சசிகலாவை ஏன் எதிர்க்கலாகாது?

சசிகலாவை ஏன் எதிர்க்கலாகாது?

-முனைவர் மு பிரபு

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் கூத்து பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இருக்கிறது என்பது தற்காலத்திய சமூக அரசியல் தமிழக, இந்திய சிந்தனாவாதிகளின் முகநூல் பதிவுகளை மேய்ந்தால் ஒருவாறு யூகிக்க முடிகிறது.


சனாதனாவாதிகள் அல்லது வலதுசாரி அல்லது ஆர்எஸ்எஸ் அல்லது பாஜக கருத்துருவாக்கர்கள் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதைப் பார்க்க முடிகிறது. இவர்களில் மிகச்சிலர் மட்டும் திருமதி தீபா ஜெயராமை ஆதரிக்கிறார்கள். இரண்டாமவரை ஆதரிப்பவர்கள் pure rightists என்றும் முதலாமவரை ஆதரிப்பவர்கள் ஓட்டு அரசியல் சார்புள்ள வலதுசாரிகள் அதாவது பாஜக-காரர்கள். சசிகலாவை ஆதரிப்பவர்கள் இரண்டு வகையானவர். பாஜக பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறது என்பதனால், தமிழர் - திராவிடர் நலனுக்கு பாஜக-வின் ஆதரவு பெற்ற பன்னீர்செல்வத்தால் குந்தகம் மட்டுமே ஏற்பட முடியும் எனக்கருதி (இது உண்மையும் கூட) சசிகலாவை ஆதரிக்கும் ராஜன்குறை கிருஷ்ணன், அ மார்க்ஸ் போன்றோர். இவர்களின் நிலைப்பாடு, நீண்ட கால நோக்கில் பார்க்குமிடத்து, சரியான ஒன்றுதான்.


பாஜக ஆதரவு பெற்ற அரசு ஒன்று இங்கு அடுத்த நாலரை வருடங்கள் நிலைக்குமானால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தோருக்கு பெரும் பாதகமாக முடியும். மார்க்ஸ் போன்றோரோடு பெரியாரிஸ்டுகளும் இக்காரணம் கொண்டே சசிகலாவை ஆதரிக்க தலைப்படலாம். கி.வீரமணி போன்றோர் ஏன் சசிகலாவை ஆதரிக்கிறார்கள் என்பதை இந்தப் பின்புலம் கொண்டே தெரிந்துகொள்ள முடியும். எனக்கு நிச்சயமாகத் தெரியும். பெரியார் இன்றைய நிலையில் உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவையே ஆதரித்திருப்பார். குடும்ப அரசியல், அந்தக் குடும்பமே அயோக்கியர் கூடாரம் என்ற கருத்தை வைப்போர் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம், தனி ஒதுக்கீட்டு கொள்கை பாஜக-வால் ஆதரிக்கப்பட்டு கவர்னரின் முடிவின் பேரில் பன்னீர்செல்வமே முதல்வராகத் தொடர்ந்தால் ஐம்பது ஆண்டு கால தமிழக அரசின் நிலைப்பாட்டையே பன்னீர்செல்வம் மாற்றிவிடக்கூடிய இடர் உண்டு.


இந்தியத் துணைக்கண்டத்திலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் 69% தனி ஒதுக்கீட்டு கொள்கை நடைமுறையில் இருக்கிறது. இது பாஜக-விற்கு நிச்சயம் உகந்தது கிடையாது. பன்னீர்செல்வத்தைக் கொண்டே இதற்கு முடிவுகட்ட முடியும். பொங்கல் சமயத்தில் மரினா கடற்கரையில் கூடிய முப்பது வயதிற்கும் குறைந்த தொழில்நுட்பத்துறை சார்ந்த மனிதர்கள் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இனத்தோருக்கான சமூக அரசியல் உரிமைகளைப் பெற கடந்த நூற்றாண்டின் மத்தியப் பகுதியில் நடைபெற்ற நீண்ட போராட்டங்களை அறியார். நேற்றுப் பெய்த மழைத் தாவரங்கள். பொருட்படுத்த வேண்டியதில்லை.

அயோத்திதாசப் பண்டிதர், ராமசாமி நாயக்கர், குருசாமி, உள்ளிட்ட சமூக அறச்சான்று மிக்க பெருந்தகைகள் இட்ட பிச்சையின் காரணமாகத்தான் மரினாவில் கூடிய இரண்டாம் தலைமுறை பட்டதாரிக்கூட்டம் செல்போனில் ராத்திரி நேரத்தில் ஆயிரக்கணக்கில் மினுக்கி படம் காட்டியது. Memes வடிவமைக்கும் முப்பது வயதிற்கும் குறைந்த மனிதர்கள் ராத்திரி பகலாக பொது இடத்தில் கூடி நாள்கணக்கில் தங்கியிருப்பதற்கு பதிலாக கடந்த நூற்றாண்டு தென்னகத்தின் அரசியல் போராட்டங்கள், தலைவர்கள், திராவிடச் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட துரோகங்கள், சொந்த நலனைத் துறந்து ஓட்டு அரசியலுக்கும் வெளியே தசாப்தங்கள் நெடுகில் கண்துஞ்சாமல் பணியாற்றிய, அறியும் நெஞ்சமும் கண்களும் பனிக்கும்படியான, தலைவர்களைப் பற்றிய புத்தகங்களைப் படிப்பது அவர்களுக்கும் அவர்களுக்குப் பிறக்கப்போகும் அல்லது பிறந்திருக்கும் குழங்களுக்கும் நல்லது. கி.வீரமணியின், பழ நெடுமாறனின், அ மார்க்ஸின் நிலைப்பாட்டை கிண்டலடிக்கும் தகுதி தங்களுக்கு உள்ளதா என்பதைக் கண்ணாடியில் பார்த்து தெரிந்து கொள்ளட்டும்

அப்படிச் செய்பவர்கள். தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும் தங்கள் கட்சிக்கு தலைவராக்குவோம் என்ற பாஜக பங்காருலட்சுமணனை தலைவராக்கி சூட்கேசில் காசுகொடுத்து படம்பிடித்து அவமானப்படுத்தி துரத்திவிட்ட கதையை அனைவரும் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். பங்காருலட்சுமனனுக்கு முன்னால் அந்தக் கட்சியின் தலைவராக இருந்தவர்கள் கட்சிநிதி வாங்கியதில்லையா? எந்தக் கட்சியாவது வசூலிக்கும் பணத்திற்கு சரியாக கணக்குக்காட்டியதாக வரலாறு உண்டா? ஏன் பங்காருலட்சுமணன் மட்டும் மாட்டிக்கொண்டார் என்பதின் விடை அவரின் சாதியில் இருக்கிறது.

சாதி அரசியல்தான் இதற்குப் பின்னால் என்றால் தீபாவை ஏன் பாஜக வெளிப்படையாக ஆதரிக்க முன்வரவில்லை என்றால், இருவரில் பன்னீர்செல்வமே தற்போதைய நிலையில் தங்களுக்கு உகந்தவர். பன்னீர்செல்வம் எப்போதுமே தமிழக அரசியலில் ஒரு தனி சக்தியாக உருவெடுக்க முடியாது. தீபாவிற்கு சன்னமான ஒரு சாத்தியம் உண்டு.

திமுக இதைக் கவனித்துக் கொண்டிருக்கிறது. திமுக செயல்தலைமை இதை தனது கட்சியின் சித்தாந்த அடிப்படையில் பார்க்க மறுக்கிறது என்பது எனது எண்ணம். திமுக சசிகலாவை எதிர்ப்பது என்பது புரிந்துகொள்ளக் கூடிய விஷயம்தான். ஆனால் பன்னீர்செல்வத்திற்கு மறைமுகமான ஆதரவு அல்லது இந்தக் குழப்பத்தில் பன்னீர் மகிழும்படியான கருத்துக்களைக் கூறிவருவது என்பது திமுக-வின் நீண்டகால சமூகநீதிப் பாரம்பரியத்திற்கு எதிரானது. சட்டசபை கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டால் திமுக-விற்கு நிச்சயமான வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படியான நிலையை பாஜக தவிர்க்க தன்னாலான எல்லாவற்றையும் செய்யும் என்பது எனது எண்ணம்.

இதில் இன்னொரு கோணம் உண்டு. காங்கிரஸ் எப்பொழுதுமே சனாதனிகளின் கூட்டமாகத்தான் இருந்திருக்கிறது. சசிகலா, இதன் காரணமாகவே, காங்கிரசுக்கு ஆகாதவர். கர்நாடகாவில் இருக்கும் காங்கிரஸ் அரசு, சசிகலா சம்பந்தப்பட்ட வழக்கில் வரவிருக்கும் உச்சநீதிமன்றத்தை தீர்ப்பை உடனடியாக வெளியிட சட்டரீதியாகவே நிர்ப்பந்தத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. ஏன் சசிகலாவை தொல்.திருமாவளவன், பழ நெடுமாறன், அ மார்க்ஸ், ராஜன் குறை கிருஷ்ணன் போன்றோர் ஆதரிக்கிறார்கள் என்பதற்கு இத்தனைப் பின்புலமும் தெரிய வேண்டும். அடிக்கடி தன் அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்பவர் என்று பெரியாரைப் பற்றி ஒரு விமரிசனம் உண்டு. பெரியார் தன்னுடைய அரசியல் சமூக தத்துவத்தை ஒரு அங்குலம் கூட சமரசம் செய்து கொள்ளாதவர். யாரின் மூலம் தன்னுடைய அரசியல் லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியுமோ அவரை அந்த சமயம் ஆதரித்திருக்கிறார். "மனிதர்கள் முக்கியமில்லை; தத்துவம் இன்றியமையாதது" என்ற நிலைப்பாடு ஐய்யாவினுடையது.

மற்றபடி சசிகலா என்ற தனிமனுஷிக்கு முதலமைச்சர் என்ற யோக்கியதை உண்டா என்பது விவாதத்திற்குரியதே. சட்டசபை உறுப்பினர்கள் அறம் சார்ந்து, தங்களுக்கு வாக்களித்த மக்களின் விருப்பத்திற்கேற்ப, சசிகலாவிற்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்கலாகாது என்பதெல்லாம் வெறும் facebook மற்றும் WhatsApp பேச்சு. கொஞ்சம் மரியாதையைக் கூட வேண்டாதா பேச்சுக்கள் அவை. கமலஹாசனும் நடிகர் மாதவனும் சசிகலாவை ஏன் எதிர்க்கிறார்கள் என்பதை முதலில் இந்த மரினா மைனர்கள் தெரிந்து கொள்ளட்டும். எத்தனையோ முறை இந்திய சட்டசபைகள் இந்த மாதிரியான நிலைமைச் சந்தித்து உள்ளனவே? அப்போதெல்லாம் சட்டசபை உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களித்த மனிதர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து பதவி விலகினார்களா? மாயாவதியை மட்டும், பங்காருலட்சுமணனை மட்டும் ஊழல்வாதிகளாக மக்களிடம் காட்டும் கயமைத்தனமிது. ராஜீவ் காந்தியின் Bofors என்ன ஆயிற்று? கர்நாடகாவின் முன்னாள் பாஜக-கட்சியின் முதலமைச்சர் மீதான குற்றச் சாட்டுக்கள் என்ன ஆயிற்று? மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபொழுது சாட்டப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுகள் என்னவாயிற்று? மூவாயிரத்திற்கும் அதிகமாக சீக்கியர்கள் ஒரு நவம்பர் மாத முதல் இரண்டு நாட்களில் எரிக்கப்பட்டார்களே, குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது? மாயாவதி ஆயிரக்கணக்கில் யானை சிலைகள் உத்திரப் பிரதேசம் முழுவதும் நிறுவி அரசுப்பணத்தை வீணடித்து விட்டார் என்பதாக குற்றம் சாட்டுபவர்கள், இந்தியா முழுக்க நேருவின் சிலைகளை மாநில மத்திய அரசுகள் தங்கள் செலவில் நிறுவியிருக்கிறார்களே, அதற்கென்ன வக்காலத்து வாங்குவார்கள்?

"அண்ணன் எப்போ எந்தரிப்பான்; திண்ணை எப்போ காலியாகும்" என்பதாக திமுக இன்றைய நிலையைக் கவனித்து வருவது கவலை தரும் விஷயம். ஸ்டாலின் அவர்கள் திமுகவின் - திகவின் - சித்தாத்தங்களை வரலாற்றுப் பிரக்ஞையோடு புரிந்து கொள்வது அவசியம். தமிழ்நாட்டின் தலைவிதியை அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு தீர்மானிக்கப்போவது அவராக ஒருவேளை ஆகக்கூடும். அப்படியான நிகழ்வில் ஸ்டாலினிடம் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட / பட்டியல் இனத்தவரின் குழந்தைகள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற வாழ்வாதார விடயங்களில் ரொம்பவும் எதிர்பார்த்து நிற்பார்கள்.

ஸ்டாலினின் எதிரி சசிகலா அல்ல என்றுதான் தோன்றுகிறது. ஆனால், காங்கிரஸ், பாஜக மற்றும் பாஜகவினால் ஆதரிக்கப்படும் பன்னீர்செல்வம் - தீபா போன்ற பெரிய - சிறிய சக்திகள் அவரின் எதிரிகளே.

இது சசிகலாவிற்கான வக்காலத்து என்று புரிந்துகொள்ளுதல் ஆரம்ப நிலை அறிவு கூட இல்லை. சசிகலா செய்த - செய்துகொண்டிருக்கும் - செய்யப்போகிற எந்தத் தவற்றிற்குமான affidavit-ம் அல்ல.

திராவிட இயக்கத்தின், பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தவரின் வரலாற்றைப் படித்தவர்கள் இந்தக் கட்டுரையை முழுமையாகவோ அல்லது பகுதி அளவிலோ ஏற்றுக்கொள்வார்கள். இதன் உண்மைத்தன்மை உணரப்படுவதும் அதுபோன்ற தருணங்களில் மட்டுமே.

Comments

  1. இப்போது 5 நாட்களுக்கு முன்னதாக கேட்டிருந்தால் கூட நான் சசியை எதிர்ப்பதாகவே கூறியிருப்பேன்.
    ஆனால் கடந்த 5 நாட்களாக நடப்பவற்றை பார்த்த பின் எனது முடிவை மாற்றிக் கொண்டேன்.
    எனத

    ReplyDelete
  2. எனது மனதில் உள்ளவற்றை அப்படியே பதிவிட்டுள்ளீர் கள்

    ReplyDelete
  3. நல்ல கட்டுரை...
    எனக்கென்னவோ சசிகலாவை விட பன்னீர் மேல் என்றே தோனுது...
    இருவரும் இல்லாது ஜனாதிபதி ஆட்சி வரும் பட்சத்தில் பாஜக காலூன்ற நினைக்கும். இதைவிட இவர்களில் ஒருவர் அமர்வது சிறப்பு.

    ReplyDelete
  4. நோக்கம் சரிதான் ,ஆனால் ஜீரணிக்கவே முடியவில்லை :)

    ReplyDelete
  5. காட்டு தர்பார். சுற்றிலும் விலங்குகள். இதில் எது கொடூரம் குறைந்தது என்று சமாதானப்படுத்திக் கொள்வது!? சித்தாந்தங்கள் நன்றாக இருக்கின்றன. இருந்தாலும் தெரிந்தே நாட்டை மாஃபியா கும்பலிடம் தூக்கிக் கொடுப்பது கொடுமைதானே? யார் மனதில் என்னவிதமான சதி ஓடிக் கொண்டிருக்கிறது என்ற ஆராய்ச்சியை விட்டு விட்டு யாரால் நாட்டுக்கு நல்லது என யோசிப்போம்.

    ReplyDelete

Post a Comment

வருக வருக