அம்பேத்கர் பெயர் சர்ச்சை - புதியவன் பக்கம் பதிவர் ஷாஜகான் அவர்களின் பக்கத்தில் இருந்து


அம்பேத்கர் பெயர் பற்றிய சர்ச்சை மீண்டும் சுற்றத் துவங்கி விட்டது.

அம்பேத்கரின்மீது அன்பு கொண்ட பிராமண ஆசிரியர் நினைவாக, தன் பெயரை அம்பேத்கர் என்று வைத்துக்கொண்டார் என்பது ஒரு தரப்பு. இல்லை, அம்பேத்கர் என்ற பெயர் பிராமணப் பெயரே அல்ல, இது ஒரு கட்டுக்கதை என்பது ஒரு தரப்பு.
*



டாக்டர் அம்பேத்கரின் முழுப்பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்பதாகும். (அவரது தாய்மொழியான மராட்டியில் ஆம்பேட்கர் என்று அவர் பெயர் உச்சரிக்கப்படுகிறது.) அவரது சொந்த ஊர் ரத்தினகிரி மாவட்டத்தில், மண்டண்கட் தாலூகாவில் அம்பாவடே என்ற கிராமம். அவரது தாயார் பெயர் பீமாபாய், தந்தை பெயர் ராம்ஜிவல்த் மாலோஜி ஸக்பால். (ஸக்பால் என்பதே அவர்களுடைய குடும்பப் பெயர்.) மகாராஷ்டிர மாநிலத்தில் வீரத்திற்கு, நேர்மைக்கும் புகழ் பெற்ற, செல்வாக்குமிக்க, ஆனால் தீண்டப்படாதோர் எனப்படும் மஹார் சாதியில் அம்பேத்கர் பிறந்தார். (மஹார் சாதியினர் சிவாஜியின் போர்ப் படையிலும் இருந்தனர்.)

பீம்ராவின் பாட்டனார் மாலோஜி ஸக்பால் ராணுவத்தில் ஹவில்தார் பதவி வரை பணிஉயர்வு பெற்றவர். முகாமில் ராணுவத்தினரின் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்-சிறுமியருக்குப் பகலில் பள்ளிக்கூடம் இயங்கும். மூத்த வயதினருக்கு இரவில் வகுப்புகள் நடைபெறும். இந்தப் பள்ளியில் அம்பேத்கரின் தந்தை ராம்ஜி சுபேதார் தலைமை ஆசிரியராக 14 ஆண்டுகள் பணி செய்தார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்தபோது லட்சுமண் முர்பாட்கர் என்பவருடன் நெருங்கிய தொடர்பு உண்டானது. முர்பாட்கர் தனது மகள் பீமாபாயை ராம்ஜிக்குத் திருமணம் செய்துவைத்தார்.
... இத் தம்பதியினருக்கு 1890ஆம் ஆண்டுவரை பதின்மூன்று குழந்தைகள் பிறந்திருந்தன.

ராம்ஜி சுபேதாரின் ராணுவப் பிரிவு மத்தியப் பிரதேசத்தில் இந்தோர் அருகில் மாவ் (Mhow) என்னும் இடத்தில் முகாமிட்டிருந்தபோது, 14-4-1891 அன்று பீமாபாய் ஒரு நன் மகனைப் பெற்றெடுத்தார். அது அவர்களின் பதிநான்காவது குழந்தையாகும். இக்குழந்தைக்குப் பீம் (பீமன்) எனப் பெயரிடப்பட்டது. குடும்பத்தினர் குழந்தையைச் செல்லமாகப் பீவா என்றழைத்தனர்.

ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்து 1893 இல் ராம்ஜி ராணுவப் பணி யிலிருந்து ஒய்வு பெற்றார். அதன் பிறகு ரத்தினாகிரி தாலூகாவில், தாபோலியில் வசித்துவந்த ஒய்வு பெற்ற ராணுவத்தினருடன் தானும் நிரந்தரமாக வசிப்பதற்காகப் போய்ச் சேர்ந்தார்.
அச்சமயத்தில் தாபோலி நகராட்சிப் பள்ளிகளில் தீண்டப்படாத சாதி மாணவர்கள் சேர்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதற்கெதிராகத் தீண்டப்படாத சாதி ஒய்வூதியர்கள், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஒரு மனு அனுப்பினார்கள். தனது மனுவில் ராம்ஜி சுபேதார் தான் குடியிருப்பதற்கு இடம் வழங்கவும் கோரியிருந்தார். ஆனால் தன் குழந்தைகளைத் தாபோலியில் உள்ள பள்ளியில் சேர்ப்பது முடியாத காரியம் என்று அவருக்கு உறுதியாகத் தெரிந்து போனதும் அவர் தன் குடும்பத்துடன் பம்பாய்க்குச் சென்று அங்கு குடியேறினார்.

அங்கிருந்தபடியே அவர் ராணுவ அதிகாரிகளுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பினார். அதன் விளைவாக அவருக்கு ஸாதாராவில் உள்ள பொதுப் பணித்துறை அலுவலகத்தில் பண்டகக் காப்பாளர் வேலை கிடைத்தது. ஸாதாரா ராணுவ முகாமில் குடியேறியிருந்த கொங்கணத்தைச் சேர்ந்த மஹார் ஒய்வூதியர்களின் குடும்பங்களின் மத்தியில் பீம்ராவின் குழந்தைப்பருவம் கழிந்தது. அவரது தொடக்கப்பள்ளிப் படிப்பும் இங்குதான் நிறைவு பெற்றது.
...
சுபேதார் ராம்ஜி, கபீர்தாசரின் பக்தி சம்பிரதாயத்தைப் பின் பற்றியவர். அவர் தினமும் தன் குழந்தைகள் பஜன், மராட்டிய பக்திப் பாடல்கள், தோஹாக்கள் (ஈரடிச் செய்யுள்கள்) ஆகியவற்றை ஒதும்படி செய்தார். காலையில் எழுந்ததும் குழந்தைகள் அவற்றைப் பயிற்சி செய்ய வைத்தார். இதனால் பீம்ராவின் மனத்தில் சமயக் கல்விவழிப் பண்பாட்டின் ஆழமான முத்திரை பதிந்திருந்தது.
பீம்ராவ் தீண்டத்தகாதவர் எனக் கூறப்பட்ட வகுப்பினராயினும் அவரிடம் அன்பு காட்டிய சில ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்தனர். அம்பேத்கர் என்ற குடும்பப் பெயருடைய ஓர் அந்தண ஆசிரியர் அப்பெயரைப் பீம்ராவின் பெயருடன் சேர்த்து எழுதிவிடும் அளவிற்கு அன்பு செலுத்தியதுடன் அவருக்கு நண்பகல் இடை வேளையில் சாப்பிடுவதற்குச் சப்பாத்தி முதலியவையும் அளித்து வந்தார்.

1927 வாக்கில் அந்த ஆசிரியப்பெருந்தகை தன்னை சந்திக்க வந்தபோது அவரைக் கண்டதுமே பாபா சாகேப் மனம் நெகிழ்ந்து போனார். பேச முடியாமல் அவரது தொண்டை தழுதழுத்தது. இந்த ஆசிரியர் அன்பில் தோய்த்து எழுதியிருந்த ஒரு பாராட்டுக் கடிதத்தை அம்பேத்கர் நீண்ட காலம் வரை தன்னிடம் பாதுகாப்பாக வைத்திருந்தார்.

— வசந்த் மூன் எழுதிய அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நூலிலிருந்து.
*
அம்பேத்கர் பிறந்தது அம்பேவாடா என்னும் கிராமம். ஊர்ப் பெயருடன் “கர்” சேர்த்துக்கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது. அம்பேத்கரின்மீது அன்பு கொண்ட ஆசிரியர், அம்பாவாடேகர் என்று அழைப்பது நீளமாக இருப்பதால் சுருக்கி, அம்பேட்கர் என்று அழைத்திருக்கிறார். இது அவருக்கும் பிடித்திருந்ததால், ஆசிரியர் மீது கொண்ட மரியாதையின் காரணமாகவும், அம்பேட்கர் என்ற பெயரை கடைசிப் பெயராக வைத்துக் கொண்டார்.

- என்று அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்சய் கீர் என்பவரும் எழுதியிருக்கிறார்.

“He took so much fancy to the boy that he even changed his surname from Ambavadekar to his own surname Ambedkar in school records...Ambedkar gratefully remembered this teacher,” writes biographer Dhananjay Keer.

M.L. Shahare என்பவர் எழுதிய நூலிலும் இதே விவரம் உள்ளது.
அம்பேத்கர் என்பது மகாராட்டிரப் பிராந்தியத்தின் தேஷஸ்த பிராமணர்கள் என்ற வகையைச் சேர்ந்தவர்களின் பெயர். பேஷ்வா என்பதும் அவர்களில் ஒரு பிரிவுதான். கொங்கணஸ்த பிராமணர்கள் மகாராட்டிரத்தில் ஆதிக்கம் பெற்றபிறகு தேஷஸ்த பிராமணர்கள் முக்கியத்துவத்தை இழந்தார்கள் என்கிறது வரலாறு.
மகாதேவ் மட்டுமல்ல, பெண்ட்ஸே என்ற இன்னொரு (பிராமண) ஆசிரியரும் அவருக்கு உதவியாக இருந்தார் என்பதும் வரலாறு.
ஒரு பிராமணர் உதவி செய்தார் என்பதால் அவர் தீண்டாமைக் கொடுமையை அனுபவிக்காமல் இருக்கவில்லை. பரோடா மன்னர்தான் அவருடைய மேற் கல்விக்கு உதவி செய்தார். ஆனால் அதே பரோடா சமஸ்தானத்தில் அம்பேத்கர் பணியாற்ற முடியாத அளவுக்கு தீண்டாமையும் நிலவியது.

நாம் பேச வேண்டியது அவருக்கு உதவியாக இருந்த பிராமணர்களைப் பற்றி அல்ல.

இன்று தலித்துகளை ஒடுக்கத்துடிப்பவர்கள்,
தலித்துகள் படித்து முன்னேறிவிடக் கூடாது என்று துடிப்பவர்கள்,
இட ஒதுக்கீட்டு எதிராக வன்மம் காட்டுபவர்கள்,
ஒடுக்கப்படும் சமூகத்தினரை வாக்கு வங்கிகளாக்க அம்பேத்கரை சொந்தம் கொண்டாடும் இந்துத்துவவாதிகள்
இவர்களைப் பற்றித்தான் நாம் பேச வேண்டும். இவர்களுடைய முகமூடிகளைக் கழற்றிக் காட்ட வேண்டும்.

Comments

  1. அம்பேத்கர்
    இன்று வாக்கு வங்கி அரசியலுக்கு மட்டுமே பயன்படுவதுதான் வேதனை

    ReplyDelete
  2. ம்... நடக்கட்டும்... ஏதேனும் ஒரு தெளிவு பிறந்தால் சரி...

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு.

    உங்கள் பதிவின் தலைப்பில் சொன்னது போல What is in name!

    ReplyDelete
  4. அம்பேத்கார் பற்றி அருமையான கட்டுரை... கடைசிப் பாராவில் சொல்லியிருப்பதைத்தான் செய்ய வேண்டும்... அதை விடுத்து நாம் செய்வதெல்லாம் ஜாதி, மதத்தின் பின்னே நின்று செய்யும் செயல்களைத்தானே...

    ReplyDelete
  5. பகிர்வு அருமை...பெயரில் என்ன இருக்கிறது என்று நாம் கேட்போம்...ஏனென்றால் நமக்கு அரசியல் தெரியாது அது முக்கியமும் இல்லை என்போம்..ஆனால் அரசியல்வாதிகளுக்கு அதுதானே தொழிலே!

    ReplyDelete

Post a Comment

வருக வருக