உதவிய கரங்கள் Helping hands

பதிவர் சந்திப்பு திருவிழா நேரலை காண 


கடந்த ஆண்டு மதுரைப் பதிவர் சந்திப்பில் புதுகையிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட பொழுது பொறுப்பேற்றுக் கொண்டவர்  கவிஞர் முத்து நிலவன்.  இதை எப்படி செய்யப் போகிறார் என்று திகிலோடு யோசித்தவன் நான்.

இன்று இப்படித் தான் செய்ய வேண்டும் என்று ஓர் நல்ல அனுபவத்தை எனக்குத் தந்திருக்கிறார். அவருக்கு நன்றிகள். இவர் முன்னெடுத்த நிகழ்வில் நிகழ்வின் உறுதுணையாய் தோள்கொடுத்தோர் நன்றியோடு நினைவுகூறத் தக்கவர்கள்.



கயாஸ் தியரி என்று ஒன்று சொல்வார்கள். அய்யன் சுஜாதா அருமையாக விளக்குவார்.  ஆளில்லா தீவு ஒன்றில்  ஒரு பட்டாம் பூச்சி சிறகை அசைத்தால் அது மூவாயிரம் கிமி தொலைவில் இருக்கும் நகரில் புயலாய் வீசும் என்பார் ! 

அதே போல் புதுகைத் தமிழாசிரியர் கழகம் அப்போதைய முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் தமிழ் ஆசிரியர்களுக்கு ஒரு வலைப்பூ பயிற்சியைத் தர அதில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஆங்கில ஆசிரியரான எனக்கும் கிடைத்தது. கூடவே எங்கள் வீட்டின் இன்னொரு ஆங்கில ஆசிரியைக்கும் இந்த வாய்ப்புக் கிடைத்தது. 

இப்படி இரண்டு கட்டப் பயிற்சியை முன்னெடுத்த தமிழக தமிழாசிரியர் கழகம், புதுகை, போற்றுதலுக்கு உரியது. இதற்கு பெரு உவப்புடன் நேரத்தை ஒதுக்கி கருவி நூற்களையும், புதுகை மறந்து போன ராஜ ராஜன் பெருவழியையும்  அறிமுகம் செய்த  அன்றய புதுகை முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர்.அருள் முருகன் ஒரு புதுப் பாய்ச்சலை புதுகை தமிழாசிரியர்களுக்கு தந்தார். 

தனது கல்லூரியை பயிற்சிக்கு அளித்த திரு ஆர்.எம்.வி. கதிரேசன் இங்கு நன்றியோடு நினைவுகூரப் படவேண்டியவர். 


இப்படி வந்தவர்களில்  அன்புக்குரிய சகோ அரும்புகள் மலரட்டும் பாண்டியன், முனைவர்.  துரைக்குமரன் என  பெரிய பட்டாளமே பதிவெழுத ஆரம்பித்தது. 

தமிழாசிரியர் கழகத்தின் குமா. திருப்பதி அய்யா, பெருநாழி குருநாத சுந்தரம், துரைக்குமரன் என ஒரு ஆக்கபூர்வமான ஆசிரியர்கள் தலைமைப் பொறுப்பேற்று செய்து முடித்த சாதனை இந்தப் பயிற்சிகள்! 

அவர்களுக்கு என்றென்றும் என் நன்றிகள். 

இவர்கள் இப்படி என்றால் அண்ணாத்தே நிலவன் நிகழ்வைச் சிந்தித்து உருவாக்கியதிலும், செழுமைப் படுத்தியதிலும் பேராற்றல் பெற்றவராக இருந்தார்! நிகழ்வுகள் அனைத்தையுமே சிந்தித்து செயலுக்கு கொண்டுவரும் வெற்றிகரமான வித்தை இவருக்கு கைவந்த கலை. 

இந்தப் பயிற்சியில் ஜோ.வி கலந்து கொண்டதும் அவரை நான் சந்தித்ததும் நான் நினைவில் பத்திரப் படுத்தி வைத்திருக்கும் பொக்கிஷங்களில் ஒன்று!

இப்பயிற்சியில் கலந்துகொண்ட முனைவர் ஜம்புலிங்கம் இன்று விக்கிபீடியாவில் நூறு கட்டுரைகளை எழுதியிருப்பது இவர்கள் அனைவர்க்கும் பெருமை என்றே நான் கருதுகிறேன். இவருக்கு விக்கி பயிற்சியை வழங்கிய பிரின்ஸ் என்ராசு பெரியார் குறித்து தனிப் பதிவே போடலாம். 


இப்படி நினைக்கும் தோறும் நன்றியோடு நினைவுகூரத்தக்க முகங்கள் எனது மனதில் ஒரு ரெம் அனுபவமாக சுடர்ந்து எழுகின்றன! 


இந்நிகழ்வுகளில்தான் அய்யா எட்வினையும், கரந்தை ஜெயக்குமார் அவர்களையும், அய்யா மூங்கில் காற்று முரளீதரனையும் வலைச்சித்தர் பொன்.தனபாலனையும் முதல் முதலில் நான் சந்தித்தேன்.



பதிவர் சந்திப்பு 2015ந்தை சாத்தியப்படுத்திய கடந்த கால நிகழ்வுகள் இவை என்றால் இன்று இரவும் பகலும் உழைக்கும் ஒரு பெரும் குழுவும் என்னை வியப்ப்பின் சிகரத்திற்கு கடத்துகின்றது. 

இதை முன்னெடுத்தவர் நிலவன் அண்ணா என்றால் இன்று அவருக்குத் தோள் கொடுப்பவர்கள் நிச்சயம் பதிவு செய்யப் படவேண்டியவர்கள். 

பாவலர் பொன். கருப்பையா 

எனது ஆசிரியர், பெரியார் தொண்டர், எங்கள் பலபேருக்கு ஒரு நல்ல முன்மாதிரி உணவில் பாதி மாத்திரைகளாக இருந்தபொழுதும் விழாக் குழு கூட்டத்தை விடமாட்டார்!  

மாவட்டத்திற்கு உள்ளே இருந்து பலர் என்றாலும் வெளியில் இருந்து வந்த உதவி ஒரு இன்ப அதிர்ச்சி! 

நீச்சல்காரன் என்கிற ராஜாராம் 

மெட்டா விக்கி உறுப்பினர், நீண்ட ஆண்டுகளாக வலைப்பூவிலும் இணையத்திலும் இயங்கி வருபவர். நிலவன் அண்ணா அவர் பாணியில் நிகழ்வை சர்வதேசே பதிவர்களிடம் கொண்டு சென்ற பொழுது இவர் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தை நிகழ்வில் கொண்டுவந்தார். அண்ணா சென்னை சென்று நிறுவனத்தாரை சந்தித்து வந்த பொழுது போட்டி அறிவிப்புகள் ஐம்பதாயிரம் என்று உயர்ந்தது. 

திருமிகு. உதயச் சந்திரன் ஐ.ஏ.எஸ். 

புதுகை பதிவர் சந்திப்பு அகில உலக அளவில் ஒரு சுழலை ஏற்படுத்தியிருக்கிறது எனில் அதற்கு மிக முக்கியமான நபர்களில் ஒருவர் மதிப்பிற்குரிய உதயச் சந்திரன் அய்யா என்பதில் வேற்றுக் கருத்து இருக்கவே முடியாது.

திருமிகு. தமிழ்ப் பரிதி 

முனைவர்   தமிழ்ப் பரிதியின் இருப்பு எங்களுக்கு பெரும் மகிழ்வு 

விக்கி பொறுப்பாளர் திரு. ரவிசங்கர்

நண்பா அறக்கட்டளை விக்கி பயிற்சிக்களை ஒன்றிணைத்து நடத்திய பொழுது அலைபேசி உரையாடல் இன்று நேரில் சந்திக்க முடிந்தது மகிழ்வு. 

கவிஞர் தங்கம் மூர்த்தி 

புதுகையின் இலக்கிய முகமாக இருந்து தமிழகம் முழுதும் அறிந்த சிறந்த கவிஞராக பரிமளிப்பவர். எனது அன்புச் சகோதரர். மேடையிலேயே பத்தாயிரம் மணி நேரத்தைக் கடந்தவர்! அனுபவம் மிக்க இவர் பேச்சில் அவை வயிறு குலுங்கச் சிரிக்கும். எங்கள் மாவட்டத்தில்  பெருமைக்குரிய இலக்கிய  அடையாளங்களில் ஒருவர். 


வெளியில் இருந்து ஆதரவு 

வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன்-

 நிகழ்வு அறிவிக்கப் பட்டதில் இருந்தே ஊன் உறக்கம் இல்லாமல் ஒரு ஜீவன் பணியாற்றிக் கொண்டு இருக்கிறது என்றால் அது வலைசித்தர்தான்! (புதுகையில் நிலவன் அண்ணாத்தே!)

ஜெயாம்மா 

திருச்சி மாவட்டத்தின்  மழலையர் பள்ளிகளின்  தொடக்கக் கல்வி அலுவலர், பதிவுகள் எப்போதாவது என்றாலும் எப்போதும் வாசிப்பை சுவாசிப்பவர். புதுகையின் மிக முக்கியமான மேடைப் பேச்சாளர்களில் ஒருவர். உணவுச் செலவு நானே பண்றேன் என்று முன்வந்தவர்.  அமைப்புக் குழு மறுத்துவிட்டது. ஆனால் இன்னைக்கு அம்மா தரும் மெனுவைப் பார்த்தால் பேசாம ஒத்துகிட்டு இருந்திருக்கலாமோ என்று எனக்கு தோன்றியது! விருந்தோம்பலில் அசத்துவது இவர்களின் சிறப்பு. 

கவிஞர் மஹா சுந்தர்

மிக அற்புதமான பேச்சாளர் என்னை ஜே.சி இயக்கத்துக்குள் இழுத்துவிட்டவர். அமைப்புக் குழு கூட்டத்தில் நிதியை யார் பெயரில் வாங்குவது என்கிற விசயத்தை மிக அழகாக விளக்கி நிலவன் அண்ணாவையும் பொன்.கா ஐயாவையும் ஒரு வங்கி இணைக் கணக்கில் இணைத்தவர்! 

கவிஞர் கீதா 

நிகழ்வின்  நிதிப் பொறுப்பளார். அமைப்புக் குழுக் கூட்டம் ஒன்று நடந்த பொழுது மதுரையில் இருந்து மகள் அழுதபடி அழைக்க அழுதுகொண்டே விரைந்தார் இவர். என்னமோ எதோ என நினைத்த எங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல்படுத்தவும் செய்தார்.  குடும்ப உறுப்பினர் ஒருவர் சர்க்கரை அளவு ஏறி மருத்துவமனையில் இருக்கிறார். மருத்துவம் நடந்து கொண்டிருக்கிறது நீங்கள் பணிகளை தொடருங்கள் என்று எங்களை ஆற்றுப் படுத்தினார் சகோதரி. தொடர்ந்த கூட்டங்களில் சோர்வேதும் இல்லாமல் பங்குகொண்டு வருவது எளிய விஷயமா என்ன? 

கவிஞர் வைகறை 

நீண்ட பயணங்களுக்குப் பிறகும் சோர்வின்றி பதிவர் சந்திப்புகளில் கலந்துகொண்டு பணியாற்றும் பாங்கு நினைவில் நிறுத்த வேண்டியது. குறிப்பாக புதுகையில் பல பதிவர்களை புதிதாக உருவாக்கியதிலும் அவர்களை பதிவு செய்ய வைத்ததிலும் வைகறையின் பங்கு அளப்பரியது. கையேடு தயாரிப்பில் ஸ்ரீயின் கூடவே இருந்து உதவியவர்களில் முக்கியமானவர் இவர். 

கவிஞர் செல்வா 

அருமையான கவிஞர் கணினித் தமிழ்ச் சங்கத்தை அகிலம் தழுவிய  இயக்கம் ஆக்க வேண்டும் என்று முன்மொழிந்தவர். கனவுக்காரர், கன நேரத்தில் கவிதை பொழிபவர்  கூட்டத்தை தவறவிடக் கூடாது என்பதில் குறியாக இருப்பவர்.  


சோலச்சி என்கிற திருப்பதி

அமைப்புக் குழுக் கூட்டங்களில் முதல்வராக வருபவர். நல்ல கவிஞர் சிறுகதை எழுத்தாளர். 

அரும்புகள் மலரட்டும் பாண்டியன் 

அன்புச் சகோதரர் வலைப் பாய்ச்சலை கொஞ்சம் ஓய்வில் வைத்திருந்தாலும் முடிகிற மட்டும் கூட்டங்களில் மணவையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வந்து கலந்து கொள்பவர். வலை எனக்குத் தந்த உறவுகளில் முக்கியமானவர். 

ஸ்ரீமலையப்பன் (நிறுவனர் விதைக்KALAM)

ஆங்கில ஆசிரியர், திடீரென வலைப்பூ பக்கம் பயணித்து சிகரம் தொட இருப்பவர்! நிலவன் அண்ணா மலையப்பனிடம் கேளுங்கள் பேஜ் மேக்கர் தெரியுமான்னு என்றதும் மலையிடம் கேட்காமலே அவருக்கு தெரிய வாய்ப்பில்லை என்று சொன்னேன்.எதற்கும் கேட்போம் என்று மலையைக் கேட்டபொழுது தெரியுமே என்றார்!  துவங்கியது கையேட்டுப் பணி.

யு.கே இன்போ டெக் கார்த்திகேயன் 

கையேட்டுப் பணிக்காக நிறுவனத்தை தந்து தனது ஊழியர்களையும் ஈடுபடுத்திய அதிர்வேட்டு இவர். (பேசவே மாட்டார் பேசினால் முதல் கேள்வியே அதிர்வேட்டாகத்தான் இருக்கும்). கையேட்டுப் பணிகளுக்கு என துவங்கி நிகழ்வின் பல கூட்டங்களைத் தனது நிறுவனத்திலேயே நடத்திக்கொள்ள அனுமதித்தவர். இக்குழுவின் பலநாள் தூக்கத்தை சுவாகா செய்த பின்னர்தான் பதிவேடு தயாரானது! 

கவிஞர்  மைதிலி, கவிஞர் மாலதி, கவிஞர் ரேவதி என மகளிர் பிரிவும்  ரொம்பவே வெய்ட். 

ஆபத்பாந்தவியாக முதற்கட்டக் கூட்டங்களை நடத்திக்கொள்ள தனது பள்ளியை வழங்கிய பாரி மழலையர் பள்ளி கருணைச் செல்வி அவர்கள்தான் நிகழ்வின் முதல் கொடையாளர். அவர் பணத்தை எடுக்கச் சென்ற நொடியில் முருகன் அம்மையப்பனைச் சுற்றி பழத்தை வாங்கியது போல் சடாரென முதல் இடத்தை பிடித்தவர் சகோதரி கீதா! 

ஆரம்பக் கூட்டங்களுக்கு தனது மன்றத்தை வழங்கிய ஆக்ஸ்போர்ட் சுரேஷ், யாருக்குமே தரமாட்டோம் எங்கள் அறிவை விரிவு செய் அரங்கை என்ற நிலைப்பாட்டைத் தளர்த்தி நிகழ்வின் பல கூட்டங்களை அவர்களது அரங்கில் நடத்திக் கொள்ள  அனுமதித்த நண்பா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அனைவருக்கும், அதன் நிறுவனர்களில் ஒருவருமான பிரகாஷ் அவர்களுக்கும் நன்றிகள். 

இப்படி இன்னும் பலர் பம்பரமாச் சுற்றுவதால் அடியேன் பதிவெழுத முடிகிறது. அரிமளம் பள்ளியில் ஆர்.எம்.எஸ்.ஏ பயிற்சியில் ஜாமைக்கா பள்ளி மேம்பாட்டுத் திட்ட மாதிரியை விவாதித்துவிட்டு வீட்டிற்குள் அடைந்துவிட்டதால் இன்று அமைக்குழு கூட்டத்திற்கு செல்ல முடியவில்லை. அதற்காக பதிவு ஏதும் போடாமல் இருக்க முடியுமா என்ன?

சுரேஷ் மான்யா - ஸ்டாலின் சரவணன் என இன்னொரு நன்றிப் பட்டியல் அடுத்த பதிவில் தொடரும் 

Comments

  1. வணக்கம் தோழர்,
    விருப்பார் விழைந்து
    வெறுப்பார் இல்லாது
    பொறுத்தார் பொதிகை
    அறத்தார் செய் அரும்பணி
    சிறக்கட்டும்!
    வாழ்த்துகள்
    TM 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  2. நல்ல நன்றி கூறல். உங்களைப் போன்ற, புதுக்கோட்டை வலைப்பதிவு நண்பர்களை நான் சந்தித்தற்கும் , மேலே சொன்ன, புதுக்கோட்டை – கணினிப் பயிற்சி வகுப்புகள்தான் காரணம் என்பதனை நன்றியுடன் இந்த இடத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

    ReplyDelete
  3. என்றும் நன்றியுடன்

    திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  4. விழாவில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களைப் பற்றியும், சக வலைப்பதிவர்களைப் பற்றியும், விழா நிகழ்வுகளைப் பற்றியும் பகிர்ந்த விதம் அருமை. அடுத்தடுத்து நடக்கவுள்ள வலைப்பதிவர் விழாக்களுக்கு இவ்விழாவினை முன்னுதாரணமாகக் கொள்ளலாம். நன்றி. விக்கிபீடியா கட்டுரைகள் எண்ணிக்கை தொடர்பாக ஒரு சிறு செய்தி தமிழில் 250 கட்டுரைகளும், ஆங்கில விக்கிபீடியாவில் 100 கட்டுரைகளும் எழுதியுள்ளேன். உங்களைப் போன்ற சக பதிவர்களால்தான் இது சாத்தியமானது.

    ReplyDelete
  5. உங்களை எல்லாம் சந்தித்து மகிழ ஆவலாய் இருந்தும் எனது பணிச்சூழல் தடுத்துவிட்டது! விழா நினைவாகவே நேற்றைய பொழுது கழிந்தது!

    ReplyDelete
  6. எத்தனை பேர். ஊர் கூடி தேர் இழுப்பது என்றால் சும்மாவா என்னா? இத்தனை பேர் வடம் பிடித்து, முத்துநிலவன் ஐயா/அண்ணாவின் வழிகாட்டலில் எல்லோரது துணையுடன், உழைப்புடன் இந்த விழா எனும் தேரை இழுத்து நிலை நிறுத்தி விட்டாகியது..அத்தனை பேருக்கும் பதிவர்கள் அனைவரும் நன்று கூற கடமைப்பட்டிருக்கின்றோம். எங்கள் மனமார்ந்த நன்றிகள்! அடுத்த வருட தேர் எந்த ஊரிலோ? வடம் பிடிக்க எல்லோரும் தயார்!!!

    ReplyDelete
  7. அருமை அருமை மது. நான் எழுத நினைத்திருந்த “இவர்களால்தான் இநதத் திருவிழா நடந்தது..” பதிவுக்கு அவசியமின்றி, அற்புதமாகத் தொகுத்துவிட்டீர்கள் மது. நன்றிகலந்த பாராட்டுகள். அப்புறம் நம் ஓவியர்கள் அவர்களுக்குக் கவிதைத் தேர்வில் உதவிய மைதிலி, வைகறை.. நம்ம பஷீர் அண்ணா, அமிர்தா, ஜலீல், ஜெயாவுக்கு உதவியாக இருந்த திருமதி வைகறை, அண்ணாத்துரை என இந்தப் பட்டியல் பெரிதுதான்.. இன்னும் யோசித்தால் இன்னும் வரும்.. வருமாறு நம் விழா இருந்ததே அந்தப் பெருமையின் வெளிப்பாடு.

    ReplyDelete
  8. சும்மா படமாக் காட்டிப் பதிவை அடுக்கிட்டு இருந்தீங்க... இப்பத்தான் உருப்படியாக அழகாத் தொகுத்து அருமையாப் போட்டிருக்கீங்க மது. அதுக்குப்புடிங்க ஒரு த.ம.வாக்கு

    ReplyDelete
  9. "கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்" என்று தனி லேபில் உருவாக்கப்பட்டு, தங்களின் இந்தப் பதிவு (& 1 to 11)சேர்க்கப்பட்டு விட்டது...

    இணைப்பு : →கலந்து கொண்ட பதிவர்களின் பதிவுகள்

    நன்றி...

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  10. அன்பிற்கும் நேசத்திற்கும் உரிய அய்யா, உழைத்தவர்களை வாழ்த்துதல் என்பது இன்றைய நிலைகளில் வழக்கொழிந்து போய் விட்டது. ஏன் என்றால் வேலை முடிந்து விட்டால் யாரும் உழைத்தவர்களை கண்ணால் கூட பார்க்க விழைவதில்லை. ஆனால் மிக அழகாக மாநாட்டினை திட்டமிட்டது, செதுக்கியது, அழகுற செய்தது, பதற்றமின்றி விழாவை நடத்தியது, பின்னூட்டங்களை தொகுத்தது, உழைத்தவர்களை வெளிச்சமிட்டு காட்டுவது போன்ற செயல்களை புதுகைக்காரர்கள் செய்து வருவதைக் காணும் பொழுது நாங்கள் கற்க வேண்டியது இந்த பிரபஞ்சத்தினையும் தாண்டியது என்பதை உணர முடிகிறது. தொடருங்கள் தங்கள் பணியினை .... கற்றுக் கொண்டே இருக்கிறோம் நாங்களும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள்

      Delete

Post a Comment

வருக வருக