இறுதிப் பந்தயத்தில் மழை கொட்டுகிறது. சில லாப்புகளுக்கு பின்னர் தனது மனைவியின் நினைவு வர லெளடா போட்டியை பாதியில் புறக்கணிக்கிறான். 

ஜேம்ஸ் ஹன்ட் தொடர்ந்து போட்டியிட்டு எப்.ஒன் சாம்பியனாகிறான். சில மாதங்கள் கழித்து இருவரும் ஒரு தனியார் விமான தளத்தில் சந்திக்கிறார்கள். அற்புதமான உரையாடல் ஒன்று நிகழ்கிறது. 

ஜேம்ஸ் ஒரே ஒரு சாம்பியன் பட்டதோடு கட்சி வரை இஷ்டப்படி வாழ்ந்து ஒரு ஹார்ட் அட்டாக்கில் போய்ச் சேருகிறான். லெளடா ஒழுங்காக வாழ்ந்து இன்னும் உயிருடன் இருக்கிறார்! 


உண்மைச் சம்பவங்களை எப்படி திரைக்கதையாக்குவது என்று உணர விரும்புவர்கள் உறுதியாக பார்க்க வேண்டிய படம். 

(உண்மையில் லெளடாவிற்கும் மூன்று மனைவிகள், அதில் ஒருவர் இவருக்கு சிறுநீரக தானம் செய்ததால் மனைவியானார்)

ஒளிப்பதிவு, பின்னணி இசை, திரைக்கதை என பல விசயங்களுக்காக இது திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக இருக்க தகுதி வாய்ந்தது.  
ஆண்டனி டாட் மாண்டில்

முடிஞ்சா பாருங்க.

அன்பன் 
மது 

Comments

 1. வணக்கம்
  சிறப்பான தகவல் பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. அன்புள்ள அய்யா,

  ரஷ் பட விமர்சனம் படித்தேன்.

  நிக்கி லௌடா என்கிற ஆஸ்திரிய ஓட்டுனருக்கும், ஜேம்ஸ் ஹன்ட் என்கிற பிரிட்டன் ஓட்டுனருக்கும் நடக்கும் தொழில் போட்டியே படம். என்ன விசயம் ஒருவரியில் இப்படி சொல்லிவிட்டு போய்விடாத வண்ணம் செதுக்கப்பட்ட திரைப்படத்தை அருமையாக விமர்ச்சித்து இருந்தீர்கள் .

  உண்மைச் சம்பவங்களை எப்படி திரைக்கதையாக்குவது என்று உணர விரும்புவர்கள் உறுதியாக பார்க்க வேண்டிய படம்.

  பார்த்து வியந்து பாராட்டியது அருமை.

  நன்றி.

  ReplyDelete
 3. மது,

  பொதுவாக ரேஸ் தொடர்பான படங்கள் என்னை அவ்வளவாக ஈர்ப்பதில்லை. என் ரசனை அப்படி. ஆனால் இந்தப் பதிவைப் படித்ததும் இந்தப் படத்தைக் காண வேண்டும் என்ற விருப்பம் எழுகிறது. ஒருவேளை அது உங்கள் எழுத்தின் பாதிப்பாக இருக்கலாம். அருமையான கட்டுரை.

  ReplyDelete
 4. பார்த்துடலாம்....(அதை விட வேற என்ன வேலை)....ஐயோ....வேற ஒண்ணும் இல்லை சினிமா பார்க்கறது பிடிக்கும் ரெண்டு பேருக்குமே அதான்...அப்படி...அந்த அடைப்புக் குறிக்குள்.....

  நல்ல விமர்சனம்....நமக்குப் பார்க்க மட்டுமே தெரியும்பா....விமர்சனம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஹஹஹ் கொஞ்சம் கஷ்டம்பா...

  ReplyDelete
 5. Wow!! fantastic review !!
  எந்த F1 போட்டி என்றாலும் இவர் பேட்டி , களத்தில் தவறாமல் இடம் பெரும் ..LAUDA ஏர்லைன்சும் அவருதுதான் .

  ReplyDelete

Post a Comment

வருக வருக