தமிழ் மொழி தனியார் பள்ளிகளில் தேவையா?


புதிய தலைமுறையில் முனைவர். ராஜன் எழுதும் கட்டுரைத் தொடர் மிக அற்புதமானது ...

ஆனால் என்னை கவலை கொள்ளச் செய்த ஒரு விடயமும் அதில் இருந்தது.

பண்டைய பிராமி மொழி எப்படி வழக்கொழிந்து போனது என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் ...

மொழி மாற்று செய்யப்பட்டிருக்கலாம்..(Language Replacement) அதாவது ஒரு சமூகம் தனது பொருளாதார தேவைகளுக்கும், அழுத்தங்களுக்கும் ஆட்பட்டு சர்வ சாதரணமாக ஒரு மொழியை உதறிவிட்டு அடுத்த மொழியை பயன்படுத்த ஆரம்பிக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நம்ம பக்கி இதைத்தானே இப்போது செய்துகொண்டிருக்கிறது?

திகீர் என்று இருக்கிறது எனக்கு எனது இனம் மொழி மாற்றில் ஈடுபட்டு குறைந்தது நாற்பது ஆண்டுகளாவது இருக்கும் என்று படுகிறது

யார் இப்போது பேருந்தில் போகிறார்கள்? பஸ்தான் ... 

பற்பசை நுழையாத வாயில் பேஸ்ட் அப்புகிறது ...

ஒரு தேநீர்க் கடையில் தனது மகள் தமிழில் பேசினால் அவமானமாக இருகிறது என்கிறான் ஒரு அப்பன் ...

பேசும் மொழி அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததா என்ன என்று சில ஆங்கிலப் பக்தப் பதர்கள் வினவக் கூடும்.

தாய்மொழி மூலம்தான் ஒருகுழந்தை தனது அடிப்படைச் சிந்தனைத் திறன்களை அமைத்துக் கொள்கிறது, உயர் சிந்தனைத் திறன்களான தொகுத்துப் பார்த்தல், தொடர்பு கண்டறிதல், பகுத்துப் பார்த்தல் போன்ற சிந்தனைத் திறன்களும் தாய்மொழியில்தான் சாத்தியம்.

தனது சூழலில் பேசும் மொழியில் தான் ஒரு குழந்தை சிந்திக்க ஆரம்பிகிறது. உங்கள் வீட்டில் தெலுங்கு பேசினால் தெலுங்கு, தமிழ் பேசினால் தமிழ்.
மற்ற மொழிகளை கற்பது அவசியம். அது தவிர்க்க முடியாதது. நமது கலாச்சாரத்தை, இலக்கிய செல்வதை எடுத்து செல்லவும் அங்கிருந்து தருவிக்கவும், அறிவியல் பரவலாக்கத்திற்கும் இது அவசியம்.

இந்த இடத்தில் மூளை அறிவியல் கருத்து ஒன்றையும் விவாதிக்கலாம்.

குழந்தைகளுக்கு மாற்று மொழியை அறிமுகம் செய்ய சிறந்த பருவம் குழந்தைப் பருவம்தான் என்கிறது மூளை அறிவியல். இதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

பிறந்த குழந்தை சுமார் அறநூறு ஒலிகளைத் தனியாக கேட்டு உணரும் திறன் கொண்டது. இந்தத் திறன் அதன் பதின்ம வயதுகளில் குறைகிறது! அறநூறு ஒலிகளை கேட்ட குழந்தை முன்னூறு ஒலிகளுக்கு அல்லது அதைவிட குறைந்த ஒலிகளோடு தமது கேட்டல் திறனை குறைத்துக் கொள்கிறது. இதனால் தான் இருபது வயதைக் கடந்த சிலபேருக்கு மாற்று மொழி பாடல்களை கேட்டமாத்திரத்தில் தலை வலிக்க ஆரம்பிகிறது! மூளைக்கு பழக்கமில்லா ஒலிகள் காதுகளில் தொடர்ந்து விழுகின்ற பொழுது அவை மூலையில் ஒரு சின்ன எரிச்சலை உண்டு செய்து தலைவலியாக வளர்கிறது.

நாம் நமது கேட்டல் பழக்கத்தை தாய்மொழிக்கு மட்டும் சுருக்கிக் கொள்வதால் நிகழ்வது இது.

எனவே 

நல்லப் படிங்க படிக்கவைங்க ஜெர்மன், சைனீஸ், ஜப்பானிய மொழி எதையாவது படிங்க அவற்றை அறிமுகப் படுத்துவதும் கொண்டாடுவதும் குற்றமல்ல!

ஆனால்

அதற்காக தாய்மொழி குறித்து வெட்குவது ஒரு மனநோய். 

தன்னுணர்வு கொண்ட, சுயமரியாதை கொண்ட எந்த ஒரு மனிதனும் தாய்மொழி குறித்து இழிவாக பேச மாட்டான்.
தாய்மொழியைக் காவு கொடுத்துதான் அயல் மொழி படிக்கவேண்டும் என்பது கண்களை விற்று தூரிகை வாங்குவது தான்.
தாய்மொழியை விட ஆங்கிலம் உயர்ந்தது என்று சொல்லும் கல்வி வியாபாரிகளிடம் சமூகம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். சமூகத்தைக் கெடுக்கும் கள்ளசாராய வியாபரிகளைவிட கொடிய விசக்கிருமிகள் இவர்கள்.

இந்த சூழலில் 

சுடுகின்ற உண்மை என்னவென்றால் நாம் இப்போது மொழி மாற்றின் ஒரு அபாயகரமான கட்டத்தில் இருக்கிறோம் என்பதே.
#‎மொழியுணர்வு‬

*****
அருமையான கற்றலின் இனிமை படம் ஒன்று ...
சந்திக்கிறோம்தானே?

Comments

  1. நாம் இப்பொழுது மொழி மாற்றின் அபாயகரமான கட்டத்தில் இருக்கிறோம் என்பது உண்மைதான் நண்பரே
    ஆனாலும் தமிழ் நிலைக்கும் வாழும் என்ற நம்பிக்கை இருக்கிறது
    அருமையான கற்றலின் இனிமை படம் அற்புதம் நண்பரே
    நன்றி

    ReplyDelete
  2. தாய்மொழியைக் காவு கொடுத்துதான் அயல் மொழி படிக்கவேண்டும் என்பது கண்களை விற்று தூரிகை வாங்குவது தான்.
    நாம் இப்பொழுது மொழி மாற்றின் அபாயகரமான கட்டத்தில் இருக்கிறோம் என்பது உண்மைதான் சகோ.
    சரியாக சொன்னீர்கள் அருமை அருமை!

    கணக்கும் அருமை உண்மை தான் இப்படி சொல்லித் தர தங்களை போல எவரும் கிடைக்கவில்லையே சகோ வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  3. //தாய்மொழி குறித்து வெட்குவது ஒரு மனநோய். // இது நறுக்

    ReplyDelete
  4. // தாய்மொழி மூலம்தான் ஒருகுழந்தை தனது அடிப்படைச் சிந்தனைத் திறன்களை அமைத்துக் கொள்கிறது, உயர் சிந்தனைத் திறன்களான தொகுத்துப் பார்த்தல், தொடர்பு கண்டறிதல், பகுத்துப் பார்த்தல் போன்ற சிந்தனைத் திறன்களும் தாய்மொழியில்தான் சாத்தியம்.//

    100 வீதமும் உண்மை சகோதரரே!

    இங்கு நான் வசிக்கும் ஜேர்மனியிலும் நானும் கணவரும் தமிழ்ப்பணி செய்த காலத்தில் (12 வருடங்கள் முன்பு) பெற்ற அனுபவமொன்றைப் பகிர்கின்றேன்!

    எங்கள் தமிழ்ச் சிறுவர்கள் சிலர் ஜேர்மன் பாடசாலையில் அங்கு பயிலும்போது ஆற்றல் குறைந்தவர்களாகக் காணப்பட அப்பள்ளி ஆசிரியர்கள் தொடர்புபட்ட பிள்ளைகளின் பெற்றோரை அணுகி, உங்கள் பிள்ளைகள் உங்கள் தாய்மொழியில் தேர்ச்சி பெற்றுத் திறமையோடிருந்தால் இங்கு ஜேர்மன் மொழியியலிலும் சிந்தனை, செயற்பாடுகளில் மிளிர்வர்! ஆகவே தாய் மொழியைக் கற்பியுங்கள். அவர்கள் சிந்திக்கும்போது தடையறச் சிந்தனை மிளிரத் தாய்மொழியே முதலிற் தேவை என்றார்கள்!
    இதன்பின் தமிழ்கற்க வந்த சிறார்கள் ஏராளம் என்பேன்!
    தாய்மொழிக் கல்வி எக்காலத்திலும் எங்கு வசிப்பினும் அவசியமானதே!

    இலக்கம் ஒன்பதின் சிறப்பு அருமை!
    நல்ல பதிவும் பகிர்வும் சகோதரரே! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அருமையாகச் சொன்னீர்கள்! தமிழில் பேசுவது வீட்டில் கூட புறக்கணிக்கப் படுகிறது! பின் எப்படி தமிழ் வாழும்? சிந்திக்க வேண்டிய விசயம்!

    ReplyDelete
  6. //தாய்மொழி குறித்து வெட்குவது ஒரு மனநோய்//
    அந்த மன நோய் தான் தமிழகத்திலே நிறையபேருக்கு தீவிரமான நிலையில் இருக்கிறதே :(

    ReplyDelete
  7. #மொழி மாற்றின் ஒரு அபாயகரமான கட்டத்தில் இருக்கிறோம் என்பதே.#
    பெற்ற தாயை மறப்பது போல்தான் தாய் மொழியை மறப்பதும் !
    த ம 4

    ReplyDelete
  8. தங்களைச் சந்தித்தது குறித்த பதிவொன்றைக் காண “ மணவை“யாரின் வலைத்தளத்திற்கு வருகை தாருங்கள்.
    http://manavaijamestamilpandit.blogspot.in/2014/10/blog-post_20.html

    ReplyDelete
  9. // யார் இப்போது பேருந்தில் போகிறார்கள்? பஸ்தான் ...

    பற்பசை நுழையாத வாயில் பேஸ்ட் அப்புகிறது ...

    ஒரு தேநீர்க் கடையில் தனது மகள் தமிழில் பேசினால் அவமானமாக இருகிறது என்கிறான் ஒரு அப்பன் ... //

    உங்கள் ஆதங்கம் புரிகின்றது. இதற்கு முக்கிய காரணம் இந்த ஊடகங்கள்தான் என்பதை மறுக்க இயலாது. அப்போதெல்லாம் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பிற்கும் தமிழில் அதற்கான சொல்லை உருவாக்கி பழக்கப் படுத்தினார்கள். இப்போது எல்லோருமே தமிழை படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். எனது பேரன் மம்மி – டாடி என்று சொல்லும்போது வேதனையாகத்தான் இருக்கிறது. நல்லவேளை குழந்தைகள அனைவருமே தாத்தா, பாட்டி என்றே சொல்கிறார்கள்.
    Tha.ma.4

    ReplyDelete
  10. உண்மையை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறீர்கள்.
    என்னுடைய ஆதங்கமும் அது தான். பிற மொழிகளையும் படியுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் அதற்காக தமிழை மட்டும் படிக்காமல் விடுவது எந்த விதத்தில் நியாயம்?

    ReplyDelete
  11. தாய்மொழி மூலம்தான் ஒருகுழந்தை தனது அடிப்படைச் சிந்தனைத் திறன்களை அமைத்துக் கொள்கிறது, உயர் சிந்தனைத் திறன்களான தொகுத்துப் பார்த்தல், தொடர்பு கண்டறிதல், பகுத்துப் பார்த்தல் போன்ற சிந்தனைத் திறன்களும் தாய்மொழியில்தான் சாத்தியம்.//

    உண்மையே! தாய்மொழி அறியாமல் வேறு எந்த மொழியையும் ஆழமாகக் கற்க முடியாது. நம் தாய் மொழியை மறக்காமல் மற்ற மொழிகளையும் கற்கலாமே! ஆனால், நம் மக்கள் பிற மொழிகளைக் கற்கின்றார்கள் தாய்மொழியை புறக்கணித்து. பிற மாநிலங்களை விட நம் தமிழ்நாட்டில் இது அதிகமாக இருக்கின்றதோ என்றும் தோன்றுகின்றது!

    மிகச் சிறப்பான ஒரு பதிவு நண்பரே!

    ReplyDelete

Post a Comment

வருக வருக