வழிபாடு இல்லா சிவன் கோவில்கள்



தொல்லியல் கழக ஆர்வலர்களை ஒவ்வொரு முறை வினவும் பொழுதும் எனக்கு தெளிவான விடை கிடைக்காத ஓர் கேள்விக்கு இன்று விடைகிடைத்தது.

களப் பயணங்களின் பொழுது உடைபட்டு கிடைக்கும் சதுர ஆவுடைகள் சொல்வது என்ன?  என்கிற கேள்விதான் அது.

கடந்த வாரம் இரண்டு பேருரைகளை கேட்ட பின்னர் (ஒரிசா பாலு அவர்களின் உரையும், திருச்சியைச்  சார்ந்த பேரா.நெடுஞ்செழியன் அவர்களின் ஆசீவக பேருரை) பல தரவுகள்  மனதில் சுழன்றடித்தது.

குறிப்பாக பாண்டியர் கால சதுர ஆவுடைகள் ஏன் தகர்ப்பட்டன, ஏன் வட்டவடிவ ஆவுடைகள் நிறுவப்பட்டன என்ற கேள்வி என்னை துரத்தி துரத்தி வந்தது.

இரண்டுமே சிவனுக்கு உரியவைதானே. ஏன் இந்தத் தாக்குதல் நிகழ்ந்திருக்கும் என்கிற கேள்விகளுக்கு என் வட்டத்தில் இருக்கும் யாரும் பதிலிருக்கவில்லை.

மேலோட்டமாக சான்றுகளை அணுகும் எனக்கே சில விஷயங்கள் புரிகிற பொழுது இவர்கள் ஏன் தெளிவான பதிலைச் சொல்வதில்லை என்கிற குழப்பம் வேறு.

ஆனால் எல்லோரும் ஒருவிசயத்தை மட்டும் உறுதியாக சொன்னார்கள். சதுர வடிவ ஆவுடையைக்கொண்ட லிங்கங்கள் பாண்டியர் காலத்தவை என்பதை.

இன்று ஒருவழியாக விடை கிடைத்தது என் கேள்விக்கு.

காலை புதுகை மாவட்டம் அண்டக்குளம் அருகே உள்ள கடியாப்பட்டி சென்றிருந்தேன்.

யதார்த்தமாய் கடியாப்பட்டி பள்ளியின் எதிரே பார்த்தேன்.

கற்றளி ஒன்று சிதிலமடைந்து கிடந்தது.

உடன் புதுகை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர்  மணிகண்டனை அழைத்துச் சொன்னேன்.

ஆமாம்  என்றார், அதில் இருக்கும் கல்வெட்டு செய்திகள் ஐபிஎஸ்சில் பதிவாகியிருப்பதை சொன்னார்.

அலைபேசியை அணைத்துவிட்டு கோவிலை மேலும் நெருங்கி பார்த்தேன்.

வாயில் அருகே ஓர் க்வார்ட்டர் புட்டி.

உள்ளே சென்று பார்க்க முடியவில்லை.

கட்டுமானம் அவ்வளவு சிதிலமைடைந்து கிடந்தது.

உள்ளே பளபளத்தது கரு கரு என்று மின்னும் லிங்கம்.

ஆவுடையைக் கவனித்தேன். வட்ட வடிவம்!

ஆனால், வழிபாடு இல்லாத கோவில்.

ஏன்?

விஷயம் மிக எளிதானதுதான்.
சமயப்  பள்ளிகளில் பல்வேறு சிந்தனைப் பள்ளிகள் இருந்திருக்கின்றன.
சதுர ஆவுடையைக் கொண்ட, சிவனை வழிபட்ட சமயங்கள் ஆதிக்கம் குறைந்தபிறகு. (அல்லது குறைக்கப்பட்ட பிறகு, எண்ணாயிரம், கழுமரம், கோத்ரா எல்லாம் நினைவில் வந்தால் நான் பொறுப்பல்ல)

வெகுமக்கள் வழிபாட்டில் வன்முறையாக புதிய வடிவங்களை புகுத்தியிருக்கிறது பின்னர் வந்த சமயச் சிந்தனைப் பள்ளிகள்.

ஆக, ஓராண்டுகாலம் என்னைத் துரத்திக் கொண்டிருந்த ஒரு கேள்விக்கு இன்று ஒருவழியாய் விடைகிடைத்தது.

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின், காற்றுவெளியெங்கும் டேட்டாக்கள் பறக்கும் இந்த நாளில் கூட இந்தக் கிராமத்திற்கு செல்வது சற்று சிரமம்தான்.

ஆனால், வெகுமக்களின் வன்மம் எவ்வளவு வலிமை மிக்கது என்பதற்கு கண்முன் காலம் காட்டும் சான்று இந்தக் கற்றளி.

ஒரு உரையாடல்

பாப்பா இந்த கோவிலுக்கு போவீங்களா.

ஊகும், போ மாட்டோம், உள்ளே காளி இருக்கா பலிவாங்கிருவா. யாரும் போ மாட்டோம். 

உன் பேர் என்னபாப்பா...

பாண்டி. (பெயரில் கடத்தப்படுகிறது சரித்திரம்) 

இப்பகுதியில் இருப்பவர்கள் தமிழகத்தின் இருண்டகாலம் என்ற காலத்தில் செல்வாக்கு மிக்கவர்களாக இருந்த சமூகத்தினர்.

உண்மையில் காளி ஒன்றும் இல்லை.

மக்கள் தங்கள் மீது வன்முறையால் திணிக்கப்பட்ட புதிய மத சிந்தனைப் பள்ளியை ஏற்றுக்கொள்ளவில்லை.

தலை முறை தலை முறையாக தாங்கள் வழிபட்ட கோவிலை கைவிட்டதோடு மட்டுமில்லாமல், அந்தக் கோவிலுக்கு தங்கள் வாரிசுகள் யாரும் போய்விடக் கூடாது என்று ஒரு காளி கதையையும் உற்பத்தி செய்திருக்கிறார்கள்!

மெல்ல மெல்ல கோவில் சிதிலமடைந்து போய்விட்டது.

வாளையும், வேலையும் கொண்டு, கழுமரங்களில் சமய குருமார்களை பலியிட்டு வந்த புதிய மதத்தை மக்கள் தூக்கிக்கடாசியதைத்தான் காளி கதை சொல்கிறது.

கதையை உற்பத்தி செய்த அந்த மூதாதையின் மூளைக்கு பணிவான வணக்கங்கள்.

ஆக வழிபாடு இல்லாமல் சித்திமடைந்து கிடைக்கும் சிவன் கோவில்கள் சொல்லும் கதை இதுதான்.

சந்திப்போம் 
அன்பன் 
மது

நன்றிகள்

பாறை ஓவிய ஆய்வாளர் அய்யா அருள்முருகன், திராவிடச் சிந்தனையாளர் முத்துநிலவன், இலக்கிய விமர்சகர் ராசி பன்னீர் செல்வன், தமிழார்வலர் புலவர் மகா சுந்தர், ஆசீவக ஆய்வாளர் பேரா.நெடுஞ்செழியன்,  காலம் தோறும் பிராமணியம் - பேரா.அருணன், கடலியல் ஆய்வாளர்  அய்யா ஒரிசா பாலு,  புதுகை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனர் மங்கனூர் மணிகண்டன், கல்வெட்டியல் வித்தகர் மேலப்பனையூர் ராஜேந்திரன், பவுத்த ஆய்வாளர் முனைவர் ஜம்புலிங்கம், அய்யா குடவாயில் பாலசுப்ரமணியன். புலவர்.பொன். கருப்பையா . 

Comments

  1. தேர்ந்த ஆய்வு ����

    ReplyDelete
  2. அருமை. இது மாதிரியான கவனிக்கப்படாத கோவில்கள் பல இருக்கு.

    ReplyDelete
  3. ஒரே கடவுள் வழிபாட்டிலும் இப்படியா...பல சிவன் கோயில்கள் சிதலமடைந்திருக்கின்றனதான்..வேதனை

    ReplyDelete
  4. ஏன் இப்படியான பேதமோ..சதுர ஆவுடை, வட்ட ஆவுடை என்று! கதை புரிந்தாலும் சில புரியவில்லை...

    கீதா

    ReplyDelete
  5. இன்று பல கிராமங்களில் கவனிக்கப்படாத கோவில்கள் அழிவை நோக்கிப் போகின்றன மது சார்..
    நல்ல பகிர்வு.

    ReplyDelete

Post a Comment

வருக வருக