கேவல் நதி யாழியின் கவிதைத் தொகுப்பு



 யாழியின் கேவல் நதித் தொகுப்பின்  கவிதை வரிகளில் புவியதிர்ந்து அடங்குகிறது, உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் இந்தத் தொகுப்பினை வெளியீட்டின் மறுநாளே கவிஞர் வைகறை மூலம் பெற முடிந்தது மகிழ்வு.



தோழி ஒருவரின்  கவிதைகளை நந்தன் ஸ்ரீதரன் அவர்கட்கு அனுப்பி கருத்துக் கேட்ட பொழுது கவிதைகள் இப்போ வேறுமாதிரி இருக்கு என்றார். அப்படியா இப்போ கவிதை எப்படி இருக்கிறது என்று வைகறையை வினவிய பொழுது அவர் எனக்கு நான்கு தொகுப்புகளை வாசிக்கத் தந்தார். மகா சிவராத்திரியும் தேநீர்க் கோப்பையும் இப்படித்தான் என்னை வந்தடைந்தது.

இப்போது அதே கவிஞர் வைகறையின் மூலம் என்னை சேர்ந்திருக்கிறது கேவல் நதி, இம்முறை கூடுதல் மகிழ்வு. ஏனெனில் இது உயிர்மை வெளியீடு!


நல்ல கவிதைத் தொகுப்பு உங்கள் மனதில் குறைந்த பட்சம் சின்னதோர் சிந்தனை விதையைப் பதியனிட  வேண்டும். கவிதை வரிகள் உங்கள் வாழ்வனுபவங்களை மனசில் மாண்டேஜ் காட்சிகளில் ஓடச் செய்ய வேண்டும். யாழியின் இந்த தொகுப்பு இவற்றை குறைவின்றிச் செய்கிறது.


விலக்கப்பட்ட கனியில் துவங்கி மொட்டை மாட்டில் முடிகிற தொகுப்பு ஒரு குறியீடாக வாசகனின் முகத்தில் ஒரு புன்னகையைப் பொருத்துகிறது.

பெறும் வரம் என்கிற கவிதை நமது  சமகால வாழ்வை பகடி செய்கிறது.

பெறும் வரம்

பெரும் வரம்வேண்டி
கடும்தவம்  புரிவதாய் எண்ணி
ஒற்றைக் காலை வெட்டிக்கொண்டது
கடினமாய்த்தானிருக்கிறது
மற்றொரு காலிருந்த இடத்திலிருந்து
சொட்டிக்கொண்டிருகிறது உதிரம்
ஒற்றைக்காலில் நெடுநேரம் நிற்பது
சிரமமான காரியம்தான்
கடவுள் தோன்றும் பட்சத்தில்
இன்னொரு காலை வரமெனக்கேட்டலே
போதுமானதாய் இருக்கும்
இவ்வாழ்வில்



யாழியின் ஸ்பெஷாலிட்டிகளில் ஒன்று இலக்கிய அரசியலை கவிதையில் கொண்டுவருவதும் அவற்றை வாசகன் ரசிக்கும்வண்ணம் தருவதும். இந்தக் கவிதை சோற்றுப் பதம்.

நிறமாறிலி

எத்துனை முயற்சித்தாலும்
என் நிறத்தைப்
பிரதிபலிக்க முடியாது
உன் பச்சோந்தியால்
பச்சோந்திகளை
விழுங்கி செரித்தவன்
நான்

பொதுவாக ஒரு இடத்தில் இரண்டு மனிதர்கள் இருந்தால் அங்கே மூன்று அரசியல் இருக்கும் என்பார்கள். அந்த மனிதர்கள் இலக்கியவாதிகள் என்றால் நிச்சயம் இருபது அரசியலாவது இருக்கும். அந்த இரண்டு பேர் தமிழ்க் கவிகள் என்றால் இன்னுமும் கூடும்.

உண்மையில் இந்த அரசியலைத் தாண்டி தனக்குள் இருக்கும் படைப்பாளனை உயிர்ப்புடன் வைத்திருக்கும் வித்தை இங்கே மிகச் சிலருக்கே வந்திருக்கிறது. யாழி இதையும் தாண்டி அந்த அனுபவங்களை கவிதையில் படிமப்படுத்துவதில் அசத்துகிறார்.  நிழலை வியக்கும் மனிதனும், கிரீடமும் இந்தவகைக் கவிதைகள்தான்.

நந்தவன ஆண்டியின் கண்ணீர்த் துளியின் நந்தவனமாக மலரும் மயானம், சுயமித் தலைமுறையின் இதயத்தை உலுக்கும் போரின் நிறத்தை தீட்ட  ஓடும் உதிரத்தில் மூழ்கி எழும் தூரிகை, நினைவுகளின் உருட்டலில் ஒளிரத்துவங்கும்  போத்தல், கற்றைகளால் மெல்ல வான் அகழ்ந்து விரையும் சூரியன்,  காணிக்கை முட்கள், மாட்ச் பிக்ஸ் செய்யும் கடவுள், கடலில் செவ்வகம் தேடும் மீன், ராதை இதழ் புல்லாங்குழல், என ஒவ்வொரு வரியிலும்  வார்த்தை செதுக்கல்கள் நம்மை ஆகர்சித்து தவழ்கின்றன நுரைக்கும் கடல் அலைகளாக.


படிமங்கள், குறியீடுகள் என சற்றே சிந்தித்தால் மட்டுமே ரசிக்கும் கவிதைகள் மட்டுமின்றி, குழந்தைகள் கூட நெகிழும் கடவுள் உங்களோடு இருப்பாராகவும்,   மனமிளக்கும் உருகு நிலையில் கண்ணீர்த்துளிகளும் தொகுப்பை நிறைவு செய்கின்றன.

கவிதைகளை நேசிப்போர் அனைவரிடமும் இருக்க வேண்டிய தொகுப்புதான் இது. வாழ்த்துகள் யாழி. தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு.



கவிதைத் தொகுப்பின் பெயர்: கேவல் நதி
கவிஞர் : யாழி
பதிப்பகம் : உயிர்மை
விலை : 60 (அறுபது ரூபாய்கள்)

வாழ்த்துகளுடன்
மது
இன்னும் காதில் ஒலிக்கின்றன கேவல்கள் !

Comments

  1. யாழியின் கேவல் நதித் தொகுப்பின் கவிதை வரிகளில் புவியதிர்ந்து அடங்குகிறது - எனும் முதல் வரியிலேயே நீங்கள் நல்ல் கவிதைகளின் ரசிகர் என்பது தெரிந்து தொடர்ந்தேன்.
    இலக்கிய அரசியல் கிண்டலையும் அதன் உண்மைத் தன்மையை உணர்ந்து ரசித்தேன். இதுபோல அப்பப்ப கவிதைகள் பற்றியும் எழுதுங்கள் மது! த.ம.வா.2

    ReplyDelete
  2. நல்லதோர் நூல் அறிமுகம் மது. நன்றி.

    ReplyDelete
  3. யாழியின் கவிதைகள்அருமை
    நன்றி நண்பரே

    ReplyDelete
  4. நல்லதோர் நூல் அறிமுகம். கவிதை ஸாம்பிளே அருமை....அதுவும் பகிர்ந்த விதம்... மருமகள் அதை நன்றாக இருக்கிறது என்று சொல்லிக் காட்டி இங்குப் பகிர்ந்திருக்கும் விதம் அட்டகாசம் கஸ்தூரி...

    ReplyDelete
  5. நல்லதொரு நூல் அறிமுகம் மது சார்...

    ReplyDelete

Post a Comment

வருக வருக